சீரமைக்கப்பட்ட போனை வாங்குவது எப்படி? சில குறிப்புகள்...

  4th Feb 2018
  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  அடிக்கடி செல்போனை மாற்றி புதிய போனை வாங்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? 

  நண்பர்கள் லேட்டஸ்ட் மாடல் போன் வைத்திருப்பதை பார்த்தவுடன் உங்களுக்கும் அதே போன்ற போன் வாங்க வேண்டும் என்ற விருப்பம் உண்டாகிறதா? புதிய போன் வேண்டும், ஆனால் அதன் விலையும் குறைவாக இருக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டவரா? 

  இவற்றில் ஏதோ ஒரு ரகத்தைச்சேர்ந்தவர் எனில் நீங்கள் சீரமைக்கப்பட்ட போனை வாங்குவது பற்றி பரிசீலிக்கலாம். இத்தகைய போனை எப்படி வாங்குவது என்றும் தெரிந்து கொள்ளலாம்.

  image


  அதற்கு முன்னர் சீரமைக்கப்பட்ட போன் என்றால் என்ன என்றும் தெரிந்து கொள்ல வேண்டும்.

  இப்போது இ-காமர்ஸ் இணையதளங்கள் மூலமாகவே புதிய மாதிரி போன்களை வாங்க முடிகிறது. சில செல்போன் நிறுவனங்கள் நேரடியாகவே இணையம் மூலம் விற்பனை செய்கின்றன. புதிய போன்களை அவற்றின் மாதிரி, விலை என பல்வேறு அம்சங்களுக்கு ஏற்ப ஒப்பிட்டு பார்த்தும் வாங்கலாம். இதே போலவே ஆன்லைனில் சீரமைக்கப்பட்ட போனையும் வாங்கலாம். சீரமைக்கப்பட்ட போன்கள் என்றால், பழைய புதிய போன் என்று வைத்துக்கொள்ளலாம்.

  அதெப்படி, பழைய போன் புதிதாகவும் இருக்கும் என்று சந்தேகம் எழலாம். புதிதாக வாங்கப்பட்டு உடனடியாக திரும்பி அளிக்கப்பட்ட போன்களை தான் இப்படி குறிப்பிடுகின்றனர். ஆன்லைனில் புதிய போனை வாங்கிய ஒருவர் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அந்த போன் தேவையில்லை என திருப்பி அளிக்கும் போது, நிறுவனம் அதை சரி பார்த்து, புதுப்பித்து மறு விற்பனை செய்வதை தான் சீரமைக்கப்பட்ட போனாக கருதுகின்றனர். ஆங்கிலத்தில் இதை ரீஃபர்பிஷ்டு போன் என்கின்றனர்.

  இவை பெரும்பாலும் பயன்படுத்தப்படாமலே திரும்பி அளிக்கப்படும் போனாக இருப்பதால் புதிய போனாகவே அமைகின்றன. ஆனால் ஒரு முறை விற்கப்பட்டுவிட்டதால் இவற்றை புதிய போனாக கருதுவது சரியாக இருக்காது. மேலும் நிறுவனங்கள் இதை புதிய போன் என்று கூறி மீண்டும் விற்பனை செய்யவும் முடியாது. ஆனால் நல்ல நிலையில் இருக்கும் எந்த போன்களை தூக்கி வீசிவிட முடியாது அல்லவா? அதனால் தான் நிறுவனங்கள் இவற்றை சோதித்து பார்த்து, சீரமைத்து, செயல்பாட்டிற்கான உத்திரவாதத்துடன், சீரமைக்கப்பட்ட போன் என வகைப்படுத்தி மறு விற்பனை செய்கின்றன. மறு விற்பனை என்பதால் இவற்றின் விலையும் புதிய போனை விட குறைவாகவே இருக்கும்.

  இத்தகைய போன்கள் அநேகமாக நல்ல வாய்ப்பாக இருக்கலாம். ஆனால், அந்த தீர்மானத்திற்கு வருவதற்கு முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.

