7 மணி நேரத்தில் ஹிந்தி பேச வைக்கும் தம்பியண்ணன்!

  கடந்த 35 ஆண்டுகளாக, சுமார் 1லட்சம் பேருக்கு ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு உள்ளிட்ட பல இந்திய மொழிகள் மற்றும் ஜப்பானீஸ், கொரியன், சைனீஸ் போன்ற சர்வதேச மொழிகளை கற்றுக் கொடுத்துள்ளார் பன்மொழி வித்தகரான இவர்.

  22nd Oct 2018
  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  வாழ்வின் எதாவதொரு புள்ளியில் நமக்கு ஒரு புதிய மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை வரும். கொரியன் சீரியல்கள் பார்த்துவிட்டு கொரியன் மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், உருது இலக்கியத்தை பற்றி யாராவது பேசக் கேட்டால் உருது கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், சப்-டைட்டில் இல்லாமல் எதாவதொரு இந்தி படத்தை பார்க்க நேர்ந்தால் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் கனவு காண்போம். ஆனால், யதார்த்தம் கனவைக் கலையச் செய்து விடும். இப்படியிருக்கும் நம்மை போன்றவர்களுக்கான பதிலாக இருக்கிறது தம்பியண்ணாவின் சேவை.

  தன்னுடைய 35 ஆண்டு அனுபவத்தில், ஏறத்தாழ ஒரு லட்சம் பேருக்கு மொழி பயிற்றுவித்திருக்கும் தம்பியண்ணா என்றழைக்கப்படும் விஸ்வநாதன் மதுரையைச் சேர்ந்தவர். இந்தி மொழியை தன்னால் பிறருக்கு கற்பிக்க முடியும் என்று இவர் கண்டறிந்த கதையை சுவாரசியமாக விளக்குகிறார்.

  தம்பியண்ணன் என்ற விஸ்வநாதன்

  தம்பியண்ணன் என்ற விஸ்வநாதன்


  “மதுரையில் தக்‌ஷின் பாரத் இந்தி பிரச்சார் சபாவில் நான் ஹிந்தி படிச்சிட்டு இருந்தேன். அப்போ ஒரு நாள், ப்ரவீன் (நான்காவது லெவல்) மாணவர்களுக்கு பரீட்சை நடக்குறதால் எங்களுக்கு க்ளாஸ் இல்லேன்னு சொல்லிட்டாங்க. நம்மளும் காசு கட்டித் தானே படிக்குறோம், ஏன் இப்படி சொல்றாங்கன்னு நான் யோசிச்சேன். யோசிச்சிட்டு அந்த புத்தகத்தை வாங்கி ரெண்டு மூணு நாள் தொடர்ந்து அதை வாசிச்சேன். அப்படித் தான், அந்த மொழிய மூணு நாளுலேயே கத்துக்க முடியும், அதுக்கு மேல எதுவும் இல்லன்னு புரிஞ்சுக்கிட்டேன்...” என்கிறார்.

  இதை கண்டுபிடித்த பிறகு, பள்ளிக்கூடத்திற்கு போய் பார்க்கும் போது, ப்ரவீன் படித்த மாணவர்களும் கூட இந்தி பேசுவதில்லை என்பது தெரிந்தது. அவர்களுக்கு இந்தி எழுதவும், படிக்கவும் தெரிந்தாலும் கூட, அவர்களால் இந்திப் பேச முடிவதில்லை என்பதை உணர்ந்த விஸ்வநாதன், அப்போதிலிருந்தே பிற மாணவர்களுக்கு இந்தி மொழி கற்றுக் கொடுக்கத் தொடங்கிவிட்டார்.

  image


  ஒரு மொழியை பேசும் போது , 1)பேசும் விஷயம் ஏற்கனவே நடந்ததா? இனி நடக்குமா? என இரண்டு காலங்களையும், 2) ‘நீங்கள், நான், அவர்’ என மூன்று நிலைகளையும், 3) ‘நான் ரொட்டியை சாப்பிட்டேனா? அல்லது ரொட்டி என்னை சாப்பிட்டதா’ என்பதற்கு இடையேயான வித்தியாசத்தை கண்டுபிடித்துவிட்டு இணைப்பு சொற்களை சரியாக பயன்படுத்துவதையும் மட்டுமே கற்றுக் கொண்டால் போதும். சுலபமாக ஒரு மொழியை பேசி விடலாம் என்கிறார் விஸ்வநாதன்.

  இப்படி இந்தியை கற்றுக் கொடுக்கத் தொடங்கிய பிறகு மற்ற மொழிகளை எல்லாம் ஒவ்வொரு மாதமாக கற்றுக் கொண்டார். காஷ்மீரி, பஞ்சாபி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என இந்திய மொழிகள் எல்லாவற்றுக்குமே இதே அமைப்பு தான் இருக்கிறது என்பதை கண்டார். 

  அதிலிருந்து தான் மொழி பயிற்றுவிக்கும் நிறுவனத்தை தொடங்கினார் விஸ்வநாதன். இவரிடம் ஜப்பானிய மொழி அறிந்த ஒருவர் இந்தி கற்றுக் கொள்ள வந்த போது, அவரிடம் இருந்து ஜப்பானிய மொழியை விஸ்வநாதன் கற்றுக் கொண்டார். அப்போது,தெற்காசிய மொழிகளும் கூட இதே வடிவத்தில் இருப்பது புரிந்தது. எனவே, ஜப்பானிய மொழியையும் கற்றுக் கொடுக்க தொடங்கினார்.

  “ஜப்பானிய மொழியை கற்றுக் கொடுப்பவர்கள் எல்லாம், காஞ்சி (சித்திர எழுத்து வடிவம்) முறையை கற்றுக் கொடுக்க மாட்டார்கள். அந்த காஞ்சி குறித்து ஆய்வு செய்த போது, அதற்கு முன்னாடி ‘ரேடிக்கல்’ என்றொரு கான்செப்ட் இருப்பது தெரிந்தது. அதை கற்றுக் கொண்டால், எழுதப் படிக்க முடிகிற மாதிரி காஞ்சியும் செய்ய முடியும். இதனால் தான் என்னிடம் ஜப்பானிய மொழி கற்றுக் கொள்கிறவர்கள் எல்லாருக்கும் உடனடியாகவே வேலை கிடைத்துவிடும். ஏனென்றால், என் மாணவர்களால் சித்திர எழுத்துக்களை வாசிக்க முடியும்,” என்கிறார்.

  பொதுவாகவே, மொழி பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் எல்லாம், மாணவர்களின் சொல்லகராதியை மட்டுமே நினைவில் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு வார்த்தையாக மனப்பாடம் செய்யச் சொல்வார்கள். ஆனால், இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என இருவரின் நேரத்தையுமே வீண் தான் செய்யும் என்று சொல்கிறார் விஸ்வநாதன். இதற்காக, இவரே ஒரு அகராதியை வடிவமைத்து மாணவர்களிடம் கொடுக்கிறார்.

  image


  “தமிழில் இருந்து ஹிந்திக்கு என ஒரு அகராதி நம்மிடத்தில் இல்லை. அதனால், தமிழில் இருந்து ஹிந்திக்கு என ஒரு அகராதி வடிவமைத்து வெளியிட்டோம். தமிழில் இருந்து பிற மொழிகளுக்கு அகராதிகள் வடிவமைத்தோம்,” என்கிறார். 

  தற்போது, இந்திய மொழிகளை தவிர்த்து ஜெர்மன், கொரியன், ஜப்பானிய மொழி ஆகியவற்றை பயிற்றுவிக்கிறார். சீன மொழியை எப்படி கற்பது என்பதை சொல்லிக் கொடுக்கிறார். மதுரை மற்றும் கோவையில் இவருடைய வகுப்புகள் இருக்கின்றன. அழைப்பின் பேரில் பிற மாவட்டங்களுக்கு சென்று இவர் பாடம் நடத்துவதும் - அப்படி தமிழ்நாடு முழுவதுமேயே பயணித்திருப்பதாக சொல்கிறார்.

  ஒரு மாதம், இரண்டு மாதம் என பாடம் நடத்தி இந்தி கற்றுக் கொடுக்கும் நிறுவனங்கள் இருக்கும் நிலையில், ஏழே மணி நேரத்தில் இந்தி கற்றுக் கொடுப்பதனால் வரும் வருமானம் எப்படி இருக்கும் எனக் கேட்டதற்கு? 

  ‘முப்பது மணி நேரத்தில்/ முப்பது நாட்களில் இந்தி சொல்லிக் கொடுப்பவர்கள் எல்லாம் மாதத்திற்கு நான்காயிரம் ரூபாய் தான் சம்பாதிப்பார்கள். ஆனால், நான் ஏழு மணி நேரத்திற்கே இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன்,’ என்று பதில் சொன்னார்.

  கோவையில் நான்கு ஃபாக்டரிக்களில் புலம்பெயர்ந்த ஊழியர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்களுக்காக பாடம் நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார். மொழிகள் பல கற்பதனால் அதிக பயனடைவது பயண விரும்பிகளும், மொழிபெயர்ப்பாளர்களும் தான் எனும் விஸ்வநாதன், ஸ்கைப்பிலும், வாட்ஸப்பிலும் கூட பாடம் நடத்துவதாக சொல்கிறார். 

  தன்னம்பிக்கை பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் இருக்கும் விஸ்வநாதன், 2000-ம் ஆண்டு வெளியிட்ட ‘அடுத்து ஆயிரம் நாட்கள்’ எனும் புத்தகம் மிகவும் பரவலாக பேசப்பட்டது. அடுத்ததாக, இந்தியாவின் பதினைந்து அதிகாரப்பூர்வமான மொழிகளையும் உள்ளடக்கிய ஒரு அகராதியை வெளியிடும் பணியில் இருக்கிறார் விஸ்வநாதன்.

  புதிதாக ஒரு மொழியை கற்றுக் கொள்ளும் போது, மூளை புதுப்பிக்கப்படுகிறது, புத்துணர்வு ஊட்டப்படுகிறது. உடல் நலம் இல்லாதவர்கள் ஒரு மொழியை கற்றுக் கொள்ளும் போது, அவர்கள் வெகு விரைவாக குணமாகிறார்கள். குறிப்பாக, வாதங்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் புதிய மொழி கற்றுக் கொள்ளும் போது விரைவாக குணமாகிறார்கள் என்கிறார் விஸ்வநாதன். 

  மனச்சோர்வும், அழுத்தமும், பதட்டமும் வாழ்க்கை முறையாகியிருக்கும் நம் தலைமுறையினருக்கு ஒரு சிறிய ஆசுவாசமாக புது மொழி கற்றுக் கொள்ளும் அனுபவம் இருக்கும் என்பது உண்மை. 

  விஸ்வநாதனின் மொழி வகுப்புகள் பற்றிய தகவலுக்கு அவரது முகநூல் லின்க்

  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close
  Report an issue
  Authors

  Related Tags

  Our Partner Events

  Hustle across India