பதிப்புகளில்

சுனிதா கிருஷ்ணன்: பாலியல் தொழிலில் சிக்கியோரை மீட்டு புதிய பாதை காட்டும் தேவதை!

பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக கடினமாகப் போராடவும், அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கான நம்பிக்கையையும், புதிய சக்தியையும் அளிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார், பெங்களூருவை சேர்ந்த சுனிதா கிருஷ்ணன்.

YS TEAM TAMIL
1st Jun 2016
Add to
Shares
17
Comments
Share This
Add to
Shares
17
Comments
Share

சிறுவயது முதலே தன்னைச் சுற்றிலும் உள்ளவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர் சுனிதா. எட்டு வயதில் மனவளர்ச்சி குன்றிய சிறப்புக் குழந்தைகளுக்கு நடனம் கற்றுக் கொடுக்கத் தொடங்கியது முதலே சமூக சேவையை தனது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே சேர்த்துக்கொண்டார் சுனிதா. தனது 12 வயதிலேயே குடிசைவாழ் மக்களுக்காக 'வித்யா கேந்திரா' என்கிற அமைப்பைத் தொடங்கினார்.

பதின்ம வயதில்தான் சுனிதாவுக்கு அந்தப் பெருந்துயரம் நேரிட்டது. ஒரு கொடூர கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். ஆனால் வெகுவிரைவில் தன்னைத் தானே மீட்டெடுத்தார். அதன்பின், தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானவர்கள், சமூகத்தால் ஏமாற்றப்பட்டவர்கள், உறவுகளால் கைவிடப்பட்டவர்கள் என பாதிக்கப்பட்ட பெண்களுக்கு புதிய பாதை அமைத்துத் தருவதற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்து வருகிறார் சுனிதா. இந்த நோக்கங்களுக்காக 'பிரஜுலா' என்கிற பெயரில் ஓர் அமைப்பையும் உருவாக்கி செயல்பட்டு வருகிறார்.

சுனிதா தனது 16 வயதிலேயே சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் மற்ற மாணவிகளிடம் இருந்து மாறுபட்டு நின்றார். கல்லூரி முடிந்தவுடன் தனது தோழிகள் நேராக வீடுகளுக்கு சென்றுவிடுவார்கள். ஆனால், சுனிதாவோ மாலைநேரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களைச் சந்திக்கச் சென்றுவிடுவார். பாலியல் தொழிலாளிகளின் நிலையையும் துயரங்களையும் களப்பணிகள் மூலம் அறிந்துகொண்டு, அவர்களை மீட்டு pமறுவாழ்வு வழங்குவதற்கான முன்னெடுப்புகளில் ஈடுபடத் தொடங்கினார். பாலியல் தொழிலாளிகளைச் சந்திப்பதே அவருக்கு சவாலானதாக இருந்தது. பலமுறை பாதுகாவலர்களால் தடுக்கப்பட்டிருக்கிறார். ஒருமுறை காவலாளி ஒருவரால் இழுத்து வெளியே தள்ளப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. 

அப்படி ஒருமுறை காவலாளியிடம் சச்சரவு ஏற்பட்டபோது, "12,13 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை உன்னால் மீட்க முடியுமா..?" என்று அவர் கேட்டதும் சுனிதா ஆடிப்போனார். பிறகு அந்தச் சிறுமியை அங்கிருந்து மீட்பது என்று முடிவுசெய்தார். பலமுறை அந்தச் சிறுமியைச் சந்தித்து பேசியபோது, அந்தப் பிஞ்சு மனம் மிகவும் பலவீனமடைந்திருப்பதை உணர்ந்துகொண்டார். வயது வித்தியாசம் இல்லாமல் தன்னை நாடி தினம் தினம் வந்து செல்லும் ஆண்கள் எதற்காக பணம் தருகிறார்கள் என்பதைக் கூட புரியாததாய் இருந்தது அந்தக் குழந்தை.

உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் பாதிப்படைந்து கொண்டிருந்த அந்தச் சிறுமி யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. அவ்வப்போது அவள் சொல்லும் சிதறிய வார்த்தைகளை ஒன்று சேர்த்து, அந்தச் சிறுமியின் சொந்த கிராமம் எது என்பதை சுனிதா அறிந்துகொண்டார். பாலியல் தொழில் பகுதியில் இருந்து அந்தச் சிறுமியை மீட்டு, அவளுடைய சொந்த கிராமத்துக்குச் சேர்க்க சுனிதா திட்டமிட்டார். அதற்காக தனது தந்தையின் நண்பர் உதவியை நாடினார். அவரது உதவியோடு ஒரு வாகனத்தில் அந்தப் பாலியல் தொழில் பகுதிக்குச் சென்றார். சுனிதாவின் அந்த மீட்பு முயற்சியில் மனம் இளகிய நான்கு பாலியல் தொழிலாளிகள் உதவிக்கு வந்தனர். அவர்களுடன் அந்தச் சிறுமியை மீட்டு அவளுடைய கிராமத்துக்குச் சென்றனர்.

வசதியான குடும்பத்தில் பிறந்த அந்தச் சிறுமியின் பெற்றோர் ஒரு விபத்தில் இறந்துவிட, உறவினர் ஒருவர் சொத்துக்களைப் பறித்துக் கொண்டு அவளை நெடுஞ்சாலை ஒன்றில் விட்டுச்சென்றதும், அங்கிருந்து யாரோ அவளை பாலியல் தொழில் தரகரிடம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. சிறுமி அளித்த தகவல்கள் மூலம் இதனைப் புரிந்துகொண்ட சுனிதா, உண்மையை அந்த கிராம மக்களிடம் சொன்னால் சிறுமியின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் அதனை மறைக்கத் திட்டமிட்டார். வழிதவறி பெங்களுரு வந்த சிறுமி தன்னுடைய வீட்டில் வேலை செய்து வந்ததாக அந்த கிராமவாசிகளை நம்பவைத்தார். உடன்வந்த அந்த பெண்களும் அதற்கு உதவினர். பின்னர், ஊர் பஞ்சாயத்து கூடி அந்தப் பிரச்சனை குறித்து விவாதித்தது. பின்னர் அந்தச் சிறுமிக்கு சாதகமாகவே எல்லாம் நடந்தது. 

பாலியல் தொழிலில் தள்ளப்படுபவர்களுக்கு ஆதரவாக ஒரு பெரும் போராட்டத்தையே நடத்த வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியது. அதற்கான பாதையில் தொடர்ந்து பயணித்ததன் விளைவாகத்தான் சுனிதா என்ற இந்தச் சமூக ஆர்வலர், முனைவர் சுனிதா கிருஷ்ணன் என்கிற சமூகப் போராளியாக மாறினார்.

சமூகத்தால் ஏமாற்றப்பட்டவர்கள், வன்கொடுமைகளுக்கும், பாலியல் வன்முறைகளுக்கும் ஆளானவர்கள் என பாதிக்கப்பட்ட பெண்களுக்காக மேற்கொண்டு வரும் அரும்பணிகளைப் பாராட்டும் விதமாக, நாட்டின் உயரிய அங்கீகாரங்களுள் ஒன்றான பத்மஸ்ரீ விருதை சுனிதாவுக்கு வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. 

image


பாலியல் வன்மொடுமைகளுக்கும், பாலியல் தொழிலில் தள்ளப்பட்டோருக்கும் சுனிதா முக்கியத்துவம் கொடுக்க என்ன காரணம் என்கிற கேள்வி பலருக்கும் எழலாம். ஆனால், அது குறித்து நினைப்பதையே சுனிதா வெறுக்கிறார். காரணம் 16 வயதில் தனக்கு நேர்ந்த அந்தக் கொடுமையான நிகழ்வுதான்.

அப்போது, குடிசைவாழ் பகுதி சிறுவர்களுக்காகவும், இளைஞர்களுக்காகவும் சமூக விழிப்புணர்வு வகுப்புகள், பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்தார். எங்கே தங்களுக்கு இணையாக இந்த தலித் மக்கள் உயர்ந்து விடுவார்களோ என்று நினைத்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலர் சுனிதாவை தண்டிக்க நினைத்தனர். அதன் விளைவுதான் எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று சுனிதா மீது பாலியல் வன்கொடுமைத் தாக்குதலை நடத்தி நிலை குலையச் செய்தது.

சுனிதாவின் செயல்களை பாராட்டி ஊக்கப்படுத்தி வந்த பெற்றோரும், உறவினர்களும் ஒரே நாளில் தலைகீழாக மாறிப்போனார்கள். அனைவரும் சுனிதாவைத்தான் குற்றவாளியாகப் பார்த்தார்கள். ஊர் பஞ்சாயத்தும் குற்றவாளிகளான அந்த எட்டு பேரில் ஒருவருக்கு கூட தண்டனை வழங்கவில்லை. அவர்களும் சுனிதா மீதுதான் வீண்பழி சுமத்தினார்கள். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான ஒரு பெண்ணாக மட்டுமே அவரை சமுகம் ஒரு வெறுப்புடன் பார்த்தது. ஆனால், அந்தச் சம்பவம் சுனிதா என்கிற போராளியை மனதளவில் தளர்த்தி விடவில்லை. அதற்குப் பிறகுதான் சுனிதாவின் உலகம் முழுமையாக மாறிப்போனது. தன் மீது நடத்தப்பட்ட அந்தப் பாலியல் வன்கொடுமை, அந்த வேதனையின் ஆழத்தை நாள்தோறும் நேரடியாக அனுபவித்த சுனிதா, தன்னைப்போல் பாதிக்கப்பட்ட - சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பெண்களின் குரலாகவே மாறினார்.

image


"என்னுடைய வாழ்க்கை தெய்வீகமானது. கடவுள் இந்தப் பணிக்காகவே என்னை பூமிக்கு அனுப்பியுள்ளார். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பது என் மனதில் தானாகவே வந்த விஷயம். யார் யார் மிகவும் பாதிக்கப்பட்டு கஷ்டப்படுகிறார்களோ அவர்களை கண்டறிந்து உதவுவதே என் லட்சியம். நான் எந்தவித வியூகமும் வகுத்துக் கொண்டு செயல்படுவதில்லை. பாதிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட பெண்களைப் பார்க்கும்போது அவர்களுக்கு உதவும் சக்தி தானாகவே வந்துவிடுகிறது" என்கிறார் சுனிதா.

பெங்களூருவில் ராஜு, நளினி கிருஷ்ணன் தம்பதிகளின் இரண்டாவது குழந்தைதான் சுனிதா. இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரும் இவருக்கு உண்டு. மத்திய சர்வே துறையில் அப்பா வேலை பார்த்தார். நடுத்தர குடும்பம் என்பதால் சிறுவயது முதலே தனது தேவைகளுக்காக அவர் யாரையும் தொந்தரவு செய்தது இல்லை. பிறவியிலேயே ஒரு கால் ஊனம் என்பதால் பெற்றோரும் அவர் தேவைகளை அறிந்து அனைத்தையும் செய்து கொடுத்தனர். சக நண்பர்களுடன் சென்று அவரால் விளையாட முடியாது என்பதால் பெரும்பாலும் தனிமைதான் அவருக்குத் துணை. சிறுவயது முதலே விவேகமும் புத்திசாலித்தனமும் மிக்க சிறுமியாக வளர்ந்தார். நல்லதை வரவேற்கவும், தீமையை எதிர்க்கவும் அப்போதே சுனிதா பழகிக்கொண்டார்.

ஆயிரக்கணக்கான பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் விடுதிகளில் இருந்து மீட்டிருக்கிறார். இடத்துக்கு ஏற்றார் போல் புதிது புதிதான வியூகங்களை வகுத்து அவர்களை மீட்க முடிந்திருக்கிறது. பின்பு அவர்களை வேறு இடத்துக்கு கொண்டு சென்று மறுவாழ்வு அளிப்பது அடுத்தகட்ட பணி. இந்த மீட்பு நடவடிக்கைகளின் பலனாக பலர் கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளனர். அவர்களில் பலர் சுனிதாவுக்கு எதிரிகளாகவும் மாறியுள்ளனர்.

image


 "இதுவரை என் மீது குறைந்தது 17 முறை கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. என்னை அழித்துவிடுவதாக பலர் மிரட்டி உள்ளனர். ஆனால், அந்த மிரட்டல்கள் எதுவும் என் பணியை பாதித்தது இல்லை. என் மீதான ரவுடிகளின் தாக்குதல்களை விட சமூகம் நடந்துகொள்ளும் விதம்தான் என்னை மிகவும் பாதித்திருக்கிறது. கிரிமினல்களின் தாக்குதல்களை என் பணிகளுக்கான விருதுகளாகவே பார்க்கிறேன். பணிகளை சிறப்பாக செய்வதற்கான அத்தாட்சியாகவே அதனை எடுத்துக் கொள்கிறேன்" என்கிறார் சுனிதா.

1996 ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற உலக அழகி போட்டிக்கு எதிராக ஒரு போராட்டத்தையே சுனிதா நடத்தினார். பெண்களை அழகிப் போட்டிகள் மூலம் காட்சிப்பொருளாக ஆக்குவதற்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்தார். அதற்காக போராடியவரை போலீஸ் கைது செய்தது. இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தப் போராட்டத்தில் உதித்ததுதான் 'பிரஜூலா' என்கிற அமைப்பு. பெண்களுக்கு எதிரான அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கும், தீர்வு காணும் அமைப்பாக இன்று வளர்ந்துள்ளது.

சுனிதாவின் லட்சிய பயணம் குறித்து கேட்டால், 

"எந்த ஒரு மனிதனும் பலவீனத்தை உணரக்கூடாது. சமூகத்தில் அனைவரும் பாதுகாப்பாக வாழ வழிவகுக்க வேண்டும். குறிப்பாக சிறுமிகள், பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கு என்னைப் போன்ற ஒரு சமூக ஆர்வலரின் தேவை இந்த சமூகத்துக்கு வரக்கூடாது. 'பிரஜூலா' போன்ற அமைப்பின் உதவியை நாடும் சமூகமாக இருக்கக் கூடாது. அப்படி ஒரு சமூகம் உருவாக வேண்டும் என்பதுதான் என் ஆசை" என்கிறார்.

உலகில் நிறைவேற முடியாதது என்று எதுவும் இல்லை. இன்றைய சமூக சீர்கேட்டுக்குக் காரணமே மக்கள்தான். ஒரு காலத்தில் எல்லாம் நன்றாகத்தானே இருந்தது. அதனை கெடுத்தது நம்மால் அதனை சீர்படுத்தவும் முடியும். ஒவ்வொரு மனிதனும் பிறரை ஏமாற்றுவதை, வஞ்சிப்பதை நிறுத்திக்கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பது சுனிதாவின் கனவு.

இது சுனிதா கிருஷ்ணனின் கடமை மட்டுமல்ல, அனைவரும் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்தால் அத்தகைய சமூகத்தை நாம் உருவாக்க முடியும்!

ஆக்கம்: அர்விந்த் யாதவ் 

(கட்டுரையாளர்: அர்விந்த் யாதவ். இவர் யுவர்ஸ்டோரி பிராந்திய மொழிகளின் நிர்வாக ஆசிரியர்)

Add to
Shares
17
Comments
Share This
Add to
Shares
17
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக