பதிப்புகளில்

’ஃபிஃபா கால்பந்து’ உலகக் கோப்பைத் திருவிழா: ஒரு முன்னோட்டம்

14th Jun 2018
Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share

32 நாடுகள் பங்கேற்கும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'ஃபிஃபா கால்பந்து' போட்டிகள் இன்று தொடங்குகின்றன. தொடக்க நிகழ்ச்சியில் சவுதி அரேபிய இளவரசர் பங்கேற்க உள்ளார். ரஷ்யாவில் பிரபலமான டிரம்போலின் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் கண்கவர் நடனத்துடன் கால்பந்து திருவிழா தொடங்க உள்ளது. தலைநகர் மாஸ்கோவில் உள்ள லஸ்கின் மைதானத்தில் ரஷ்யா - சவுதி அரேபியா அணிகள் மோதும் முதல் போட்டி நடைபெறுகிறது.

ரஷ்யாவில் இன்று தொடங்குகிறது 21வது உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள். 350 கோடி ரசிகர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவில் கோப்பையை வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்தபடியே இருக்கிறது.

கோடிக்கணக்கானோரை ஒரு மாத காலத்திற்கு மேலாக ஆட்டுவித்த ஐ.பி.எல். டுவென்டி- டுவென்டி ஜூரம் முடிந்துவிட்ட நிலையில், ஜூன் 14 முதல் சுனாமியாய் வருகிறது உலகக்கோப்பை கால்பந்து. போட்டி நடைபெறும் ரஷ்யா முழு வீச்சில் தன்னை தயாரிப்படுத்தி உலகத்தை வசியப்படுத்த காத்திருக்கிறது.

image


பொதுவாக, கால்பந்தாட்டத்தைப் பற்றி முழுவதுமாய் அறிந்திராதவர்கள் கூட, உலகக்கோப்பையின்போது, பிரேசில் ஜெயிக்குமா? அர்ஜென்டீனா, கோப்பையை தட்டிச் செல்லுமா? என ஒரு மாத காலத்திற்கு, ஆர்வத்துடன் அலசுவார்கள். இதற்கான பெருமை, பிரேசிலின் பீலே, அர்ஜென்டீனாவின் மரடோனா போன்ற நட்சத்திர வீரர்களையே சேரும். இவர்கள் காட்டிய வழியில், பிரான்சின் ஜிடேன், ஸ்பெயினின் இனியஸ்டா போன்ற ஓய்வுபெற்ற சூப்பர் ஸ்டார்களும், தற்போது களமாடிக்கொண்டிருக்கும் ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர், போன்றோரும் கால்பந்தாட்டத்தை கவர்ச்சிகரமான விளையாட்டாக மாற்றியுள்ளனர்.

ஐரோப்பா, தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கால்பந்துக்காக உயிரை கொடுக்கவும், உயிரை எடுக்கவும் தயாராக இருக்கும் ரசிகர்கள் உண்டு. 1994ல், அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் சொந்த நாட்டுக்கு எதிராக, தவறுதலாக கோல் அடித்த கொலம்பியா வீரர் எஸ்கோபர், ரசிகர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டதை நாம் மறந்திருக்கமுடியாது.

ஒரு பந்தும், கட்டாந்தரையும் கூடபோதும் கால்பந்து விளையாட. அதனாலேயே இது சாமானிய மக்களின் விளையாட்டாகப் பார்க்கப்படுகிறது. ஏழ்மைமிக்க ஆப்பிரிக்க நாடுகளின் தேசிய விளையாட்டாகவும் விளங்குகிறது. உலகில் வேறு எந்த விளையாட்டிற்கும் இல்லாத வகையில், கால்பந்திற்குத்தான் ரசிகர் எண்ணிக்கை மிக அதிகம். சாமானியர்களுக்குப் பிடித்த விளையாட்டாக பார்க்கப்படும் கால்பந்து, உலகின் அதிக பரிசுத்தொகைகளை அள்ளித்தரும் போட்டியாக வடிவெடுத்து பல காலம் ஆகிறது.

கால்பந்து உலகக்கோப்பையும், உலகின் அனைத்து நாடுகளும் சங்கமிக்கும் ஒலிம்பிக் போட்டியும் ஒரே நேரத்தில் நடந்தால், ரசிகர்களின் ஆதரவு கால்பந்துக்குதான் இருக்கும். உலகக் கோப்பை ஆடவர் கால்பந்து போட்டிகளில், காலம்காலமாய் பிரேசில், அர்ஜென்ட்டீனா போன்ற தென் அமெரிக்க நாடுகளும், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளும் கோலோச்சி வருகின்றன.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை, ‘ஃபிஃபா’ எனப்படும் சர்வதேச கால்பந்து சம்மேளனம், நடத்துகிறது. அந்த அமைப்பில், இந்தியா உள்பட 211 நாடுகள் உறுப்பினர்களாக இருப்பினும், உலகக்கோப்பைக்கு 32 நாடுகள்தான் தகுதிபெறும். இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் கண்டம் வாரியாக நடத்தப்பட்டு, இறுதிப்போட்டிக்கு அணிகள் தேர்வு செய்யப்படுகின்றன. இவ்வாறாக 31 நாடுகள் தகுதி அடிப்படையிலும், போட்டி நடத்தும் நாடு மட்டும் அதை நடத்துகின்ற தகுதியின் அடிப்படையிலும் உள்ளே நுழைகின்றன. 

இந்த பிரமாண்ட போட்டியை நடத்துவதற்கு நீண்ட ஆயத்தம் தேவை. 2018 உலகக்கோப்பையை நடத்தும் உரிமையை, கடும் போட்டிக்கிடையே 2010-ம் ஆண்டே, ரஷ்யா பெற்றது.

முதல் கால்பந்து உலகக்கோப்பை 1930ம் ஆண்டு, தொடங்கியது. அதற்கு முன் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கால்பந்து போட்டிகளுக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, கால்பந்தாட்டத்திற்கு என தனியே உலகக்கோப்பை போட்டியை நடத்த, ஃபிஃபா முடிவெடுத்தது. முதல் போட்டியை நடத்த நெதர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, ஸ்வீடன், ஹங்கேரி மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் விருப்பம் தெரிவித்தன. அந்த வாய்ப்பு உருகுவே நாட்டுக்குக் கிடைத்தது. நீண்ட கடல் பயணம், அதிக பொருள் செலவு போன்ற காரணங்களால் அதில் பங்கேற்க பல நாடுகள் தயங்கின. ஒருவழியாக 13 நாடுகள் பங்கேற்ற போட்டியில் அர்ஜென்டீனாவை இறுதிப்போட்டியில் வீழ்த்தி, முதல் உலகக்கோப்பையை உருகுவே தட்டிச் சென்றது.

அந்த சமயத்தில் இரண்டாவது உலகப்போர் தொடங்கியதால், 1942ம் ஆண்டும், 1946ம் ஆண்டிலும், உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படவில்லை. மீண்டும் 1950ம் ஆண்டு நடந்தபோது, அதில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு தேடி வாய்ப்பு வந்தது. 1950களில், ஆசியாவின் சிறந்த அணியாக உருவெடுத்திருந்ததால், ஃபிஃபா, அழைத்தது. போதுமான கால அவகாசம் இல்லாததால் அதை ஏற்க இந்திய கால்பந்து சம்மேளனம் மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டாலும், ஷூ அணியாமல் வெறும்காலால் ஆட அனுமதி கிடைக்காததால் இந்தியா பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

1948ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில், வெறும் காலில் ஆடியே, நான்காவது இடத்தை இந்தியா பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது நழுவவிட்ட வாய்ப்பு இப்போது விரும்பினாலும் கிடைக்காத நிலைக்கு போய்விட்டது.

1982ல் ஸ்பெயினில் நடந்த உலகக்கோப்பை ஆட்டத்தின் போது, விளையாடும் அணிகளின் எண்ணிக்கை,16-ல் இருந்து 24 ஆக உயர்த்தப்பட்டது. 1998ல், பிரான்ஸில் நடந்த உலகக் கோப்பையின் போது, 32 அணிகளாக உயர்த்தப்பட்டது. இதனால் ஆப்பிரிக்கா, ஆசியா, வடஅமெரிக்கா போன்ற கண்டங்களில் உள்ள நாடுகள் அதிக அளவில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

தற்போது நடைபெற உள்ள 21வது உலகக்கோப்பை, பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பே ரசிகர்களுக்கு பல்வேறு அதிர்ச்சிகள் காத்திருந்தன. ஜெர்மனி, அர்ஜென்டீனா, பிரேசில், ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற பெரிய அணிகள், வழக்கம்போல் இறுதி கட்டப்போட்டிக்கு தகுதிபெற்றுவிட்டன. ஆனால், மிக முக்கியமான ஐந்து பெரிய அணிகள் இடம்பெறாதது, அந்த நாட்டு ரசிகர்களை மட்டுமின்றி, கால்பந்து ரசிகர்களையும் மொத்தத்தில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதலாவதாக இத்தாலி. ஐரோப்பிய ஜாம்பவானான இத்தாலி அணி, ஐம்பது ஆண்டுகளில் முதல் முறையாக, இறுதிச்சுற்றுப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. தகுதிச்சுற்றில் ஸ்வீடனிடம் பெற்ற தோல்வியால், நான்கு முறை கோப்பையை வென்ற இத்தாலிக்கு இந்த தலைக்குனிவு ஏற்பட்டது.

அடுத்ததாக சோடை போனது நெதர்லாந்து. ரூட் கில்லிட் போன்ற, உலகின் தலைசிறந்த வீரர்களை உருவாக்கிய நெதர்லாந்து, 2010ல் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற அணி. பல்கேரியா போன்ற சாதாரண அணியிடம் தோற்ற டச்சு அணி, ரஷ்யா செல்லும் வாய்ப்பை இழந்தது.

இதுபோல், கால்பந்தே சுவாசம் என தவம் கிடக்கும் சிலி நாட்டு ரசிகர்கள், தங்கள் நாட்டு அணி, தகுதிச்சுற்றில், சாதாரண அணியான பெருவிடம், தோற்ற அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

பெரு அணி

பெரு அணி


இதேபோல், ஆப்பிரிக்காவின் தலைசிறந்த அணிகளில் ஒன்றான கானா மற்றும் ஒலிம்பிக்கின் தாயகமான கிரீஸ் போன்ற முக்கிய கால்பந்து அணிகள் பங்கேற்காதது சற்று வருத்தமான விஷயம்தான்.

ஐந்து முக்கிய அணிகள் வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ள நிலையில், 132 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவும்,130 கோடி மக்கள் தொகை உடைய இந்தியாவும் தகுதி பெற திணறிக்கொண்டிருக்கையில், ஆர்க்டிக் பனிப்பிரதேசத்தில் வெறும் மூன்றரை லட்சம் மக்கள் தொகை கொண்ட ஐஸ்லாந்து முதல் முறையாக, உலகக்கோப்பைக்கு தகுதி பெற்று, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்லாந்தை போலவே, மற்றொரு குட்டி நாடான பனாமாவும், முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கோஸ்டாரிகாவுக்கு எதிரான போட்டியில் சர்ச்சைக்குரிய கோல் மூலமாக வெற்றி பெற்று இந்த அரிய வாய்ப்பை பெற்றது பனாமா. அந்த இன்ப அதிர்ச்சியை எதிர்பாராத பனாமா நாட்டின் அதிபர் ஜுவன் கார்லஸ் வரேலா, அதற்கு மறுநாள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்தார். 

இதுபோல், 1986ம் ஆண்டு முதல் தொடர்ந்து தகுதி பெற்றுவந்த அமெரிக்கா, முதல் முறையாக, உலகக்கோப்பையில் பங்கேற்க தகுதி பெறாதது மற்றொரு ஆச்சரியம்.

கால்பந்து உலகக்கோப்பையை, 1958, 1962, 1970, 1994 மற்றும் 2002 என, பிரேசில் அதிகபட்சம் ஐந்து முறை வென்றுள்ளது. இவற்றில், மூன்று கோப்பைகளை பிரேசில் வெல்வதற்கு பீலே காரணமாக இருந்துள்ளார்.

அடுத்தபடியாக, ஜெர்மனியும், இத்தாலியும் தலா நான்கு முறை கோப்பையை வென்றுள்ளன. தென் அமெரிக்க நாடுகளான அர்ஜென்டீனாவும், உருகுவேவும் தலா இருமுறையும், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் தலா ஒரு முறையும் கால்பந்து உலகக் கோப்பையை வென்றுள்ளன.

கால்பந்தாட்டத்தின் தலைமையகமாக விளங்கும் பிரேசிலில் நடந்த 2014 உலகக் கோப்பையை, அந்நாட்டு அணியால் வெல்லமுடியவில்லை. அதில் இறுதிப்போட்டியை மற்ற ஜாம்பவான்களான ஜெர்மனியும், அர்ஜென்டீனாவும் எட்டின. முடிவில், 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டீனாவை வீழ்த்தி, கோப்பையை ஐரோப்பாவுக்கு கொண்டு சென்றது ஜெர்மனி.

வரும் 14ம் தேதி ரஷ்யாவில் தொடங்கும் உலகக்கோப்பை போட்டியில் வென்று, ஐரோப்பா கண்டத்தில் இருந்து தென் அமெரிக்க கண்டத்திற்கு கோப்பையை கொண்டு செல்ல பிரேசிலும், அர்ஜென்டீனாவும், கங்கணம் கட்டிக் கொண்டு காத்திருக்கின்றன. போட்டி நெருங்கும் நிலையில், உலக ரசிகர்களின் வசதி மற்றும் பங்கேற்கும் அணிகளின் வசதியைக் கருதி போட்டி நடக்கும் இடங்களை ரஷ்யா மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்துள்ளது.

உலகின் மிகப்பெரும் நாடான ரஷ்யாவில், 11 விதமான நேர மண்டலங்கள் உள்ளன. இதனால் போட்டி நடக்கும் நேரம் தொடர்பாக ஏற்படும் குழப்பங்களை தவிர்ப்பதற்காக அனைத்துப் போட்டிகளையும், மேற்கு ரஷ்யாவிலேயே நடத்த ரஷியா மெனக்கெட்டுள்ளது. உலகக்கோப்பை ஆட்டங்கள், மாஸ்கோ, எகாட்டரின்பர்க் கசான், சமாரா, செயின் பீட்டர்ஸ்பர்க், சரான்ஸ்க், சோச்சி, ரோஸ்தோவ், வோல்கோ கிராட் உள்ளிட்ட 11 நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் நடக்கவுள்ளன. இந்த உலகக்கோப்பையை நடத்துவதற்கு, ரஷ்ய அரசும், மாநிலங்களும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை வாரியிறைத்துள்ளன.

உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற 32 அணிகள், ஏ, பி, சி என எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் ஏ ரஷ்யா, சவூதி அரேபியா, எகிப்து, உருகுவே அணிகளும், 

குரூப் பி – போர்சுகல், ஸ்பெயின், மெராக்கோ, ஈரானும் இடம்பெற்றுள்ளன. 

குரூப் சி – பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பெரு, டென்மார்க் நாடுகள்.

குரூப் டி – அர்ஜென்டீனா, ஐஸ்லாந்து, குரோஷியா, நைஜீரியா நாடுகளும் இடம்பிடித்துள்ளன. 

குரூப் இ – பிரேசில், சுவிட்சர்லாந்து, கோஸ்டா ரிகா, செர்பியா அணிகள்.

குரூப் எப்- ஜெர்மனி, மெக்சிகோ, ஸ்வீடன், தென் கொரியாவும் இடம்பெற்றுள்ளன. 

குரூப் ஜி – பெல்ஜியம், இங்கிலாந்து, பனாமா, டுனிசியா 

குரூப் எச் -  கொலம்பியா, போலந்து, செனகல், ஜப்பான் நாடுகளும் இடம்பெற்றுள்ள.

பட உதவி: Broncolor Gen Next

பட உதவி: Broncolor Gen Next


21வது உலகக் கோப்பையை வெல்லக்கூடிய வாய்ப்பு உள்ள அணிகளை குறித்து பார்க்கலாம். கால்பந்து என்றதுமே முதலில் பிரேசி்ல்தான் நினைவுக்கு வரும். கால்பந்து பாரம்பரியம்மிக்க பிரேசிலுக்கு, பெரிய போட்டிகளில் முக்கிய கட்டத்தை எப்படி எட்டுவது என்பது கைவந்த கலை. அதனால் குறைந்தது காலிறுதியையாவது எட்டுவது உறுதி. 2014ல் ஜெர்மனியிடம் சொந்த மண்ணில், அரையிறுதியில், ஏழுக்கு பூஜ்ஜியம் என்றகணக்கில் பெற்ற அவமானகரமான தோல்விக்குப் பழிவாங்க காத்திருக்கிறது, நட்சத்திர வீரர்கள் நிறைந்த பிரேசில் அணி.

பிரேசிலின் துருப்புச் சீட்டு நெய்மார். உலகின் பிரபல வீரர்களான லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனோல்டோவுக்கு சற்றும் சளைத்தவரல்லாத நெய்மார். 26 வயதே நிரம்பியவர் என்பதால், மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோரை விட, எதிரணிகளுக்கு கூடுதல் நெருக்கடி தருவார் என எதிர்பார்க்கலாம்.

பிரேசிலுக்கு அடுத்தபடியாக, நடப்பு சாம்பியன் ஜெர்மனிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 2014 உலகக்கோப்பைப் போட்டியில் ஐந்து முறை கோப்பையை வென்ற பிரேசிலை வீழ்த்தியபின், ஜெர்மனி உலகக்கோப்பையை தட்டிச் சென்றது. இம்முறை தகுதிச்சுற்றில் பத்து போட்டிகளிலும் தோற்காத ஜெர்மனி, கோப்பையை தக்க வைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஜெர்மனி நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் டோனி க்ரூஸ், ஒரு நடுக்கள ஆட்டக்காரர். எப்போதும் போல், கோப்பையை வெல்லக்கூடிய அணிகள் பட்டியலில் அர்ஜென்டீனாவும் உண்டு. லியோனல் மெஸ்ஸி போன்ற உலகின் தலைசிறந்த வீரரை பெற்றிருக்கும் அர்ஜென்டீனாவை புறம் தள்ளிவிட முடியுமா என்ன? 

அர்ஜென்டீனாவுக்கு, 1986க்குப்பிறகு கோப்பையை வெல்லாததும், 2014 போட்டியில் இறுதி ஆட்டத்தில் தோற்றதும் பெரும் உருத்தலாக இருந்துவருகிறது.

உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரும், ஐந்து முறை உலகின் மிகச் சிறந்த வீரர் பட்டத்தை வென்ற லியோனல் மெஸ்ஸி, தனி ஆளாக போராடி கோப்பையை வெல்வார் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.

அர்ஜென்டீனாவுக்கு அடுத்தபடியாக, 2010ம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயினுக்கு இந்தமுறை அதிக வாய்ப்பு உள்ளது. 2014ல் கோப்பையை தக்க வைக்க தவறினாலும், சிறந்த நடுக்கள மற்றும் முன்கள ஆட்டக்காரர்களைக் கொண்டிருப்பதால், ஸ்பெயினின் கோல் கம்பத்தை எதிரணிகள் நெருங்குவது கடினம்.

ஸ்பெயின் அணியின் முக்கிய வீரர், ஆண்ட்ரஸ் இனியஸ்டா. 2010ல் உலகக்கோப்பையை வென்றபோது ஸ்பெயின் அடித்த ஒரேகோல் இவருடையது. 34 வயதை எட்டியுள்ள இனியஸ்டா, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காட்டியே அதே வேகத்தை காட்ட முடிந்தால், ஸ்பெயினுக்கு வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கும்.

ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக, 1998ம் ஆண்டில், உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு கோப்பையை வசப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. இளம் வீரர்கள் நிறைந்த துடிப்பான அணியாக பிரான்ஸ் விளங்குகிறது. 2006ம் ஆண்டில் பெனால்டி ஷூட் அவுட்டில் கோப்பையை பறிகொடு்த்த பிறகு, இறுதிப்போட்டியை எட்டிவிட துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறது இந்த இளம் அணி.

பிரான்ஸ் அணியில், ரபேல் வரேன் முக்கிய வீரராக திகழ்கிறார். மூன்று முறை, சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்தவர். நடுக்கள ஆட்டக்காரரான ரபேல், தனது அணியின் வலுவற்ற தடுப்பு அரணை பாதுகாக்க கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்.

கோப்பையை வெல்லும் வாய்ப்பு உடையவையாக கணிக்கப்பட்டுள்ள ஆறு அணிகள் பட்டியலில், போர்ச்சுகல் கடைசியாக இடம்பெற்றுள்ளது. 2016ல் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றுள்ள இந்த அணி, உலகின் தலைசிறந்த வீரராக கருதப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோவை பெரிதும் நம்பி இருக்கிறது. எனினும், அனுபவம் வாய்ந்த வீரர்கள் அதிகம் இருப்பது பலம்.

இந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சந்தேகமே இன்றி, ரொனோல்டோ தான். கோல் மெஷின் என்றழைக்கப்படும் ரொனால்டோவுக்கு தற்போது 32 வயதாகிறது. ஆனால், இன்னும் பத்தாண்டுகள் ஆடுவதற்கு தெம்பிருக்கிறது என ரொனால்டோ மார்தட்டுகிறார். என்ன செய்கிறார் என்பதை பார்ப்போம்.

போட்டியை நடத்தும் ரஷ்யா, விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், அர்ஜென்டீனாவின் மெஸ்ஸி, பிரேசிலின் நெய்மார் மற்றும் போர்ச்சுகலின் ரொனால்டோ போன்ற அசகாய சூரர்கள் தங்களது நாட்டுக்கு கோப்பையை வென்று தருகிறார்களா, அல்லது கூட்டு முயற்சியால் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற அணிகளில் ஏதேனும் ஒன்று கோப்பையை வெல்லப்போகிறதா என்ற எதிர்பார்ப்பு கோடானு கோடி ரசிகர்களிடையே தவிப்பையும், உற்சாகத்தையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது. எது, எப்படியோ, ஜூலை 15ம் தேதி இரவு வரை உலகை கால்பந்து ஜூரம் ஆட்டி வைக்கப்போவது மட்டும் உறுதி.

ஃபிஃபா சில சுவாரஸ்யம்

போட்டிக்கு தேர்வாகியுள்ள 11 நகரங்களில் எகடெரின்பர்க், கலினிங்கிராட் இடையிலான தூரம் மட்டும் 2,424 கிலோமீட்டர் ஆகும். மாஸ்கோவில் இருந்து இங்கிலாந்தின் லண்டனுக்கு செல்லக்கூடிய தூரமும் இது தான்.

பெரு அணி கடைசியாக 1982 ஸ்பெயினில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் விளையாடியது. அடுத்து வந்த உலகக்கோப்பை போட்டிகளில் வீரர்கள் பற்றாக்குறை மற்றும் பல்வேறு காரணங்களால் பங்கேற்காமல் இருந்து வந்தது. 36 ஆண்டுகளாக உலகக் கோப்பை கால்பந்தில் கலந்து கொள்ளாமல் இருந்த பெரு அணி, 2018 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளது.

மொத்தம் நடக்கும் 64 ஆட்டங்களை நேரிலும், டி.வி., இணையதளம் வாயிலாகவும் உலகம் முழுவதும் 300 கோடி பேர் பார்ப்பார்கள் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இந்த உலக கோப்பை மொத்தம் 11 நகரங்களில் உள்ள 12 ஸ்டேடியங்களில் அரங்கேறுகிறது. தொடக்க மற்றும் இறுதிப்போட்டி மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் நடைபெறும். இது 81 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டது.

கவுரவமிக்க இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்காக ரஷிய அரசாங்கம் ரூ.80 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது.

எகிப்து கோல் கீப்பர் எஸ்சாம் ஐ ஹதாரியின் வயது 45 ஆண்டு 4 மாதங்கள் ஆகும். இந்த உலக கோப்பையில் அவர் எகிப்து அணியில் களம் இறக்கப்பட்டால், உலக கோப்பையில் விளையாடிய மூத்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.

ஆஸ்திரேலிய நடுகள வீரர் டேனியல் அர்ஜானி (19 ஆண்டு 5 மாதங்கள்) இந்த உலக கோப்பையின் இளம் வீரராக வலம் வருகிறார்.

உலக கோப்பையை ஒவ்வொரு அணி வெல்லும் போதும் அந்த அணியின் பயிற்சியாளராக அந்த நாட்டைச் சேர்ந்தவர்களே இருந்துள்ளனர். இந்த உலக கோப்பையில் அது மாறுமா? என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த உலக கோப்பையில் முதல் முறையாக ‘வி.ஏ.ஆர்.’ எனப்படும் வீடியோ உதவி நடுவர்கள் முறை அமல்படுத்தப்படுகிறது. பிரத்யேக அறையில் அமர்ந்து கண்காணிக்கும் இந்த உதவி நடுவர்கள், ஒவ்வொரு போட்டி நடைபெறும் போது, அதன் வீடியோ பதிவுகளை ஒரு நொடி கூட விடாமல் தொடர்ந்து பார்ப்பார்கள். 

களத்தில் நடுவர் ஆட்சேபனைக்குரிய முடிவு வழங்கினாலோ அல்லது தவறுகளை கவனிக்க தவறினாலோ அதை கள நடுவருக்கு தொழில்நுட்ப உதவியுடன் உடனடியாக சுட்டிக்காட்டுவார்கள். அவர் அதை ஆய்வு செய்து, சரியான முடிவை வழங்குவார். இதன் மூலம் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்க முடியும்.

உலக கோப்பை தொடக்க ஆட்டத்தில் ரஷியா (தரவரிசை 70)- சவூதிஅரேபியா (67) அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை தொடக்க ஆட்டத்தில் தரவரிசையில் மிகவும் பின்தங்கிய அணிகள் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

உலகக்கோப்பை கால்பந்து ஜூரம், கால்பந்து ரசிகர்களைத் தொற்றிக் கொண்டுள்ள நிலையில், இந்த போட்டியின் மிக விலை உயர்ந்த வீரராக இங்கிலாந்தை சேர்ந்த ஹேரி கேன் கண்டறியப்பட்டுள்ளார். கிறிஸ்டியன் ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி, நெய்மர் போன்ற பிரபலங்களை பின்னுக்குத் தள்ளி அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

சிஐஇஎஸ் என்ற ஆய்வு நிறுவனம், வீரர்கள் அடித்த கோல்கள், பங்கேற்ற முக்கிய போட்டிகள், அவர்கள் இடம்பெற்றுள்ள லீக் அணி, அவை எட்டிய சாதனை உள்ளி்ட்ட பல்வேறு விவரங்களின் அடிப்படையில், இந்த முடிவை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹேரி கேனின் மதிப்பு 201 மில்லியன் யூரோவாக அதாவது 1591 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

image


பால் ஆக்டோபஸ் போன்று, இந்த முறை கால்பந்து போட்டியில் அணிகளின் வெற்றி - தோல்வியை கணிக்க, அச்சிலி என்ற வெள்ளை பூனையும் தயார் நிலையில் உள்ளது. இதில் வினோதமான விஷயம் என்னவென்றால், இந்த பூனைக்குக் காது கேட்காது என்பதுதான்.

ரஷ்யாவை தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற உள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தும் நாடுகளுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து போட்டியை நடத்தும் என அறிவிக்கப்பட்டது.

கட்டுரை: ஜெசிக்கா

Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share
Report an issue
Authors

Related Tags