பதிப்புகளில்

சென்னை சில்க்ஸ் தீ விபத்து கற்றுத் தரும் பாடம் என்ன?

2nd Jun 2017
Add to
Shares
57
Comments
Share This
Add to
Shares
57
Comments
Share

கடந்த இரு தினங்களுக்கு முன் அதிகாலை வேளையில் சென்னை டி.நகரில் உள்ள ஏழு மாடி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் திடீரென் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் தொடர்ந்து பணி புரிந்து ஒரு வழியாக கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் தொடர் தீயால் கட்டிடம் பலவீனம் அடைந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டு அப்பகுதி மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலைக்கு சென்றது. 

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் சுமார் 300 கோடி ரூபாய் வரை சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் யாரும் தீக்கிரையாகவில்லை என்பதுதான் ஆறுதலான செய்தி. ஆனாலும் நஷ்டம் பெரியதே. முறையான அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடம். துறை சார்ந்த ஊழல் போன்ற விவகாரங்களுக்குள் நாம் போக வேண்டாம்.

image


கவனிக்க வேண்டிய மற்ற விஷயங்களைப் பார்போம். போன மாதச் சம்பளம் பட்டுவாடா ஆகி விட்டது என்று சொல்கிறார்கள். “இந்த சம்பளத்தை வைத்துதான் பள்ளிக் கூட ஃபீஸ் கட்டுவதாக இருந்தோம்” என்று பரிதவித்த பணியாளர்கள் பலரும் அங்கே நின்றிருந்தார்கள். குறிப்பாக தாய்மார்கள். அவர்களுக்கு தற்காலிக ரிலீஃப். இங்கு பணியாற்றிய எல்லோரையும் மற்ற கிளைகளுக்கு மாற்றியிருக்கிறார்கள். பணி இட மாற்றம் கொஞ்சம் அசெளகரியமானதுதான். ஆனால் ஊழியர்கள் சமாளித்துக் கொண்டு விடுவார்கள்.

பிரச்சனை தீ விபத்துதான். பல மாடிக் கட்டித்ததில் தீ விபத்து ஒன்றும் சென்னைக்குப் புதியதல்ல. 1975 ல் எல் ஐ சியில் நடந்த தீ விபத்துதான் ஒரு முன்னோடி. ’எண்ட்ரி எஸ்டாபிளிஷ்மெண்ட்’ என்று திரைப்பட பாஷையில் சொல்வார்கள். ஒரு காட்சி எங்கே நடக்கிறது என்பதற்கு அடையாளமாக ஏதேனும் ஒரு இடத்தைக் காட்டுவார்கள். ஸ்டேச்சு ஆஃப் லிபர்டியைக் காட்டினால் போதும். நாம் நியூயார்க்கில் இருக்கிறோம் என்று பொருள்.

அதைப் போலவே சென்னை (அப்போதைய மெட்ராஸ்) என்பதன் ஒரு அடையாளம் எல் ஐ சி கட்டிடம். திரைப்படங்களில் அடிக்கடி தோன்றும். அதில் ஏற்பட்ட தீ விபத்து தீயணைப்புத் துறைக்கு ஒரு புதிய அனுபவமாகவும் பாடமாகவும் இருந்தது. அவர்களிடம் இருந்த ஏணியின் உயரம் போதவில்லை. தீ கைக்கெட்டா எதிரியாக சாகஸமாடியது.

பின்னர்தான் SNORKEL வண்டிகள் வாங்கப் பட்டன. அதாவது உயரமான ஏணியைக் கொண்டது. உச்சியில் தீயணைப்பு வீரர்கள் நிற்பதற்கு தொட்டி போன்ற ஒரு அமைப்பும் இருக்கும்.

தற்போதைய தீவிபத்தில் அருகே கட்டப்பட்டுள்ள மேம்பாலம் பெரும் உதவியாக இருந்தது. அதன் மீதிருந்து நீரைப் பீய்ச்ச முடிந்தது. பல பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களிலிருந்து வண்டிகள் வந்தன. அதுவும் கூட விபத்தின் வீரியத்தைக் குறைக்கும் காரணியாக இருந்தது. தீ அணைக்கப்பட்டு விட்டது. நிவாரணப் பணிகள் தொடங்கி விட்டன. ஆனால் அந்த ஏழு மாடிக் கட்டிடத்தை விட உயரமான கேள்விக் குறிகள் சில உள்ளன...

SNORKEL தீயணைப்பு வண்டி

SNORKEL தீயணைப்பு வண்டி


தீ விபத்து எழுப்பியுள்ள கேள்விகள்

கட்டிடம் அனுமதியை மீறி கட்டப்பட்டது. நீதிமன்றங்கள் எல்லாப் பொழுதுகளிலும் வழக்கில் சம்பந்தப் பட்டவர்களுக்கு வாய்ப்புகளைத் தருகிறது. அது சட்டத்தின் பார்வை. உதாரணமாக வாய்தா என்பது நீரில் மூழ்குபவன் மூச்சு வாங்க ஒரு வாய்ப்பு. அதை நாம்தான் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

அனுமதியை மீறி – என்ற குற்றச்சாட்டை பாதிக்கப்பட்டவர் எப்படிப் பார்த்திருக்க வேண்டும் ? என்ன நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் ? இங்கே உயிர் நஷ்டம் ஏற்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் ? இதை சட்டம், ஊழல் என்று பார்க்க வேண்டாம். இது ஒரு நிறுவனத்தின் சமூகப் பொறுப்பில் வர வேண்டிய விஷயமல்லவா ?

கார்பொரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிடி என்பது ஒரு பள்ளிக்கூடத்திற்கு கழிப்பறை கட்டித் தருவது மட்டுமல்ல. தனது கட்டிடத்தை பாதுகாப்பான முறையில் அமைப்பதும்தானே?

தி நகர் போன்றவை சென்னையின் பழைய பகுதிகள். நூற்றாண்டுகளைத் தாண்டியவை. நிலத்தின் மதிப்பு விஷத்தை விட வேகமாக வளர்ந்து விட்டது. அதனால்தான் மாடிகள் என்னும் சிறைக்குள் மாட்டிக் கொண்டு முழிக்கிறோம். இதைத் தவிர்க்க வியாபார வளாகங்கள் இருக்கும் பகுதியில் மால்கள் உருவாக வேண்டும். அவை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கட்டப்பட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக இதைப் போன்ற பகுதிகளின் முகமும் அகமும் மாற வேண்டும்.

தனியார் நிறுவனங்கள் தங்களுக்கென்று பிரத்தியேகமான கட்டடங்கள் வேண்டுமென்றால் அதற்கான அனுமதி விஷயங்களில் கறார் காட்டப்பட வேண்டும். 

அடுத்தது. இன்ஷூரன்ஸ். சென்னையில் பல வருடங்களுக்கு (சமீபத்தியது அல்ல) முன் பெரு மழை வந்த போது பல வாகனங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. காப்பீட்டு நிறுவனம் நஷ்ட ஈட்டைத் தரவில்லை. ஏனென்றால் ’வெள்ளத்தால் நஷ்டம்’ கவர் செய்யப்படவில்லை.

ஒரு முறை இங்கே பூகம்பம் வந்த போதும் இதே கதிதான். வீட்டை யார் ஸார் இன்ஷூர் செய்வார்கள் என்று கேட்டவர்கள் அன்று விக்கித்து நின்றார்கள்.

தற்போதைய விபத்தில் காப்பீடு சம்பந்தமான எந்தத் தகவலும் நம்மிடம் இல்லை. ஆனால் ’அனுமதியை மீறி’ கட்டப்பட்ட கட்டிடத்தில் உள்ள சரக்கை எந்தக் கணக்கில் கொள்வது ? அது சட்டத்தை மீறி வைக்கப்பட்டது அல்லவா ? விபத்து நேரிடுகையில் சேதாரத்தைக் குறைக்க எந்த வழியும் இல்லையென்றால் பிறகு அதை காப்பீடு செய்வது இன்ஷுரன்ஸ் கம்பெனிக்கு ஆபத்தானதல்லவா ?

இது ஒரு வாதப் பொருளாக அமைந்தால் எதிர்காலத்தில் அனுமதியை மீறிய கட்டுவது குறையும். இப்போதாவது எல்லோரும் விழித்துக் கொள்ள வேண்டும். கூடி சிந்திக்க வேண்டும். மனோ நிலை சாதகமாக இருக்கிறது.

எல்லோரும் ஒன்று கூடி சிந்தனைக் கடை விரிப்போம். கொள்வாருண்டு !

(கட்டுரையாளர்: வெற்றி வெடியல் ஸ்ரீனிவாசன். ஆடிட்டரான இவர் சிறு தொழில்முனைவோர்களுக்கு ஆலோசகராக உள்ளார்.)

Add to
Shares
57
Comments
Share This
Add to
Shares
57
Comments
Share
Report an issue
Authors

Related Tags