பதிப்புகளில்

தமிழ் இணையவாசிகளின் கவனம் ஈர்க்கும் 5 சினிமா விமர்சகர்கள்!

கீட்சவன்
24th Dec 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

தமிழ் சினிமாவின் வர்த்தக வெற்றிகளுக்கு இணையத்தில் குவியும் விமர்சனங்களால் தாக்கம் ஏற்படுவது நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போவது கண்கூடு. அதிக பட்ஜெட், முன்னணி நட்சத்திரங்களை உள்ளடக்கிய படங்கள் மொக்கையாக இருக்கும்பட்சத்தில், அவற்றை குத்திக் குதறுவதும், குறைந்த பட்ஜெட்டில் நல்ல முன்முயற்சியாக வரும் படங்களை போற்றிப் புகழ்ந்து, அவற்றின் வர்த்தக வெற்றிக்கு ஊக்குவிப்பதும் கூட இங்கே நிகழ்கிறது.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை ட்வீட்டாக ட்விட்டரிலும், ஸ்டேட்டஸாக ஃபேஸ்புக்கிலும் பதிந்து வருவது ஒரு பக்கம் என்றால், அவர்களில் ஒருவராக இருந்து, அவர்களின் கவனத்தையே ஈர்க்கக் கூடிய சிரத்தையுடன் செயல்படும் சினிமா விமர்சகர்களும் இணையத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். ஒரு சாதாரண ரசிகரின் பார்வையில் மட்டுமின்றி, விமர்சனத்துக்கே உரிய நுட்பமான வகையிலும் ஒரு படத்தைப் பிரித்து மேய்வதில் இவர்கள் வல்லவர்கள். குறிப்பாக, புதிதாக எழுத, வீடியோ பதிவேற்ற வருவோர் ஊக்கம் பெறுவதற்கு வகை செய்கின்றன இவர்களது முயற்சிகள். அந்த வகையில், இன்றையச் சூழலில் இணையத்தில் கவனம் ஈர்க்கும் 5 சினிமா விமர்சகர்களை இங்கே ஆங்கில அகரவரிசைப்படி பார்ப்போம்.

image


கேபிள் சங்கர்

இணையத்தில் விமர்சன எழுத்துகள் மூலம் வாசக வட்டத்தைப் பெற்றத் திரைத்துறையைச் சேர்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் கேபிள் சங்கர். 'தொட்டால் தொடரும்' என்ற படத்தை இயக்கியவர். கோணங்கள், சினிமா வியாபாரம் உள்ளிட்ட சினிமா சார்ந்த புத்தகங்களை எழுதியவர். சினிமா விமர்சனத்துக்கே உரிய நடையுடன், சாதாரண ரசிகர்களை ஈர்க்கவல்ல எளிமையான மொழியில் எழுதுவது இவரது சிறப்பு. சினிமாவைத் தாண்டி புத்தக விமர்சனங்களையும் எழுதி வருகிறார்.

image


சிறுகதைகள், குறும்படங்கள், சாப்பாட்டுக்கடை என இவர் சினிமாவைக் கடந்து விரிக்கும் தளங்கள் சுவையானவை. எனவே, சினிமா பிரியர்கள் மட்டுமின்றி, இதர வாசகர்களும் அணுக வேண்டிய பல்கலைத் தளமாகவே இவரது வலைதளம் திகழ்கிறது. சினிமா, சமூகம் உள்ளிட்ட பார்வையுடன் கூடிய இவரது 'கொத்து பரோட்டா' என்ற தலைப்பிலான அனுபவப் பதிவுகள் சுவாரசியமானவை. அதில், காண வேண்டிய படங்கள், குறும்படங்கள் உள்ளிட்ட பரிந்துரைகள் தவிர்க்கக் கூடாதவையாக திகழ்கின்றன. மொத்தத்தில், தமிழ் இணையச் சூழலில் ஒரு துறை சார்ந்த தீவிர எழுத்துக்கு உரிய மதிப்பு நிச்சயம் கிடைத்திடும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது இவரது தளம்.

கேபிள் சங்கரின் வலைதளம் , ஃபேஸ்புக் பக்கம், ட்விட்டர்

'ஜாக்கி' சேகர்

இணையத்தில் சினிமா விமர்சகராக பல ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிவந்த 'ஜாக்கி' சேகர் இப்போது யூடியூப் சேனல் மூலம் வீடியோ வடிவில் விமர்சனங்களைப் பகிர்ந்து வருகிறார். ஒரு படத்தைப் பார்க்கும்போது நம் மனதில் தோன்றும் எண்ணங்களை அப்படியே வார்த்தைகளில் இயல்பாகச் சொல்வது இவரது எளிமையான தனித்திறன். தன்னை மிகவும் பாதித்த படங்களையும் காட்சிகளையும் விவரித்து தன்னை மறந்து சிலிர்ப்புடன் பேசுவது என்பது இவரது சினிமா ஈடுபாட்டை காட்டவல்லது. படம் வெளியானவுடன் சுடச் சுட வீடியோ விமர்சனத்தைப் பார்க்க இவரது தளத்தை நம்பி நுழையலாம்.


சினிமா விமர்சனம் மட்டுமின்றி, சினிமா சார்ந்த சர்ச்சைகள், விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்தும் தனது பார்வையைப் பதிவு செய்து அதை வீடியோவாக பதிவேற்றி கவனத்தை ஈர்த்து வருகிறார் 'ஜாக்கி' சேகர். ஒராண்டு காலத்தில் 15 லட்சம் பார்வைகள இவரது ஜாக்கி சினிமாஸ் யூடியூப் தளம் தொட்டிருப்பதே இவரது வெற்றிக்கு சான்று. சினிமாவை ஆரம்ப கட்டத்தில் அணுகும் சாதாரண ரசிகர்களுக்கு நல்ல வழிகாட்டுதல் வழங்கக் கூடிய வகையிலாது இவரது தளம். ஒரு சாதாரண சினிமா பார்வையாளராக இருந்து, சினிமா விமர்சகராக படிப்படியாக உயர்வது எப்படி என்பதையும் இவரது ஆக்கங்கள் மூலம் தன்னம்பிக்கையுடன் கற்கலாம்.

ஜாக்கி சினிமாஸ் யூடியூப் பக்கம், ஃபேஸ்புக் பக்கம்

'கருந்தேள்' ராஜேஷ்

மிக நுட்பமான பார்வை கொண்ட சினிமா விமர்சனங்களை எளிய மொழியில் சாதாரண ரசிகர்களுக்குத் தெளிவு ஏற்படும் வகையில் எழுதுவதில் 'கருந்தேள்' ராஜேஷ் வல்லவர். தனது வலைதளத்தில் முழுமையான விமர்சனங்களையும், ஃபேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது சினிமா குறித்த தகவல்களையும் பதிந்து வருபவர். விமர்சனங்களைத் தாண்டி, இணையத்தில் ரசிகர்களின் சினிமா ரசனையை மேம்படுத்துவதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

image


கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை முக்கியமான படங்களைத் தவறாமல் விமர்சிக்கும் இவர், திரைக்கதை எழுத வழிகாட்டும் 'திரைக்கதை எழுதலாம் வாங்க' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். தன் எழுத்து - சினிமா ஆர்வம் மூலம் அடுத்தகட்டத்தில் முன்னேற்றம் கண்டதிலும் பலருக்கு ஊக்கமாகத் திகழ்கிறார் என்றே சொல்லலாம். இணையத்தில் தொடர்ந்து திரைக்கதை குறித்து தீவிரமாக எழுதி வந்த இவர் இப்போது தமிழ் சினிமாவில் 'திரைக்கதை ஆலோசகர்' என்ற முத்திரையுடன் வலம் வரத் தொடங்கியிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்து கவனம் ஈர்த்த 'நேற்று இன்று நாளை' படத்தில் திரைக்கதை ஆலோசகராக பங்கு வகித்தார். எழுத்தைத் தாண்டி, திரைப்பட மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு பயிற்சி வகுப்புகளையும் அவ்வப்போது நடத்துகிறார். சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா விமர்சனம் எழுத விரும்பும் புதியவர்கள் இவர் தளத்தை நாடுவது நன்மை பயக்கும்.

