மாட்டு வண்டி டூ மெர்சிடீஸ் பென்ஸ்: 88 வயதில் தன் கனவை நிறைவேற்றிய விவசாயி!

52 CLAPS
0

சிறு வயதில் இருந்து பல கனவுகளை நம்முள் நாம் வளர்த்துக்கொள்வது உண்டு. ஆனால் நாளடைவில் நம் வாழ்க்கை முறை மாற்றத்தாலோ அல்லது சூழ்நிலையாலோ நம் கனவுகளை மறப்பதும் உண்டு, நம்மால் முடியாது என்று அதை அப்படியே புதைப்பதும் உண்டு. 

ஆனால் இங்கு 88 வயதாகியும் தனது கனவை மறக்காமல் இன்று மெர்சிடீஸ் பென்ஸ்–பி வகுப்பு காரின் உரிமையாளராகி தனது வாழ்நாள் கனவை நிறைவேற்றிக் கொண்டுள்ளார் தேவராஜன் அழகர் சாமி பிள்ளை.


மனைவியுடன் காரின் சாவியை பெரும் தேவராஜ், பட உதவி: டிரான்ஸ் கார்

மெர்சிடீஸ் பென்ஸ் கார் இந்தியாவின் விருப்பமான கார்களுள் ஒன்று. நம் தாத்தா பாட்டி தலைமுறையில் இருந்து இன்று நம் தலைமுறை வரை பெரும் தகுதி பெற்ற காராக பென்ஸ் கார் உள்ளது. மேலும் அதை வாங்க வேண்டும் என்ற ஆசையும் பலருக்கு நிச்சயம் வந்து இருக்கும். அப்படிதான் 88 வயதான விவசாயி அழகர் சாமிக்கும் எட்டு வயதில் பென்ஸ் கார் மீது காதல் ஏற்பட்டது.

“நான் காரை முதலில் பார்த்த பொழுது அதன் பிராண்டின் பெயர் எனக்கு தெரியவில்லை. ஆனால் அந்த நட்சத்திரம் போல் இருக்கும் காரின் லோகோ மீது காதல் ஏற்பட்டது,” 

என்றார் மெர்சிடஸ் பென்ஸ் வீடியோவில் பேசிய தேவராஜன். 1930ல் ரோட்டில் சைக்கிளில் சென்ற தேவராஜன், பார்த்த அந்த லோகோ அவர் மனதில் நீங்கா இடம் பிடித்து அதை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று லட்சியமாக மாறிவிட்டது. 80 ஆண்டு கடின உழைப்பிக்கு பிறகு இன்று அதை தன் வசம் படுத்தியுள்ளார் இவர்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இந்த விவசாயி தன் கடைமைகள் அனைத்தயும் முடித்துவிட்டு தனது கனவை மறக்காமல் அதை அடைந்துள்ளார். இவ்வளவு ஆண்டுகள் கழித்து தனது கனவு காரை வாங்க முக்கியக் காரணம் தனது மனைவி என குறிப்பிட்டுள்ளார் இவர்.


பட உதவி: Transcar

இவர் பெற்றிருக்கும் இந்த காரின் விலை 33 லட்சம் ஆகும். மனம் இருந்தால் எதற்கும் வயது தடையில்லை என்பதை காட்டியுள்ளார் தேவராஜன்.