  சீரமைக்கப்பட்ட போன் மறு விற்பனை செய்யப்படும் புதிய போனேத் தவிர பழைய அல்லது பயன்படுத்திய போன் கிடையாது. பல நேரங்களில் இவை வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படாமலே திருப்பி அளிக்கப்பட்டிருக்கலாம். சில நேரங்களில் பாக்கெட்டை பிரிக்காமலே கூட திரும்பி அனுப்பியிருக்கலாம். (மாதிரி மாறியிருக்கலாம் அல்லது மனம் மாறியிருக்கலாம்). அதே நேரத்தில் சில நேரங்களில் குறிப்பிட்ட பழுது காரணமாகவும் இவை திரும்பி அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம். எப்படி இருந்தாலும் நிறுவனங்கள் இந்த போன்களை மறு சோதனைக்கு உள்ளாக்கி, சரி பார்த்து அதன் பிறகே சீரமைப்பு சான்றிதழ் அளித்து விற்பனை செய்கின்றன. இவற்றுக்கு வாரண்டியும் அளிக்கப்படுகிறது.

  எனவே சந்தை விலையை விட குறைவாக புதிய மாதிரி போன் தேவை என நினைப்பவர்கள் இவற்றை தாராளமாக வாங்கலாம். அப்படி வாங்க தீர்மானிக்கும் முன், முதலில் விலையை கவனிக்க வேண்டும். புதிய போனுக்கும் இந்த போனுக்கும் கணிசமான வேறுபாடு இருந்தால் அதற்காகவே வாங்கலாம். விலை வித்தியாசம் அதிகம் இல்லை எனில், சீரமைக்கப்பட்ட போனைவிட, புதிய போனே வாங்கி கொள்ளலாமே. எனவே விலையை கவனிக்க வேண்டும்.

  image


  விலை சாதகமாக இருந்தால், வாரண்டி விதிமுறைகள் என்ன சொல்கின்றன என்று பார்க்க வேண்டும். குறைந்தபட்சம் ஆறு மாத கால வாரண்டி இருக்கும் போனை வாங்க வேண்டும். அதே போல போனை புதுப்பித்தது யார் எனும் விவரத்தையும் கவனிக்க வேண்டும். பல நிறுவனங்கள் போனை உற்பத்தி ஆலைக்கே அனுப்பி வைத்து அவற்றை முழுமையாக பரிசோதித்து சான்றிதழ் அளிக்கின்றன. இவை நம்பகமாக இருக்கும். சில நேரங்களில் மூன்றாம் நிறுவனங்கள் போனை புதுப்பித்திருக்கலாம். எனில் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

  இதற்கு எல்லாம் முன்பாக, போன் முந்தைய உரிமையின் எந்த அம்சமும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதில் எந்த தரவுகளும் இருக்கக் கூடாது. பேக்டரி செட்டிங்கில் இருக்க வேண்டும். அப்போது தான் அது சீரமைக்கப்பட்ட போனாக கருதப்படும். போனுடன் தேவையான ரசீது மற்றும் கையேடுகள் அளிக்கப்பட வேண்டும்.

  போன் மாதிரி தொடர்பான தகவல்களையும் அலசி ஆராய வேண்டும். சில குறிப்பிட்ட மாதிரிகள் பிரச்சனைக்குறியதாக இருக்கலாம். அவற்றை தவிர்ப்பது நல்லது. இந்த அம்சங்கள் எல்லாம் பரிசீலித்த பிறகு திருப்தியும் நம்பிக்கையும் ஏற்பட்டால் சீரமைக்கப்பட்ட போனை வாங்கலாம். சரி, இவற்றை எங்கே வாங்கலாம்?

  ஆன்லைனில் பல இடங்களில் வாங்கலாம் என்றாலும், பொதுவாக தயாரிப்பு நிறுவனங்கள் அளிக்கும் வசதி மூலம் வாங்குவதே ஏற்றதாக இருக்கும். ஆப்பிள், சாம்சங் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்கள் இணையதளம் மூலமே சான்றிதழ் கொண்ட சீரமைக்கப்பட்ட போன்களை விற்பனை செய்கின்றன. இவைத்தவிர, அமேசான் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களும் இவற்றை விற்பனை செய்கின்றன. முன் பின் தெரியாத மூன்றாம் தரப்பு தளங்களில் இருந்து வாங்குவதை விட, நிறுவனங்கள் அல்லது நம்பகமான இ-காமர்ஸ் தளங்கள் மூலம் வாங்கலாம்.

  சீரமைக்கப்பட்ட போன்கள் குறித்து மேலும் அறிய விருப்பம் எனில் இந்த வலைப்பதிவையும், (https://www.blogmaza.com/refurbished-phones-should-you-buy-it-the-complete-guide/ ) குவோர இணையதள (https://www.quora.com/What-does-a-refurbished-phone-mean) விவாதத்தையும் வாசித்துப்பாருங்கள்!

  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  Our Partner Events

  Hustle across India