'கருந்தேள்' ராஜேஷின் வலைதளம் , ஃபேஸ்புக்

பிரசாந்த்

இவர் யூடியூபில் பதிவேற்றும் ஒவ்வொரு விமர்சன வீடியோவுமே லட்சக்கணக்கான பார்வைகளைத் தாண்டுகின்றன. வலைப்பதிவுகளில் விமர்சனங்கள் குவியத் தொடங்கிய காலக்கட்டத்தில், வீடியோ வழியில் சினிமா விமர்சனத்தை வழங்கி கவனம் ஈர்த்தவர்களில் இவர் முதன்மையானவர். நாம் ரசித்த படங்களை நம் நண்பர்களிடம் பகிர்வது போலவே பார்வையாளர் முன்பு விமர்சனத்தை வழங்குவது தனிச் சிறப்பு.


மிகப் பெரிய பட்ஜெட் படங்கள் சரியாக இல்லாதபட்சத்தில் விளாசித் தள்ளுவதும், சின்ன பட்ஜெட்டில் வரும் தரமான படங்களை தன் ரசிகர்களைப் பார்க்குமாறு பரிந்துரைப்பதிலும் பிரசாந்த் தீவிரம் காட்டுவார். 'தமிழ் சினிமா ரிவ்யூ' என்ற பெயரிலான இவரது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்தோர் எண்ணிக்கை 55,000-ஐ நெருங்கிவிட்டதும், ஒட்டுமொத்த பார்வை 1.5 கோடியைத் தொடவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த அளவுக்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்பது இப்போது இவருக்கு யூடியூப் மூலம் வருவாய் கிடைக்கவும் வழிவகுத்துள்ளது. விமர்சகர் பிரசாந்தின் விமர்சனத்தின் மீதே பலரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் விமர்சனங்களை முன்வைப்பது ஒன்றே இவர் தமிழ் இணையச் சூழலில் தவிர்க்க முடியாத சினிமா விமர்சகர் என்பதற்கு சான்று.

பிரசாந்த் நடத்தும் யூடியூப் சேனல் , ஃபேஸ்புக்

ரஹ்மான்

இணையத்தில் தமிழை முழுமையாக படிக்க இயலாத - ஆங்கிலப் புலமை மட்டுமே அதிகம் உள்ள இளம் தலைமுறையினருக்காகவே சினிமா விமர்சனம் எழுதி வரும் இளைஞர் கலியூர் ரஹ்மான். எளிமையான ஆங்கிலத்தில் இவர் எழுதும் தமிழ் சினிமா விமர்சனங்கள், நிச்சயம் ஒரு படத்தை நம்பிப் பார்க்கப் போகலாமா வேண்டாமா என்ற குழப்பத்தை நீக்கிவிடும். ஃபேஸ்புக்கில் Box Office 'Boss' என்ற இவரது சினிமா விமர்சனப் பக்கம் ஆயிரக்கணக்கான விருப்பதாரர்களைக் கொண்டுள்ளது.

image


சினிமா விமர்சனம் இல்லாத, புதுப் படங்கள் இல்லாத நேரத்தில், சினிமா தொடர்புடைய மீம்களைக் கொண்டு இந்தப் பக்கம் நிரம்பி வழிவது பொழுதுபோக்குக்கு தொடர்ந்து தொடர்பில் இருக்கத் தூண்டுகிறது. இயன்ற வரையில், படம் வெளியான அன்றோ அல்லது மறுநாளோ விமர்சனப் பதிவுகள் - நட்சத்திர மதிப்பீட்டுடன் பதிவேற்றம் செய்வதில் ரஹ்மான் சிரத்தையுடன் செயல்பட்டு வருகிறார். ஒரு படத்தை நுட்பமாக மட்டும் அணுகாமல், சாதாரண ரசிகர்களுக்குத் தேவையான மேலோட்டப் பார்வையையும் புறக்கணிக்காமல் கவனம் செலுத்துவது இவரது மற்றொரு சிறப்பு.

ரஹ்மானின் ஃபேஸ்புக் பக்கம்

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக