பதிப்புகளில்

'பாலம்' கல்யாண சுந்தரம்: கலாம் முதல் ரஜினி வரை வியக்கவைத்த உன்னத ஆளுமை!

25th Dec 2015
Add to
Shares
254
Comments
Share This
Add to
Shares
254
Comments
Share
"திறமான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்றார் பாரதியார். பாலம் ஐயாவை கிளிண்டன், நெல்சன் மண்டேலா போன்ற வெளிநாட்டவரும் ஐரோப்பிய அமெரிக்க பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் பாராட்டியுள்ளார்கள். அது தான் நமக்குப் பெருமை." - தமிழக முதல்வர் ஜெயலலிதா.
"தன்னலம் இல்லாமல் வாழ்வதே சிறப்பான பெரு வாழ்வாகும். இறைவன் பா.கல்யாண சுந்தரத்துக்கு அந்த அரும் பெரும் வாழ்வைக் கொடுத்து இருக்கிறார். அதனால் பலர் அவர் நிழலில் நல்ல நிலையில் சிறப்படைகிறார்கள்." - மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
"கலியாண சுந்தரனார் நம்மோடு வாழும் ஒரு மகான் ஆவார்." - நடிகர் ரஜினிகாந்த்
image


அப்படி இவர் என்னதான் செய்தார்?

ஒரு கல்லூரியில் 30 ஆண்டுகள் நூலகராக உழைத்து பணியாற்றிக் கிடைத்த தொகை, ஓய்வூதியம், குடும்பச் சொத்து, விருதுகள் மூலம் கிடைத்த பரிசுத் தொகைகள் உள்ளிட்ட அனைத்தையுமே ஏழைகளுக்கான தொண்டுப் பணிக்குச் செலவிட்டிருக்கிறார். அன்பு பாலம் என்று தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் இவர், தன் சொந்த பணத்தில் ஏழைகளுக்காக 36 ஆண்டுகளாக ரூ.30 கோடிக்கும் மேல் செலவழித்திருக்கிறார் என்பது வியக்கத்தக்கது.

ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு துணைபுரியும் அரும்பணியாற்றி வரும் இவர், அமெரிக்காவில் 'ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்' (Man of Millinium) என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, ரூ.30 கோடியைப் பரிசாகப் பெற்றார். அந்தத் தொகை முழுவதையுமே குழந்தைகள் நலனுக்காக அளித்து, அந்த விருதையே வியப்படையச் செய்தார்.

A Most Notable intellectual’ in the World என்ற பட்டத்தை இவருக்கு வழங்கிய கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழகம், நூலகத் துறைக்கு நோபல் பரிசு இருந்தால், அதனைப் பெறத் தகுதி இவருக்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது.

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் தன் இந்தியப் பயணத்தின்போது, அரசு சாராத இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் கலாம்; மற்றொருவர் 'பாலம்' கல்யாண சுந்தரம்.

ஏர்வாடி அருகே கருவேலங்குளத்தில் பிறந்த இவர், ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் கலைக்கல்லூரியில் நூலகராக பணியாற்றி, மாணவர்களுடனும் புத்தகங்களுடனும் வாழ்ந்தவர். பின்னர், ஓட்டல் ஒன்றில் ஊழியராக பணியாற்றி, அந்த வருமானத்தையும் சேவைக்கு செலவிட்டார்.

ஏழை மக்களுக்கு சேவையாற்றுவது ஒன்றையே தன் வாழ்நாள் நோக்கமாகக் கொண்டவர், 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லுரிகளுக்குத் தானமாக எழுதி வைத்துவிட்டார். தனக்கென்று நிலமோ வீடோ பணமோ சேர்க்காத இவர், திருமண வாழ்க்கையையும் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை.

image


மகத்தான மக்கள் பணிகளை எளிய மனிதராக செய்துவரும் இவரை, 20-ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளர்களில் ஒருவராக ஐக்கிய நாடுகள் அமைப்பு தேர்ந்தெடுத்தது.

ரஜினி தத்தெடுத்த தந்தை!

எளிமை என்பது தோற்றத்தில் மட்டுமல்ல; ஒருவர் உதிர்க்கும் சொற்களிலும் அடங்கியிருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சியில் 'பாலம்' கல்யாண சுந்தரம் பேசியதைச் சுட்டிக் காட்டலாம்.

"எனக்கு ஒருமுறை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், 'எனக்கு இரு மகள்கள் உள்ளனர். அப்பாதான் இல்லை. ஆகவே, பாலம் கல்யாண சுந்தரத்தை தந்தையாக தத்தெடுத்துக் கொள்கிறேன்' என்று கூறினார்." என்ற தகவலை நினைவுகூர்ந்தவர், அதன்பின் சொன்ன ஒரு வாக்கியம் மேன்மை பொருந்தியவை. ஏழைகளுக்காக செய்த தியாகம் என்று பிறர் கருதும் விஷயத்தை முழுமையாக பின்னுக்குத் தள்ளி, தன்னைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரையுமே தொண்டு செய்யத் தூண்ட வேண்டும் என்ற வகையில் சொன்னார்....

"குழந்தைகள் இல்லாத நான் நன்கொடை செய்தது பெரிய விஷயம் இல்லை. ஆனால், குழந்தைகள் உள்ள ஒருவர் இதுபோல் நன்கொடை செய்துள்ளார். ஆனால், அவர் பெயர் வெளியே தெரியவில்லை'' என்றார் உணர்வுபூர்வமாக.

வெள்ளத் துயர் துடைத்த அன்பு பாலம்!

தமிழகத்தில் சமீபத்தில் பேரிடரை ஏற்படுத்திய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாலமாக செயல்பட்டது, கல்யாண சுந்தரத்தின் அன்பு பாலம் அமைப்பு. குறிப்பாக, பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடைகள், நோட்டுகள், புத்தகங்கள் வழங்கும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டது.

கடந்த டிசம்பர் 1-ல் பாலம் கல்யாண சுந்தரத்துக்கு மாமனிதர் விருதுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையையும் மதுரா பயண நிறுவனத் தலைவர் வி.கே.டி.பாலன் வழங்கினார். அந்தத் தொகையில் ஒரு பாதியை மதுவின் பிடியால் தந்தையை இழந்தக் குழந்தைகளின் கல்விக்கும், மற்றொரு பாதியை வெள்ள நிவாரணப் பணிகளுக்கும் அறிவித்தார் கல்யாண சுந்தரம்.

வாழ்க்கையில் எல்லோருமே மகிழ்ச்சியைத்தான் விரும்புகிறார்கள். அதை அடைய வழி என்ன என்றுதான் அவர்களுக்குத் தெரியவில்லை எனும் கல்யாண சுந்தரம், தனக்கு தன் தாயாரால் அறிவுறுத்தப்பட்ட மூன்று வழிகளை அவ்வப்போது சொல்வார். அவை:

"எதற்காகவும் பேராசைப்படாதே."
"ஏது கிடைத்தாலும் பத்தில் ஒன்றை தானம் செய்."
"தினமும் ஓர் உயிருக்கு நல்லது செய்தால் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிலவும்."

இத்தகைய நம் காலத்து உன்னதமான மனிதரின் வாழ்க்கையைப் பதிவு செய்த குறும்படத்தின் மூன்று பகுதிகள் இதோ...
படம் உதவி: anbupaalam.org

Add to
Shares
254
Comments
Share This
Add to
Shares
254
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக