Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

கிராமப்புற குழந்தைகள் ஆங்கிலம் கற்க உதவும் சமூக நிறுவனம்!

சமூக தொழில்முனைவு நிறுவனமான Krishworks, கிராமத்து இளைஞர்களை சிறு தொழில்முனைவோர்களாக உருவாக்கி  வாழ்வாதார வாய்ப்புகளையும் வழங்குகிறது. 

கிராமப்புற குழந்தைகள் ஆங்கிலம் கற்க உதவும் சமூக நிறுவனம்!

Monday December 10, 2018 , 5 min Read

சுமன் மாண்டல் முதுகலைப் பட்டம் பெற்றவர். இருப்பினும் அவர் ரயில்களில் புத்தகம் விற்பனை செய்து வந்தார். தொழில்முனைவர் ஆகவேண்டும் என்பதே இவரது கனவு. ஆனால் எப்படித் துவங்குவது என்பதில் தெளிவில்லை. அவர் யதேச்சையாக க்ரிஷ்வொர்க்ஸ் (Krishworks) இணை நிறுவனரான சுபஜித் ராயை சந்தித்தார். அந்த சந்திப்பே சுமனின் கனவு நனவாக உதவியது.

32 வயது சுபஜித் ராய், 26 வயது கார்கி மசூம்தார் ஆகிய இரு நபர்களால் 2015-ம் ஆண்டு நிறுவப்பட்டது க்ரிஷ்வொர்க்ஸ் நிறுவனம். கொல்கத்தாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் கிராமப்புற தொழில்முனைவோர் டேப்லெட் சார்ந்த ஒரு மென்பொருள் உதவியுடன் ஆங்கில பயிற்சி மையங்கள் அமைக்க உதவுகிறது.

image


சுமன் மேற்கு வங்கத்தில் உள்ள அவரது கிராமமான பியாலி பகுதியில் ஒரு ஸ்மார்ட் கிராமப்புற கல்வி மையத்தை அமைத்துள்ளார். இந்த முயற்சிக்கு க்ரிஷ்வொர்க்ஸ் உதவியதாக தெரிவிக்கிறார். தற்போது குழந்தைகளுக்கு ஆங்கில மொழியில் பயிற்சியளித்து வருகிறார். தன்னிடம் பயிலும் மாணவர்கள் ஆங்கிலம் பேசும் திறன் பெற்றதுடன் மேடை ஏறி நிகழ்ச்சி நடத்தும் அளவிற்கு தன்னம்பிக்கையும் பெற்றிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

கிராமப்புற குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதுடன் இளைஞர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளையும் வழங்கவேண்டும். இதுவே இந்த ஸ்டார்ட் அப்பின் நோக்கம் என விவரித்தார் சுபஜித்.

”எங்களது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிராமப்புற குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் சிறு தொழில்முனைவோரை உருவாக்க விரும்புகிறோம். நம் நாட்டில் படித்த இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர். இவர்களிடம் போதுமான தன்னம்பிக்கை, திறன்கள், சரளமான மொழித்திறன் உள்ளிட்டவை இல்லை. தொழில்நுட்ப உதவியுடன்கூடிய பயிற்சியானது அவர்களை மேம்படச் செய்யும். இது மாணவர்கள் பயனடைய உதவுவதுடன் இளைஞர்கள் அதிக வருவாய் ஈட்டவும் உதவும்,” என்றார்.
image


ஓராண்டில் இந்த ஸ்டார்ட் அப் மேற்கு வங்கம் முழுவதும் 14 மையங்களைத் திறந்துள்ளது. இங்கு சுமார் 600 கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் எட்டு கிராமப்புற பள்ளிகள் இந்த பாடத்திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே அடுத்த கல்வியாண்டு முதல் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்த ஸ்டார்ட் அப் நம்பிக்கை தெரிவிக்கிறது.

இந்த ஸ்டார்ட் அப் ஐஐஎம் கொல்கத்தா, சிக்மா ஐகேபி ஈடன், இண்டியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் டிலேப்ஸ், ஹைதராபாத் ஆகியவற்றால் இன்குபேட் செய்யப்பட்டுள்ளது. ஐஐஎம் அஹமதாபாத் மற்றும் டாடா ட்ரஸ்ட்ஸ் சோஷியல் ஆல்ஃபா இந்த ஸ்டார்ட் அப்பிற்கு நிதியுதவி அளிக்கிறது. இண்டியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ், பெங்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஆகியவற்றால் கிழக்கிந்தியாவில் வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

துவக்கம்

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்றலை ஊக்குவிக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் 2014-ம் ஆண்டு சுபஜித் மற்றும் கார்கி க்ளோபல் லெர்னிங் XPRIZE போட்டியில் பங்கேற்கத் தீர்மானித்தனர். ’டீம் கிருஷ்ணா’ என்கிற பெயரில் 25 பேர் அடங்கிய குழுவாக இந்த திட்டத்திற்காக இலவசமாக பணியாற்றினர். அதே சமயம் அனைவரும் தங்களது வழக்கமான பனியையும் தொடர்ந்தனர்.

இணைய இணைப்பு இன்றி டேப்லெட்டில் செயல்படும் ஓபன் சோர்ஸ் மென்பொருள் சார்ந்த கேம் உருவாக்க வேண்டியிருந்தது. இந்த கேம் டான்சானியாவில் ஆசிரியர்களின்றி உள்ளூர் பள்ளிக் குழந்தைகள் கற்க உதவும் வகையில் பயன்படுத்தப்படும். டீம் கிருஷ்ணா Gurukul என்கிற டேப்லெட் சார்ந்த மென்பொருளை வடிவமைத்தனர். 

இது நலிந்த குழந்தைகள் எந்தவித உதவியும் இன்றி தாங்களே சுயமாக படிக்கவும், எழுதவும், கணக்கு பயிலவும் உதவும். உலகளில் தேர்வான 30 குழுக்களில் இவர்களும் இடம்பெற்றனர். 
image


போட்டி முடிந்த பிறகு இந்தியா முழுவதும் உள்ள நலிந்த பிரிவினைச் சேர்ந்த மாணவர்கள் பலனடையும் வகையில் இந்த மென்பொருளின் என்டர்பிரைஸ் வெர்ஷனை உருவாக்க இரு நிறுவனர்களும் தங்களது முழு நேர பணியை விட்டு விலகினர். 32 வயது கௌசிக் மசூம்தார் மற்றும் 26 வயது பாலகோபால் கேவி ஆகியோர் இவர்களுடன் இணைந்துகொண்டனர்.

அனைவரும் வெவ்வேறு பணி அனுபவம் பெற்றவர்கள். சுபஜித் எம்பெடட் கம்ப்யூட்டிங் பிரிவில் பணியாற்றி பல்வேறு DRDO திட்டங்களில் பங்கேற்றுள்ளார். கார்கி முன்பு காக்னிசென்ட் நிறுவனத்தில் பணியாற்றினார். சைல்ட்லைன், ஸ்கூல்ஸ் ஆன் வீல்ஸ், அவுட்ரீச் போன்ற அரசு சாரா நிறுவனங்களில் ஆசிரியராக இருந்தார். கௌசிக் Godot கேம் என்ஜினுக்கு ஓபன் சோர்ஸ் சார்ந்து பணியாற்றியுள்ளார். பாலகோபால் NITK Surathkal இ-செல்லுக்கு தலைமை வகித்து வந்தார்.

தாக்கத்தை ஏற்படுத்துதல்

ஆரம்பத்தில் க்ரிஷ்வொர்க்ஸ் சுந்தர்பன் பகுதியில் உள்ள அரசு சாரா நிறுவனம் நடத்தும் குறைந்த பட்ஜெட் பள்ளிகளில் சோதனை முயற்சி மேற்கொண்டது. அங்குள்ள ஆசிரியர்கள் ஒரு மாதத்திற்கு 1,200 ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்று வந்ததும் தெரிய வந்தது.

”கிட்டத்தட்ட அனைத்து ஆசிரியர்களும் அதே குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்தனர். பெற்றோர்கள் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக குழந்தைகள் படிக்க பள்ளிக்கு அனுப்புகின்றனர். இருப்பினும் குழந்தைகள் பாடங்களை சிறப்பாக கற்றுக்கொள்வதற்காக பெற்றோர் டியூஷனுக்கு செலவு செய்யத் தயாராக இருந்ததை உணர்ந்தோம்,” என சுபஜித் நினைவுகூர்ந்தார்.
image


இக்குழுவினர் ஆரம்பத்தில் கொல்கத்தாவில் உள்ள ஒரு பட்ஜெட் கஃபேயில் இருந்து ப்ராஜெக்ட் பணிகளை மேற்கொண்டனர். இங்கு ஐஐஎம் கொல்கத்தா இன்னோவேஷன் பார்க் INVENT திட்டத்திற்கு தலைமை வகித்த கௌரவ் கபூரை சந்தித்தனர். கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு உதவவேண்டும் என்றும் இந்த செயல்முறையில் சிறு தொழில்முனைவோரை உருவாக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கணிதத்தில் இருந்து ஆங்கிலப் பயிற்சிக்கு மாறுதல்

இக்குழு ஆரம்ப நாட்களில் பணப்பிரச்சனையை எதிர்கொண்டது. கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு ப்ராடக்ட் பிடித்திருந்தபோதும் யாரும் டேப்லெட் பயன்படுத்துவதற்கு கட்டணம் செலுத்த முன்வரவில்லை.

ஏற்கெனவே அரசாங்கம் மின்கற்றல் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்ட்ராய்ட் சார்ந்த ஆகாஷ் டேப்லெட்டை விநியோகித்தது. நாங்கள் பள்ளிகளுக்குச் சென்றபோது அந்த டேப்லெட் பயன்படுத்தப்படாமல் இருப்பதை கவனித்தோம். மல்டிமீடியா கார்ட் இல்லாததாலும் முறையான பவர் பேக்அப் இல்லாததாலும் மற்ற தொழில்நுட்ப ரீதியான சிக்கல்கள் இருப்பதாலும் டேப்லெட்டை பயன்படுத்த முடியவில்லை என அவர்கள் எங்களிடம் தெரிவித்தனர். 

”வகுப்பறையில் அதை பயன்படுத்தவேண்டிய அவசியமில்லை என ஆசிரியர்கள் கருதுவதையும்எங்களால் உணரமுடிந்தது,” என்று சுபஜித் விவரித்தார். 
image


பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கணிதம் கற்பதற்காக செலவிட விரும்பவில்லை என்றபோதும் குழந்தைகள் ஆங்கிலம் கற்க எதையும் செய்யத் தயாராக இருப்பதையும் குழுவினர் உணர்ந்தனர்.

”இன்றைய காலகட்டத்தில் எங்கு சென்றாலும் ஆங்கில அறிவு கட்டாயமாக தெரிந்திருக்கவேண்டிய நிலை உள்ளது. விண்ணப்பப்படிவத்தை நிரப்ப, கணிணி பயன்படுத்த, அலுவலக பணி என அனைத்திற்கும் ஆங்கில அறிவு கட்டாயமாகிறது. ஒவ்வொரு தொழில்துறையும் தங்களது செயல்முறைகளை தானியங்கிமயமாக்குகின்றன. இதற்கும் ஆங்கிலமே பயன்படுத்தப்படுகிறது. தங்களது ஆங்கில மொழித் திறனை மேம்படுத்திக்கொள்ளத் தேவையான வாய்ப்புகள் கிடைக்காத கிராம மக்களுக்கு இது ஒரு பெரும் தடையாக உள்ளது,” என்கிறார் க்ரிஷ்வொர்க்ஸ் இணை நிறுவனர் பாலகோபால்.

எனவே இக்குழுவினர் பாடத்தை மாற்றி ஆங்கில உள்ளடக்கத்தைக் கொண்டு இரண்டாவது சோதனை முயற்சியை மேற்கொண்டனர். சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இந்த சேவைக்கு கட்டணம் செலுத்த பெற்றோர் முனவந்தனர்.

ஹிப்போகேம்பஸ் லெர்னிங் செண்டர், Meghshala, பைஜூஸ் போன்ற நிறுவனங்களும் டேப்லெட் சார்ந்த கற்றல் மாதிரியை குழந்தைகளுக்கு வழங்கி இதே போன்ற சேவையளித்து வரும்போதும் கிராமப்புற டியூஷன் ஆசிரியர்களே தங்களது போட்டியாளர்கள் என்கிறார் சுபஜித்.

"கொக்கோகோலா போன்ற நிறுவனங்களும் எங்களது போட்டியாளர்கள். ஏனெனில் கிராமத்து மக்கள் கல்விக்காக செலவிடுவதைக் காட்டிலும் ஒரு பாட்டில் குளிர் பானம் வாங்குவதற்கு செலவிடத் தயாராக உள்ளனர்,” என்றார் சுபஜித்.

க்ரிஷ்வொர்க்ஸ் மாதிரி

க்ரிஷ்வொர்க்ஸ் பல்வேறு கிராமப்புற சிறு தொழில்முனைவோரை உருவாக்கியுள்ளது. இவர்கள் உள்ளடக்கம் மற்றும் கேம் லோட் செய்யப்பட்ட டேப்லெட்டிற்காக ஆரம்பத் தொகையாக 20,000 ரூபாய் முதலீடு செய்யவேண்டும். அதன் பிறகு டேப்லெட் மற்றும் ஸ்டடி மெட்டீரியல்ஸ் பயன்படுத்தி இவர்கள் பள்ளி நேரத்திற்கு பிறகு ஆங்கில பயிற்சி அளிப்பதற்கான மையத்தை நடத்தலாம். 

குழந்தைகள் மாத கட்டணமாக 200 ரூபாய் செலுத்தவேண்டும். ஒவ்வொரு மையத்திலும் அதிகபட்சமாக 192 குழந்தைகளுக்கு பயிற்சியளிக்கலாம்.
image


க்ரிஷ்வொர்க்ஸின் ஊடாடும் மென்பொருள், விளையாட்டு சார்ந்த உள்ளடக்கம் வாயிலாக ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே ஒரு இடைமுகமாக செயல்படுகிறது. வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு மணி நேரம் வகுப்பு நடைபெறும். பாடங்கள் 12 நிலைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலையையும் நிறைவு செய்ய சுமார் ஆறு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும். வகுப்பறையில் ஒன்றோடொன்று இணைக்கபட்ட டேப்லெட் இருக்கும். இதில் தினசரி பாடங்களுக்கான திட்டம், நடவடிக்கைகள், தொடர்புகள் போன்றவை ஆடியோ/வீடியோ வடிவில் இருக்கும்.

க்ரிஷ்வொர்க்ஸ் மேற்குவங்கம், தெலுங்கானா, கர்நாடகா போன்ற பகுதியில் உள்ள 17 கிராமங்களைச் சேர்ந்த 400-க்கும் அதிகமான குழந்தைகளிடையே சோதனை திட்டங்கள் மேற்கொண்டது. அதன் பிறகு இந்த ஸ்டார்ட் அப் மேற்குவங்கத்தின் ஜிபன் மண்டல் ஹாத்ம், பியாலி ஆகிய இரு கிராமங்களில் 2017-ம் அண்டு டிசம்பர் மாதம் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்கும் இரண்டு மையங்களை அமைத்தது. இது மிகப்பெரிய அளவில் வெற்றியடையந்தது.

அடுத்த ஆண்டிற்குள் க்ரிஷ்வொர்க்ஸ் மேற்குவங்கத்தின் கிராமப்புறங்களில் 50 மையங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த ஏழாண்டுகளில் 10 மில்லியன் குழந்தைகளிடையே தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த ஸ்டார்ட் அப். சிறு தொழில்முனைவோர் மையம் திறக்கத் தேவையான பணத்திற்கான சீட் நிதி உயர்த்த உதவும் வகையில் இந்நிறுவனம் கூட்டுநிதி வாயிலாக நிதி உயர்த்தும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளது.

”அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவேண்டும் என்பதே எங்களது நோக்கம். ஒவ்வொரு குழந்தையின் கனவும் நனவாகும் வகையில் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடைய விரும்புகிறோம். ஏழ்மையில் இருப்பதோ அல்லது நகர்புறங்களில் இருந்து தொலைவில் இருப்பதோ குழந்தைகள் கல்வி பெறும் வாய்ப்பிற்குத் தடையாக இருக்கக்கூடாது,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர்: ஸ்ருதி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா