Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

கொரோனா காலத்தில் முதியவர்களின் நிலை என்ன?

தமிழ்நாட்டில் கொரோனாவால் ஏற்பட்ட மரணங்களில் 54% பேர் 60வயதிற்கும் மேற்பட்டவர்கள் முதியவர்கள் ஆகும்.

கொரோனா காலத்தில் முதியவர்களின் நிலை என்ன?

Wednesday June 03, 2020 , 4 min Read

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவலால் நடைமுறைப்படுத்தப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு சமுதாயத்தின் பல தரப்பினரைப் பல விதங்களில் பாதித்துள்ளது. கண்ணுக்குத் தெரியாமலும் கவனத்தில் வராமலும் போன பாதிப்பு முதியோர்களுக்கு (மூத்த குடிமக்கள்) ஏற்பட்ட பாதிப்பே ஆகும்.


கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகக் கூடியவர்கள் எனக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோரை சுகாதாரத் துறை அறிவித்து இருந்தது. 


முதியவர்களுக்குத் தொற்று ஏற்பட்டால் அதன் விளைவாக அவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் உடல்நலப் பாதிப்பு அதிகமாக ஏற்படும். அதிலும் முதியவர்களுக்கு ஏற்கனவே வேறு நோய்கள் இருந்து விட்டால் கொரோனா வைரஸ் தொற்று அவர்களுக்குப் பலமடங்கு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். எனவே முதியவர்கள் தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது. 

“கோவிட்-19 பெருந்தொற்று பரவலின் போது உலகில் எல்லோரையும் போலவே முதியவர்களுக்கும் வாழ்வதற்கும் ஆரோக்கியத்திற்குமான சம உரிமைகள் உள்ளன,“ என்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை இயக்குனர் அன்டோனியே குட்டெரஸ் தெரிவித்து உள்ளார். 
கொரோனா ஓல்ட்

முதியவர்கள் மீதான கவனம் இந்தச் சூழலில் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பதும் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றது. ஆனால் உண்மையில் கொரோனா வைரஸ் தொற்று முதியவர்களிடம் பயத்தையும் மனஅழுத்தத்தையும் அதிகரித்து உள்ளது. எங்கே தங்களுக்கு தொற்று வந்து விடுமோ என்ற பயமும் வந்து விட்டால் மரணம்தானே என்ற மன அழுத்தமும் முதியவர்களை அலைக்கழித்துக் கொண்டு இருக்கிறது.


சுகாதார அமைச்சகம், உள்துறை அமைச்சகம், ஆயுஷ் அமைச்சம் போன்றவை ஊரடங்கு காலத்தில் பல்வேறு ஆலோசனைத் தொகுப்புகளை வெளியிட்டன. நம் நாட்டில் முதியவர்களுக்குப் பொறுப்பாக இருக்கின்ற சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் முதியவர்களுக்கான ஆலோசனைத் தொகுப்பை 13-4-2020 வெளியிட்டு இருந்தது. 


அதில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011ன் புள்ளிவிவரத்தை அடிப்படையாகக் கொண்டு முன்கணிப்பு முறை மூலம் தற்போது நம் நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டோர் எண்ணிக்கை சுமார் 18 கோடி அளவிற்கு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 60-69வயதுப் பிரிவில் 8.8 கோடி முதியவர்களும் 70-79 வயதுப் பிரிவில் 6.4 கோடி முதியவர்களும் 80 வயதிற்கு மேற்பட்ட 3 கோடி முதியவர்களும் இருக்கலாம் என்று இந்த மதிப்பீடு கூறுகிறது.


இந்த முதியவர்கள்தான் ஒரு சமுதாயத்தின் விலை மதிக்க முடியாத சொத்து. இவர்களின் அறிவு பல ஆண்டு அனுபவத்தால் ஞானம் என்ற நிலையை அடைந்திருக்கும். இவர்களை இன்றைய சமுதாயம் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. தலைமுறை இடைவெளி என்று நாம் இவர்களை எளிதாகப் புறக்கணித்து விடுகிறோம்.


நமது சமுதாயத்தின் இந்தப் புறக்கணிப்பு முதியவர்களை மனரீதியான பிரச்சனைகளுக்கு ஆட்படுத்துகின்றது. இந்த ஊரடங்கில் நாம் முதியவர்களை மேலும் தனிமைப்படுத்தியது பிரச்சனையை அதிகமாக்கி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் முதியவர்களுக்கு மனநல ஆலோசனை அதிக அளவில் தேவைப்படுகிறது. தனிமை தண்டனையாகி விட்டதாக அவர்கள் உணர்ந்தால் அல்லது அவ்வாறு உணர வைக்கப்பட்டு இருந்தால் அதற்கு நாம்தான் பொறுப்பு.


கொரோனாவால் முதியவர்களின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக மே 2020ல் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ‘கொள்கைச் சுருக்கம்: முதியவர்கள் மீதான கோவிட்-19ன் தாக்கம்’ என்ற அறிக்கை தெரவிக்கின்றது. 

தமிழ்நாட்டில் 31 மே வரை கொரோனா தொற்றால் 173 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆகும். அதாவது மொத்த மரணங்களில் 54 % மரணம் முதியவர்கள் உடையது ஆகும். 

அதே போன்று மே 31 வரை தமிழ்நாட்டில் 22,333 பேர் தொற்று உள்ளவர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் 60+வயதுள்ளவர்களின் எண்ணிக்கை 2,052 ஆகும். தொற்றுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையோடு ஒப்பிட தொற்று ஏற்பட்ட முதியவர்களின் சதவிகிதம் 9.19 ஆகும். இந்தச் சதவிகிதம் மே 10ஆம் தேதி 7.16ஆக இருந்தது. 


தமிழ்நாட்டில் பொதுவான இறப்பு விகிதம் 0.77 சதவிகிதமாக இருக்கும் போது முதியவர்களின் (60+) இறப்பு விகிதம் 4.58 சதவிகிதமாக உள்ளது (அதாவது நோய் தொற்றிய 2,052 முதியவர்களில் 94 பேர் இறந்து உள்ளனர்). இந்தப் போக்கு அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

1

எல்லோரும் ஊரடங்கில் வீட்டிலேயே இருந்ததால் முதியவர்களுக்குத் தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருந்தது. இப்போது குடும்பத்தில் உள்ளவர்கள் பல காரணங்களால் அடிக்கடி வெளியில் சென்று வீட்டுக்குத் திரும்புவதால் முதியவர்களுக்குத் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. 

குடும்பத்தோடு வசிக்கும் முதியவர்கள், தனித்து வாழும் முதியவர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியவர்கள் என அனைத்து முதியவர்களின் நலனிலும் இந்தச் சூழலில் நாம் அதிக அளவில் அக்கறை காட்டியாக வேண்டும். எப்பாடுபட்டாவது முதியவர்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் இந்தப் புள்ளிவிவரங்களால் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழி ஆகும்.

புதுச்சேரியில் முதியவர்கள் கொரோனா காலகட்டத்தில் எப்படி இருந்தார்கள் என குடும்பத்தில் வசிக்கும் முதியவர்கள் சிலரிடமும் முதியோர் இல்லத்தில் இருப்பவர்களோடும் பேசினோம்.


ஷாரோன் சொசைட்டியின் ஒரு அங்கமாக புதுச்சேரியில் இயங்கும் புஷ்பகாந்தி முதியோர் அரவணைப்பு இல்லத்தின் நிர்வாகி ஜி.மோகன் கொரோனா காலகட்டத்தில் எல்லாவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

முதியவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க சித்த மருந்துகளும் ஹோமியோ மருந்துகளும் தரப்படுகின்றன. அடிக்கடி இல்லம் முழுவதையும் கிருமி நாசினியால் சுத்தம் செய்கிறோம். தினசரி செவிலியர் முதியோர்களுக்கு உடல் வெப்ப நிலையைப் பரிசோதிக்கிறார். மருத்துவர் வாரம் இருமுறை வருகின்றார். யோகா சிகிச்சையை வாரம் மூன்று நாட்கள் தருகின்றோம் என்று மோகன் மேலும் தெரிவித்தார்.

புஷ்பகாந்தி இல்லத்தில் தங்கியிருக்கும் அஞ்சலை மற்றும் அஜ்மல்தாய் இருவரும் இங்கு கொரோனா தொற்றாமல் இருக்க தற்காப்பு ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன என்றும் நன்றாக உணவு கொடுத்து வீட்டைவிட சிறப்பாகப் பார்த்துக்கொள்கின்றனர் என்றும் தெரிவித்தனர்.

முதியவர்கள்

மருதசாமி (80 வயது) மற்றும் சாந்தாதேவி (நிலா முதியோர் இல்லம்)

புதுச்சேரியில் நிலா முதியோர் இல்லத்தை நடத்தும் எஸ்.மோதிலால் இங்கு ஆண் பெண் இருபால் முதியவர்களும் இருக்கின்றனர். வெளியில் இருந்து யாரையும் இல்லத்துக்குள் அனுமதிப்பது இல்லை. முகக்கவசம் பயன்படுத்தச் சொல்லி அனைவரும் பயன்படுத்துகின்றனர்.

இங்கு இருக்கும் முதியவர்கள் வெளியில் சென்று வருவதற்கும் அனுமதிப்பதில்லை. இந்தக் கொரோனா காலகட்டத்தில் முதியவர்களை மிகக் கவனமாகப் பார்த்துக் கொள்கின்றோம், என்றார்.

நிலா இல்லத்தில் வசிக்கும் சாந்தாதேவி மற்றும் முருவன் இருவரும் இங்கு கொரோனா பரவாமல் இருக்க எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். எங்களை மிக நன்றாக கவனித்துக் கொள்கின்றனர். எங்களை வெளியில் அனுப்புவதில்லை. வெளியில் இருந்து யாரையும் இங்கு அனுமதிப்பதும் இல்லை என்கின்றனர்.

புதுச்சேரி சுதாகர் நகரில் வசிக்கும் 80 வயது முதியவர் மருதசாமி கொரோனா தொற்றாமல் இருக்க குடும்பத்தினர் அதிக அக்கறை எடுத்துக் கொண்டனர். என்னை வெளியில் அனுப்பாமல் பார்த்துக்கொண்டனர். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற அறிவுரைகளைக் கறாராகக் கையாண்டோம். நான் அடிக்கடி வெளியூர் செல்பவன். ஆனால் எங்கும் செல்லாமல் இருந்தேன். எந்தப் பாதிப்பும் இல்லாமல் கொரோனா ஊரடங்கை நிறைவு செய்வதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்கிறார்.

எங்கிருந்தாலும் முதியவர்கள் ஒரு சமுதாயத்தின் அடையாளம். அவர்களைப் பராமரிப்பதும் அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை எந்தச் சூழலிலும் எந்தக் காலத்திலும் வாழ உதவுவதும் நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.


தகவல்: பிஐபி