பதிப்புகளில்

அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு வாழ்க்கைத் திறன்கள் அளிக்கும் முப்பெருந்தேவியர்!

23rd Nov 2015
Add to
Shares
4
Comments
Share This
Add to
Shares
4
Comments
Share

"உலகத்தை மாற்றுவதற்கு கல்விதான் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம்" என்றார் நெல்சன் மண்டேலா. ஆயினும், கல்வி என்பது வெறும் கல்வி நிறுவனங்கள் அளிக்கும் பயிற்சிகள்தானா? வாழ்க்கைத் திறன்களையும், சோதனைமுயற்சிக் கல்வியையும் ஒரு குழந்தை எங்கு கற்கும்? மாற்றம் உருவாவதற்கு இந்த இரு திறன்களுமே மிகவும் அவசியம். வாழ்க்கைத் திறன் பயிற்சிகள் என்று வரும்போது பள்ளிகளில் மிகப் பெரிய இடைவெளி காணப்படுகிறது. அதுவும், வறுமை சூழலைப் பின்னணியாகக் கொண்ட பிள்ளைகளுக்கு அந்த இடைவெளி இன்னும் பெரிதாகிறது. கல்வி மேம்பாட்டுக்கும் வாழ்க்கைத் திறன் பயிற்சிகளுக்குமான இடைவெளியை அகற்றும் பாலமாக செயல்படும் நோக்கில், பெண் சமூக நிறுவனர்கள் மூவரால் உருவாக்கப்பட்ட அமைப்புதான் 'அப்னி ஷாலா' (Apni Shala).

image


பொருளாதார ரீதியில் பின்தங்கிய சமூகத்தின் குழந்தைகளுக்கு உணர்வெழுச்சி, பேச்சு மற்றும் சிந்தனைத் திறன்களை மேம்படுத்தும் பணிகளில் அபினி ஷாலா ஈடுபட்டு வருகிறது.

"பள்ளிகளில் கணிதம், அறிவியல், வரலாறு மற்றும் மொழிப் பாடங்களில் கவனம் செலுத்துகிறார்களே தவிர, மிக முக்கியமான வாழ்க்கைத் திறன்கள் மற்றும் சோதனை முயற்சிக் கல்வியைத் தவறவிடுகிறார்கள். குழந்தைகளுக்கு இன்று சமூகத் திறன்கள், சரியாக அணுகும் முறைகள், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வழிகள் மற்றும் முடிவெடுக்கும் திறன்களில் சிறந்து விளங்க வேண்டியது முக்கியத் தேவையாக உள்ளது" என்கிறார் அப்னி ஷாலாவின் இணை நிறுவனர் ஸ்வேதா.

பள்ளிக் கல்வியின் துவக்கத்திலேயே வாழ்க்கைத் திறன்களும், சோதனைமுயற்சிக் கல்வியும் அளிக்கப்பட வேண்டியது அவசியம் என்று கூறும் அவர், ஓர் ஆசிரியர் என்ற முறையில் வாழ்க்கைத் திறன் பயிற்சிகளின் உண்மையான மதிப்பைத் தெரிந்துவைத்திருக்கிறார். இந்தியாவின் கல்வி முறையில் மாற்றம் தேவை என்ற அவசியத்தை உணர்த்திய சம்பவம் ஒன்றை விவரித்த அவர், "'ஈச் ஒன் டீச்' அமைப்பில் ஆசிரியராக பணியாற்றியபோது, என்னை நோகடிக்கும் வகையில் ஒரு மாணவன் நடந்துகொண்டான். அந்தச் சிறுவனின் பின்னணி உள்ளிட்ட ஆய்வுகளில் இறங்கினேன். அப்போதுதான் எனக்கு பல விஷயங்கள் தெரியவந்தது. அந்தச் சிறுவனின் தந்தை ஒரு குடிநோயாளி. தினமும் குடித்துவிட்டு அந்தச் சிறுவனை அடிப்பார். திட்டுவார். எல்லாவற்றுக்கும் மேலாக, பள்ளிப் போகும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் அந்தச் சிறுவன் வேலைக்குச் செல்ல வேண்டும். அதில் கிடைக்கும் வருவாயும் அந்த அப்பாவின் குடிக்குதான் போகும். அப்படிப்பட்ட சூழலுக்குத் தள்ளப்பட்ட ஒரு மாணவனுக்கு பாடத்திட்டத்தில் உள்ள கல்வி என்பது எந்த அளவுக்குப் பயன்படும் என்று யோசிக்க வேண்டும். அந்தச் சிறுவனுக்குத் தேவை, இந்தச் சமூகத்தில் நிலவும் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான வாழ்க்கைத் திறன்கள்தான்" என்று தான் உணர்ந்ததை உறுபடச் சொல்கிறார் ஸ்வேதா.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, ஸ்வேதாவால் தனது வழக்கமான கார்ப்பரேட் வேலையில் பயணிக்க மனமில்லை. அந்தச் சிறுவனைப் போன்ற சின்னஞ்சிறு மனிதர்கள் துயர்துடைக்க துணைபுரிய வேண்டும் என்று உறுதிபூண்டார். அதன் முதல்படியாக, தனது கார்ப்பரேட் வேலையைத் துறந்தார். 'ப்ரதம்' என்ற அமைப்பில் கன்டென்ட் டெவலப்பராக இணைந்தார். அதேவேளையில், டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸில் (டி.ஐ.எஸ்.எஸ்.) மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க முடிவு செய்தார். விரைவில், அங்கு எம்.ஏ. சமூகத் தொழில்முனைவு (MA Social Entrepreneurship) படிப்பில் சேர்ந்தார்.

டி.ஐ.எஸ்.எஸ்.சில் தனது இணை நிறுவனர்களான அம்ரிதாவையும் அனுகீர்த்தியையும் சந்தித்தார். "டி.ஐ.எஸ்.எஸ்.சில் படித்துக்கொண்டிருந்தபோது நாங்கள் நெருக்கமானோம். அனுகீர்த்தி எப்போதுமே தொழில் முனைவு மீது ஆர்வம் மிக்கவர். எதையாவது தொடங்கியாக வேண்டும் என்று பரபரப்பாக இருந்தார். உளவியல் ஆலோசனை வழங்குவதில் பயிற்சியும் அனுபவமும் மிக்கவர் அம்ரிதா. மாணவர்கள் மற்றும் கல்வி சார்ந்து இயங்க வேண்டும் என்பதுதான் எங்கள் மூவரின் விருப்பமாக இருந்தது. ஆனால், நாங்கள் மூவரும் இணைந்தே அதைச் சாத்தியப்படுத்துவோம் என்பதை எதிர்பார்க்கவே இல்லை. ஆனால், தங்கள் இலக்குகளை அடைய ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வோம் என்ற தீர்மானம் அப்போதே இருந்தது."

ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கைத் திறன் பயிற்சிகள் மீது ஸ்வேதா கவனம் கொண்டுள்ள வேளையில், அனுகீர்த்தியும் அம்ரிதாவும் நூலகத் திட்டதைக் கவனித்துக்கொள்கின்றனர். எனினும், வாழ்க்கைத் திறன் பயிற்சிகள் வழங்குவதற்காக, பள்ளிகளை அணுகுவதில் பெரிய சிக்கல்கள் நீடித்தது. எனவே, நீண்ட விவாதத்துக்குப் பிறகு, மூவருமே ஒன்று சேர்ந்து மாணவர்களுக்கு வாழ்க்கைத் திறன் பயிற்சிகள் அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

எனினும், இலக்கு என்பது நிர்ணயிக்கப்பட்டாலும், அதற்கான பாதைகள் என்பது எளிதானதாக இல்லை. குழந்தைகளுக்கு இந்தப் பயிற்சிகள் அவசியம் என்பதை பள்ளிகள் உணர்ந்தாலும் கூட, பள்ளிகளுடன் கைகோர்த்து செயல்படுவதில் அப்னி ஷாலாவுக்கு நிறைய இடர்பாடுகள் ஏற்பட்டது. "எங்கள் யோசனைகளையும் உத்திகளையும் கேட்கும்போது ஆர்வம் காட்டுவதைப் பார்த்து வியப்போம். ஆனால், பள்ளியின் கால அட்டவணையில் எங்களுக்கு நேரம் ஒதுக்கித் தாருங்கள் என்று கேட்ட மாத்திரத்தில் அவர்கள் தயங்கத் தொடங்கிவிடுவர்" என்கிறார் ஸ்வேதா.

இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்காக, அரசு பள்ளிகளை எளிதில் அணுகுவதற்கு வசதியாக தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து செயல்படத் தொடங்கியது அப்னி ஷாலா. "பள்ளிகளுடன் ஏற்கெனவே தொடர்பில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் கைகோர்த்தோம். இதனால், எங்களது பாதையில் பயணிப்பது சற்றே எளிதானது. நிறைய அமைப்புகள் கல்வி சார்ந்து இயங்கினாலும், வாழ்க்கைத் திறன்களுடன் தொடர்பு இல்லாமல் இருந்தன. இதனால், கல்வி சார்ந்த அமைப்புகளும் எங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் காட்டின. இப்படியாக, என்.ஜி.ஓ.க்கள் மூலமாக பள்ளிகளில் நுழைந்து குழந்தைகளுக்கு வாழ்ககைத் திறன் பயிற்சிகளை அளித்து வருகிறோம்" என்கிறார் ஸ்வேதா.

அடுத்ததாக, அரசுப் பள்ளிகளில் நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றுவதுதான் மிகுந்த சிரமமாக இருந்தது. "இந்தப் பிரச்சினை இப்போதும் கூட தொடர்கிறது. அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை, எந்த ஒரு விஷயத்துக்கும் முறைப்படி அனுமதி பெறுவதில் பல அடுக்குகளிலும் பல சுற்றுகளிலும் சென்று பேச வேண்டும். எனினும், இந்தப் பிரச்சினையை ஓரளவு நன்றாகவே எதிர்கொள்ளும் அனுபவம் கிடைத்துவிட்டது."

இவ்வாறாக, பல சவால்களை எதிர்கொண்டு வந்த அப்னி ஷாலாவுக்கு டிபிஎஸ் வங்கியின் உறுதுணை கிடைத்தது. "நாங்கள் இளம் சமூக தொழில் முனைவராக செயல்பட்டு வரும் நிலையில், டிபிஎஸ் வங்கி அளித்துள்ள உறுதுணை என்பது எங்களது வாழ்க்கையை எளிதாக்கியிருக்கிறது. டிபிஎஸ் எங்களுக்கு நிதி சார்ந்து துணை நிற்கிறது. எனவே, குழந்தைகளின் பாடத்திட்டம் மற்றும் அதுதொடர்பான சவால்களில் மட்டும் நாங்கள் முழு கவனம் செலுத்தி வருகிறோம். எங்களுக்குத் தன்னம்பிக்கையும், எங்கள் திட்டம் மீதான நம்பிக்கையையும் வெகுவாக கூடியிருக்கிறது என்றால் அது மிகையில்லை" என்று மகிழ்ச்சி தெரிவிக்கிறார் ஸ்வேதா.

தற்போது கதை சொல்லல், நாடகம் நடித்தல் மற்றும் பல்வேறு விளையாட்டு உத்திகள் மூலம் சமூக மற்றும் உணர்வெழுச்சித் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி முறைகளை மாணவர்களிடம் கொண்டு செல்லும் முயற்சிகளில் அப்னி ஷாலா தீவிரம் காட்டி வருகிறது. "நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் சோதனைமுயற்சி கல்வியும், வாழ்க்கைத் திறன் பயிற்சிகளும் பாடத்திட்டங்களில் முக்கிய அங்கம் வகிக்கச் செய்ய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இதையும் சோதனை முயற்சிகளின் மூலமாக நிகழ்த்த வேண்டியிருக்கிறது" என்கிறார் ஸ்வேதா.

அப்னி ஷாலா அடுத்த ஆண்டில் 1,100 குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பது என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. பள்ளி ஆசிரியர்களுக்கும் சோதனை முயற்சிகள் சார்ந்து பயிற்சி அளிக்கும் முன்முயற்சியைத் தொடங்கியிருக்கிறார்கள். இதன்மூலம் தங்கள் நோக்கத்தின் பலன்களை எளிதில் பரவலாக்குவதே இந்த முப்பெருந்தேவியரின் வியூகம்.

அப்னி ஷாலாவின் வலைதளம் http://www.apnishala.org

ஆக்கம்: சிந்து காஷ்யப் | தமிழில்: கீட்சவன்

Add to
Shares
4
Comments
Share This
Add to
Shares
4
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக