பதிப்புகளில்

பணிபுரியும் அம்மாக்களின் உலகம்...

பணிக்குச் செல்லும் அம்மாவாக பல்வேறு பொறுப்புகளைச் சுமந்து பணி வாழ்க்கையையும் குடும்ப வாழ்க்கையையும் சிறப்பாக சமன்படுத்திய வெவ்வேறு துறைசார் பெண்களின் பற்றிய தொகுப்பு!

YS TEAM TAMIL
15th May 2018
Add to
Shares
25
Comments
Share This
Add to
Shares
25
Comments
Share
image


செயற்கையாக எல்லைகளை உருவாக்குவதன் முக்கியத்துவம் – திவ்யா கோகுல்நாத், இணை நிறுவனர் - பைஜூஸ்

image


பணிக்குச் செல்லும் அம்மாவின் வாழ்க்கை உற்சாகம் நிறைந்ததாகவே இருக்கும். ஒரு அம்மாவாக நம் குழந்தைக்குச் சிறப்பானவற்றை அளிப்பதோடு குடும்பத்தையும் பணி வாழ்க்கையையும் சிறப்பாக நிர்வகிக்கும் வலிமை நம்மிடம் உள்ளது என்பதைத் தாய்மை நிலையே நமக்கு உணர்த்துகிறது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சூப்பர் மாம் இருக்கிறார் என நான் நம்புகிறேன். நாம் இயற்கையாகவே பல்வேறு பணிகளைச் சிறப்பாகச் செய்துமுடிக்கும் திறன் கொண்டவர்கள். நாம் செய்யவேண்டியதெல்லாம் இலக்கை நிர்ணயித்து கனவைத் தொடர்ந்து சென்று நமக்கே உரிய பாணியில் வெற்றியை அடைவதுதான்.

ஒரு பெண் என்பவள் பல்வேறு பணிகளைத் திறம்படச் செய்யும் நிபுணத்துவம் பெற்றவர், வளர்த்தெடுப்பவர், அனைத்தையும் ஒன்றிணைப்பவர் என்றே விவரிக்கப்படுவார். தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில்முறை வாழ்க்கையிலும் ஒரு பெண்ணிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன. என் மகன் பிறந்ததும் செயற்கையான எல்லைகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்தேன். பணியிடம் மற்றும் குடும்பத்தை சிறப்பாக சமன்படுத்த இந்த எல்லைகள் மிகவும் முக்கியமானதாகும்.

பைஜூஸ் நிறுவனத்தில் அபார வளர்ச்சியை சந்தித்த காலகட்டத்தில்தான் என் மகன் பிறந்தான். R&D K-12 ப்ராடக்டை உருவாக்கி வந்தது. வீடியோ மாட்யூல்களை பதிவு செய்யவேண்டியிருந்தது. கடினமான சூழல்களில் இருந்து விரைவாக மீண்டெழும் திறனையும் பல்வேறு பணிகளை ஒருசேர செய்துமுடிக்கும் திறனையும் காட்டவேண்டிய நேரம் அது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இத்தகைய திறன் என்னிடம் இருப்பதை நான் அதுவரை அறிந்திருக்கவில்லை. எனக்கென செயற்கையான எல்லைகளை நான் வகுத்துக்கொண்டது ஒரு நாளில் முடிக்கவேண்டிய பணிகளை ஒழுங்குப்படுத்தி முன்னுரிமை அளிக்க உதவியது. நீங்கள் முறையாக முன்னுரிமை அளிப்பதே வீட்டிலும் பணியிடத்திலும் சிறப்பிக்க சிறந்த வழியாகும்.

மேலும் எனக்கு மிகவும் முக்கியமானது என கருதும் விஷயம் தொடர்ந்து என்னுடன் இருப்பதை உறுதிசெய்துகொண்டது எனக்குப் பெரிதும் உதவியது. இது தனிநபர் செயல் அல்ல என்பதையும் மறந்துவிடக்கூடாது. என் நண்பர்கள், சக ஊழியர்கள், குடும்பத்தினர் என ஒரு அற்புதமான ஆதரவு அமைப்பு எனக்குக் கிடைத்தது என் அதிர்ஷ்டம்.

அனைத்து செயல்களிலும் 100 சதவீத கவனம் – ரதி ஷெட்டி , இணைநிறுவனர் & சிபிஓ - பேங்க்பஜார்

image


பணியிடத்தில் காணப்படும் அமைப்புடன்கூடிய செயல்பாடுகள் பணியிடத்திற்கு மட்டுமே பொருந்துவதல்ல. அதே போல் சுதந்திரமான செயல்பாடுகள் வீட்டுச் சூழலுக்கு மட்டுமானதல்ல. வீட்டில் அமைப்புடன்கூடிய செயல்பாடுகளை இணைத்தன் மூலமாகவும் பணியிடத்தில் சுதந்திரத்தன்மையை இணைத்துக்கொண்டதன் மூலமாகவும் நான் பலவற்றைச் சிறப்பாகச் செய்துமுடித்துள்ளேன். 

பணிபுரியும் அம்மா எனில் வீட்டிலும் பணியிடத்திலும் ஒவ்வொரு பணியிலும் 100 சதவீதம் கவனம் செலுத்தவேண்டும். நேரத்தையும் மனிதர்களையும் முறையாக நிர்வகிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். நாம் செய்யும் வேலைக்கு முறையாக முன்னுரிமை அளிக்கவேண்டும். எனக்கு இரு உலகமும் சிறப்பாகவே அமைந்தது. ஒன்றை மற்றொன்றிற்காக எப்போதும் தியாகம் செய்யமாட்டேன்.

மிகவும் நிறைவான அனுபவம் – லீனா அஷர், நிறுவனர் – கங்காரு கிட்ஸ் எஷுகேஷன்

image


சந்தேகம் ஏதுமின்றி இது மிகவும் நிறைவான அனுபவமாகும். அதீத ஆர்வமும் நோக்கமும் இருப்பதன் அவசியத்தை குழந்தை தெரிந்துகொள்ள ஒரு அம்மா வாய்ப்பளிக்கவேண்டும். இதுவே ஒரு அம்மா தனது குழந்தைக்கு அளிக்கும் மிகப்பெரிய பரிசு என நான் நம்புகிறேன். தாய்மார்கள் பணிக்குச் செல்வதால் அவர்களது குழந்தைகளின் கண்ணோட்டத்தில் காணப்படும் நன்மைகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இத்தகைய கேள்விகளை நிறுத்திக்கொள்ளவேண்டும். அல்லது இதே சமூகத்தில் உள்ள அப்பாக்களிடமும் இத்தகைய கேள்விகள் எழுப்பப்படவேண்டும். மேலும் தங்களுக்கென தனிப்பட்ட ஆர்வமும் நோக்கமும் இல்லாத பல தாய்மார்கள் தங்களது குழந்தைகளின் நோக்கத்தையே சார்ந்துள்ளனர். குழந்தைகள் வளர்கையில் இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

'ஒரு குடும்பத்தை நிர்வகிப்பது இரண்டு வழிப் பாதையுடையது' – ராகி வாஸ்வனி – பிரபல செஃப்

image


பணிக்குச் செல்லும் அம்மாவாக இருப்பதே ஒரு சவாலாகும். ஒரு பெண்ணாக நீங்கள் பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்றவேண்டும் என்கிற சமூக எதிர்பார்ப்புகள் இருக்கும். ஒரு அம்மாவாக இருப்பது எல்லோருக்கும் பிடிக்கவேண்டும் என அவசியமில்லை. நீங்கள் இல்லத்தரசியாக இருந்தாலும் பணிபுரியும் அம்மாவாக இருந்தாலும் அம்மாவாக இருப்பது கடினமானதே. கடினம் என்றால் அது மோசமானது அல்ல என்பதை நாம் மறந்துவிடுகிறோம். ஆம், கடினம் என்பது சவால் நிறைந்ததாகும். 

என் குடும்பத்தை நேசிப்பதைப் போன்றே நான் என் பணியையும் நேசிக்கிறேன். இதைச் சொல்வதில் எனக்கு வருத்தமில்லை. பணிக்குச் செல்லும் அனைத்துத் தாய்மார்களும் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். 

குடும்பத்தை நிர்வகிப்பது இருவழிப் பாதையுடையதாகும். இந்தத் திருமண பந்தத்தில் நீங்களும் உங்கள் கணவரும் இணைந்திருக்கிறீர்கள். உங்களது குடும்பத்திற்கு ஏற்றவாறு பொறுப்புகளை பகிர்ந்துகொள்ளுங்கள். அடுத்தவர்களைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள். குடும்பத்தின் அன்பும் ஆதரவும் இருந்தால் பணிக்குச் செல்லும் அம்மாவாக நீங்கள் சிறப்புற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

'பணிக்குச் செல்லும் அம்மாவாக இருப்பது வாழ்க்கையின் ஒரு பகுதியே' – சோனா ஊர்வசி, நிறுவன பார்ட்னர் – Twism Design Production

image


அம்மா என்றாலே பணி அதிகமாக இருக்கும். எனவே பணிபுரியும் அம்மா என்று குறிப்பிட்டோமானால் இல்லத்தரசியாக இருப்பவர் பணி வாழ்க்கையில் ஆர்வம் இல்லாதவர் என்றே பொருள்படும். ஆனால் அது உண்மை அல்ல. இல்லத்தரசியாக இருந்தவாறே மற்றொரு பணியையும் மேற்கொள்ளமுடியுமா? ஆம், சாத்தியம். அப்படியானால் இவ்விரண்டையும் எவ்வாறு ஒருங்கிணைத்து என் லட்சியத்தை அடைவது என்பதே கேள்வி. இங்கே நான் லட்சியம் என குறிப்பிடுவது என் குழந்தைகளையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கவேண்டும். மகிழ்ச்சியான அம்மாவாகவும் இருக்கவேண்டும்.

