பதிப்புகளில்

இந்தியா அடுத்த சிறந்த தொழில்முனை நாடு என்பதற்கான 16 காரணிகள்!

YS TEAM TAMIL
16th Jan 2016
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

டிசம்பர் 2015 'மன் கி பாத்' ரேடியோ உரையின் போது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி "ஸ்டார்ட் அப் இந்தியா ஸ்டாண்ட் அப் இந்தியா" என்ற திட்டத்தை தொடக்கி வைத்தார். இது இந்திய தொழில்முனை நிறுவனங்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ற அடிப்படையில், இந்தியாவை ($1.596) விட சீனா ($7.594) ஐந்து மடங்கு அதிக உற்பத்தி செய்கிறது. ஆனால் இதை எல்லாவற்றையும் நமது புதிய தொழில்முனைக் கொள்கைகள் மாற்றி அமைக்கவுள்ளது.

image


தொழில்முனை நிறுவனம் தொடங்க இதுவே சரியான தருணம் என்பதற்கான சில காரணங்கள் இதோ :-

1. இந்த ஆண்டு தொழில்முனை நிறுவனங்களின் மொத்த நிதி திரட்டல் ஒன்பது பில்லியன் டாலர்கள் ஆகும். இது அந்தமான் நிகோபார், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலங்களின் கூட்டு ஜிடிபி யை விட அதிகமாகும்.

2. ஆன்லைன் வர்த்தகத்தின் தலைமகன் என்று வர்ணிக்கப்படும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் ஒரு இந்திய மாநிலமாக இருந்தால், இதனுடைய மதிப்பைக் கணக்கில் கொண்டால், 13 மாநிலங்களின் (யூனியன் பிரதேசங்கள் உள்பட) ஜிடிபி யை விட பல்மடங்கு அதிகம்.

3. $2.07 ட்ரில்லியன் மதிப்போடு உலகளவில் ஜிடிபி யில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது. 70 சதவிகிதம் மக்கள் கிராமத்தில் வாழும் நிலையில், உற்பத்தியின் பெரும் பங்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரத்தில் இருந்து தான் வருகிறது. ஆகவே கண்டறியப்படாத ஆற்றல் வளம் இன்னும் இருக்கிறது என்றே தெரிகிறது.

4. பல ஆண்டுகளாக உள்ள வேதாந்தா, கிராசிம், GSK போன்ற நிறுவனங்களை விட தொழில்முனை நிறுவனமான ஸ்னாப்டீல் நிறுவனத்தின் மதிப்பீடு மிக அதிகம்.

5. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய ரயில்வே. 1.4 மில்லியன் பணியாளர்கள் கொண்ட உலகின் எட்டாவது மிக பெரிய பணி நிறுவனம். ஒதுக்கீடுகளில் திறனற்ற முறை, கேட்டரிங் செயல்பாடு, செயல்முறை ஒழுங்குபடுத்தலில் உள்ள சவால்கள் என்று நிறைய பணிகள் மிகுந்த இத்துறையில் தொழில்முனை நிறுவனங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. இது இவர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வாய்ப்புள்ளது.

6. ஒரு பில்லியன் டாலர் மேல் மதிப்பீடு கொண்ட உலகின் யூனிகார்ன் பட்டியலில் இடம்பெற்றுள்ள 5.7 சதவிகிதம் தொழில்முனை நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. சர்வதேச அளவில் ஒப்பிடும் போது இங்கிருக்கும் நிதி ஆதாரம் குறைவு என்றபோதிலும் இது வளர்ச்சி நிலையில் உள்ளது. Flipkart, Snapdeal, Ola, Paytm, Quikr, Zomato, Mu Sigma மற்றும் InMobi ஆகியவை இந்தியாவின் யூனிகார்ன் நிறுவனங்கள்.

7. 2015 ஆம் ஆண்டு 290 மில்லியன் டாலர்கள் நிதியை பதினேழு நிதி நிறுவனங்கள் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு மிக அதிக நிதி பெற்றத் துறை இதுவாகும். கட்டண வங்கிகளுக்கான நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியது தொழில்முனை நிறுவனங்கள் புதுமைகளை மேற்கொள்ள ஏதுவாக்கியது.

8. பி2சி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பதினோரு நிறுவனங்கள் 3.377 பில்லியன் டாலர்கள் அளவில் நிதி பெற்றது. கடந்த ஆண்டில் நிதி பெற்ற நிறுவனங்களில் 33 சதவிகிதம் மேல் இத்தகைய நிறுவனங்கள் இடம்பெற்றன, மேலும் 50 சதவிகிதம் மேல் இந்த நிறுவனங்கள் யூனிகார்ன் பட்டியலில் உள்ள நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

9. தொழில்முனை நிறுவனங்களுக்கு கிராமப்புற இந்தியா மிக பெரிய சந்தை. பிராந்திய மொழியில் சேவை என்பது இத்தகைய சந்தையை கைப்பற்ற சிறந்த வழி. சர்வதேச நிறுவனங்களை விட நம் நாட்டு தொழில் முனைவர்களுக்கு இது கூடுதல் பலம்.

10. உலக வங்கியின், 'டூயிங் பிசினஸ் ரிப்போர்ட்' என்ற அறிக்கையின் படி 2008 ஆம் ஆண்டு 120 ஆம் இடத்தில இருந்த நாம் 2014 ஆம் ஆண்டு 132 ஆம் இடத்தில் இடம்பெற்று சரிவை சந்தித்தது. 2016 ஆண்டுக்கு 130 என்று சற்றே முன்னேற்றம் அடைந்தாலும், தொழில்முனை தாராள கொள்கைக்கு பின்னர் இது முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

image


11. கர்நாடக மாநிலத்தை தொடர்ந்து ஆந்திரா, ராஜஸ்தான் என பல மாநிலங்கள் தொழில்முனை நிறுவனங்களை ஊக்குவிக்க தொடங்கியுள்ளன. மொத்த வரவு செலவு திட்டத்தில் ஒரு சதவிகிதம் தொழில்முனைவுக்கு என ஒதுக்க கேரள அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. தொழில் முனைவர்களுக்கு பயிற்சி அளிக்க IIMC உடன் மேற்கு வங்காள அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகிய மாநிலத்தின் அரசாங்கமும் தொழில்முனை நிறுவனங்களை ஊக்குவிக்கும் முறைகளை ஏற்படுத்தியுள்ளது.

12. ஃப்ளிப்கார்ட் சச்சின் பன்சல் மற்றும் பின்னி பன்சல் போர்பஸ் பில்லியனர் பட்டியலில் இடம்பெற்றனர். இந்த வருடப் பட்டியலில் மேலும் பல தொழில்முனைவர்கள் இடம்பெறும் வாய்ப்புள்ளது.

13. 'World Startup Gnome Project 2015' வெளியீட்டின் படி தொழில்முனைக்கு ஏற்ற இடமாக உலகில் ஐந்தாவது இடத்தில் பெங்களூரு நகரம் இடம்பெற்றுள்ளது.

14. தொழில்முனை நிறுவனம் என்பதின் புரிதலில் உள்ள சிக்கலால், நாட்டின் உள்நாட்டு தயாரிப்பு வளர்ச்சிக்கு இத்தகைய நிறுவனங்களின் பங்கீடு பற்றி கணிக்க முடியவில்லை. ஆனால் தேசிய கொள்கை அறிவிப்பிற்கு பின்னர் இவர்களின் பங்கீட்டை அறிய முடியும் என்றே எதிர்பார்க்கலாம்.

15. தொழில்முனைவுக்கு கூடுதல் மதிப்பெண், ஸ்டார்ட் அப் வில்லேஜ் போன்ற முயற்சிகள் மேற்கொள்வதன் மூலம் கேரளா மாநிலத்தை தொழில்முனைவில் முன்னோடியாக இடம்பெற செய்துள்ளது.

16. 'லிட்டில் ஐ லாப்ஸ்' என்ற நிறுவனத்தை 2014 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் வாங்கியது. 2015 ஆம் ஆண்டு ஜிப்டயல் நிறுவனத்தை ட்விட்டர் வாங்கியது. லிட்டில் ஐ லாப்ஸ் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் தனது முதல் கையகப்படுத்தலை இந்தியாவில் தொடங்கியது ஃபேஸ்புக் . நமது தொழில்நுட்ப வலிமையை பெருக்கும் விதமாக இத்தகைய கையகப்படுத்தல் மேலும் அதிகரிக்கும். ரத்தன் டாட்டா, மோகன்தாஸ் பை போன்ற தேர்ந்த தொழிலதிபர்கள் கடந்த வருடம் தொழில்முனை நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக நிதி முதலீடு மேற்கொண்டனர்.

அரசிடம் தொழில்முனை நிறுவனங்களின் எதிர்பார்ப்பு பற்றி அறிந்து கொள்ள http://yourstory.com/2016/01/startup-india-standup-india-responses/

16 ஜனவரி 2016 அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய அரசின் "Startup India StandUp India" இயக்கத்தில் யுவர்ஸ்டோரி பங்குகொண்டதில் பெருமிதம் கொள்கிறது.

ஆக்கம்: ஆதித்ய பூஷன் த்விவேதி | தமிழில்: சந்தியா ராஜு

 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags