பதிப்புகளில்

அஞ்சேல் 7 | தெரிவில் கவனம் கொள் - நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் [பகுதி 2]

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் பகிரும் அனுபவக் குறிப்புகளின் நிறைவு பகுதி...

13th Dec 2017
Add to
Shares
135
Comments
Share This
Add to
Shares
135
Comments
Share

(தமிழ்த் திரைத்துறையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தாங்கள் எதிர்கொண்ட சவால்களையும், மேற்கொண்ட போராட்டங்களையும் பகிரும் தொடர்.)

எனக்கு சினிமா வாய்ப்புகள் எளிதாக கிடைத்துவிடவில்லை. கிடைத்த சின்னச் சின்ன வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தியதன் விளைவாக போதுமான அனுபவமும் அடித்தளமும் கிடைத்தது.
image


கல்லூரிப் படிப்பு முடிந்த தருவாயில், சினிமா பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது. பிறந்தது வளர்ந்தது எல்லாமே தி.நகர்தான். கோடம்பாக்கம், வடபழனி பகுதியே தமிழ் சினிமாவின் மையம் என்பதுகூட தெரியாது. அந்தக் காலக்கட்டத்தில், முதன்முதலாக சினிமா வாய்ப்புத் தேடும்போது, 'உப்புமா கம்பெனிகள்' என்று சொல்லக் கூடிய போலியான சினிமா நிறுவனங்களையே எதிர்கொள்ள நேரிடும். பெரிய நிறுவனங்களில் உள்ளே போய் எப்படி வாய்ப்பு கேட்பது என்பதும் தெரியாது. தினமும் ஐந்தாறு நிறுவனங்களின் படியேறி வாய்ப்பு கேட்பேன். என்னுடன் துணைக்கு ஒவ்வொரு இடத்துக்கும் என் அண்ணன் வருவார். ஒவ்வொரு சினிமா கம்பெனியிலும் போட்டோஸ் கொடுப்போம். 

"எங்கள் படத்தில் நீங்கள்தான் கதாநாயகி. படப்பிடிப்புத் தொடங்கும்போது அழைக்கிறோம்" என்றெல்லாம் சொல்வார்கள். அதன்பின், அவர்களிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்புகூட வராது.

அந்தச் சூழலில், நடன இயக்குநர் தாரா மாஸ்டரின் பரிந்துரையின் பேரில் 'அவர்களும் இவர்களும்' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 'அழகி' படத்தில் நடித்த சதிஷ் கதாநாயகன். அதுதான் என் முதல் படம். அதன்பிறகு, எஸ்.ஏ.சந்திரசேகரின் 'சட்டப்படி குற்றம்' படத்தில் ஒரு பாடலிலும், ஒரு காட்சியிலும் ஹரிஷ் கல்யாணுடன் நடித்தேன். பிறகு 'உயர்திரு 420', 'ஆச்சரியங்கள்' என குறைந்த பட்ஜெட்டில் உருவான நான்கைந்து படங்களில் நடித்தேன்.

சரி, பெரிய நிறுவனங்களிடம் வாய்ப்புக் கேட்கலாம் என்று போய் நின்றாலோ அல்லது ஓரளவு பிரபலமான இயக்குநர்களைச் சந்தித்தாலோ, "நீங்கள்லாம் ஹீரோயின் மெட்டீரியலே இல்லை. அக்கா, தங்கச்சி, அண்ணி கேரக்டர் வேணுன்னா ட்ரை பண்ணுங்க" என்றுச் சொல்வார்கள். அப்போது மன அழுத்தம் கூடவே செய்யும். 'பேசாம சீரியலுக்கே போயிடுவோம்' என்றுகூட நினைத்தேன்.

அப்போதுதான், 'அட்டக்கத்தி'யில் ஒரு துணைக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான ஆடிஷனுக்கு வரச் சொன்னார்கள். 'பரவாயில்லை, கடைசியாக இதைச் செய்துபார்ப்போம்' என்று நானும் சென்றேன். அமுதா கதாபாத்திரத்துக்கு இயக்குநர் ரஞ்சித் என்னைத் தேர்வு செய்தார். அந்தப் படம் வெற்றி பெற்றது. என் கதாபாத்திரமும் கவனிக்கப்பட்டது. அப்போது நான் புரிந்துகொண்ட ஒரு விஷயம்:

சினிமாவில் தடம் பதிப்பதற்கு, சின்னச் சின்ன படங்களில் பெரிய கதாபாத்திரங்கள் செய்வதைவிட, பெரிய படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதே சிறப்பு.
image


பின்னர், 'ரம்மி' படத்துக்காக பாலகிருஷ்ணன் சாரிடம் இருந்து வாய்ப்பு வந்தது. 'நீங்கள்தான் ஹீரோயின்' என்று உறுதியாகச் சொன்னார். ஆனால், ஒரு வாரம் கழித்துப் பார்த்தால், அப்போது பிரபலமாக இருந்த ஒரு நடிகை 'நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்மி-யில் நடிக்கிறேன்' எனும் விதமாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதைப் பார்த்து நான் செம்மயா காயப்பட்டேன். 'என்னடா இது... எவ்ளோ ட்ரை பண்ணியும் ஒரு சரியான வாய்ப்பு அமைய மாட்டேங்குதே. இனிமே சினிமாவே வேணாம்' என்று ரொம்பவே கவலைப்பட்டேன்.

சில நாட்கள் கழித்து இயக்குநர் பாலகிருஷ்ணன் சாரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நான் எடுக்கவே இல்லை. எந்த அளவுக்கு விரக்தியின் விளிம்பில் இருந்திருந்தால் அப்படி செய்திருப்பேன் என்று பார்த்துக்கொள்ளுங்கள். மீண்டும் அழைத்ததால் அவரிடம் பேசினேன். உடனே புறப்பட்டு அலுவலகம் வரச் சொன்னார். 'நான்தான் உங்கள் ப்ரோஜக்டில் இல்லையே, அப்புறம் ஏன் சார் கூப்பிடுறீங்க?' என்றேன். 'நீங்க புறப்பட்டு வாங்க... பேசிக்கலாம்' என்றார். சரி, மரியாதை நிமித்தமாக சந்திக்க சென்றேன். "நீங்கதான் இந்தப் படத்துல விஜய் சேதுபதிக்கு ஜோடியா நடிக்கிறீங்க. இது உறுதி. எனக்கு உடனே கால்ஷீட் வேணும்" என்றார்.

'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' படங்களின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் படம் அது. அவர் அப்போது வளர்ந்து வரும் நடிகராகவே இருந்தார். எனவே, பிரபல கதாநாயகிகள் 'ரம்மி'யில் அவருக்கு ஜோடியாக நடிக்க முன்வரவில்லை. அந்தச் சூழலில், எனக்குக் கிடைத்த மிக முக்கிய வாய்ப்பு என்பதால் நான் உற்சாகத்துடன் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டேன்.

'ரம்மி'க்குப் பிறகு 'பண்ணையாரும் பத்மினியும்' வாய்ப்பு கிடைத்தது. முதலில் அந்தப் படத்துக்காக வேறு இருவரை நாடினர். யாரும் சரியாகப் பொருந்தவில்லை. அதன்பின், வேறு வழியே இல்லாமல் படப்பிடிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு என்னிடம் இயக்குநர் அருண் என்னைத் தெரிவு செய்தார். 'ரம்மி' படத்தில் என் நடிப்புத் திறனை விமர்சகர்கள் வெகுவாகப் பாராட்டினர். 'பண்ணையாரும் பத்மினியும்' படமே விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. என் திரை வாழ்க்கையில் இவ்விரண்டுமே மிக முக்கியமான படங்கள் ஆகின. 'திருடன் போலீஸ்' வர்த்தக ரீதியில் நல்ல வெற்றி பெற்றதும் எனக்கு உத்வேகம் தந்தது.

image


யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காமல், நம் எண்ணத்தை சுத்தமாக வைத்துக்கொண்டால் நமக்குக் கிடைக்கக் கூடிய வெற்றிகள் தாமதம் ஆனாலும் நிச்சயம் வந்து சேர்ந்துவிடும் என்பதை உணர்ந்தேன்.

'காக்கா முட்டை'க்கு வருவோம். 'பண்ணையாரும் பத்ம்னி'யும் வெளிவர இருந்த நேரத்தில்தான் 'காக்கா முட்டை'க்கு என்னை அணுகினர். 'ரெண்டு பசங்களுக்கு அம்மாவாக நடிக்கணுமா?' என்ற குழப்பத்தில் இருந்தேன். நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குநர் அருணும் 'காக்கா முட்டை'யில் நடிக்குமாறு என்னை அறுவுறுத்தினர். 'விண்ட்' என்ற குறும்படம் மூலம் இயக்குநர் மணிகண்டனை விஜய் சேதுபதிக்கு ஏற்கெனவே தெரியும். அந்த அனுபவத்தின் அடிப்படையில், "மணிகண்டன் நல்ல இயக்குநர். அவர் தப்பா கைடு பண்ணமாட்டார். அவரை நம்பி நடிக்கலாம்" என்று தைரியமளித்தார். அதனால் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். எனக்கு மிகப் பெரிய திருப்புமுனைப் படமாகவும் அது அமைந்தது.

அதன் தொடர்ச்சியாக, 'மனிதன்', 'தர்மதுரை' முதலான படங்களும் எனக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்தன. இயக்குநர் மணிகண்டனின் 'குற்றமே தண்டனை'யிலும் என் நடிப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கு உரிய சவாலான கதாபாத்திரம் அமைந்தது. உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும், 'காக்கா முட்டை'க்கு அப்படியே நேரதிரான கதாபாத்திரம் அது. இந்தியில் 'டாடி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல், மலையாளத்தில் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான சத்தியன் அத்திகாடு இயக்கத்தில் 'ஜோமோன்டே சுவிசேஷங்கள்' படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின், நிவின் பாலியின் 'சகாவு' பட வாய்ப்பு தேடி வந்தது. அதிலும் எனது நடிப்புத் திறன் வெகுவாக அங்கே பேசப்பட்டது.

நமக்குக் கிடைக்கின்ற வாய்ப்புகளை மிகுந்த ஈடுபாட்டுடன் நேர்த்தியுடன் செய்து முடித்தால், நமக்கு கிடைக்கப் போகும் வாய்ப்புகள் அனைத்துமே தாமாகவே நல்ல வாய்ப்பாக அமைந்துவிடும்.

அந்த வகையில், இப்போது இயக்குநர் வெற்றி மாறனின் 'வடசென்னை', கெளதம் வாசுதேவ் மேனனின் 'துருவ நட்சத்திரம்', மணிரத்னத்தின் அடுத்த படம் என அடுத்தடுத்து மனநிறைவு தரக்கூடிய படைப்புகளில் பங்காற்றுகிறேன்.

image


ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, நான் சினிமாவுக்குள் நுழைந்தபோது இருந்த தமிழ்த் திரைப்படத் துறையோடு ஒப்பிடும்போது, இப்போது நிறையவே நல்ல மாற்றங்களைக் கண்கூடாகப் பார்க்கிறேன். ஆனால், சம்பள விஷயத்தில் இங்கே பாகுபாடு காட்டப்படுவது மட்டுமே உறுத்தலாக இருக்கிறது. உள்ளூர் நடிகைகளுக்கு ஓர் ஊதிய விகிதமும், வெளிமாநிலங்களிலும் பாலிவுட்டில் இருந்து வருபவர்களுக்கும் வேறு விதமான ஊதிய விகிதமும் நிர்ணயிக்கப்படுகிறது. நம்மூர் பெண்களுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கு மூன்று, நான்கு மடங்குகள் சம்பளம் அதிகம் தரப்படுகிறது. 

'அவர்களைவிட நாம் எந்த விதத்தில் குறைந்துவிட்டோம்?' என்ற கோபம் அவ்வப்போது எழுவது உண்டு. சம்பளம் மட்டுமல்ல, மேக்கப் தொடங்கி எல்லா விதமான வசதிகள், தேவைகள் வரை அனைத்துமே அவர்களுக்கு உரிய முறையில் சரியாக செய்வார்கள். எங்களைப் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள். எல்லாவற்றுக்குமே போராட வேண்டிய நிலைதான் எங்களுக்கு. இந்தப் போக்கு நிச்சயம் மாற வேண்டும். தமிழகத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணாலும் எதுவும் சாத்தியமே என்று நிரூபிப்பதற்காக மற்ற மொழிகளில் கிடைக்கும் நல்ல வாய்ப்பையும் பயன்படுத்துகிறேன்.

எல்லாவாற்றுக்கும் மேலாக, நான் ஒரு சாதாரண பெண்தான். சென்னையில் இன்றும்கூட சாதாரணமாக சுற்றித் திரிவேன். மெரினா கடற்கரையிலும் என்னை நீங்கள் பார்க்கலாம். "என்னங்க நீங்க ஹீரோயின் மாதிரியே இல்லையே... சாதாரண ஒரு பொண்ணு மாதிரி சுத்திட்டு இருக்கீங்களே"ன்னு சிலர் சிரித்துக்கொண்டே சொல்வார்கள். என்னைப் பார்க்கும் தாய்மார்களில் சிலரோ "உன்னை மாதிரிதாம்மா எனக்கு ஒரு மருமகள் வேணும்" என்று கன்னத்தைக் கிள்ளுவார்கள். மக்களிடம் இந்த அளவுக்கு என்னை நெருங்க வைத்திருப்பதே என் கதாபாத்திர தெரிவுதான். அதில் இன்னும் இன்னும் கூடுதலாக கவனத்துடன் இருக்க வேண்டும் என்ற பொறுப்பை உணர்கிறேன்.

அன்று... கோடம்பாக்கத்தில் சினிமா வாய்ப்புகளுக்காக நிறையவே நடந்திருக்கிறேன். இன்று... "நான் உருவாக்கிய கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்தக் கூடியவர் நீங்கள்தான். உங்கள் தேதிக்காக காத்திருப்பதில் பாதகமில்லை," என்கிறார் ஓர் இயக்குநர். இவ்விரண்டுக்கும் இடையே நான் கடந்து வந்த பாதையை உங்களிடம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி.

[நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ்: தமிழ் சினிமாவில் 2010-ம் ஆண்டு அடியெடுத்து வைத்து, 2012-ல் வெளியான 'அட்டகத்தி'யில் அமுதா எனும் கதாபாத்திரம் மூலம் கவனிக்கவைத்தார். 'ரம்மி', 'பண்ணையாரும் பத்மினியும்' மூலம் ஈர்த்தார். 'காக்க முட்டை'யில் இரு சிறுவர்களின் தாயாக நடித்து வியப்பில் ஆழ்த்தினார். நாயகியாக மட்டுமின்றி உறுதுணைக் கதாபாத்திரங்களிலும் தயங்காமல் நடித்து முத்திரைப் பதித்து வருபவர். மலையாளத்தில் நிவின் பாலியுடன் 'சகாவு' படத்தில் அசத்தினார். இந்தியிலும் 'டாடி' மூலம் தடம் பதித்தார். 16 வயது டீன் முதல் 60 வயது ஆளுமை வரை எந்தக் கதாபாத்திரத்தையும் நம் கண்முன்னே நிறுத்தும் வல்லமை கொண்டவர். குடிசைவாசியாக இருந்தாலும் சரி, அமெரிக்கா ரிட்டர்னாக இருந்தாலும் சரி, கச்சிதமான நடிப்பாற்றலால் அப்படியே தன்னைப் பொருத்திக்கொள்பவர். இப்போது 'துருவ நட்சத்திரம்', 'வடசென்னை', மணிரத்னத்தின் அடுத்த படம் என முக்கியமான படைப்புகளில் தீவிரம் காட்டி வருபவர்.]

முந்தைய அத்தியாயம்: அஞ்சேல் 6 | பரிதாபம் தவிர் - நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் [பகுதி 1]

அஞ்சேல்... தொடரும்...

Add to
Shares
135
Comments
Share This
Add to
Shares
135
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக