பதிப்புகளில்

தினமும் ஆயிரம் பேருக்கு உணவளிக்கும் ஹைதராபாத் இளைஞர்!

15th Mar 2018
Add to
Shares
2.7k
Comments
Share This
Add to
Shares
2.7k
Comments
Share

வழக்கமாக கல்லூரி மாணவர்கள் இரவில் வெகு நேரம் கண் விழித்திருப்பார்கள். காலை அவசர அவசரமாக கண் விழிப்பார்கள். காலை உணவை அவசர அவசரமாகவே சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கு விரைவார்கள். ஆனால் மொஹமத் சுஜத்துல்லா சற்றே மாறுபட்டவர்.

அவர் ஒவ்வொரு காலையும் முதலில் சுமார் 1,000 பேருக்கு காலை உணவை வழங்குகிறார். பிறகு அவர் சாப்பிட்டுகிறார். அதன் பின்னரே அவரது நாள் துவங்குகிறது.

image


சுஜத்துல்லா அதிகாலை எழுகிறார். ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்படுகிறார். ஹைதராபாத்தில் உள்ள கோட்டி மகப்பேறு மருத்துவனையை அடைகிறார். அங்கு சுமார் 300 ஏழை நோயாளிகள் உணவிற்காக வரிசையில் காத்திருக்கின்றனர். 

பதினைந்து நிமிடங்களில் சுஜத்துல்லா ஒரு சில தன்னார்வலர்களுடன் இணைந்து சூடான உப்புமாவை விநியோகிக்கிறார். அதன் பிறகு அடுத்த இடத்திற்கு விரைகிறார். அது நிலோஃபர் குழந்தைகள் மருத்துவமனை. இங்கு சுமார் 700 பேர் அரசு மருத்துவமனைக்கு வெளியே நடைபாதையில் இரவைக் கழித்துவிட்டு வெறும் வயிற்றோடு காத்திருக்கின்றனர்.

”அரசு மருத்துவமனைக்கு வரும் 90 சதவீத மக்கள் சிறிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவோ மற்றும் அருகாமை கிராமத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் வறுமையில் வாடுபவர்கள். அவர்களுக்கு போதுமான வசதி கிடைக்காததால் சாலையில் படுத்து உறங்கி காலை உணவும் இல்லாமல் தவிக்கின்றனர். நான் அவர்களுக்கு இலவசமாக உணவளிக்க விரும்பினேன். இவர்களுக்கு நெய் சேர்த்த உப்புமாவை விநியோகிக்கத் துவங்கினேன்,” என்றார் சுஜத்துல்லா.

கடந்த 485 நாட்களாக இது அவரது வழக்கமான பணியாகிவிட்டது. மோசமான வானிலை, உடல்நலம் பாதிப்பு அல்லது எந்த வகையான எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்பட்டாலும், ஒவ்வொரு நாள் காலையும் இந்த இரண்டு இடங்களுக்கும் சென்று அவர் உணவளிப்பது மட்டும் தவறியதில்லை.

image


குறிப்பிடத்தக்க தருணம்

பள்ளியில் சராசரி மாணவரான சுஜத்துல்லாவிற்கு ஆரம்பத்தில் கற்றல் குறைபாடு இருந்தது. ஹைதராபாத்தின் சுல்தான் உல் உலூம் கல்லூரியில் மருந்தியல் பிரிவில் இளங்கலை படிப்பை மேற்கொண்டார். சுஜத்துல்லா 25 பேர் கொண்ட கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்தார். இதனால் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் இருக்கும் மகிழ்ச்சியை அனுபவித்துள்ளார். ஆனால் கல்லூரியில் தேர்ச்சி பெற்றதும் 10 பேருக்கு உணவளிக்க தீர்மானித்து உணவளித்தபோது நலிந்த மக்களுடன் பகிர்ந்துகொள்வதால் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவித்தார்.

சுஜத்துல்லா தேர்வை வெற்றிகரமாக முடித்ததும் அவரது திட்டத்தை நிறைவேற்ற தீர்மானித்தார். செகந்திராபாத் ரயில் நிலையத்தை அடைந்து உணவை விநியோகித்தபோதுதான் பசியோடு இருக்கும் மக்களுக்கு உணவு எவ்வளவு அவசியமானது என்பதை புரிந்துகொண்டார்.

”ஒரு குழந்தை என் சட்டை பிடித்து இழுத்தது. மற்றவர்கள் அமைதியாக காத்திருந்தனர். பசி என்றால் என்ன என்பதை அவர்கள் கண்களில் உணர்ந்தேன். அவர்களுக்கு உணவளித்த பிறகு நான் அடைந்த திருப்தியை அதுவரை உணர்ந்ததில்லை,” என நினைவுகூர்ந்தார் சுஜத்துல்லா.

வீடு திரும்பினார். பசியோடு இருப்பவர்களுக்கு உணவு விநியோகிக்க தனது மாத வருமானத்தில் இருந்து ஒரு நாள் வருவாய்த் தொகையை ஒதுக்குவது குறித்து குடும்பத்தினரிடம் பேசி சம்மதிக்க வைத்தார். அவரது நோக்கத்தில் இருந்த உறுதியைக் கண்டு அவரது குடும்பத்தினர் அவருக்கு உதவ முன்வந்தனர். வாரத்திற்கு மூன்று நான்கு முறை சுமார் 150 பேருக்கு உணவு விநியோகிக்கத் துவங்கினர்.

”வசதியாக வாழ்பவர்கள் பசியாலும் ஊட்டச்சத்து குறைபாட்டினாலும் வாடும் மக்களின் வலியை புரிந்துகொள்வது கடினம். நாம் உண்ணும் உணவை நலிந்த மக்களுக்கு வழங்கவேண்டும் என்பதே என் நோக்கம். இதை உறுதி செய்ய ஹைதராபாத்தில் உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டலில் இருந்து சுத்தமான நெய்யினால் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து மிகுந்த உணவை பெற்றோம்,” என்றார் சுஜத்துல்லா.

தற்போது தினமும் 3,500 ரூபாய் செலவிட்டு ஒவ்வொரு நாளும் மருத்துவமனை வளாகங்களை சுற்றியுள்ள 700-1,000 பேருக்கு உணவளிக்கிறார். கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்கிறார். குளிர் காலத்தில் போர்வை விநியோகிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

image


மைல்கல்கள்

அவரது முயற்சியை மேலும் பெரியளவில் எடுத்துச்செல்ல ’ஹ்யூமானிட்டி ஃபர்ஸ்ட் ஃபவுண்டேஷன் ஹைதராபாத்’ என்கிற லாபநோக்கமற்ற, அரசுசாரா நிறுவனத்தை 2016-ம் ஆண்டு நிறுவினார். இதன் மூலம் உணவு வழங்கும் முயற்சியுடன் பல புதிய ப்ராஜெக்டுகளையும் துவங்கினார்.

’ப்ராஜெக்ட் ட்ரான்ஸ்ஃபர்மேஷன்’ என்கிற முயற்சி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இது தெருக்களில் ஆதரவின்றி இருப்போர் அல்லது ஹைதராபாத்தின் அசுத்தமான நடைபாதைகளில் வசிப்போரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகும். நடைபாதையில் வசிப்போரின் வாழ்க்கையை சீரமைத்து அவர்களது மறுவாழ்விற்குத் தேவையான பண உதவியும் பொருள் உதவியும் அளிக்கிறார் சுஜத்துல்லா.

”அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி நம்பிக்கை அளிக்கிறோம். முதியோர் இல்லங்களுடன் இணைந்து செயல்படுகிறோம். அவர்கள் சம்மதித்தால் காவல் துறை அனுமதியுடன் பராமரிப்பு இல்லங்களுக்கு மாற்றுகிறோம்,” என்றார் சுஜத்துல்லா.

நன்கொடை அளிப்போர் மற்றும் தன்னார்வலர்களின் ஆதரவுடன் குடிசைப்பகுதிகளில் மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்து மருத்துவ ஆலோசனைகளையும் இலவச மருந்துகளையும் வழங்குகின்றனர். அனாதை இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், ரேஷன் விநியோகம் உள்ளிட்டவை ஹைதராபாத் மற்றும் அதன் சுற்று வட்டார மக்களின் நலனுக்காக இந்நிறுவனம் மேற்கொள்ளும் இதர நடவடிக்கைகளாகும்.

சமூகம் சார்ந்த பல்வேறு ப்ராஜெக்டுகளுக்காக கூட்டுநிதி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. சேவை மற்றும் பெருந்தன்மையை நிறைந்த கலாச்சாரத்தை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.

சுஜத்துல்லா தடைகளைக் கண்டு சற்றும் மனம் தளராமல் உறுதியுடன் செயல்படுகிறார். வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கும் சவால்களை உறுதியுடன் எதிர்கொண்டு சுயநலமின்றி அனைவரும் மக்களுக்கு சேவை செய்ய இவர் சிறந்த உதாரணமாக விளங்குகிறார்.

ஆங்கில கட்டுரையாளர் : குய்னீ மஹாஜன் | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
2.7k
Comments
Share This
Add to
Shares
2.7k
Comments
Share
Report an issue
Authors

Related Tags