பதிப்புகளில்

'டீச் ஃபார் இந்தியா'வின் கதையும், இளம் ஆசிரியர் அனூப்பின் பெருங்கனவும்!

கீட்சவன்
9th Sep 2015
Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share
ஒரு பெற்றோரைப்போல், ஓர் அண்ணனைப்போல் என் குழந்தைகளை நான் நேசிக்கிறேன். இப்போது அவர்கள்தான் என் உலகம். அவர்கள் அனைவரையும் பொதுத் தேர்வில் வெற்றி வாகை சூடவைக்கவே இங்கே இருக்கிறேன்.
ஒரு மாணவர் உற்சாகமாக வாசித்து மகிழ உதவும் அனூப் (இடது)

ஒரு மாணவர் உற்சாகமாக வாசித்து மகிழ உதவும் அனூப் (இடது)


ஏழைக் குழந்தைகள் நலனில் அக்கறை மிகுந்த 'டீச் ஃபார் இந்தியா' (Teach For India) கல்வி இயக்கத்தின் முன்னாள் மாணவரான அனூப் பாரிக், 2010-ல் தனது ஃபெல்லோஷிப்பை முடித்தார். பின்னர், டீச் ஃபார் இந்தியாவில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்ட அவர், இப்போது மும்பையின் கோவண்டி குடிசைப் பகுதியில் உள்ள குறைந்த வருவாய் ஈட்டும் கீதா விகாஸ் பள்ளியில் முழு நேர ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருடனான சந்திப்பு விவரம் இதோ...

டீச் ஃபார் இந்தியாவுடன் இணைந்தது எப்படி?

அனூப்: ஓஹையோவில் காலேஜ் ஆஃப் வூஸ்டரில் அகாடெமிக் கவுன்சலராக பணியாற்றி வந்தேன். அப்போது, டீச் ஃபார் அமெரிக்கா மற்றும் டீச் ஃபார் இந்தியாவைச் சேர்ந்த நண்பர்களின் தூண்டுகோளில், டீச் ஃபார் இந்தியா ஃபெல்லோஷிப்பில் சேர்ந்தேன். இந்தியாவைத் தேர்ந்தெடுத்தில் மிக எளிதான காரணங்கள் உள்ளன. இங்குதான் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம். இங்குதான் தேவை அதிகம். உலகில் வேறு எங்கும் ஆசிரியர் பணி மேற்கொள்வது குறித்து யோசித்ததே இல்லை.

டீச் ஃபார் இந்தியாவின் கற்பித்தல் முறை பற்றி நீங்கள் அறிந்துவைத்திருப்பீர்கள். உங்களை இணைத்துக்கொண்ட பிறகு நடைமுறையில் எந்த அளவுக்கு வித்தியாசமாக இருந்தது?

ஆசிரியப் பணியில் நான் எந்தவித எதிர்பார்ப்பையும் வைத்துக்கொள்ளவில்லை. நான் மாணவனாக இருந்தபோது, ஆசிரியர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால், அது நிறைவேறுவதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பதை உணர முடிந்தது. ஓர் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நான் எதிர்பார்த்தைப் போல ஒழுங்கற்ற பள்ளியாக இருக்கவில்லை. பல நேரங்களில் எல்லாம் சரியாகவே இருந்தன. கற்பித்தலில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். ஆனால், நான் கணித்த அளவுக்கு கல்வி முறை செயலற்ற தன்மையுடன் காணப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

உங்கள் நண்பர்களில் பலரும் அதிக சம்பளம் உள்ள வேலைகள், ஆடம்பரமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த நிலையில், நீங்கள் சிலவற்றை இழந்துவிட்ட உணர்வு ஏற்பட்டுள்ளதா? உங்களது இந்தத் தெரிவை நண்பர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

அதிக சம்பளம் கிடைக்கும் வேலை, ஆடம்பர வாழ்க்கை எல்லாமே மதிப்பு மிக்க செயலைத் தேர்ந்தெடுக்கும்போது ஒன்றும் இல்லாமல் போய்விடும். அவை எல்லாம் அடிப்படைத் தேவை அல்ல. அதேநேரத்தில், என்னால் இருப்பதைக் கொண்டு நிம்மதியான வாழ்க்கையை அணுக முடிகிறது. ஆடம்பரத்தைத் தவிர்ப்பதால் எளிய வாழ்க்கையில் பொருந்திப்போவது மிக எளிதாகிவிடுகிறது. என் குடும்பத்தில் உள்ளவர்களில் சிலர் ஆசிரியர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களே அடுத்து வாழ்க்கையில் என்ன செய்யப்போகிறார் என்று அவ்வப்போது கேட்கின்றனர். ஓர் ஆசிரியராக இருப்பது நம் சமூகத்தில் மதிப்புமிக்கதாகவே கருதுகிறேன்.

தனது மாணவர்களுடன்  இளம் ஆசிரியர் அனூப்

தனது மாணவர்களுடன் இளம் ஆசிரியர் அனூப்


உங்கள் பள்ளி மாணவர்கள் பற்றியும், அவர்களது சவால்கள் குறித்தும் சொல்லுங்களேன்.

ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒவ்வொரு திறமை நிறைந்திருக்கிறது. இந்தச் சமூகத்தில் இருந்து வரும் குழந்தைகள் தங்களது அன்றாட வாழ்க்கைச் சூழலால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடும் அவர்கள், தங்களைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள வலையில் இருந்து மீள முயற்சிக்கிறார்கள். சில நேரங்களில் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக சட்டத்துக்குப் புறம்பான வேலைகளைச் செய்ய நேரிடுகிறது. அவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கவில்லை என்பதால், அடுத்து செய்வதறியாது தவிக்கின்றனர்.

கல்வி முறையில் எந்த மாதிரியான பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது?

பள்ளி அளவில் இருந்து அரசுக் கொள்கைகள் வரை அனைத்து நிலைகளிலுமே பிரச்சினைகள் மலிந்துள்ளன. நல்ல கொள்கைகளோ நடைமுறை சாத்தியமற்றதாகவும், நடைமுறைத் தீர்வுகளோ கொள்கைகளின் ஆதரவின்றியுமே காணப்படுகின்றன. அனைத்து நிலைகளிலும் பங்கு வகிக்கும் எல்லாருமே ஒருங்கிணைந்து, சமமான கல்வி என்ற ஒற்றை இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். ஒட்டுமொத்த கல்வி அமைப்புக்குமே முதுகெலும்பாக இருக்கின்ற ஆசிரியர்களுக்கோ பெரும்பாலும் குறைந்த ஊதியமே தரப்படுகிறது.

இதுவரை நீங்கள் கற்றுக்கொண்டதில் மிகப் பெரியது எது?

பொறுமை. எனக்கு பொறுமையைக் கற்றுக்கொடுப்பதே அவர்கள்தான். குழந்தைகளைப் போல் வேறு யாராலும் சோதிக்க முடியாது. இந்தக் குழந்தைகளின் போராட்டச் சூழலை என்னால் மனபூர்வமாக புரிந்துகொள்ள முடிகிறது. அதேபோல், மாற்றத்தை உருவாக்குவதற்காகவும் பொறுமை காக்க கற்றுக்கொண்டேன். ஒரே நாளில் மாற்றத்தை உண்டாக்கிவிட முடியாது. தோல்விகள் வந்தாலும் மாற்றத்தை நோக்கி நம்பிக்கையுடன் சரியானதை தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும்.

உங்களுக்குத் தூண்டுகோலாய் இருப்பது?

குழந்தைகள். கல்வி மீதான அவர்களின் விருப்பம், தன்னைச் சுற்றியுள்ளவை பற்றி கேள்வி கேட்கும் திறன், புதிய விஷயங்கள் செய்வதற்கு வெளிப்படுத்தும் எல்லையற்ற ஆற்றல். இவைதான் என்னை மென்மேலும் தாக்கத்தை ஏற்படுத்துபவை.

உங்களின் எதிர்கால திட்டம் என்ன?

என் வாழ்நாள் முழுவதுமே ஆசிரியப் பணியாற்றுவது என்று தீர்மானித்துள்ளேன். என் வகுப்பறை அனுபவங்களை வைத்து உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நான் இப்போதைக்கு கற்றுக்கொண்டிருக்கிறேன்.

உங்கள் பெருங்கனவு என்ன?

ஓர் ஆசிரியர் என்ற முறையில், நம் நாடு இப்போது இருக்கும் சூழலை வைத்துப் பார்க்கும்போது தோல்வி நிலையைத்தான் உணர முடிகிறது. நம் சமூகத்துக்கு மனித வாழ்க்கைக்குமான மிக முக்கியத் தேவைகளில் கவனம் செலுத்த தவறிவிட்டோம் என்றே நினைக்கிறேன். மருத்துவ சேவைகள், கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதலானவையே அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டிய துறைகள். ஆனால், புல்லட் ரயில்கள், நிலக்கரிச் சட்ட மாற்றங்கள், ராணுவத்தை நவீனப்படுத்துதலில்தான் நம் அக்கறை மேலோங்கியிருக்கிறது. பெருங்கனவு குறித்து பேசுவதோ விவரிப்பதோ கடினமான ஒன்று. ஓர் ஆசிரியர் என்ற முறையில், நம் சமூகத்தில் கல்வி முதலான அடிப்படைத் தேவைகளின் மீது கவனம் குவியவைப்பதையே மிகப் பெரிய சாதனையாக கருதுகிறேன்.

ஒருநாள் அனைத்துக் குழந்தைகளுமே தரமான கல்வியைப் பெறுவர் என்பதே டீச் ஃபார் இந்தியாவின் ஒற்றை இலக்கு. நாம் ஒருமித்து போராடினால் இந்த இலக்கு எட்டத்தக்கதே என்கிறார் அனூப்.

நம் குழந்தைகளுக்கு முழுமையான அதிகாரமும், சுதந்திரமும் கிடைக்கச் செய்வதுதான் அனூப் பார்வையில் மிகப் பெரிய சாதனை. நாளைய குடிமக்கள் நல்ல மனிதர்களாக உருவெடுப்பார்கள் என்பதில் அவருக்கு நம்பிக்கை உண்டு. தன்னால் இயன்றவரை பலருக்கும் கல்வியும் ஊக்கமும் அளிக்க வேண்டும் என்பதே அனூப்பின் ஆசைகள்.

அனூப் ஆராதிக்கப்பட வேண்டியவர். அனூப்களின் எண்ணிக்கை கூடும் என்ற நம்பிக்கை மிகுதியாகிறது. 'உலகில் மாற்றம் நிகழ்ந்திட, உன்னில் இருந்து மாற்றத்தைத் தொடங்கு' என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் அனூப்.

Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக