பதிப்புகளில்

ஃபுட் பிளாகிங்கில் கிடைக்கும் வருமானத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னமிடும் கீது ‘மா’!

சென்னைப் பெண்மணியான கீதா, உணவு சம்பந்த வலைதளத்தில் பட்டைய கிளப்புவதோடு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளிப்பது, மற்றும் பல சமூக சேவைகளை செய்து வருகிறார். 

11th Jun 2018
Add to
Shares
132
Comments
Share This
Add to
Shares
132
Comments
Share

இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக படைக்கப்பட்டு இருக்கிறார்கள். பந்தம், பாசம், மனிதநேயம் மறந்து, பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டு இயந்திர வாழ்க்கை வாழ்பவர்கள் வாழ்க்கையை எப்படி மாற்றிக்கொள்வது என்பதற்கு சிறந்த உதாரணம் கீதா ஸ்ரீதர். 

யார் இந்த கீதா ஸ்ரீதர்?

image


சென்னையில் பிறந்து வளர்ந்த கீதா, திருமணத்திற்குப் பின்னர் கடந்த 25 ஆண்டுகளாக மும்பையில் வாழ்ந்து வருகிறார். சிறந்த மகள், மனைவி, அம்மா என்று தனக்கான பொறுப்புகளை நேர்த்தியாக செய்து முடித்த கீதா, சிறந்த சமூக செயற்பாட்டாளராகவும் விளங்குகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இலவசமாக உணவு சமைத்து தரும் அன்னலட்சுமியாக விளங்குகிறார்.

“எல்லாப் பெண்களைப் போல தான் எனது வாழ்க்கையும். எங்களது குடும்பம் நடுத்தர வர்க்க குடும்பம். தந்தை வெங்கட்ராமன் ரயில்வேயில் பணியாற்றினார், தாய் மதுரம் கால்நடை பராமரிப்புத் துறையில் கண்காணிப்பாளாராக பணியாற்றினார். எங்கள் வீட்டில் நான் கடைக்குட்டிப் பெண் எனக்கு முன்னர் இரண்டு சகோதரிகள் உள்ளனர் என்கிறார் கீதா.

பி.காம், எம்.காம் மற்றும் எம்.சி.ஏ என்று பட்டங்களை வாங்கியுள்ள கீதா, படிப்பில் தான் சுமாரான மாணவி என்கிறார். ஆனால் பாட்டு, நடனம் மற்றும் சமையல் செய்வதில் அலாதி பிரியம் கொண்டிருந்ததாகக் கூறுகிறார். சமையலில் எதை செய்யக் கூடாது என்று சொல்கிறார்களோ அதனை முயற்சித்து பார்ப்பாராம். உதாரணத்திற்கு பீட்ரூட் ரசம், பாகற்காய் அல்வா என்று வித்தியாசமான உணவுகளை தயார் செய்வதிலேயே கல்லூரிப் பருவ காலத்தில் வார இறுதி நாட்கள் கழிந்ததாகக் கூறுகிறார் கீதா.

படிப்பில் சுமார் என்றாலும் மற்ற சமூக விஷயங்கள் அனைத்தும் தனக்கு அப்போதே அத்துபடியாக இருந்ததாகக் கூறும் கீதா இதற்கு முழு முதற்காரணம் தந்தை வெங்கட்ராமன் தான் என பெருமைப்படுகிறார். 

“என்னுடைய அப்பா நான் சுயமாக சிந்திக்க எனக்கு கற்றுக்கொடுத்ததோடு, எனக்கு முழு சுதந்திரமும் கொடுத்திருந்தார். தொலைக்காட்சிகளில் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாக இருந்த விசுவின் அரட்டை அரங்கத்தில் பங்கேற்று பல முறை பேசியுள்ளேன்," என்று கூறும் கீதா, 

எந்த ஒரு பிரச்னையையும் யார் மனமும் புண்படாமல் நாசுக்காகவும், நகைச்சுவையாகவும் வெளிப்படுத்தும் விதத்தை அப்பா தனக்கு கற்றுக்கொடுத்தாக கூறுகிறார்.

image


படிப்பு முடித்த கையோடு 1993ம் ஆண்டு கீதாவிற்கு திருமணமாகிவிட்டது. இதனால் கணவர் ஸ்ரீதர் பிறந்து வளர்ந்து பணியாற்றி வரும் மும்பைக்கு சென்றுவிட்டார் கீதா. மும்பைக்கு சென்ற ஒரே வாரத்தில் வீட்டின் அருகில் இருந்த கான்வென்ட்டில் கணினி ஆசிரியராக பணிக்கு சேர்ந்துள்ளார். 

“1993, ஜனவரி 25 நான் மும்பைக்கு சென்றேன், பிப்ரவரி 1ம் தேதியே எங்கள் வீட்டின் அருகில் இருந்த பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்துவிட்டேன், அப்போது அந்தப் பள்ளியில் கணினி ஆசிரியருக்கான பணியிடம் காலியாக இருந்ததால் உடனடியாக சேரும்படி பள்ளி முதல்வர் கேட்டுக்கொண்டார். இதனால் உடனேயே பணியில் சேர நேர்ந்துவிட்டது, எங்களது ஹனிமூனுக்கே விடுப்பு எடுத்துக்கொண்டு தான் சென்றேன்,” என்று புன்னகைக்கிறார் கீதா.

மும்பை நகரத்து பரபரப்பான வாழ்க்கை, வீட்டு வேலை, ஆசிரியர்பணி அனைத்திற்கும் மத்தியில் இரண்டு பெண் குழந்தைகளின் தாயாகவும் ஆகியிருந்தார் கீதா. “திரும்பிப் பார்ப்பதற்குள் 10 வருடங்கள் ஓடிவிட்டது, என்னுடைய இரண்டு மகள்களும் வளர்ந்து நான் பணியாற்றும் பள்ளியிலேயே சேர்ந்தனர். முதல் மகள் தீக்ஷிதாவும், இரண்டாவது மகள் சாரதாவும் படிப்பில் படுசுட்டிகள். படிப்பில் மட்டுமல்ல பாட்டு, நடனம் என அனைத்திலும் நம்பர் ஒன்னாக இருந்தார்கள். சின்ன வயசு முதலே அவர்கள் என்னுடைய உதவியை எப்போதும் எதிர்பார்த்ததில்லை. சுதந்திரமாகவும் சுயமாகவும் அனைத்து பணிகளையும் செய்துகொள்வார்கள், இதற்கும் காரணம் அப்பா தான்.

தன்னுடைய மகள்கள் எப்போது சென்னை சென்றாலும் அவர்கள் சுயமாக அனைத்து விஷயங்களையும் செய்து கொள்ள வேண்டும், என்னை எதிர்பார்க்கக் கூடாது என்பதை சொல்லி சொல்லி வளர்த்ததாக நினைவுகூர்கிறார் கீதா. ஆசிரியராக இருந்த தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சேவை செய்யும் எண்ணம் தோன்றியதற்கான மையக்கரு தனது இளைய மகள் சாரதா தான் என்கிறார் கீதா.

“என்னுடைய மகள் சாரதாவிற்கு அப்போது 8 வயது இருக்கும், ஞாயிற்றுக் கிழமை என்பதால் நாங்கள் அனைவரும் வீட்டில் இருந்தோம். அவளுக்கு தயிர் சாதம் என்றாலே பிடிக்காது ஆனால் அவளை தயிர்சாதம் சாப்பிட என்னுடைய கணவர் வற்புறுத்தினார். அப்போது சாரதா நான் சாப்பிடுகிறேன், அதற்குப் பதிலாக நான் கேட்பதை செய்ய வேண்டும் என்ற ஸ்ரீதரிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாள். ஆனால் பரிசோ, பணம் செலவழித்தோ எதையும் வாங்கித் தர முடியாது என்று நாங்கள் போட்ட நிபந்தனைக்கு ஒப்புகொண்டு சாரதா கஷ்டப்பட்டு தயிர்சாதத்தை சாப்பிட்டாள். 

சாப்பிட்டு முடித்ததும் அவளது அப்பாவிடம் கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற கேட்டு அடம் பிடித்தாள், சரி செய்கிறேன் என்று ஸ்ரீதர் அவளிடம் என்ன வேண்டும் என்று கேட்டதற்கு, தனக்கு மொட்டையடிக்க வேண்டும் என்றாள். இதனைக் கேட்டு எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சி என்கிறார் கீதா.