இவ்விரண்டையும் அடைய உங்கள் வாழ்க்கைத் துணையின் உதவியை நாடவேண்டும். என்னையும் ராமனையும் அறிந்தவர்கள் அடிக்கடி, “நீ அதிர்ஷ்டசாலி என்பதால் ராமனைப் போல் கணவர் கிடைத்ததுள்ளார்,” என்பார்கள். அவர் அசாதாரணமாக ஏதோ செய்வது போல் இத்தகைய வார்த்தைகள் உணர்த்துவதால் எனக்கு கவலை அளிக்கும். இது மாறவேண்டும். பணிக்குச் செல்லும் அம்மா என்பது என் வாழ்க்கையின் ஒரு பகுதி. அவ்வளவே.

சில சமயங்களில் திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் பணிபுரிவது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். 

என் குழந்தைகள்தான் என் மன அழுத்தத்தை போக்குபவர்கள். என்னை ஒரு முறை அவர்கள் கட்டி அணைத்தால் போதும் நான் புத்துணர்ச்சி பெறுவேன்.

திரைப்படங்களில் பணியாற்றுவதால் பணியிடத்திற்கு என் குழந்தைகளை அழைத்துச் செல்வேன். இதனால் கடின உழைப்பு குறித்து தெரிந்துகொண்டு அவர்களது திறமைகளை கண்டறிவார்கள். அலுவலக வேலை காரணமாக நான் பிரசவ நேரத்தில் தாமதமாகவே மருத்துவமனைக்குச் சென்றேன். எடிட் செய்யும்போதே என் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளேன். என் கணவர் ஃபேஷன் ஷோவிற்கு எங்கள் மகளை தோள்களில் சுமந்தவாறே சென்றுள்ளார். ஆனால் நானும் அப்படித்தான் வளர்ந்தேன். என் அம்மாவுடன் படப்பிடிப்பிற்குச் சென்றுள்ளேன். இன்று எனக்குச் சொந்தமான விளம்பர ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் உள்ளது. எழுத்தாளராகவும் இயக்குனராகவும் இருக்கிறேன். வாழ்க்கையில் கடினமான சூழல்களையும் துணிந்து எதிர்கொண்டால் அனைத்தும் தாமாகவே சிறப்புறும்.

'ஆபத்துக்களைக் காட்டிலும் வெகுமதி அதிகமாக இருக்கும்' – ப்ரீத்தி ரதி குப்தா, நிர்வாக இயக்குனர் மற்றும் ப்ரொமோட்டர் – ஆனந்த் ரதி ஷேர் & ஸ்டாக் ப்ரோக்கர்ஸ் லிமிடெட்

image


பெண்கள், குறிப்பாக பணிக்குச் செல்லும் தாய்மார்கள் பணியிடத்தையும் குடும்பவாழ்க்கையையும் சரியாக சமன்படுத்துவது குறித்து அடிக்கடி பேசுவதுண்டு.

 பணிக்குச் செல்லும் ஒவ்வொரு அம்மாவும் ஏதோ ஒரு கட்டத்தில் சந்திக்கவேண்டிய கடினமான போராட்டம் இது. எனினும் மிகச்சரியாக இவை இரண்டையும் சமன்படுத்தவேண்டிய அவசியமில்லை என்பதும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்றுக்கொள்ளும் பொறுப்பை நூறு சதவீத ஈடுபாட்டுடன் நிறைவேற்றினாலே போதுமானது என்பதே என் கருத்து.

நான் பணியில் இருக்கும்போது நான் ஒரு தொழில்முனைவோர். அந்தப் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவேன். அதேபோல் வீட்டில் இருக்கும்போது அன்பான தாய். அதில் மட்டுமே கவனம் செலுத்துவேன். எனினும் இதைச் சொல்வது எளிது. நடைமுறைப் படுத்துவது கடினம். ஆனால் பணியிடம் மற்றும் குடும்ப வாழ்க்கையை சமன்படுத்துவது குறித்த அச்சமூட்டும் உரையாடல்களைக் காட்டிலும் இது எளிதான செயல்தான்.

பணிக்குச் செல்லும் அனைத்துத் தாய்மார்களும் ஏதோ ஒரு தருணத்தில் தங்கள் செயல்பாடுகள் தேவையைக் காட்டிலும் குறைவாக இருப்பதாக எண்ணுவதுண்டு. எனக்கும் அப்படிப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டதுண்டு. இருப்பினும் என்னுடைய தொழில்முனைவு முயற்சி என் குழந்தைகளிடம் சில உள்ளார்ந்த மதிப்புகளை வழங்கியுள்ளது என்பதை நினைத்துத் திருப்தியடைகிறேன். என் குழந்தைகள் சுயசார்புடன் இருக்கின்றனர். ஆபத்துகளை துணிந்து எளிதாக ஏற்க பழகிவிட்டனர். தொடர்ந்து புதிய அனுபவங்களைப் பெற விரும்புகின்றனர். பணிபுரியும் பெற்றோராக இருப்பதால் அதற்கே உரிய சாதக பாதங்கள் உள்ளன. ஆனால் நீண்ட கால அடிப்படையில் ஆபத்துகளைக் காட்டிலும் வெகுமதி அதிகமாகவே இருக்கும்.

'கடினமான சூழல்களும் இருக்கும்' – பிதிஷா நாகராஜ் சிஎம்ஓ – Schneider Electric India 

image


வாழ்க்கையில் நாம் எட்டும் எந்த ஒரு மைல்கல்லையும் போலல்லாமல் தாய்மை அடைவது என்பது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் காலகட்டமாகும். என்னுடைய மகள் பிறந்ததும் சிலவற்றை மீண்டும் ஒழுங்குபடுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சவால் நிறைந்த பணியில் மீண்டும் எளிதாக இணைய ஆதரவான பணியிடமும் சக ஊழியர்களும் அவசியம். அதிர்ஷ்டவசமாக எனக்கு அத்தகைய சூழல் அமைந்தது. குடும்பத்தினரும் ஆதரவாக இருந்தனர். 

எனினும் என் வாழ்க்கையிலும் என் மகளின் வாழ்க்கையிலும் பல்வேறு நிலைகளில் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. சில முடிவுகள் சற்றே நிறுத்தி புத்துணர்ச்சியுடன் மீண்டும் செயல்பட உதவியது. சில தருணங்கள் என்னுள் இருந்த தொழில்முனைவுக் கனவு வெளிப்பட உதவியது. சில சமயங்களில் இவ்வாறு இருவேறு பொறுப்புகளை மாறி மாறி மேற்கொள்ளும் சூழலை கைவிடவும் நேரலாம். ஆனால் பெரும்பாலான முடிவுகள் உங்களை வலிமையாகவும், புத்திசாலியாகவும் மாற்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

இன்று என்னுடைய வாழ்க்கையைத் திரும்பிப் பார்கையில் என் மகளின் வரவினால் என் பணி வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுக்காக நான் அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

'சோர்வான தருணங்களே இருந்ததில்லை' – டாக்டர் கரிமா சிங், இணை நிறுவனர் மற்றும் சிஇஓ – BlingVine.com

image


ஒரு குழந்தைக்கு அம்மா என்கிற பொறுப்பை சுமப்பதே சவால் நிறைந்தது எனும்போது கூடுதலாக ஒரு தொழிலை நடத்தி வரும்போது அது நிலையை மேலும் வேடிக்கையாக்கிவிடும். என் வாழ்வில் ஒரே ஒரு முறைகூட நான் சோர்வாக உணர்ந்ததில்லை.

பல்வேறு பிரச்சனைகளை ஒரே நேரத்தில் கையாளும்போது ஒரு மாறுபட்ட கண்ணோட்டமும் வலிமையும் கிடைக்கும். 

உதாரணத்திற்கு குழந்தையின் டயாப்பரை வெற்றிகரமாக மாற்றிய பிறகு ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வது எளிதான பிரச்சனை போல் தோன்றும்.

உங்கள் குழந்தையை பராமரிக்க குழந்தையின் மீது உண்மையான அக்கறை கொண்ட சரியான நபரைக் கண்டறிவது உங்களது வாடிக்கையாளர் மீது அக்கறை கொண்ட சரியான ஜுவல்லரி வடிவமைப்பாளரைக் கண்டறிவது இணையான செயலாகும்.

'கடினமான தீர்மானங்களை எடுக்கத் தயாராக இருக்கவேண்டும்' – மேகனா அகர்வால், இணை நிறுவனர் மற்றும் சிஓஓ - IndiQube

image


பணிவாழ்க்கையையும் குடும்பத்தையும் எவ்வாறு முறையாக நிர்வகிக்கிறீர்கள் என பலர் கேட்பார்கள். என்னைப் பொருத்தவரை இரண்டும் வெவ்வேறல்ல. ஒருவர் எதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதை சிந்தித்து கடினமான தீர்மானங்களை எடுக்கத் தயாராகவேண்டும். குழந்தைகளுடன் தொடர்புடையது என்பதால் நேரத்தை முறையாக நிர்வகிப்பது அவசியம். ஆனால் வலுவான ஆதரவு அமைப்பு இல்லையெனில் இது சாத்தியப்படாது. ஆதரவான கணவர் பணிக்குச் செல்லும் தாய்மாரின் முதுகெலும்பு போன்றவர். பணி வாழ்க்கையிலும் குடும்பத்திலும் என்னுடைய கணவர் எனக்களித்த ஆதரவு விலைமதிப்பில்லாதது. நாங்கள் இணைந்து செயல்பட்டதால் வீட்டிலும் பணியிடத்திலும் எங்களது பொறுப்புகளை எளிதாக நிறைவேற்ற முடிந்தது. எனவே ரிஷி என்னுடைய வெற்றியில் பெரும் பங்களித்துள்ளார்.

IndiQube நிறுவனத்தை நிர்வகிக்கும் தொழில்முனைவோராக இருப்பதால் என் குழந்தைகளான 12 வயது அனன்யா மற்றும் 8 வயது சித்தார்த்துடன் எனது விருப்பத்திற்கேற்ப அதிக நேரம் செலவிட முடியாது. ஆனால் வார இறுதியில் குடும்பத்துடன் வெளியில் செல்லும்போது அதிக நேரம் செலவிட்டு அதை சமன்படுத்துவேன்.

நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல பணிகளை திட்டமிட்டு முன்னுரிமை அளிப்பதே முறையாக சமன்படுத்த உதவும். இத்தகைய சமன்படுத்தும் செயலானது எனக்குப் பொறுமையையும் நேரத்தைத் திறம்பட நிர்வகிக்கவும் கற்றுக்கொடுத்தது. அத்துடன் அதிக குழப்பமான சூழலுக்கிடையே அமைதியாக நிதானித்துச் செயல்படவும் கற்றுக்கொடுத்தது.

சில சமயம் தர்மசங்கடமான சில தருணங்களும் ஏற்படுவதுண்டு. ஆனால் அவை சூழலை அமைதியாகக் கையாள உதவியுள்ளது. வீட்டிலும் என் குழந்தைகளுடனும் எனக்கு ஏற்பட்ட அனுபவமானது தனிப்பட்ட அளவிலும் பணி வாழ்க்கையிலும் நான் வளர்ச்சியடைய உதவியுள்ளது. குறைவான நேரத்தில் அதிகம் சாதிப்பது, வித்தியாசமாக செயல்பட கற்றுக்கொண்டது, பணி சார்ந்த கடமைகளில் நேர்மறையான அணுகுமுறையை பின்பற்றுதல் போன்றவை நான் என் குழந்தைகளிடம் அன்றாடம் கற்றுக்கொண்டதன் வெளிப்பாடாகும். நம்முடைய மன ஆரோக்கியத்திற்காக நமக்கான நேரத்தை ஒதுக்கவேண்டும். அத்துடன் நமக்கும் நம் குடும்பத்திற்கும் ஏற்ற ஆதரவு அமைப்பை உருவாக்கவேண்டும்.

வீட்டிலும் அலுவலகத்திலும் உங்களது லட்சியத்தை அடைய உதவக்கூடிய திறமையான குழுவை உருவாக்கிக்கொள்ளுங்கள். குழு செயல்பாடுகளே எப்போதும் பலனளிக்கும். மேற்கொள்ளப்படவேண்டிய பணிக்குத் தகுந்த நபரை நியமிப்பதே செயல்பாடுகளை எளிதாக்கும்.

'அம்மாக்கள் வலிமையானவர்கள்' – வ்யோமா பண்டிட், ஜாயிண்ட் சிஎம்ஓ – ஸ்ரீராம் ப்ராபர்டீஸ்

image


கடினமான சூழல்களுக்கிடையே பணிபுரியும் அம்மாவாக இருப்பது ஒரு விதத்தில் வரம் என்பதே என்னுடைய கருத்து. தாய்மை என்பது திறம்பட செயல்படுதல், பல்வேறு பணிகளைக் கையாளுதல், நெருக்கடிகளை முறையாக நிர்வகித்தல் போன்றவை நிரம்பியதாகும். எனவே திறமையானவர்கள் தேவைப்பட்டால் ஒரு தாயை பணியிலமர்த்தலாம்.

ஒரு சிஎம்ஓ-வாக நான் வாரத்தின் ஆறு நாட்கள் தினமும் 10 மணி நேரத்தை அலுவலக பணிக்காக ஒதுக்குவேன். பணிக்குச் செல்வதற்கு முன்பும் பணி முடிந்து திரும்பிய பிறகும் கிடைக்கும் ஒரு சில மணிநேரங்களே என்னுடைய இரண்டரை வயது அவ்யய் உடன் செலவிடமுடியும். இப்படிப்பட்ட நேரம் கிடைக்கும்போது அதில் உங்களது மன அழுத்தத்தைப் போக்க உங்களுக்கே உரிய விதத்தில் குழந்தையுடன் இணைந்திருப்பது முக்கியம். ஞாயிற்றுக்கிழமை குடும்பத்திற்கான நாள். அன்று கூடுதல் நேரம் செலவிடுவேன். நான் பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்திருந்தால் குழந்தையுடன் தரமான நேரம் செலவிட்டிருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

பணிக்குச் செல்லும் ஒரு தாய்க்கு மிகப்பெரிய ஆதரவாக இருப்பது அவரது அம்மா. என்னுடைய அம்மாவும் மாமியாரும் பணியில் இருந்தவர்கள். என்னுடைய குழந்தையை வளர்ப்பதில் இருவருமே பெரும் பங்களித்தனர். குழந்தையை பராமரிக்க போதுமான ஆதரவு கிடைக்காத காரணத்தினாலேயே இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் தங்களது வேலையை விட்டுவிடுகின்றனர். 

“இந்தியாவில் அதிக தாய்மார்கள் மீண்டும் பணியில் இணைய மலிவான விலையில் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படவேண்டும். அத்துடன் பணிக்குச் செல்லும் ஒரு பெண் நல்ல அம்மா இல்லை என்கிற தவறான நம்பிக்கையை அகற்றவேண்டும்,”

சிறப்பான ஆதரவு அமைப்பு – ஆஷா குப்தா, டிசைனர் - ashagautam

image


நான் பணிபுரியத் துவங்கியபோது அனுகூலமான சூழல் இருந்தது. ஏனெனில் அப்போது என்னுடைய வயது 44. என் பெண்களுக்கு திருமணம் முடிந்திருந்தது. என் மகன் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். எனக்கு ஆதரவாக இருந்தார். என்னுடைய பணியில் அதிக கவனம் செலுத்தியபோது என் மகள்களுடன் அதிக நேரம் தொடர்பில் இருக்க முடியாமல் போனது. என்னுடைய மகன் கௌதம் குப்தா படித்துக்கொண்டே எனக்கு உதவினார். 

ஆனால் என் மற்ற இரு குழந்தைகளின் திருமண நாள், மகப்பேறு காலம் போன்றவற்றில் உடன் இருக்கமுடியாமல் போனது. அவர்கள் இதை ஒருபோதும் தவறாக நினைக்கவில்லை. தொடர்ந்து ஆதரவளித்தனர். இருப்பினும் சில மதிப்புமிக்க நினைவுகளை நான் இழந்தது குறித்து வருந்துகிறேன்.

உணர்ச்சிப்பூர்வமான அணுகுமுறை – பிரியங்கா தவன் நாயர், ப்ராண்ட் மேலாளர் - Pressto

இரட்டை பெண் குழந்தைகளின் தாயாக இருப்பது கடினமான அதேசமயம் நேசம் நிறைந்த அனுபவமாகும். சாகசங்களில் ஆர்வத்துடனும் மார்கெட்டிங் பணியில் தீவிரமாகவும் இருந்த எனக்கு ஆரம்பத்தில் பணிவாழ்க்கையையும் குடும்பத்தையும் சமன்படுத்துவதும் ஒரு மிகப்பெரிய சவாலாகவே மாறியது. ஆனால் குடும்பத்தின் ஆதரவும் சுயசார்புடன் இருக்கவேண்டும் என்கிற மன உறுதியும் பணிவாழ்க்கைக்குத் திரும்ப பெரிதும் உதவியது. 

தலைமைப்பதவியை தக்கவைப்பதற்கும் ப்ரெஸ்டோ நிறுவனத்தில் புதிய மைல்கல்களை எட்டவும் பணியாற்றியவாறே குழந்தைகளுக்குத் தேவையான கவனம் செலுத்தப்படுவதையும் உறுதிசெய்தேன். ஒரு அம்மாவாக புதுமையான விதத்தில் உணர்ச்சிகரமான அணுகுமுறையுடன் விஷயங்களை மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கக் கற்றுக்கொண்டேன். இது படைப்பாற்றலுடன் கூடிய சிந்தனையை ஊக்குவிக்க உதவியது.

'நெகிழ்வான பணி நேரம் வாழ்க்கையை எளிதாக்கும்' – அனிதா உவராஜ், டிசைன் பார்ட்னர் - HomeLane

image


நான் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உயிரித் தகவலியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். பெங்களூரு மவுண்ட் கார்மல் கல்லூரியில் PGDBA (HR) முடித்துள்ளேன். அதன் பிறகு திருமணமாகி பெங்களூருவிற்குக் குடிபெயர்ந்தேன். ஒரு பெண் குழந்தையின் தாயாக மகிழ்ச்சியாக இருந்தேன். பணிவாழ்க்கையைத் தொடரவேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி இருக்கும்போதும் எதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.

என் மகள்தான் எனக்கு முக்கியம் எனத் தீர்மானித்தேன். எவ்வளவு நேரம் பணிபுரியவேண்டும், எப்போது பணிபுரியவேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அளிக்கக்கூடிய பணியே எனக்குத் தேவைப்பட்டது. உயிரித் தகவலியல் சார்ந்தோ அல்லது மனிதவளத் துறையிலோ பணிபுரிவதைத் தவிர்த்து சுய தொழிலில் ஈடுபடவேண்டும் என்பது தெளிவானது.

இதனிடையே என்னுடைய வீட்டிற்கான உட்புற வடிவமைப்புப் பணி நடந்தபோது உட்புற வடிவமைப்பாளராக பணிபுரிவதில் எனக்கு ஆர்வம் இருந்ததையும் சாத்தியக்கூறுகள் இருப்பதையும் உணர்ந்தேன். மேலும் அந்த காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் பிரிவு வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. பகுதி நேரமாக உட்புற வடிவமைப்புப் படிப்பை மேற்கொள்ள தீர்மானித்தேன். 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் INIFD-ல் படிப்பை முடித்தவுடன் ’டிசைன் பார்ட்னர் ப்ரோக்ராம்’ பற்றிய ஹோம்லேனின் விளம்பரத்தை முகநூலில் பார்த்தேன். அது என்னைக் கவர்ந்தது. அந்த பயிற்சிக்குச் சென்ற பிறகு என்னுடைய தேவைக்கு ஏற்றவாறு இருப்பதைத் தெரிந்துகொண்டேன். விரைவிலேயே அந்த ப்ரோக்ராமில் இணைந்து செயல்படத் துவங்கினேன்.

வாடிக்கையாளரின் இடத்தை பார்வையிடுவேன். இரண்டு ஆண் ஊழியர்கள் அடங்கிய குழு செயல்பட்டது. நான் மாலை 4 மணி வரை மட்டுமே பணியாற்றினேன். ஹோம்லேனின் மெய்நிகர் வடிவமைப்புத் தளமான ஸ்பேஸ்கிராஃப்ட் வாயிலாக வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருந்தேன். வாடிக்கையாளர்களுடன் வடிவமைப்பு குறித்து விவாதிப்பதற்காக வாரத்தில் ஒரு நாள் மட்டும் ஷோரூம் செல்வேன். மற்ற நேரங்களில் வீட்டிலிருந்தே பணிபுரிந்தேன். இத்தகைய ஏற்பாட்டினால் என்னுடைய அன்பு மகளுடன் செலவிட அதிக நேரம் கிடைத்தது. அதே சமயம் வருமானமும் ஈட்ட முடிந்தது.

'நாட்கள் சிறப்பாகவும் இருக்கும் மோசமாகவும் இருக்கும்' – ராச்சல் கோயென்கா, நிறுவனர் மற்றும் சிஇஓ – தி சாக்லேட் ஸ்பூன் கம்பெனி பிரைவேட் லிமிடெட்

image


புதிதாக தாய்மை அடைந்த நான் பணிபுரியும் அம்மாக்கள் மீது அதிக மரியாதை கொண்டுள்ளேன். தூக்கமற்ற இரவுவைத் தொடர்ந்து பணிக்குச் செல்லவேண்டும். குழந்தையை பராமரிக்க உதவி பெறுவது கடினமாக இருக்கும். இருப்பினும் பணியில் கவனம் செலுத்தவேண்டும். குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான போராட்டங்களிடையே பணிபுரியவேண்டும். அப்படிப்பட்டவர் நிச்சயம் ஒரு அசாதாரண சக்தி படைத்தவர்.

நான் பணிக்குத் திரும்பியபோது பணியிடத்தையும் குடும்பத்தையும் சமன்படுத்துவது பெண்களுக்குக் கடினமான விஷயம் என்று குறிப்பிடுவது பெண்களை குறைத்து மதிப்பிடும் செயல் என்பதைத் தெரிந்துகொண்டேன். நாட்கள் சிறப்பாகவும் இருக்கும் மோசமாகவும் இருக்கும். இரண்டு வெவ்வேறு உலகை சிறப்பாக சமன்படுத்த முன்கூட்டியே திட்டமிடுவது பலனளிக்கும். இருப்பினும் எத்தகைய திட்டமிடல் இருப்பினும் வயிற்றுப்போக்கோ, காய்ச்சலோ ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டால் சிறப்பான திட்டமிடலும் பலனளிக்காமல் போவதும் உண்டு.

'நீங்கள் செய்யும் தேர்வு முக்கியமானதாகும்' – கீதா குரானா, க்ளோபல் ஹெட் – Transformation, Denav

image


அது ஒரு அற்புதமான பயணமாக இருந்தது. நம் வாழ்க்கை அனுபவங்கள் விரிவடைந்த வண்ணம் இருக்கும். அத்தகைய அனுபவங்களில் ஒன்றான தாய்மை அடைதலும் மிகச்சிறப்பான அனுபவமே. பணிபுரியும் பெண்ணாகவும் இரண்டு குழந்தைகளின் அம்மாவாகவும் எனக்கு அழகான அனுபவம் கிடைத்தது. அதிக சுறுசுறுப்பாக இருப்பது, கள்ளம் கபடம் இல்லாமல் இருப்பது, உற்சாகமாக இருப்பது போன்ற குணாதிசயங்கள் நம்மிடமும் தொற்றிக்கொள்ளும். இவை என் பணிவாழ்க்கையிலும் பிரதிபலித்தது. குழந்தைகளிடம் நேர்மறை ஆற்றல் காணப்படும். அத்தகைய ஆற்றலை அலுவலகத்திற்கும் உடன் எடுத்து செல்வேன்.

ஆனால் எப்போதும் அமைதியாகவும் பிரச்சனை இன்றியும் வாழ்க்கை நகர்வதில்லை. அத்தகைய சூழலையும் ஏற்றுக்கொண்டு சிறப்பாக சமன்படுத்த வேண்டும். வாழ்க்கை எண்ணற்ற அனுபவங்களையும் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகளையும் வழங்கும். நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதே முக்கியம். அம்மாவாக இருப்பது மிகப்பெரிய சாதனையாகும். இந்த அனுபவத்தை வழங்கிய என் குழந்தைகளுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

'குற்ற உணர்வை எதிர்த்துப் போராடுங்கள்' – கரிமா சாரதா, துணை வடிவமைப்பு மேலாளர் – NXP Semiconductors 

image


அலுவலகத்தில் தொடர்ந்து பணிபுரிவதற்கும் குழந்தையை வளர்க்கும் பொறுப்புகளை சுமப்பதற்கும் சிறப்பான திறன்கள் தேவைப்படும்.

நான் பணிக்குச் செல்லும் அம்மாவாகவே இருக்க விரும்பினேன் என்றாலும் திறம்பட வாழ்க்கையை சமநிலைப்படுத்த எந்தச் சூழலும் என்னை தயார்படுத்தவில்லை.

இந்த போராட்டத்தில் நம்முள் எழக்கூடிய குற்ற உணர்ச்சியை எதிர்த்துப் போராடுவதில்தான் அனைத்தும் உள்ளது. என்னுடைய மகள் அராத்ரிகாவின் ஆண்டு விழாவின் போது முந்தைய வாரம் முழுவதும் இரவு அதிக நேரம் கண்விழித்து பணிபுரிந்ததன் காரணமாக தூங்கிவிட்டேன். கடற்கரையில் விடுமுறையை மகிழ்ச்சியாக செலவிடும் நேரத்தில் என் மகளுக்கு கணிதப் பாடத்தில் பயிற்சியளித்துள்ளேன்.

இறுதியாக அனைத்தும் இன்பமாகவே இருந்தது. பணிச்சூழலில் அருமையான நண்பர்கள் உடனிருந்தனர். பணிவாழ்க்கையில் திருப்தி கிடைத்தது. அனைத்திற்கும் மேல் என் மகளுக்கு ஒரு சரியான எடுத்துக்காட்டாக விளங்குகிறேன் என்பது உறுதி. நான் அவரைப் பார்த்து பெருமைப்படுவது போல் அவர் என்னைப் பார்த்து பெருமைப்படுகிறார். பணிபுரியும் அம்மாவாக இருப்பது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

ஆங்கில கட்டுரையாளர் : ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
25
Comments
Share This
Add to
Shares
25
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக