அகவிலைப்படி அமல் முதல் பத்திரிகையாளர் நல வாரியம் வரை: கவனம் பெறும் சட்டப்பேரவை அறிவிப்புகள்!

110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியீடு!
0 CLAPS
0

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இதில் தினமும் புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இன்று செய்தித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய துறை அமைச்சர் சாமிநாதன், 'பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்' என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் நலன்குறித்த அறிவிப்பின் போது,

"பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களின் குடும்ப நிதி உதவி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி வழங்கப்படும்," என்பது போன்ற முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

முன்னதாக, "சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமுக்கு சிலை வைக்கப்படும். சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை அமைக்கப்படும்," என்று அறிவிப்பையும் அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார்.

இதற்கிடையே, சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்று அரசு ஊழியர்களுக்கான அமல். அதில்,

"அகவிலைப்படி உயர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும். இந்த அமலால், 16 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதேபோல், போராட்டக் காலங்களில் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படுவதோடு, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் பணிநீக்க காலம் ஆகியவை வேலை நாட்களாக கருதப்படும்," என்றும் அரசு ஊழியர்களுக்கு தித்திப்பு செய்தியை வெளியிட்டார்.

முன்னதாக, சில வாரங்கள் முன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அகவிலைப்படி அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே அமல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல், சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயது 58லிருந்து 60 ஆக நீட்டிக்கப்படுவதாக 110 விதியின் கீழ் ஸ்டாலின் அறிவித்தார். மேலும், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியையும் கொடுத்தார்.