பதிப்புகளில்

உங்கள் வாழ்வை மாற்றக்கூடிய ஊக்கம் தரும் வீடியோ உரைகள்!

cyber simman
18th Jun 2018
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

இணையத்தில் உற்சாகம் அளிக்கக் கூடிய விஷயங்களில், சுவாரஸ்யமான வீடியோக்களை பார்த்து ரசிப்பதை டாப் டென்னில் சேர்த்துக்கொள்ளலாம். அதிலும் வாசிப்பதை விட, பார்த்து ரசிப்பது எளிதாக இருப்பதாக நினைப்பவர்கள் வீடியோக்களை கூடுதலாக விரும்பலாம். இவ்வளவு ஏன் ஸ்மார்ட்போன் தலைமுறை வீடியோ வடிவிலேயே எல்லாவற்றையும் அணுக விரும்புவதாகவும் அறியப்படுகிறது.

ஸ்டிரீமிங் யுகத்தில் வீடியோக்கள் எந்த அளவு பிரபலமாக இருக்கின்றன என்பதை எளிதாகவே புரிந்து கொள்ளலாம். ஆனால் வீடியோ என்றவுடன் யூடியூப் தான் முதலில் நினைவுக்கு வரலாம். யூடியூப் பரவலாக அறியப்பட்ட வீடியோ பகிர்வு சேவை என்பதால் இதில் தவறேதும் இல்லை என்றாலும், யூடியூப்பை தவிரவும் வீடியோக்களுக்கான இணைய சேவைகள் பல இருக்கின்றன. அது மட்டும் அல்ல, இணைய வீடியோ என்றவுடன் பூனை வீடியோக்களும், பொழுது போக்கு வீடியோக்கள் மட்டும் தான் என்றும் நினைத்துவிடக்கூடாது. விஞ்ஞானம் துவங்கி வரலாறு வரை பல்வேறு துறைகளில் கற்றுக்கொள்வதற்கான வீடியோக்களும் நிறைய இருக்கின்றன.

இவ்வளவு ஏன்? யூடியூப் தளத்திலேயே கற்றல் தொடர்பான சேனல்கள் முன்னணியில் இருக்கின்றன. இந்த வகை சேனல்களையே தனியே பட்டியல் போடலாம் என்றாலும், இப்போதைக்கு இன்னும் ஸ்பெஷலான வீடியோக்களையும், அவற்றை வழங்கும் இணைய சேவைகளையும் பார்க்கலாம். – ஊக்கம் பெறலாம்.

பட உதவி: Google Images

பட உதவி: Google Images


ஆம், ஊக்கம் அளிப்பதற்கு என்றே எண்ணற்ற உரைகளும், பேச்சுகளும் இருக்கின்றன. இவற்றின் வீடியோக்களை திரட்டித்தருவதற்கு என்றே பிரத்யேகமான இணைய சேவைகளும் உள்ளன. தொழில்முனைவு ஆர்வம், கொண்டவர்களும் சுய முன்னேற்றத்தில் நாட்டம் கொண்டவர்களுக்கும் உற்சாகம் அளிப்பதாக இந்த சேவைகள் அமைகின்றன.

தொழில்நுட்ப உரைகள்!

இதற்கான அழகான உதாரணமாக ஆவ்சம்டாக்ஸ்.பார்ட்டி (https://awesometalks.party ) இணையதளத்தை கூறலாம். இந்த தளம் முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சார்ந்த உரைகளில் கவனம் செலுத்துகிறது. மாநாடுகள், பயிலரங்குகள் போன்றவற்றுல் தொழில்நுட்ப வல்லுனர்கள் தங்கள் துறை தொடர்பாக உரை நிகழ்த்துவது உண்டல்லவா? அத்தகைய உரைகளை ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறது இந்த தளம். 

ஜாவா ஸ்கிரிப்டில் என்ன செய்யலாம் என்பதில் துவங்கி, நோட் எஸ் புரோகிராமிங் குறிப்புகள் வரை பலவிதமான தலைப்புகளில் தொழில்நுட்ப வீடியோ உரைகளை இந்த தளத்தில் அணுகலாம்.

வீடியோ உரைகள் அணுகுவதற்கு எளிதாக பேச்சாளர்கள் மற்றும் தலைப்பு வகைகள் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. எது தேவையோ அதில் கிளிக் செய்து பார்க்கலாம். குறிப்பிட்ட வகை வீடியோ உரை இருக்கிறதா? என தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது. இந்த உரைகள் அனைத்தும் பயனாளர்கள் அடங்கிய இணைய சமூகத்தால் தேர்வு செய்யப்பட்டவை என குறிப்பிடப்பட்டுள்ளது. வீடியோ உரையை பார்த்து ரசிப்பதோடு, அவற்றை சமர்பிப்பதற்கான வசதியும் உள்ளது. எனவே பயனாளிகள் தங்களை கவர்ந்த தொழில்நுட்ப வீடியோக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

தொழில்நுட்பம், புரோகிராமிங், தொழில்முனைவில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த தளம் ஏற்றதாக இருக்கும். அதிக குழப்பம் இல்லாமல் உள்ளடக்கம் நேர்த்தியான முறையில் வழங்கப்படுகிறது.

ஸ்டார்ட் அப் தொலைக்காட்சி

இதே போலவே ஸ்டார்ட் அப் துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கான தளமாக ’ஸ்டார்ட் அப் டாக்ஸ் டிவி’ அமைகிறது. பெயரைப்போலவே ஸ்டார்ட் அப் தொடர்பா உரைகளை வீடியோ வடிவில் தொகுத்து வழங்குகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் நிகழ்த்திய உரை, அவர்களின் நேர்க்காணல்கள், முதலீட்டாளர்கள் உரை, வல்லுனர்கள் பேச்சு என எல்லா வகையான வீடியோக்களையும் இந்த தளத்தில் காணலாம்.

image


நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், சந்தை வல்லுனர்கள் ஆகியோரது உரைகளை தனியே அணுகலாம். பிரபலமான வீடியோக்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட வீடியோக்கள் முகப்பு பக்கத்திலேயே அடையாளம் காட்டப்படுகின்றன. அதிகம் பார்த்து ரசிக்கப்பட்ட வீடியோக்கள் பட்டியலும் உள்ளது. உபெர் நிறுவனர் கலானிக் துவங்கி, ஃபேஸ்புக் இணை நிறுவனர் சீன் பார்க்கர் வரை ஸ்டார்ட் அப் முன்னோடிகள் பலரது உரையை வீடியோவாக பார்க்கலாம். 

வீடியோக்களை தேடும் வசதியும் இருக்கிறது. ஸ்டார்ட் அப் தொடர்பான ஊக்கம் தரும் வீடியோக்கள் தேவை எனில் தனியே அங்கும் இங்கும் தேடாமல் இந்த தளத்தில் ஒரே இடத்தில் அணுகலாம்.

இதே போல ஹாண்ட்ஸ் ஆன் டிவி (https://handson.tv/ ) தளமும் தொழில்முனைவு வீடியோக்களை வழங்குகிறது. இந்த தளத்தில் தொழில்முனைவு வீடியோக்களுக்கான தனி சேனல்களையும் உருவாக்கிக் கொள்ளலாம். வீடியோக்களை லைக் செய்வது உள்ளிட்ட அம்சங்களும் இருக்கின்றன. வீடியோ சார்ந்த உரையாடகளையும் மேற்கொள்ளலாம்.

டெட் உரைகள்

இணையத்தில் ஊக்கம் தரும் உரைகள் பற்றி பேசும் போது, ’டெட்’ என குறிப்பிடப்படும் டெக்னாலஜி, எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் டெக்னாலஜி அமைப்பின் வீடியோக்கள் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஊக்கம் தரும் ஆளுமைகள் கொண்டு புதுமையான முறையில் உரைகளை ஏற்பாடு செய்து வரும் இந்த அமைப்பின் வீடியோக்களுக்கு என்றே தனியே இணையதளம் இருக்கிறது. யூடியூப்பிலும் தேடலாம். இதை இன்னும் எளிதாக்கும் வகையில் ஏதேனும் ஒரு டெட் உரையை தேர்வு செய்து வழங்குகிறது ரேண்டம் டெட் டாக்ஸ் தளம் (http://omarsinan.me/projects/ted/) .

இதே போல வடிவமைப்பு சார்ந்த வீடியோக்களை காண விரும்பினால் ஸ்கிரினிங்ஸ் (http://screenings.io/) தளம் உதவியாக இருக்கும். வடிவமைப்பிலேயே, அனிமேஷன், பொருட்கள், நேர்க்காணல், ஆவணப்படம் என பல்வேறு வகைகளில் வீடியோக்களை வழங்குகிறது. புதிய வீடியோக்கள், சிறந்த வீடியோக்கள், அளவில் குறைந்த வீடியோக்களும் தனியே வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் வீடியோக்களை சமர்ப்பிக்கும் வசதியும் இருக்கிறது. இவற்றைப்போலவே ஊக்கம் தரக்கூடிய தொழில்முனைவு வீடியோ தளங்கள் இருந்தால் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags