ஆயுர்வேத மருத்துவம் வாயிலாக நோயிலிருந்து குணப்படுத்த உதவும் சென்னை நிறுவனம்!

சென்னையைச் சேர்ந்த 'லிவ்ரைட்' ஆயுர்வேத தகவல்கள், மருத்துவ ஆலோசனை மின் வணிகம் ஆகியவற்றை வழங்கும் தளமாகும்.
7 CLAPS
0

சென்னையைச் சேர்ந்த லிவ்ரைட் (LiveRight) என்கிற ஸ்டார்ட் அப் ஹரி நாராயணன் மற்றும் நிஹல் எல்லிகதோடிகா என்கிற நிறுவனர்களால் 2017-ம் ஆண்டு துவங்கப்பட்டது. சுயநிதியில் இயங்கும் இந்நிறுவனம் சுகாதார தொழில்நுட்பப் பிரிவில் செயல்படுகிறது. ஆயுர்வேதம் தொடர்பான தகவலகள், மருத்துவ ஆலோசனைகள மற்றும் மருந்துகளை வழங்குகிறது.

ஹரி நாராயணனுக்கு ஆயுர்வேதத்தின் பலன்கள் மீது திடமான நம்பிக்கை உள்ளது. கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு அவருக்கு மோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டபோது ஆயுர்வேத மருத்துவம் அவருக்கு உதவியது. ஹரிக்கு ஒருவித தோல் அழற்சி (Herpes) ஏற்பட்டது. அதனை அடுத்து முகவாதம் ஏற்பட்டது. அவரது முகத்தின் வலதுபுறத்தில் பக்கவாதம் தாக்கியது.

”தீவிர வலி இருந்தது. வலது கண் அசைவற்றுப் போனது. வலது காது கேட்காமல் போனது. உதடுகளின் அசைவும் கட்டுப்படுத்தப்பட்டது,” என்று நினைவுகூர்ந்தார் ஹரி.

சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவரிடம் சென்றார். அவர் இஎம்ஜி பரிசோதனை செய்துவிட்டு தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். மருத்துவர் பரிந்துரை செய்த சிகிச்சையை மேற்கொள்ள விருப்பமில்லாததால் ஆயுர்வேத மருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவரை அணுக தீர்மானித்தார். மூன்றே வாரங்களில் ஹரி குணமடைந்தார்.

திறமையான ஆயுர்வேத மருத்துவரால் சிகிச்சை பெற்றது குறித்து மகிழ்ச்சியடைந்த ஹரி நாள்பட்ட நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் ஆயுர்வேதம் மூலம் ஆரோக்கியமாக வாழ உதவவதற்கான வழியைக் கண்டறிந்தார்.

ஐஐஎம் அஹமதாபாத்தில் பணியிலமர்த்தும் செயல்முறையின் போது டாக்டர் நிஹல் எல்லிகதோடிகாவை சந்தித்தார். இவருடன் இணைந்து 2017-ம் ஆண்டு லிவ்ரைட் என்கிற ஸ்டார்ட் அப்பை நிறுவினார்.

ஆயுர்வேத சிகிச்சைகளைக் கண்டறிதல்

ஆயுர்வேதம் மற்றும் மருந்து சேவைகளுக்கான தளமாக லிவ்ரைட் உருவாக்கப்பட்டது. ஆயுர்வேத சிகிச்சை முறைகள் குறித்து தெரிந்துகொள்ளவும், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை பெறவும் மருந்துகள் வாங்கவும் இந்த தளம் உதவும். ஆரம்பத்தில் ஆயுர்வேத மருத்துவ நிறுவனமாக துவங்கப்பட்ட லிவ்ரைட் பின்னர் விரிவடைந்தது. இதன் மருந்துகள் பிரிவு பார்கின்சன் நோய், ஒற்றைத் தலைவலி, மூட்டுவாதம், நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு மருந்துகள் வழங்குகிறது. இந்த மருந்துகள் NRight nutrition என்கிற ப்ராண்ட்டின்கீழ் வழங்கப்படுகிறது. நிஹல் கூறுகையில், 

“ஆயுர்வேதத்தின் மிகச்சிறந்த பொருட்களின் கலவையைக் கொண்டு NRight nutrition (மருந்து) தயாரிக்கப்படுகிறது. இயற்கையான, பாதுகாப்பான, பயனுள்ள மருந்துகளைக் கொண்டு NRight துவங்கினோம்.”

லிவ்ரைட் குழுவில் 10 நபர்களும் சென்னை மற்றும் மும்பையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர்களும் ஒன்றிணைந்துள்ளனர்.

ஹரி கெமிக்கல் என்ஜினியரிங் பட்டப்படிப்பும் பாலிமர் என்ஜினியரிங் பிரிவில் முதுகலை படிப்பும் முடித்துள்ளார். லிவ்ரைட் துவங்குவதற்கு முன்பு ராம்நாத் & கோ பிரைவேட் லிமிடெட் என்கிற பெயரில் இயங்கி வந்த குடும்பத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். நிஹல் ஐஐஎம் பெங்களூரு முன்னாள் மாணவரும் ஆயுர்வேத மருத்துவரும் ஆவார். ஆயுர்வேதம் வாயிலாக மருத்துவப் பராமரிப்புப் பிரிவில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினார்.


ஆயுர்வேத துறையில் நிலவும் இடைவெளிகள்

ஆரம்பட்ட சவால்கள் குறித்து நிஹல் விவரிக்கையில், 

“மருந்து சார்ந்த மார்கெட்டிங் செயல்பாடுகளுக்கு பாரம்பரிய வழியையே பின்பற்றினோம். மருத்துவப் பிரதிநிதிகள் வாயிலாக மருத்துவர்களை அணுகி தயாரிப்பு குறித்து விவரித்தோம். இந்த மருத்துவர்கள் பின்பு நோயாளிகளுக்கு எங்கள் மருந்தினை பரிந்துரைப்பார்கள். ஆனால் சரியான மருந்து தயாரிப்பு, மருத்துவர்கள் ஆதரவு, சந்தை தேவை ஆகியவை இருப்பினும் எங்களது வணிகம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சியடையவில்லை.”

ஆயுர்வேதப் பிரிவில் காணப்படும் இடைவெளிகள் குறித்து நிஹல் பட்டியலிடுகையில்,

விழிப்புணர்வு – ஆயுர்வேதம் குறித்த விழிப்புணர்வு அதிகளவில் இருக்கும்போதும் மருத்துவ ஆலோசனைக்கு செல்லவேண்டும் என்கிற உந்துதல் மக்களுக்கு வருவதில்லை.

அணுகுதல் – ஒருவர் தனது பகுதியில் ஒரு சிறந்த ஆயுர்வேத மருத்துவரை கண்டறிவது சவால் நிறைந்ததாகும். ஏனெனில் ஆயுர்வேத மருத்துவர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர். அத்துடன் நண்பர்கள் அல்லது உறவினர்கள் மருத்துவர்கள் யாரையும் பரிந்துரைப்பதில்லை.

நம்பகத்தன்மை – ஆயுர்வேத மருந்துகள் பாதுகாப்பானது. ஆனால் சரியான மருத்துவரைக் கண்டறிவது கடினம்.

மருந்துகள் கிடைக்கப்பெறுதல் – ஆயுர்வேத மருந்துகள் குறிப்பிட்ட மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கப்படுகிறது. பல நேரங்களில் நோயாளி இரண்டாவது முறை மருந்துகளைப் பெற மீண்டும் பயணித்து அதே மருத்துவரிடம் செல்ல நேர்கிறது.

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாண 2017-ம் ஆண்டு www.LiveRight.in என்கிற மின்னணு வணிக தளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த வலைதளத்தில் பயனர் தனது கேள்விகளை கேட்டறியலாம். தளத்தில் பட்டியலிடப்பட்ட மருத்துவர்கள் ஆன்லைனில் பதிலளிப்பார்கள். பிறகு பயனர் மருந்துகளை வாங்கிக்கொண்டு அதற்கான கட்டணத்தை செலுத்தலாம். அது மட்டுமின்றி மருத்துவரை ஆன்லைனில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொண்டு மருத்துவ ஆலோசனைக்கான கட்டணத்தை நேரடியாக மருத்துவரிடம் செலுத்திவிடலாம். பின்னர் தளத்தின் மூலம் மருந்துகளை வாங்கிக்கொள்ளலாம்.

மருந்துகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். ஆலோசனை இலவசமாக வழங்கப்படும். 

“ஆயுர்வேதத்தில் சிறப்புப் பிரிவுகள் ஏதும் இல்லை என்பதால் மருத்துவர்களின் விவரம் ஒன்றாகவே பட்டியலிடப்பட்டிருக்கும். இதிலிருந்து மருத்துவரை தேர்வு செய்து கொள்ளலாம்,” என்றார் ஹரி.

இந்நிறுவனம் ஆரம்பகட்டத்தில் இருப்பதால் வருவாய் குறித்த விவரங்களை நிறுவனர்கள் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. நிஹல் குறிப்பிடுகையில், “அடிப்படையான விஷயங்களை முறையாக பின்பற்றி சரியான திசையில் வளர்ச்சியடைந்து வருகிறோம். எனினும் தற்சமயம் கூடுதல் தகவல்களை எங்களால் பகிர்ந்துகொள்ள இயலாது,” என்றார்.

ஆயுர்வேதத்திற்கான சந்தை

அரசாங்கம் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து பல்வேறு ஆயுஷ் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆயுஷ் யோகா கல்வி நிறுவனங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் திறந்தது. இது ஆயுர்வேத மருந்துகளுக்கான சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. டாபர், ஹிமாலயா ட்ரக் கம்பெனி,, பதஞ்சலி, பைத்யநாத் போன்றவை இந்தப் பகுதியில் செயல்படும் சில முக்கிய நிறுவனங்களாகும்.

இந்தியாவின் ஆயுர்வேத பொருட்களின் சந்தை 2016-2021 காலகட்டத்தின் கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் 16 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்படுவதாக TechSci ஆய்வு அறிக்கை சமீபத்தில் தெரிவித்துள்ளது. ஆயுர்வேத தயாரிப்புகளின் நன்மைகள் குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்துதல், இதன் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான அரசு தரப்பு முயற்சிகள், இந்தியாவில் ஆயுர்வேத பொருட்களின் தேவையை ஊக்குவிக்க வாங்கும் திறனை அதிகரிக்கச் செய்தல் போன்றவை இந்த வளர்ச்சிக்கு உதவும்.

இவரது ஸ்டார்ட் அப்பின் தனித்துவம் குறித்து நிஹல் பகிர்ந்துகொள்கையில், 

“இயற்கையான வாழ்க்கைமுறையை வாழ்வதையும் முறையான சுகாதாரத்தை பராமரிப்பதையும் ஊக்குவிக்கும் முயற்சிகளே ஆயுர்வேத நிவாரணங்களுக்கான தேவையை அதிகரிக்கச் செய்கிறது. ஆயுர்வேத மருத்துவர்கள் குறித்து மக்கள் இணையத்தில் தேடும்போது பெரும்பாலும் நச்சுக்களை அகற்றுதல் அல்லது ஆயுர்வேத ஸ்பா போன்ற தேடல்களே முன்னணியில் காணப்படும். இவை ஒரு சிறு இடைவெளி எடுத்து செல்வதற்கு சிறப்பான இடங்களாக காணப்பட்டலும் ஒரு நோயிலிருந்து குணமடைய விரும்பினால் பலனளிக்காது."

ஆயுர்வேதம் நோய் குணப்படுத்துதல் மற்றும் தடுப்பு அம்சங்களில் கவனம் செலுத்தும் முழுமையான அறிவியல் பிரிவு. ஆயுர்வேத சிகிச்சை பெற விரும்பும் நோயாளிகளையும் திறமையான மருத்துவர்களையும் எளிதான முறையில் இணைய உதவுவதற்கான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கிறது லிவ்ரைட்.

ஹரியின் நிறுவனமான ராம்நாத் & கோ பிரைவேட் லிமிடெட் லிவ்ரைட் நிறுவனத்திற்கு நிதி வழங்குகிறது. ராம்நாத் நிறுவனம் ரசாயனங்கள், பாலிமர்கள், ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து, பண்ணை விலங்குகளுக்கான துணை உணவு போன்றவற்றில் 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

வருங்காலத்தில் படிப்படியாக வளர்ச்சியடைய திட்டமிட்டுள்ளனர். அத்துடன் சென்னையிலிருந்து இந்தியாவின் பிற பகுதிகளிலும் விரிவடைய விரும்புகின்றனர்.

ஆங்கில கட்டுரையாளர் : நேஹா ஜெயின் | தமிழில் : ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world