பிச்சை எடுங்க; திருடுங்க; இல்ல கடன் கூட வாங்குங்க; ஆனால் ஆக்சிஜன் கொடுங்க.. நீதிமன்றம் கண்டிப்பு!

தேவைப்பட்டால் வான்வழியாக ஆக்சிஜன் கொண்டுவர சொல்லி உத்தரவு!
6 CLAPS
0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்துள்ள நிலையில், பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிலும் கொரோனா அதிகமாக பாதித்து வரும் குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் அவதிப்படுவதும், உயிரிழப்புகள் அதிகமாகாவதும் நிகழ்ந்து வருகிறது. இதனால் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியிருக்கிறார்.

இதற்கிடையே, நேற்று டெல்லியை சேர்ந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் ஒன்று,

“எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு செலுத்துவதற்கு போதிய ஆக்சிஜன் இல்லாத சூழல் நிலவி வருகிறது. இதே நிலை தொடரும் பட்சத்தில் பெரும் ஆபத்து ஏற்படும். எனவே எங்களுக்கு தேவையான ஆக்சிஜனை உடனடியாக வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்," என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நேற்று உடனடியாக விசாரித்த நீதிபதிகள்,

“மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று. இதை மத்திய அரசாங்கம் சரியாக செய்ய வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்கு பிச்சை எடுத்தோ, திருடியோ, கடன் வாங்கியோ, அல்லது பணம் கொடுத்தோ, எதையோ செய்து, நோயாளிகளுக்கு மருத்துவ ஆக்சிஜன் சப்ளை செய்யுங்கள்," என்று கூறினர்.

அப்போது, மத்திய அரசு சார்பில் வாதாடியை வழக்கறிஞர், ”மனுவின் விசாரணையை ஒருநாள் தள்ளி வைக்க வேண்டும்," எனக் கேட்டுக்கொண்டார். ஆனால்,

“இன்று இரவு ஆக்சிஜன் இல்லாமல் யாரேனும் உயிரிழந்தால் அதற்கு நீங்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்வீர்களா? தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் மருத்துவத் தேவைகளுக்கு அரசு பயன்படுத்த முன்வராதது ஏன்?" என்று கேள்வி எழுப்பினர் நீதிபதிகள்.

அதற்கு பதில் கொடுத்த மத்திய அரசு வழக்கறிஞர்,

”தொழிற்சாலைகள் தயாரிக்கும் ஆக்சிஜன் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே ஆனது. மேலும், பெட்ரோலியம் சுத்திகரிப்பு உள்ளிட்ட முக்கிய ஆலைகளில் ஆக்சிஜன் தேவை என்பது கட்டுப்பாடில்லாமல் இருக்க வேண்டும்," என்று கூற, இடைமறித்த நீதிபதிகள்,
“மக்கள் செத்து மடிந்துகொண்டிருக்கும் இந்தச் சூழலில் தொழிற்சாலைகள் குறித்து அரசு கவலைகொள்கிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் இருக்கும் சூழல் மிகவும் ஆபத்தானது. நாங்கள் டெல்லியை குறித்து மட்டும் கவலைகொள்ளவில்லை. இந்தியா முழுவதும் உள்ள சூழ்நிலையை குறித்து கவலைகொள்கிறோம். நாடு முழுவதும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை போக்க வேண்டியது அரசுடையை பொறுப்பு. எனவே, தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும் ஆக்சிஜன்களை உடனடியாக மருத்துவச் சேவைகளுக்கு அனுப்பி வையுங்கள்.,” என்றனர்.

நேற்றும் இது தொடர்பான வழக்கின்போது இதைத்தான் சொல்லியிருந்தோம். நாங்கள் சொல்லி ஒருநாள் முடிந்துவிட்டது. அரசு என்னதான் செய்துள்ளது. இதுபோன்ற பேரிடர் சூழ்நிலையில் அனைவரும் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளுங்கள்.

தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிகழ்ந்தால் வானம் ஒன்றும் இடிந்து விழுந்து விடாது. எனவே மருத்துவ ஆக்சிஜன் தேவையை உடனடியாக தீர்த்து வையுங்கள்.. தேவைப்பட்டால் வான்வழியாக ஆக்சிஜனை எடுத்துச் செல்லுங்கள்," என்று கண்டிப்புடன் கூறியிருக்கின்றனர். 

Latest

Updates from around the world