ரூ.124 கோடி வருவாய் கொண்ட டெண்டல் கிளினிக் சம்ராஜ்யத்தை உருவாக்கிய தொழில் முனைவர்!

உள்ளூர் பல் மருத்துவ கிளினிக்கில் விரும்பத்தகாத சம்பவத்தை எதிர்கொண்டதால், அமரீந்தர் சிங், க்ளோவ் டெண்டல் கிளினிக்கை துவக்கி, 23 நகரங்களில் 330 கிளினிக்காக விரிவாக்கியிருக்கிறார்.
0 CLAPS
0

பல் மற்றும் வாய் ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும். என்.சி.பி.ஐ தகவல்படி, இந்தியாவில் பள்ளிக்குச்செல்லும் குழந்தைகளில் 50 சதவீதம் பேர் பற்குழிகளால் அவதிப்படுகின்றனர். பெரியவர்களில் 90 சதவீதம் பேர் ஈறு பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர்.

எனவே, கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் பெரும்பாலான மக்கள் பல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களில் டெண்டல் கிளினிக் அதிக அளவில் இல்லை என்றாலும், நகர்புறங்களில் இவற்றை சகஜமாக பார்க்கலாம்.

இவற்றில் பெரும்பலானவை தனியார், தனிநபர் அல்லது அப்பல்லோ குழுமம், போர்டிஸ் போன்ற மருத்துவமனை குழுமங்களால் சங்கிலித்தொடராக நடத்தப்படுகின்றன. எனினும் 'க்ளோவ் டெண்டல்' 'Clove Dental' வேறு விதமான வழியை பின்பற்றுகிறது.

2011ல் தில்லியில் தொடர் தொழில்முனைவோர் அமரீந்தர் சிங்கால் துவக்கப்பட்ட க்ளோவ் டெண்டல், நகரத்து சுற்றுப்புற பகுதிகளில் டெண்டல் கிளினிக்கை நடத்துகிறது. நகரம் மற்றும் சிறிய நகரங்களில் கீழ் தட்டு மக்கள் மற்றும் மேல் தட்டு மக்கள் எளிதாக அணுக கூடிய, செலவு குறைந்த, சுகாதாரமான, உயர் நுட்ப டெண்டல் கிளினிக்காக இவை அமைகின்றன.

அமரீந்திரின் இந்த அணுகுமுறை நன்கு செயல்படுவதால், எட்டு ஆண்டுகளில் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய டெண்டல் கிளினிக் வலைப்பின்னல்களில் ஒன்றாக உருவாகி இருக்கிறது.

இன்று; ஆந்திரா, தில்லி, குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட நகரங்களில் 330க்கும் மேற்பட்ட கிளிக்கை கொண்டுள்ளது. 870 பல் மருத்துவர்களை அமர்த்திக்கொண்டு, மாதம் 30 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது.

பில்லிங்க், ரூட் கேனால் சிகிச்சை, பல் அகற்றுவது, டென்சர்ஸ், கிரவுன்ஸ் உள்ளிட்ட அனைத்து வகையான பல் மருத்துவ சிகிச்சைகளையும் அளிக்கிறது.

கடந்த ஆண்டு நிறுவனம், 17.5 மில்லியன் டாலர் (ரூ.124 கோடி) அளவுக்கு வர்த்தகம் இருந்தது. இந்த ஆண்டும் மேலும் 90 கிளினிக் திறக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

துவக்கம்

நகர்புறங்களில் தனியார் டெண்டல் கிளினிக்கே அதிக அளவில் உள்ளது. இந்த கிளினிக் தொடர்பாக அமரீந்தர் சிங்கிற்கு மோசமான அனுபவம் உண்டானது. 2010ல் தில்லியில் அவர் டெண்டல் கிளினிக்கிற்கு சென்ற போது இந்த அனுபவம் ஏற்பட்டது.

"டூத் பில்லிங்கிற்காக சென்றிருந்தேன். எல்லாம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் வாய் கழுவச்சென்ற போது தான் அங்கு எத்தனை அசுத்தமாக இருந்தது என்பதை கவனித்தேன்,” என்கிறார்.

அவர் அப்போது தான் அமெரிக்கா மற்றும் கனடாவில் நீண்ட காலம் இருந்துவிட்டு இந்தியா திரும்பியிருந்தார்.

கிளினிக்கின் சுகாதாரமற்ற நிலையை கண்டவர், இது தொடர்பாக ஆய்வு செய்ய தீர்மானித்தார். இதில் தெரிய வந்த விஷயங்கள் அதிர்ச்சி அளித்தன.

"இந்தியாவில் டெண்டல் சிகிச்சை, உள் கட்டமைப்பு வசதி, சுகாதாரம், ஸ்டெர்லைஸ் செய்வது ஆகியவற்றில் பற்றாக்குறை கொண்டிருந்தது. பெரும்பாலான இந்தியர்களுக்கு டெண்டல் சிகிச்சை தேவைப்பட்டாலும் பத்து சதவீதம் பேர் தகுதி வாய்ந்த பல் மருத்துவரை நாடுகின்றனர்,” என்கிறார் அமரீந்தர்.

டெண்டல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு இல்லாததையும் கவனித்தார்.

"பல் பிரச்சனை மற்றும் இதர உடல் கோளாறுகளுக்கு நிறைய தொடர்பு இருக்கிறது. ஆனால் மக்கள் இது பற்றி அறிந்திருக்கவில்லை. உதாரணமாக, வயதாவது என்றால், பற்களை இழப்பது என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சரியான பல் பராமரிப்பு இருந்தால் வயதாவதால் பற்கள் விழாது,” என்கிறார்.

பெரிய அளவிலான பிரச்சனைகளுக்கு பெரிய அளவிலான தீர்வுகள் வேண்டும். எனவே அமரீந்தர் சிங், 10 ஆண்டுகளில் 600 டெண்டல் கிளினிக் திறந்து இந்தியா முழுவதும் பல் சிகிச்சைக்காக விரும்பி நாடப்படும் இடமாக விளங்க விரும்பினார்.

கிராம்பின் மருத்துவ குணம் காரணமாக அதன் ஆங்கில பெயரை பிராண்ட் பெயராக கொள்ள தீர்மானித்தார்.

"கிராம்பு பல் வலிக்கு நிவாரணம் அளிக்கிறது. நான் பல் வலி என சொன்னால் என் பாட்டி கிராம்பை மெல்லுமாறு கூறுவது வழக்கம். பல் நலத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாலும், அந்த வார்த்தை பிடித்திருந்ததாலும்,. இந்த பெயரை கொண்டு க்ளோவ் டெண்டல் எனும் பிராண்ட் பெயரில் கிளினிக் துவங்க தீர்மானித்தேன்,” என்கிறார்.

செலவுகள்

இந்த பெரிய எண்ணத்திற்காக அமரீந்தர் முதலில் நண்பர்கள், உறவினர்கள், அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.7 கோடி முதலீட்டை திரட்டினார். இதன் மூலம் 2011ல் முதல் கிளினிக்கை துவக்கி, மேலும், நூறு கிளினிக்கை தொடர்ந்து அமைத்தார்.

"ஒவ்வொரு கிளினிக்கை அமைக்கவும் ரூ.30 லட்சம் தேவைப்படுகிறது. ஏனெனில் 80 சதவீத மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டும்,” என்கிறார்.

க்ளோவ் நடுத்தர கட்டண மாதிரியை பின்பற்றுகிறது. பல்வேறு கிளினிக் கட்டணங்கள் மற்றும் செலவுகளை ஒப்பிட்ட பிறகு இந்த உத்தியை அவர் கண்டறிந்தார்.

சங்கிலித்தொடர் மையங்களுக்கு, பல் மருத்துவர் மற்றும் உதவியாளரை பணிக்கு அமர்த்துவது செலவு மிக்கதாகும். எனவே, விலை உயர்ந்த இறக்குமதி மருத்துவ உபகரணங்களை பயன்படுத்துவது 25 சதவீத செலவாக மட்டுமே அமைகிறது,” என்கிறார் அமரீந்தர்.

"எனவே ஒவ்வொரு மையமும் லாபம் ஈட்டுவதற்கு முன் 30 முதல் 40 லட்சம் செயல்முறை செலவு தேவைப்படுகிறது. இறக்குமதி உபகரணங்கள் செலவு சிகிச்சை செயல்முறை செலவில் அதிக அங்கம் வகிக்காததால் பெரிய அளவில் செயல்பட்டு ஏழை மக்களுக்கு ஏற்ற சிகிச்சையை அளிக்க முடிவதில்லை,” என்கிறார்.

வளர்ச்சி

துவக்கம் முதல், க்ளோவ் டெண்டல் கிளினிக், கேப் போல் வடிவமைக்கப்பட்டு, அதே முறையில் விரிவாக்கம் செய்யும் தன்மை கொண்டிருந்தன. எனினும், லாபம் ஈட்டுவதற்கு அதிக காலம் தேவைப்பட்டதால், சங்கிலித்தொடர் மையங்களை அமைக்க வென்சர் முதலீட்டை நாடவில்லை என்கிறார்.

"எங்களுடையது நீண்ட கால திட்டமாகும். முதலீட்டாளர்கள் உடனடி பலனை எதிர்பார்க்கின்றனர். எனவே, எங்கள் மருத்துவ மாதிரியை புரிந்து கொண்ட அதிக மதிப்பு கொண்ட தனிநபர்களை நாடினோம். இதன் மூலம் 100 சதவீத நேரடி அந்நிய முதலீட்டால் முதல் 100 கிளினிக்கில் இருந்து 330 அமைக்க முடிந்தது,” என்கிறார்.

எனினும் பல் சிகிச்சை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது சவாலாக இருக்கிறது என்கிறார்.

"மக்கள் காபி, டீ, இதர உணவுகள் உட்கொள்கின்றனர். ஆனால், பல் சிகிச்சைக்கு கவனம் அளிக்காமல் உள்ளனர். தினமும் பல் தேய்த்தால் போதும் என நினைக்கின்றனர்," என்கிறார்.

தொழில்நுட்ப உபகரணங்கள் வெப்பம் மற்றும் மாசுக்கு இலக்காவதாகவும் கூறுபவர், இவற்றை பயன்படுத்தும் உதவியாளர்களுக்கும் பயிற்சி தேவைப்படுகிறது என்கிறார்.

ஏதேனும் பழுது ஏற்பட்டால் பாகங்களை மாற்ற வேண்டியிருப்பது செலவை அதிகமாக்கும்.

இந்த சவால்களை மீறி, டெண்டல் கிளினிக் எதிர்காலம் பற்றி நம்பிக்கையுடன் உள்ளார்.

"அதிக தேவை இருப்பதால் போட்டி ஒரு பிரச்சனை அல்ல, 95 சதவீத தேவை தனி மருத்துவர்களால் பூர்த்தி செய்யப்படுகிரது. ஒரு சில நிறுவனங்களே 100க்கும் மேல் கிளினிக் கொண்டுள்ளன. சில நிறுவனங்கள் அதற்கும் குறைவாக கொண்டுள்ளன,” என்கிறார்.

க்ளோவ் டெண்டர் முன்னணியில் விளங்கி வருகிறது. எதிர்காலத்தில் 600 சிகிச்சை மையங்களை துவக்க வேண்டும் என அமரீந்தர் இலக்கு கொண்டுள்ளார்.

Latest

Updates from around the world