ஏனெனில் கீதாவின் மகள்கள் இருவருக்கும் நீண்ட அழகிய கூந்தல், தேவதை போல இருப்பார்கள், அப்படிப்பட்ட பெண் மொட்டை அடிக்க வேண்டும் என்று கூறியதால் முதலில் கீதாவிற்கும், ஸ்ரீதருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டாலும், கொடுத்த சத்தியத்தை காப்பாற்றுவதற்காக சாரதாவை சலூன் அழைத்து சென்று மொட்டை போட்டுள்ளனர். சிறு வயது தானே விரைவில் முடி வளர்ந்து விடும் என்று எங்களை நாங்களே தேற்றிக் கொண்டோமே தவிர அவள் ஏன் மொட்டையடிக்க வேண்டும் என சொல்கிறாள் என்ற காரணத்தை கேட்கவில்லை என்கிறார் கீதா.

அடுத்த நாள் வழக்கம் போல மகள்களுடன் பள்ளிக்கு சென்ற கீதா அங்கு சாரதா மற்றொரு மாணவன் தோளில் கைபோட்டுக்கொண்டு போவதை பார்த்துள்ளார்.

“காலையில் நான் பள்ளிக்கு சென்றதும் பியூன் வந்து என்னை பார்ப்பதற்காக பெற்றோர் ஒருவர் 20 நிமிடங்களாக காத்திருப்பதாக தெரிவித்தார். யார் என்று தெரியாமல் அவரிடம் என்ன வேண்டும் என்று கேட்டேன், அவர் சொன்ன விஷயத்தை கேட்டு பிரமிப்பும், மகிழ்ச்சியும் என்னை திக்குமுக்காட வைத்துவிட்டது...” என்று மெய்சிலிர்க்கிறார் கீதா.

சாரதாவின் வகுப்பு தோழன் ஹரிஷின் அம்மா அவர். சாரதா வகுப்பு லீடர் என்பதால் அந்த தாயிடம் ஏன் ஹரிஷ் வகுப்பிற்கு வரவில்லை என்று கேட்டிருக்கிறாள், அவன் மொட்டையடித்திருப்பதால் மற்றவர்கள் கேலி செய்வார்கள் என்று பள்ளிக்கு வரத் தயங்குவதாக கூறி இருக்கிறார். இந்த பிரச்னைக்கு நான் தீர்வு தருகிறேன், நீங்கள் திங்கட்கிழமை அவனை பள்ளிக்கு அனுப்புங்கள் என்று கூறி இருக்கிறாள் சாரதா. சொன்னது போலவே இன்று ஹரிஷ் வந்ததும், நீயும் மொட்டை நானும் மொட்டை யார் நம்மை கேலி செய்கிறார்கள் என்று பார்க்கலாம் வா என்று அவன் தோளில் கைபோட்டு அழைத்துச் சென்றுள்ளார் என்று கண்ணீர் மல்க கீதாவிடம் கூறியுள்ளார் அந்தத் தாய்.

அதன் பிறகு அவர் சொன்ன விஷயம் தான் எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.

 "ஹரிஷிற்கு ரத்த புற்றுநோய் பாதிக்கப்பட்டதால் கீமோதெரபி செய்ததில் இனி முடியே வளராது என்றும் இதனால் மொட்டையடித்து விடும்படி மருத்துவர்கள் கூறியதைச் சொல்லி அவர் அழுத போது அழகை பொருட்படுத்தாமல் 8 வயதிலேயே மனிதநேயத்துடன் செயல்பட்ட என் மகளை ஈன்றதை நினைத்து அந்தத் தருணத்தில் பெருமகிழ்ச்சி கொண்டேன்,"என்கிறார் கீதா.

அப்போது தான் சாரதாவால் முடிவது ஏன் என்னால் முடியாது என்ற எண்ணம் தோன்றியது. அந்த சம்பவத்தின் தொடர்ச்சியே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முயற்சிக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது என்கிறார் கீதா. 

image


மும்பை டாடா கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் சிகிச்சை பெறுபவர்களுக்கு இலவசமாக உணவு சமைத்து தருவதில் தொடங்கியுள்ளது கீதாவின் சமூக சேவை பயணம். 

“ஒரு முறை கீமோதெரபி செய்யவே லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும், பணவசதி இல்லாதவர்கள் இங்கு சிகிச்சைக்காக காத்திருப்பார்கள் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியாக என்னுடைய பணத்தை செலவிட்டே அவர்களுக்கு உணவு சமைத்து கொண்டு வந்து கொடுப்பேன், பின்னர் படிப்படியாக அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வந்தேன். நான் உதவி செய்வதை பார்த்து என்னை சுற்றி இருந்தவர்கள் தங்களிடம் அதிகமாக இருந்த பொருட்களை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து உதவ முன் வந்தனர், அவர்களுக்கு பாலமாக இருந்து இந்த சேவையை செய்து வருவதாகக் கூறுகிறார் கீதா.

வித்தியாசமாக சமைத்துப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்த கீதா தான் சமையல் சக்கரவர்த்தியான கதையை விவரிக்கிறார். “முகநூலில் நடக்கிற எல்லா சமையல் போட்டிகளிலும் கலந்துக்க ஆரம்பிச்சேன். அதன் தொடர்ச்சியா, மும்பையில நிறைய டி.வி சேனல்களில் கலந்துக்கற வாய்ப்புகள் வந்தன. ‘குட்ஃபுட் சேனல்’, ஜீ டி.வி-யில் ‘கானா கஸானா’, ஸ்டார் பிளஸ்ல ஃபுட் ஷோஸ், செஃப் சஞ்சீவ் கபூரின் யூடியூப் சேனலுக்கான நிகழ்ச்சிகள்னு பயங்கர பிஸியானேன். அப்பதான் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியின் சீஸன் 4-க்கான அறிவிப்பு வந்தது. அதுல கலந்துக்கிட்ட இருபதாயிரம் பேரில் நான் டாப் ஃபைனலிஸ்ட்டா வந்தேன். அந்த டைட்டில் ஜெயிச்ச பிறகு நான் உலக அளவுல பிரபலமானேன் என்கிறார்.

“என் கணவரும் மகள்களும் மிகப்பெரிய சப்போர்ட். என்னுடைய சமையலை ரசித்து, ருசித்து சாப்பிடுவார்கள். அவர்களின் தூண்டுதலாலே www.indianfoodexpress.in என்கிற பெயரில் ஃபுட் பிளாக் ஆரம்பிச்சேன். என் குடும்பத்தினருக்கு அன்றாடம் சமைத்துத் தரும் உணவுகளையே போட்டோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டு வந்தேன். ஒருசில நாள்களிலேயே நானே எதிர்பார்க்காத நேரத்துல 90 ஆயிரம் ஃபாலோயர்ஸ். அது மூலமா என் பிளாக்கும் வளர்ந்தது. இன்னிக்கு அதுல எனக்கு மாசத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது அந்தப் பணத்தை என்னுடைய சேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறேன்,” என்கிறார் கீதா.
image


மும்பை மற்றும் சென்னையில் பிரபல ஃபுட் க்ரிட்டிக். மும்பையில் ஆயிரத்துக்கும் மேலான ரெஸ்டாரன்ட்டுகளையும் சென்னையில் நானூறுக்கும் மேலான ரெஸ்டாரன்ட்டு களையும் ரெவ்யூ செய்திருக்கும் கீதா தனக்கு கிடைத்த தொடர்புகள் மூலம் ஹோட்டல்களில் மீதமாகும் உணவுகளை வீணடிக்காமல் உணவுக்காக கஷ்டப்படுபவர்களுக்கு கிடைக்க வழி செய்துள்ளார். 

“என்னைப் பொருத்தவரை இந்த உலகில் பிறந்த யாருமே உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடக்கூடாது, இதே போன்று உணவு கிடைக்காமல் எந்தக் குழந்தையும் கஷ்டப்படக் கூடாது, இந்த குறிக்கோளை அடிப்படையாக வைத்து ரெஸ்டாரன்ட்டுகளுடன் பேசி உணவு வீணாகாமல் ஏழைகளுக்கு சென்றடையச் செய்ததில் பெருமகிழ்ச்சி” என்று கூறுகிறார் கீதா.

புற்றுநோய் சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்த சுமார் 28 குழந்தைகளை தனது குழந்தைகளாக நினைத்து வளர்த்து வருகிறார் கீதா. “8 வயது முதல் 16 வயது வரையிலான குழந்தைகள் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். அவர்கள் முற்றிலும் உடல்நலன் தேறிவிட்டார்களா அல்லது மீண்டும் அவர்களுக்கு புற்றுநோய் வருமா என்பதையெல்லாம் உறுதியாகக் கூற முடியாது. எனவே அவர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிட வசதி செய்து கொடுத்து அவர்களுக்கு கல்விக்கான வழியையும் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார் கீதா. துன்பத்தில் இருப்பவர்களை அரவணைத்துக் கொள்ளும் தாய் என்பதால் கீதாவை இவர்கள் ‘கீது மா’ என்றே அன்போடு அழைக்கின்றனர்.

கீதா மா சமையலில் புதுமைகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி என்று மட்டும் தன்னுடைய சேவை வட்டத்தை சுருக்கிக் கொள்ளாமல் கண்பார்வை இல்லாதவர்களுக்காக தேர்வு எழுதிக் கொடுப்பது, வொர்லியில் உள்ள தேசிய பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுடன் நூலகம் சென்று புத்தகம் வாசித்து காட்டுவது என்று எந்நேரமும் சமூக சேவையில் ஈடுபாட்டுடன் பம்பரம் போல சுற்றி வருகிறார்.

இதுமட்டுமல்ல வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழை மக்களுக்காக உணவு சமைத்து விநியோகமும் செய்து வருகிறார் கீதா. மும்பை ஃபுட் பேங்க் என்ற ஒன்றை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கினோம் என்னுடன் தன்னார்வலர்களாக சிலர் செயல்படுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கே எழுந்து என் கையாலேயே சமைக்கத் தொடங்கிவிடுவேன், அதனை தன்னார்வலர்கள் ஏழை மக்களுக்கு கொண்டு விநியோகம் செய்வார்கள். ஒருவேளை நான் ஊரில் இல்லை என்றால் கூட என்னுடைய 2 மகள்களும் சமைத்து கொடுத்துவிடுவார்கள், இதுவரை ஒரு வாரம் கூட விடுபடாமல் இதனை செய்து வருவதாக பெருமைப்படுகிறார் கீதா.

image


செம்பூரில் உள்ள ஸ்லுலபா பள்ளி மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு சமையல் கலை பற்றிய வகுப்பை எடுத்து வருகிறார் கீதா. பள்ளி மாணவர்களுக்கு சமையல் வகுப்புகள், மூத்த குடிமக்களுக்கு உற்சாகமான தொழிற்பயிற்சிகளை அளிப்பது என்று கீதாவின் சேவைப்பட்டியல் நீள்கிறது.

மக்கள் ஒருவருக்கொருவர் சேவை செய்வதற்காகவே கடவுளால் மண்ணிற்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். நாம் உயிர்வாழும் இந்த காலகட்டத்தில் நம்மால் முயன்றதை மற்றவர்களுக்கு உதவியாக செய்ய வேண்டும் என்பதே தனது கொள்கை என்கிறார் கீதா. பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கம் என்று இருந்தால் நாட்டில் மனிதநேயத்திற்கு பஞ்சம் வந்துவிடும், தான் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கக் கூடாது, பிறர் வாழ நீ என்ன செய்தாய் என சிந்திக்க வேண்டும். 

தானத்தில் சிறந்தது அன்னதானம்" அந்த அன்னதானத்தை செய்தால் நீங்கள் கேட்காமலே அனைத்து நன்மைகளும் தானாக வந்து சேரும் என்று கீதா கூறிக்கொண்டிருக்கும் போதே மற்றொரு தொலைபேசியில் அவருடைய மகள் பணியுடன் கூடிய உயர்படிப்பிற்கு நியூசிலாந்து செல்வதற்கான விசா கிடைத்த நல்ல செய்தி கிடைத்தது.

அதனை நம்முடன் பகிர்ந்து கொண்ட கீதா, இதைத் தான் நான் கூறுகிறேன், பிரதிபலன் பாராமல் பிறருக்கு நன்மை செய்தால், நமக்கு அனைத்துமே நல்லதாக நடக்கும் என்று கூறி மகிழ்ந்தார். நியூசிலாந்தில் பணியாற்றி கிடைக்கும் சம்பளத்தில் 30 சதவீதத்தை மகள் தன்னுடைய சேவைக்கான நிதியாக கொடுப்பதாகக் கூறியதை பெருமையோடு கூறி தன்னுடைய சமூக சேவை என்றென்றும் தொடரும் என்று விடைபெற்றார் கீதா. 

இவரது குடும்பம்போல் ஒவ்வொரு குடும்பமும் சேவையாற்றத்தொடங்கினால், எந்த தனியொருவனக்கும் உணவில்லை என்ற நிலை உண்டாகும்..

Add to
Shares
132
Comments
Share This
Add to
Shares
132
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக