'கதை சொல்லி புத்தகம் எழுதினேன்' பிளாகர்-எழுத்தாளர் கங்கா பரணியின் பயணம்!

46 CLAPS
0

புத்தகங்கள் படிப்பது என்பது பலருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருப்பதுண்டு. படிக்கும் பழக்கத்தை குழந்தை பருவத்திலிருந்தே வளர்த்துவரும் நாம் புத்தகங்களுக்கு ஒரு பிரதான இடத்தை கொடுத்திருப்பதும் உண்மையே. குறிப்பாக, சிறுகதை மற்றும் நாவல் வடிவத்திலிருக்கும் கதைகளை படிப்பதில் ஒரு அலாதியான ஆர்வமும் தற்போதைய ஈ புக் காலத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய பயணங்கள், கதைகள், புத்தகங்கள் பற்றி தமிழ் யுவர்ஸ்டோரியுடன் ப்ளாகர்-எழுத்தாளர் கங்கா பரணி பகிர்ந்து கொண்டார்.


எழுத்துக்களை நோக்கி வைத்த முதல் அடி

"என்னுடைய அப்பா தான் இதற்கு முதல் காரணம். எல்லா அப்பாக்களை போல என்னையும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பது தான் அவருடைய ஆசையாக இருந்தது. அதுக்காக என்னை பதினோராம் வகுப்பிலிருந்தே தயார் செய்ய ஆரம்பித்துவிட்டார். அவர் ஒரு பி.ஆர்.ஒ வாக பணியாற்றியதால், வீட்டில் எல்லா செய்தி தாள்களும் வாங்குவது வழக்கம். நாட்டு நடப்பைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும், அதனால் தினமும் என்னுடைய டேபிளின் மீது வரிசையாக எல்லா பேப்பர்களையும் வைத்து படிக்க சொல்லுவது அவரது வழக்கம். நான் அவர் பேச்சை கேட்காமல் இருந்தாலும், பேப்பர் வைக்கும் பழக்கம் மட்டும் நின்ற பாடில்லை."

அவருடைய அப்பாவின் விடா முயற்சி, கங்கா பரணியை படிக்கும் பழக்கத்திற்கு மட்டுமில்லாமல், அவருள் இருந்த எழுத்து ஆர்வத்தைத் தூண்டியது. வாசகர்கள் எழுதக்கூடிய கருத்து பத்தி கட்டுரைகளை, கங்கா பரணி தன்னுடைய 11ம் வகுப்பு நாட்கள் முதல் எழுத ஆரம்பித்துள்ளார்.

"முதன் முதலில், பிரசுரிக்கபட்டிருந்த ஒரு புகைப்படத்திற்கு தலைப்பு எழுதினேன். அது ஒரு போட்டியும் கூட. என்னுடைய தலைப்பிற்கு பரிசு கிடைத்தது மட்டுமல்லாமல், என்னுடைய பெயரும் பிரசுரமாகியது. ஒரு செய்தித் தாளில் என்னுடைய பெயரை பார்த்த போது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை." என்று நினைவுகூர்கிறார் கங்கா பரணி.

பிளாகிற்கு மாறிய எழுத்துக்கள்

அந்த உற்சாகத்தின் விளைவாக, பல நாளிதழ்களுக்கு கருத்துக் கட்டுரைகள், ஆசிரியர் கடிதம், தொடர்ந்து எழுதிய கங்கா பரணி, பிளாக் நோக்கியும் தன்னுடைய எழுத்துக்களை பதிவு செய்யத்தொடங்கினார். "நாளிதழ்களுக்கு அனுப்பும் எல்லாக் கட்டுரைகளும், தேர்வு பெறுவதில்லை. அப்படி தேர்வு பெறாத கட்டுரைகளை என்னுடைய பிளாகில் ஒரு டைரிப் பதிவு போல செய்யத்தொடங்கினேன்.

"எழுதுவதில் ஒரு அலாதியான ஆர்வத்தை கண்ட கங்கா, தன்னுடைய பிளாகில் தொடர்ந்து சிறுகதைகள், பல சமூக நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும் கட்டுரைகளை அவ்வப்போது எழுதிய வண்ணமாக நாட்களைக் கழித்தார்.

கல்லூரி நாட்களில் தான், கதைகள் எழுதும் பழக்கம் சரியாக ஆரம்பித்தது. வகுப்பில் நண்பர்களோடு அரட்டை அடித்து கொண்டே சின்ன கதைகளை சொல்லும் பழக்கம் எனக்குண்டு. அது போல ஒரு கதையை என்னுடைய ஃபேஸ்புக்கில் எழுதி பதிவு செய்தேன். பல பேரின் கமெண்டுகளும், உற்சாக வார்த்தைகளையும் பார்த்து, சிறுகதை பக்கம் ஆர்வம் அதிகரித்தது.

நண்பர்களுடைய தொடர் உற்சாகம் மற்றும் தன்னுடைய கதைகளுக்கான சின்ன வரவேற்பை தெரிந்துக்கொண்ட கங்கா பரணி, கதைகளை தன்னுடைய பிளாகிலும் பதிவு செய்யத்தொடங்கினார். "பிளாகிற்கு ஒரு வித்தியாச ரீச் உண்டு என்பதை அப்போது தான் நான் தெரிந்துக்கொண்டேன். முன் பின் தெரியாதவர்கள் கூட கமெண்ட்கள் செய்திருப்பதை அப்போது கவனித்தேன். பிளாகில் கதைகளை தொகுப்புகளாக்கவும் முடிவு செய்தேன்." என்று விவரிக்கும் கங்கா, சின்ன பிளாக் புத்தகங்களை எழுதி பதிவு செய்யத்தொடங்கினார்.

பிளாக் புத்தகம் குறுநாவலாக மாறிய விதம்

"ஒரு நாளுக்கு ஒரு அத்தியாயம் விதம் என்னுடைய பிளாக் புத்தகங்களை எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது நான் TCS நிறுவனத்திலும் வேலை செய்து கொண்டிருந்தேன். என்னுடைய அணி அல்லாத மற்றவர்களும் என்னுடைய பிளாக் புத்தகங்களை படித்து என்னிடம் பேசுவதுண்டு."


________________________________________________________________________

தொடர்பு கட்டுரை:

வீட்டிலிருந்தே இணையத்தில் கலக்கும் ‘ஹோம்ப்ரூனர்’

________________________________________________________________________

இவருடைய பிளாகை படித்த பல நபர்களுள், டேல்ஸ் 4 பதிப்பகத்தார்களும் அடக்கம். பிளாக் மற்றும் இவர் எழுதிய கதைகள் அவர்களுக்குப் பிடித்துப்போக, இவருடைய புத்தகத்தை அச்சிட்டு வெளியிட முடிவு செய்தனர். நான் எழுதிய ஒரு பிளாக் கதையையே குறுநாவலாக மாற்றி அமைத்தேன். "முதல் முறையாக என்னுடைய பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது" என்றார்.

முதல் புத்தகமான 'ஜஸ்ட் யூ மி அண்ட் எ சீக்ரெட்' வெளியான பின், கங்கா பரணி முழு நேர எழுத்தாளராக தன்னை மேம்படுத்திக்கொண்டாலும், அவருடைய ஐடி வேலையும் வாழ்க்கையில் தொடர்ந்தது. "முன்பு போல தினமும் என்னால் எழுத முடியாமல் போனது தான் ஒரே மாற்றம். திட்டமிட்டு எழுதுவதை விட, மனதில் எண்ணம் எழும் போது உடனே எழுதி விடுவதை பழக்கமாக்கியுள்ளேன்," என்று விவரிக்கும் கங்கா பரணியின் இரண்டாம் புத்தகமான 'எ மினிட் டு டெத்' என்ற க்ரைம் காதல் கதையும் பெருமளவில் வரவேற்பு பெற்றது. தற்போது இவர் தனது மூன்றாவது புத்தகத்தை வெளியிட்டுள்ளார். 

"ஐடி வேலையும், புத்தகம் எழுதுவதும் இரண்டுமே என்னை பொறுத்தவரைக்கும் ஒன்று தான். இரண்டிற்குமே ஒரு நுண்ணிய அறிவு இருப்பது அவசியமாகிறது. அங்கே கோடிங் கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங் முறை என்றால், இங்கு கதை, கதாப்பாத்திரங்கள், மொழி; இது மட்டுமே வித்தியாசம். நான் என்னுடைய வேலையையும், எழுத்தையும் என்றும் பிரித்து பார்த்தது இல்லை".

சினிமா ஆர்வமும் உண்டு எனக்கு

சின்ன வயதிலிருந்தே சினிமா இயக்குனர் அல்லது சினிமாத் துறையில் ஏதேனும் ஒரு நல்ல நிலையை அடைய வேண்டும் என்பது கங்கா பரணியின் கனவாக இருந்தது. "நீ பையனாக இருந்திருந்தால், உன்னை சினிமா இயக்குனராக வளர்த்திருப்பேன் என்று என் அப்பா சொல்லுவதுண்டு. அது என்னை நெடுநாளாக உறுத்திக்கொண்டே இருந்தது என்று தான் சொல்லுவேன். இதனாலேயே, சினிமா ஆர்வம் எனக்குள் அதிகரித்துக்கொண்டே போனதும் கூட."

அந்த சமயத்தில் தான், சேத்தன் பகத் கதைகள் பிரபலமாகி, சினிமாக்களில் எடுக்கப்பட்ட காலம். கதைகள், புத்தகங்கள் வாயிலாக சினிமாக்களில் நுழைய முடியும், என்பதையும் தெரிந்துக்கொண்டேன். நான் இப்போது எழுதும் எல்லாக் கதைகளையுமே திரைக்கதையாக மாற்றக்கூடியது. சினிமாக்களுக்கு கதை எழுதும் அந்த நாளுக்காக முயற்சி செய்து ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறேன்.

கதை மற்றும் குறுநாவல்கள் மட்டுமல்லாமல், சர்வதேச விழாவில் பரிசு பெற்ற குறும்படங்களுக்கு கதை எழுதிய அனுபவமும் இவருக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

என்னுடைய இந்த வளர்ச்சிக்கு என்னைச் சுற்றி இருந்தவர்களுடைய ஆதரவே முக்கிய காரணம். என்னுடைய முதல் புத்தகம் வெளியான பின் தான் கல்யாணம் முடிக்க வேண்டும் என்ற திட்டம் என்னுடைய அப்பாவின் மனதிலும் இருந்தது. அதற்கேற்ப, என்னுடைய புத்தகம் வெளியான இரண்டாவது மாதத்தில் திருமணமும் நடைபெற்றது. என்னுடைய ஒவ்வொரு வெற்றியையும் அழகாக எடுத்துக்கொண்டு என்னை தட்டிக்கொடுக்கும் அம்மா. நான் சொல்லும் கதைகளை கேட்டு, படித்து, அதற்கான சரியான விமர்சகராக இருக்கும் என்னுடைய கணவர் என்று எனக்கு பல உற்சாகத் தூண்கள் இருக்கின்றனர்.

5 வருடமாக பிளாக் எழுதிவரும் கங்கா பரணி, தன்னுடைய ஒவ்வொரு கதை, கட்டுரையின் வாயிலாக முன்னேற்றத்தை காண்கிறார். 


என்னைப் பொறுத்தவரைக்கும் வளர்ச்சி என்பது அதுவே. ஒரு எழுத்தாளனாக எல்லா வகையான கதைகளும், எழுதக்கூடிய திறமை இருக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். ஒரு முழுநேர எழுத்தாளராக என்னை மாற்றிக்கொள்ளும் திசையில் தான் நான் இப்போது பயணித்துக்கொண்டிருக்கிறேன்...

கங்கா பரணியின் பிளாக்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

இது போன்ற எழுத்தாளர்கள் தொடர்பு கட்டுரைகள்:

கார்த்திக் புகழேந்தி என்ற கதைசொல்லியின் கதை!

'வேற்றுமைகளின் கொண்டாட்டமாகவே கலாசாரத்தைக் காண்கிறேன்'- ஜெயந்தி சங்கர்

Latest

Updates from around the world