பதிப்புகளில்

தன் குறையை மாற்றியமைத்து வெற்றி கண்ட மாதவி லதாவின் பயணம்!

30th Sep 2015
Add to
Shares
99
Comments
Share This
Add to
Shares
99
Comments
Share

நமக்கு சில பேரை பற்றி படிக்கும் போதோ அல்லது பேசும் போதோ ஒரு இனம் புரியாத உத்வேகம் உள்ளிருந்து பிறப்பெடுக்கும். மாதவி லதாவும் அத்தகைய ஆட்களுள் ஒருவரே. சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி என்னை அழைத்தாலும், அந்த அழைப்பில் இருக்கும் புன்னகை அவருடைய வெற்றியின் சின்னமாக இருப்பது தெளிவாக தெரிகிறது.

"மாதவியும், விளையாட்டும் இணைக்கமுடியாத இரு வெவ்வேறு உலகங்கள் என்று என்னை பார்த்து பல பேர் சொன்னதுண்டு. ஆனால் இன்று, அதை இணைத்து அதனோடு வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்." என்று புன்னகைக்கிறார் சென்னையை சேர்ந்த நீச்சல் விராங்கனை மாதவி லதா. பாரா ஸ்விம்மிங் (Paraswimming) எனப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியில் மூன்று முறை தேசிய அளவில் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் என்பது இவரது வெற்றி பட்டியலின் ஒரு சின்ன சான்று தான்.

தமிழ் யுவர்ஸ்டோரிக்காக மாதவி லதாவை சந்தித்து அவரிடம் பேசினோம்...

image


"என்னுடைய சிறு வயதில், கூட்டமாக குழந்தைகள் விளையாடும் போது, நீ தள்ளி நில் அவர்கள் விழுந்தால் உனக்கு தான் அடிபடும் என்று சொல்லி என்னை தள்ளியே வைத்திருந்தனர்." என்று தன்னுடைய குழந்தை பருவ நிகழ்வுகளை நம்மோடு பகிர்ந்துக்கொண்டார் மாதவி லதா. சிறு வயதிலேயே போலியோ தாக்கியதால், முதுகெலும்பு மற்றும் கால்கள் இவருக்கு பெரும் பாதிப்படைந்தது. இருப்பினும், 10ம் வகுப்பு வரை பள்ளியிலும், அதன் பின் இண்டர் முதலாம் ஆண்டிலிருந்து தனியார் முறையில் படித்த மாதவி லதா, அதன் பின் இளநிலை பட்டப்படிப்பையும் முடித்திருக்கிறார். "நான் இளநிலை படிப்பிற்காக பி.எஸ்.சி கணிதம், லாஜிக் மற்றும் பொருளாதாரம் எடுத்து படித்தேன். இந்த படிப்பிலேயே நான் ஒருத்தி மட்டும் தான் இருந்தேன். அதனால், லாஜிக் தேர்வின் போது என் ஒருத்திக்காக ஒரு தனி தேர்வு அறை, கண்காணிப்பாளர் என்று ஏற்பாடுகள் இருந்தது. சற்று வித்தியாசமாகவும் குதூகலமாகவும் அப்போது இருந்தது." என்று பகிர்ந்துக்கொள்கிறார் மாதவி லதா.

படிப்பை முடித்து ஒரு வங்கியில் பணிக்கு சேர்ந்த போது தான், தன்னுடைய உடலில் மேலும் சில பிரச்னைகள் இருப்பதை உணர்ந்த மாதவி லதா உடனே அணுகியது ஒரு எலும்பு சிகிச்சை நிபுணரை. "பல வருடங்களாக தொடர்ந்து உட்கார்ந்து இருந்ததால், முதுகெலும்பு ஒன்றோடொன்று சேர்ந்து ஒரு நெருக்கமான வடிவத்தை எடுத்துக்கொண்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். அந்த முதுகெலும்புடைய நெருக்கம் என்னுடைய கால்களையும் பெருமளவில் பாதித்தது. ஒரு அறுவை சிகிச்சை செய்வது அவசியம் என்று அவர்கள் எனக்கு ஒரு ஆலோசனை அளித்தார்கள். "மருத்துவர்களின் ஆலோசனை படி அறுவை சிகிச்சை செய்தாலும், முற்றிலுமாக குணமாவதில் பெரும் சந்தேகம் அவர்களுக்கு எழுந்தது. இதனால், ஆயுர்வேதம், ஹோமியோ போன்ற பல மாற்று மருத்துவத்தில் (Alternate Medicines) சிகிச்சை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார் மாதவி லதா.

வைத்தியம் அதனோடு சேர்ந்து ஒரு விளையாட்டு

மாற்று மருத்துவங்கள் பக்கம் கவனத்தை திருப்பிய மாதவி லதா, பிஸியோதெரபி எடுத்துக்கொள்ளும் போது தான் தண்ணீருக்குள் எடுத்துக்கொள்ள கூடிய ஹைட்ரோ தெரபி பற்றி தெரிந்துக்கொண்டார். தண்ணீர் என்றதுமே மாதவிக்கு அதன் மேல் ஒரு வேகமான ஈர்ப்பு வந்ததால், உடனே அதில் ஈடுபடவும் தொடங்கினார். "சின்ன வயதிலிருந்தே தண்ணீர் என்றால் எனக்கு அவ்வளவு இஷ்டம். ஆனால், தண்ணீரில் இறங்குவது என்னுடைய இந்த நிலையில் சரிவராது என்றும் பலர் என்னை தனியாக வைப்பார்கள்" என்று கூறும் மாதவி, தன்னுடைய பெற்றோர்களிடம் இதற்காக அனுமதி பெற்று, மெதுவாக தண்ணீரில் இறங்கி தானாகவே நடக்க பயிற்சி எடுத்துக்கொண்டார். இவரின் இந்த அசாதாரண தைரியம் மற்றும் ஆர்வம் பயிற்சியாளரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்றே சொல்லலாம்.

மெதுவாக நடக்க மட்டுமே ஆரம்பித்த மாதவி, ஓரளவுக்கு நீச்சல் பழகவும் செய்தார். அந்த வகையில் இவர் எடுத்து கொண்ட பயிற்சியும் ஆர்வமும் கார்ப்பரேட் பணியாளர்களுக்காக நடத்தப்பட்ட ஒரு நீச்சல் போட்டியில் பங்கேற்கச் செய்தது. "அந்த போட்டியில் நான் மட்டும் தான் மாற்று திறனாளி, எல்லோரும் என்னை அதிசயமாக பார்த்தார்கள். அந்த போட்டியில் நான் வெற்றி பெறவில்லை என்றாலும், வென்றவர், என்னை பார்த்து இன்று உண்மையான வெற்றி உங்களுக்கு தான் என்று சொன்னபோது என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவேயில்லை." என்று தன் முதல் வெற்றியை பற்றி நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார். தவிர, அதே போட்டியில் சிறந்த ஊக்கமுடைய விளையாட்டு விராங்கனை என்ற பட்டத்தை பெற்றார். "அப்போது எனக்கு 40 வயது. அந்த வயதில் எனக்கு இந்த பட்டம் ஒரு பெரிய பிடிமானத்தை தந்தது." என்று மாதவி லதா நெகிழ்கிறார்.

தேசிய அளவில் சிந்தித்ததும் சாதித்ததும்

2011ம் ஆண்டில் பாரலிம்பிக் கூட்டமைப்பின் கவனத்தை தமிழகம் பக்க திரும்ப மாதவி ஒரு முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "என்னை போல, ஆர்வமிருந்தும் விளையாட்டில் ஈடுபட்டுக்கொள்ள முடியாமல் பல பேர் இருக்கக்கூடும். பல பேரிடமிருந்து திறமையை வெளிக்கொண்டு வர, நம் மாநிலத்தில் ஒரு சின்ன பயிற்சி முகாம் நடத்தப்பட்டது." என்று விளக்குகிறார் மாதவி. அந்த பயிற்சி முகாமின் கீழ், ஒவ்வொரு ஆர்வமிருக்கும் மாற்று திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படுவதே இந்த திட்டம். மாதவி லதா போல பல நீச்சல் வீரர்களை தேர்வு செய்து, பயிற்சி அளித்து தேசிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்பப்பட்டனர். அதில் மாதவி லதா தங்கம் வென்று சாம்பியன்ஷிப் பட்டமும் பெற்றார். மூன்று முறை தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளை வென்று தானும் மகிழ்ந்து மற்றவர்களுக்கும் ஊக்கம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

image


தவிர, தமிழக அரசின் புதுவாழ்வு திட்டத்துடன் கைக்கோர்த்து பல வீர வீராங்கணைகளை அடையாளம் காட்டி வெளியே கொண்டு வருகிறார் மாதவி லதா. விளையாட்டு மைதானங்களில் மாற்று திறனாளிகளுக்கான பிரத்யேக வசதிகளை அமைத்து தர வேண்டியும், மாற்று திறனாளிகளுக்கும் தக்க ஊக்கத்தொகை மற்றும் பரிசு தொகை வழங்க வேண்டியும் மேலும் பல திட்டங்களை அரசின் முன் கோரிக்கையாக நிறுத்தி வைத்திருக்கிறார் மாதவி லதா. "தமிழக அரசும் இதற்கு முழு ஒத்துழைப்பை தந்த வண்ணமாக தான் இருந்து வருகிறது. பல அரசாணைகள் மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டிற்காக பிறப்பிக்க படவுள்ளது." என்கிறார் மாதவி லதா.

சக்கர நாற்காலி கூடைப்பந்து கூட்டமைப்பின் பெரும் அங்கமாக வகிப்பது

2013ம் ஆண்டில் சாய்ஸ் இண்டர்நேஷனல் எனப்படும் சர்வதேச அமைப்பினரால், "சக்கர நாற்காலி கூடைப்பந்து கூட்டமைப்பை" (Wheelchair Basketball Federation) பற்றி மாதவிக்கு தெரிய வந்தது. இந்தியாவில், அந்த கூட்டமைப்பை ஏற்று அதற்கான எல்லா விதமான செயல்களையும் செய்து வருகிறார். பயிற்சியாளர்கள், ஆரம்பநிலை வீரர்கள், என்று ஒவ்வொரு பிரிவாக பிரித்து அவர்களுக்கேற்ப சிறப்பு வகுப்புகள் மற்றும் பயிற்சி முகாம்கள் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. சரியான பயிற்சிக்கு பின் போட்டிகளுக்கும் இவர்கள் அனுப்பபடுவதுண்டு.

"காஷ்மீர், கார்நாடகா போன்ற பல மாநிலங்களிலிருந்து வீரர்கள் திரண்டிருந்தனர். இதில் பல பேர் முதல் முறையாக தங்களுடைய இருப்பிடத்தை விட்டு வெளியே வந்து உலகத்தை பார்க்கிறார்கள். அவர்களுடைய ஆர்வத்தையும் உத்வேகத்தையும் பார்க்கும் போது என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவேயில்லை." என்று பெருமையாக கூறுகிறார் மாதவி லதா.

image


சிறப்பு சாதனையாளர் விருது 2013, நவீன மஹிலா விருது 2012, 2015ம் ஆண்டில் மாநில அளவில் பாராலிம்பிக் நீச்சல் சாம்பியன் என்ற பல பட்டங்களும் விருதுகளும் மாதவி லதாவின் வெற்றிக்கு ஒரு தனி அடையாளத்தை தருகிறது. "என்னுடைய சின்ன வயதில் கிடைக்காத விஷயங்கள் அடுத்த தலைமுறையினருக்கு கிடைக்க வேண்டும். விளையாட்டு என்பது மாற்று திறனாளிகளுக்கு அவர்களுடைய குறையை உடலளவில் சரி செய்ய வாய்ப்புகள் தருகிறது, அவர்களுக்குள் ஒரு தலையாய பண்பும், நல்ல சிந்தனையும் வளர்ந்து ஒரு சிறந்த குடிமகனாக மாற்றும் அளவிற்கு விளையாட்டின் பங்கு உள்ளது. இதை சரியாக புரிந்துக்கொள்ளாமல் அவர்களை ஒதுக்கி வைக்கும் போது என்னால் எதுவுமே முடியாது என்ற அவநம்பிக்கை வளர வழி வகுக்கும்." என்று விளக்கும் மாதவி, ‘யெஸ் வீ டூ கேன்’ (Yes We Too Can) எனப்படும் ஒரு குழுவை அமைத்து பள்ளி கல்லூரி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சிறப்பு ஊக்கவுரை தருவது குறிப்பிடத்தக்கது.

image


"மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டுகளை பற்றி விழிப்புணர்வு இப்போது போதிய அளவில் இல்லை. இந்த நிலை மாற வேண்டும். அதுமட்டுமல்லாமல், நிறைய பெண்களும் இந்த விளையாட்டு பயிற்சிகளில் ஈடுப்பட வேண்டும்." என்று தன்னுடைய விருப்பத்தை பற்றி விளக்கும் மாதவி லதா, "டோக்யோ 2020 பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியாவிலிருந்து ஒரு சிறந்த அணியை அனுப்பி நிறைய பதக்கங்களை வெல்ல செய்ய வேண்டும்." என்று தன்னுடைய கனவை பற்றி நெகிழ்கிறார். அந்த கனவு நிறைவேற இன்னும் வெகுதூரம் இல்லை என்பது நிச்சயமே.

இவரது அமைப்பை பற்றி பார்க்க: YesWeTooCan

Add to
Shares
99
Comments
Share This
Add to
Shares
99
Comments
Share
Report an issue
Authors

Related Tags