பதிப்புகளில்

மொபைல் ரீசார்ஜ், கால் டாக்ஸி முன்பதிவு என அனைத்தையும் எளிதாக்கும் Niki.ai

12th Dec 2015
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் உரையாடல் செயலி (மொபைல் அப்ளிகேஷன்)

நமது நேரத்தை மிச்சமாக்கும் வகையில் இணையத்தில் இயங்கும் பல்வேறு சாட்போட் (வாடிக்கையாளரிடம் உரையாடும் வசதி) மற்றும் நேர்முக உதவியாளர்போல செயல்படும் சாதனங்கள் பற்றி நம்மில் பலருக்கும் தெரியும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் இவை குறைவான நேரத்தில் நமது வேலைகளைத் திறம்பட செய்து முடிக்க உதவக்கூடியவை. இணைய வர்த்தக தளங்கள் மற்றும் அவற்றின் செயலிகளின் (ஆப்ஸ்) புண்ணியத்தால் பல்வேறு முன்பதிவு சேவைகள், பொருட்களை வாங்குவது எளிதாகியுள்ளதால் மக்கள் மத்தியில் இவற்றுக்கு அமோக வரவேற்பு கிடைத்துவருகிறது.

அதேநேரத்தில் பல்வேறு செயலிகளையும் ஒருவர் வைத்துக்கொண்டிருக்க வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாக நிக்கி.ஏஐ (nikki.ai) என்ற புது செயலி அறிமுகமாகியிருக்கிறது. யுவர் ஸ்டோரியின் டெக் ஸ்பார்க்-2015 நிகழ்ச்சியில் இது அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. நிக்கி, டெக் 30 பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனம் ஆகும்.

image


செயற்கை நுண்ணறிவு மற்றும் நேச்சுரல் லாங்வேஜ் புரோகிராமிங் ஆகிய தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நிக்கி, ஒரு சாட் போட் ஆகும். அதாவது மனித மொழியைப் புரிந்துகொண்டு வாடிக்கையாளருடன் உரையாடி, அவருக்கு சேவையை வழங்கும். தற்போதைய சூழலில் வாடிக்கையாளர்கள் இந்த செயலியைப் பயன்படுத்தி உரையடி பல்வேறு சேவைகளைத் தேடவும், கண்டறியவும், உறுதிப்படுத்தவும், அவற்றின் மூலமாக செல்பேசி ரீசார்ஜ், டாக்ஸி முன்பதிவு ஆகியவற்றை எளிதாக செய்ய முடியும்.

Niki.ai , சச்சின் ஜெய்ஸ்வால், கேசவ் ப்ரவாசி, நிதின் பபெல், ஷிஷிர் மோடி ஆகிய நான்கு கரக்பூர் ஐஐடி பட்டதாரிகளால் 2015ல் தொடங்கப்பட்டது. இந்த நால்வர் அணி இப்போது 16 ஆகப் பெருகியிருக்கிறது. முதலில் உதய்பூரில் இயங்கிய இவர்களது நிறுவனம் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பெங்களூருக்கு இடம்பெயர்ந்தது.

இந்த செயலி முதல் 7 மாதங்களுக்கு பீட்டா வெர்ஷனில் இயங்கி வந்தது. அதனையடுத்து, இதனை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு அதில் வெற்றி கண்டுள்ளது. இப்போது நிக்கி செயலியைப் பயன்படுத்தி ஓலா, உபர் கால் டாக்ஸி முன்பதிவுகளை எளிதாக மேற்கொள்ள முடியும். இது ஒருபுறமிருக்க, வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வுகளின் அடிப்படையில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனிப்பட்ட பயன்பாட்டு அனுபவத்தைத் தரும் வகையில் இந்த செயலியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் பணியில் மும்முரமாக இருக்கிறது இதன் தயாரிப்புக்குழு.

நிக்கி, எளிமையானதாகவும் தேவைக்கேற்ப மாற்றியமைக்கக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய சச்சின், “வாடிக்கையாளர்கள் பலரும் குறைந்த சேமிப்புத்திறன் கொண்ட செல்பேசிகளைப் பயன்படுத்துகின்றனர். மேலும் குறைவான வேகம் கொண்ட இணைய இணைப்பு கொண்டவர்களும் உண்டு. அவர்களுக்கு எண்ணற்ற செல்பேசி செயலிகளைப் (ஆப்ஸ்) பதிவிறக்கி, பராமரிப்பது ஒரு சவால். சந்தையில் கிடைக்கும் இதுபோன்ற எண்ணற்ற செயலிகளில் தேவையானவற்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை விலக்குவதும், தனிப்பட்ட முறையில் தீர்வுகளை அளிக்கும் தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுப்பதும் தேவையானது. இதற்கு ஒரே தீர்வு, சாட் போட் எனப்படும் உரையாடல் வடிவிலான செயலிதான். இதன்மூலமாக இணையத்தில் ஆர்டர் செய்வது எளிதாகிறது” என்றார்.

மேலும், “ எடுத்துக்காட்டாக, வாடிக்கையாளர் ஒருவர் கால் டாக்ஸி முன்பதிவு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் நிக்கியைப் பயன்படுத்தும்போது, பல்வேறு பிராண்டு கார்கள், வகைகள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்க்கவும், கட்டணம் குறைவான, அதேநேரத்தில் நமது இருப்பிடத்துக்கு அண்மையில் உள்ள வாடகைக்காரை முன் பதிவு செய்துகொள்ள முடியும். இதுதவிர, கார் எந்த இடத்தில் வந்துகொண்டிருக்கிறது, டாக்ஸி ஓட்டுநரின் விபரங்கள் என்ன என்பதைத்தெரிந்துகொள்ளவும் முன்பதிவை ரத்துசெய்யவும் முடியும். எல்லாம் உரையாடல் வடிவத்திலேயே என்பது விசேஷம்” என்றார் அவர்.

image


கார் முன்பதிவு தவிர, செல்பேசி ரீசார்ஜ் வசதியையும் (ஜஸ்ட் ரீசார்ஜ் இட் –உடன் இணைந்து) நிக்கி அளிக்கிறது. “உங்களுக்கு 3ஜி டேட்டா பேக் வேண்டுமானால் நிக்கி, உங்களுக்குத் தேவையான டேட்டா பிளானைத் தேர்ந்தெடுக்க, எண்ணற்ற தேர்வுகளைக் காட்டும். நீங்கள் உங்களுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அப்போதே நீங்கள் ரோமிங்கில் இருக்கிறீர்களா என்பதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் பரிந்துரைகளை வழங்கும்” என்கிறார் சச்சின். அதேபோல ரீசார்ஜ் பேக்கை புதுப்பிக்க வேண்டிய நேரத்தில் அதையும் நினைவுபடுத்துகிறது நிக்கி. பே-டி.எம். வாலெட் மூலம் இணைய வழி கட்டணம் செலுத்தும் வசதியையும் நிக்கி தருகிறது.

தான் மேற்கொள்ளும் ஒவ்வொரு வணிக நடவடிக்கைக்கும் (பணப்பரிமாற்றத்துக்கும்) சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வின்படி வருவாய் ஈட்டுகிறது நிக்கி. எதிர்காலத்தில் பிராண்டுகளுக்கும் நுகர்வோருக்கும் இடையேயான தகவல் தொடர்பை மென்மேலும் எளிதாக்குவதும் வசதியானதாக மாற்றுவதும்தான் நிக்கியின் நீண்ட காலத் திட்டமாம்.

நிக்கி நிறுவனம், யூனிலேஸர் வெஞ்ச்சர்ஸ் என்ற துணிகர முதலீட்டு நிறுவனத்திடமிருந்து முதலீட்டைப் பெற்றுள்ளது. அதனைப் பயன்படுத்தி செயலியை மேம்படுத்துவது, கூடுதல் சேவைகளை வழங்குவது ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

“வாடிக்கையாளர்களுக்கு நல்ல அனுபவத்தை எளிய வடிவில் வழங்க்கக்கூடிய தொழில்நுட்ப நிறுவனங்கள்தாம் உலக அளவில் கோலோச்சி வருகின்றன. அது இந்தியாவிலும் தொடங்கியிருக்கிறது. நிக்கி, புதுமையான முயற்சி என்பதுடன் கச்சிதமான குழுவையும் கொண்டிருக்கிறது. அவர்களின் கனவை நனவாக்க நாங்கள் தோள் கொடுப்போம்” என்கிறார் யூனிலேஸர் நிறுவனத்தின் நிறுவனர் ரோனி ஸ்க்ருவ்லா.

துறைசார் அலசல், எதிர்காலத் திட்டங்கள்

ஏற்கனவே சிரி, கூகிள் நவ், கோர்டனா முதலிய செயற்கை நுண்ணறிவு சார்ந்த மொபைல் அப்ளிகேஷன்கள், இணைய துணைவர்கள் (personal assistants) சந்தையில் இருக்கின்றன. அவை பெரும்பாலும் உற்பத்தியை (பணிகளை) இலக்காகக் கொண்டவை. ஆனால் நிக்கியின் கவனம் முழுக்க இணைய வணிகத்தில்தான். பேசும் செயலிகளைப் பொறுத்தவரை அமெரிக்காவைச் சேர்ந்த மேஜிக் என்ற செயலி 24 மணி நேர சேவையைத் தருகிறது. இணைய ஜாம்பவானான பேஸ்புக் இத்துறையில் ஆர்வம் காட்டிவருகிறது அது, பேஸ்புக் எம் என்ற பெயரில் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறது. இது அதன் மெசெஞ்சர் வசதியுடன் கைகோர்த்து செயல்படும். 2013 முதல் 2020 வரையிலான கால கட்டத்தில் இணைய உதவியாளர்கள் (virtual assistants) என்ற சேவைத்துறை ஆண்டுக்கு 30% வளர்ச்சியடையும் என்று ஹெக்ஸா ரிசர்ச் என்ற அமைப்பு கணித்திருக்கிறது. அதாவது அடுத்த 5 ஆண்டுகளில் இத்துறையின் சந்தை மதிப்பு மும்மடங்காக அதிகரிக்கும் (சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு).

இந்தியாவில் லுக் அப் என்ற செயலி வணிகர்களையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் பிஸ் ஸ்டோன், இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் க்ருஷ் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இதன் பின்புலமாக இருக்கின்றனர். ஹெல்ப் சாட் என்ற செயலிக்கு செக்கோயா கேப்பிடல் நிறுவனம் ஆதரவு தருகிறது. இவைபோன்ற செயலிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் மட்டுமல்ல, அசல் மனிதர்களின் உதவியோடு சேர்த்துத்தான் இயங்குகின்றன. ஆனால் நிக்கி, முழுக்க முழுக்க மனிதரின் பங்களிப்பின்றி தானாகவே இயங்க வல்லது.

எதிர்காலத்தில் குரல் வழி உரையாடல் வசதியைக் கொண்டுவரவும், இணையம், ஸ்மார்ட்போன்கள் என்று எல்லாவகையான இணையவழிகளிலும் செயல்பட இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் நிக்கியின் நிறுவனர்கள் நிக்கியில் கூடுதல் வசதிகளையும், பேருந்து முன்பதிவு உள்ளிட்ட 25 புதிய சேவைகளையும் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்.

யுவர் ஸ்டோரியின் பரிந்துரை

தற்போதைய சூழலில் தேவையற்ற பல சுமைகளைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டுள்ள செயலியாக நிக்கி இருக்கிறது. மேலும் இது பயன்படுத்த எளிதாக இருப்பதுடன், பயன்படுத்தவும் இனிதாக இருக்கிறது. தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் இந்த செயலியில் தேவையற்ற அம்சங்கள் ஏதும் குறுக்கிடுவதில்லை என்பது சிறப்பு. எல்லாவற்றுக்கும் மேலாக, 2ஜி இணைய இணைப்பிலும் இந்த செயலி சிறப்பாக செயல்படுகிறது. அனுபவம் வாய்ந்த குழுவைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில் என்னென்ன புதுமைகளை அவர்கள் கொண்டுவர இருக்கிறார்கள் என்பது சுவையான எதிர்பார்ப்பாக இருக்கிறது.

செயலியை பதிவிறக்க இங்கு சுட்டியைச் சொடுக்கவும்: Niki.ai

ஆக்கம்: ஹர்ஷித் மல்யா | தமிழில்: தூரிகை

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags