ஃபிளிப்கார்ட் குழும நஷ்டம் ரூ.17,231 கோடியாக குறைந்தது...
2018ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2019ல், Flipkart குழுமத்தின் நஷ்டம் குறைந்திருப்பதோடு, அதன் வருவாயும் அதிகரித்துள்ளது.
இந்திய இ-காமர்ஸ் ஜாம்பவனான ஃபிளிப்கார்ட்டை நடத்தி வரும் சிங்கப்பூர் ஹோல்டிங் நிறுவனமான ஃபிளிப்கார்ட் லிட், 2019 மார்ச்சில் தனது நஷ்டத்தை ரூ.17,231 கோடியாக குறைத்துள்ளது என்றும், நிறுவன வருவாய் முந்தைய ஆண்டை விட 42 சதவீதம் அதிகரித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
நிதி தரவுகள் மேடையான பேப்பர்.விசி தகவல் படி,
ஃபிளிப்கார்ட் குழுமம், 2018ம் நிதியாண்டில் உண்டான ரூ.46,895 கோடி இழப்பை, 2019 நிதியாண்டில், ரூ.17,231 கோடியாக 63 சதவீதம் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தம் மூலம் ஃபிளிப்கார்ட், ரூ.42,878 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகவும், மொத்த வருவாய் ரூ.43,615 கோடியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டின் ரூ.30,644 கோடியுடன் ஒப்பிடும் போது குழுமத்தின் வருவாய், 2019 நிதியாண்டில், 42 சதவீதம் அதிகரித்துள்ளது என பேப்பர்.விசி தெரிவிக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவிக்க ஃபிளிப்கார்ட் மறுத்துவிட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அமெரிக்க நிறுவனமான வால்மார்ட், 16 பில்லியன் டாலருக்கு ஃபிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வாங்கியது. இ-காமர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட், பேஷன் இணையதளமான மிந்த்ரா, ஜபாங் மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவையான போன்பே உள்ளிட்டவற்றை ஃபிளிப்கார்ட் குழுமம் கொண்டுள்ளது.
உணவு விற்பனை பிரிவான 'Flipkart Farmer Mart' அமைத்துள்ளதாக அண்மையில் நிறுவனம் அறிவித்தது.
குழுமத்தின் மொத்த செலவுகள், 2018ல் ரூ.77,539 கோடியாக இருந்த நிலையில், 2019ல் ரூ.60,897 கோடியாக குறைந்துள்ளதாகவும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. நிதிச் செலவுகள் குறைவு இதற்கான காரணமாக அமைந்துள்ளது.
நிதிச் செலவுகள் தவிர, குழுமத்தின் மொத்த செலவு 55 சதவீதம் அதிகரித்துள்ளது. ஊழியர் நலன் செலவு 58 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஃபிளிப்கார்ட் குழுமம், 2019ல், கையகப்படுத்தலில் 46.8 பில்லியன் செலவிட்டது. 2018ல் கையகப்படுத்தப்பட்ட இஸ்ரேல் ஸ்டார்ட் அப் அப்ஸ்டீரிம் காமர்ஸ் ( 21.4 பில்லியன் மில்லியன் டாலர்) மற்றும் பெங்களூருவின் லிவ் ஏஐ ஸ்டார்ட் அப் ( 10.5 மில்லியன் டாலர்) கையகப்படுத்தலும் இதில் அடங்கும்.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்