பதிப்புகளில்

வீதிக் கடையாகத் தொடங்கி, இன்று 18ஆயிரம் சதுர அடியில் ரூ.5 கோடி விற்றுமுதல் காணும் ஜோதி டெக்ஸ்டைல்ஸ்!

சென்னையில் வீடு வீடாக புடவை விற்று, சிறு கடையாக தொடங்கப்பட்ட ஜோதி டெக்ஸ்டைல்ஸ், 50 ஆண்டு காலத்தில் 1 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்ற வளர்ச்சிக் கதை!

18th Aug 2017
Add to
Shares
4.8k
Comments
Share This
Add to
Shares
4.8k
Comments
Share
”எங்களது ஷோரூமிற்கு வரும் வாடிக்கையாளர்கள் சௌகரியமாக உணர்வதை உறுதிசெய்கிறோம். அவர்களை எங்கள் வீட்டிற்கு வந்த விருந்தினர்களாகளைப் போலவே உபசரிப்போம்,”

என்றார் ஜோதி டெக்ஸ்டைல்ஸ் குடும்ப வாரிசு மற்றும் தற்போதைய இயக்குனர் கார்த்திகேயன். இவரது குடும்பத்தினர் தமிழ்நாட்டின் மினப்பாள்யம் என்கிற பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வாழ்வாதாரத்திற்காக சென்னை வந்தனர். 1958-ம் ஆண்டு இவரது உறவினர் மைல்கணக்கில் தனது சைக்கிளை மிதித்தவாறே வீடு வீடாகச் சென்று புடவைகளை கடன் முறையில் விற்பனை செய்யத் துவங்கினார். கணிதப் பிரிவில் இளநிலை பட்டம் பெற்ற இவரது தந்தையும் தொழிலில் அவருடன் இணைந்துகொண்டார்.

தினசரி தேவைகளைக் பூர்த்திசெய்து கொள்வதற்காகவும் இந்த வணிகத்தை நிலை நிறுத்திக்கொள்ளவும் 1968-ம் ஆண்டு ரீடெய் ஸ்டோரைத் துவங்கினர். 80-களிலும் 90-களிலும் சந்தையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வெகுவாகப் போராடினர்.

image


குடும்ப மரபை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் நோக்கத்துடன் பணியைத் தொடர்ந்தனர். இவரது அப்பா காலை 8 மணிக்கு ஸ்டோரை திறப்பார். மாலை ஆறு மணி வரை வாடிக்கையாளர் வருவதற்காக காத்திருப்பார். சில சமயம் மாலை ஆறு மணிக்கே முதல் வாடிக்கையாளர் ஸ்டோரினுள் நுழைவார். அவர்களது பொறுமையும் நம்பிக்கையுமே வெற்றிக்கு வழிவகுத்தது.

வாடிக்கையாளர் சேவை

வாடிக்கையாளர்களிடம் மிகவும் கனிவாக நடந்துகொண்டனர். அத்தகைய பழக்க வழக்கங்களே இவர்கள் தற்போது ஒரு லட்சத்திற்கும் மேலான வாடிக்கையாளர்களைப் பெற உதவியுள்ளது. இவர்களது இந்த அணுகுமுறைக் காரணமாகவே வாடிக்கையாளர்கள் தாமாகவே முனவந்து அவர்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இவர்களது ஸ்டோரை பரிந்துரைத்து அறிமுகப்படுத்தினர்.

1968-ம் ஆண்டு முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். 80-களில் ஸ்டோர் துவங்கப்பட்டு கிட்டதட்ட 15 வருடங்கள் நிறைவடைந்ததால் சுற்றுவட்டாரத்தில் பிரபலமாகி விட்டனர். துணிவகை சம்பந்தப்பட்ட அனைத்தும் இவர்களது ஸ்டோரில் இருக்குமாறு பார்த்துக்கொண்டனர். உதாரணத்திற்கு இட்லி வைப்பதற்கு பயன்படுத்தப்படும் துணியை அவ்வப்போது மாற்றவேண்டும் என்பதால் அடிக்கடி மக்கள் அதை வாங்குவார்கள். அதனால் அதை இவர்களது ஸ்டோரில் இருப்பு இருக்குமாறு பார்த்துக்கொண்டனர். இவ்வாறு இந்த கடைக்குச் சென்றால் நமக்குத் தேவையானதை வாங்கிக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படத் துவங்கியது. வாடிக்கையாளர் எண்ணிக்கையும் அதிகரித்தவண்ணம் இருந்தது.

”உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினரை எவ்வாறு வரவேற்று உபசரிப்பீர்களோ அப்படிதான் வாடிக்கையாளர்களிடம் நடந்துகொள்ளவேண்டும் என்று ஸ்டோரில் புதிதாக இணையும் ஊழியர்களிடம் வலியுறுத்தப்படும்,” என்கிறார் கார்த்திகேயன்.

வளர்ச்சி

90-களில் ஈட்டிய லாபம் அனைத்தும் தொழிலுக்காவே செலவிட நேர்ந்தது. தற்போது இருக்கும் கட்டிடத்திற்கு இரண்டு கட்டிடம் தள்ளி இருந்த ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்து செயல்பட்டு வந்தனர். அதன் பிறகு தற்போது செயல்பட்டு வரும் கட்டிடத்தை விலைக்கு வாங்கினர். முதலில் 2400 சதுர அடியில் மட்டுமே வாங்கினர். ஒவ்வொரு பகுதியாக வாங்கி மெல்ல மெல்ல விரிவடைந்து தற்போது 18,000 சதுர அடியில் நுங்கப்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். பெரியளவில் திட்டமிடல் ஏதுமின்றியே முன்னேறி வந்ததாகவும் வருங்காலத்தில் முறையாக திட்டமிட விரும்புவதாகவும் தெரிவித்தார் கார்த்திகேயன்.

தற்போது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 300 முதல் 400 வாடிக்கையாளர்கள் நுங்கம்பாக்கம் ஷோரூமிற்கு வருகை தருகின்றனர். ஆண்டு விற்றுமுதல் 5-6 கோடி ரூபாயாக உள்ளது.

இலக்கு

50-வது வருடத்தைக் கொண்டாடும் வகையில் 8000 சதுர அடியில் வளசரவாக்கத்தில் ஒரு புதிய ஸ்டோரைத் திறந்துள்ளனர். காலம் காலமாக பின்பற்றப்பட்ட அதே கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவை புரிய விரும்புகின்றனர். அதை நிறைவேற்றினால் லாபமும் வருவாயும் தானாகவே உயரும் என்றார் ஜோதி டெக்ஸ்டைல்ஸ் இயக்குனர்.

ஜோதி டெக்ஸ்டைல்ஸ் இயக்குனர் கார்த்திகேயன் (வலது)

ஜோதி டெக்ஸ்டைல்ஸ் இயக்குனர் கார்த்திகேயன் (வலது)


இந்தப் புதிய ஸ்டோர் திறக்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில் தற்போது நாள் ஒன்றிற்கு சுமார் 100 வாடிக்கையாளர்கள் வருகை புரிகின்றனர். பெரியளவில் எதிர்பார்ப்புகள் இல்லை என்றும் நுங்கப்பாக்கம் ஸ்டோர் போலவே இயங்கினால் போதும் எனவும் விரும்புகின்றனர். நுங்கம்பாக்கத்திலுள்ள ஸ்டோர் மார்கெட் பகுதியில் இல்லை, தனித்தே நிற்கிறது. ஆனால் தற்போது வளசரவாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள ஸ்டோர் மார்கெட் பகுதியில் உள்ளதால் அதிக மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

தொழில்நுட்பத்தை இணைத்தனர்

பில்களை கைகளாலேயே எழுதி வந்த இவர்கள் 2003-ம் ஆண்டு பில்லிங் மெஷினை பயன்படுத்தத் துவங்கினர். 2008-ம் ஆண்டு பார்கோர்ட் முறை பின்பற்றப்பட்டது. மூத்த ஊழியர்கள பலர் பல்வேறு கீ இருப்பதால் கையாள கடினமாக இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பிறகு எளிதாக்கப்பட்டது. அனைத்து இருப்புகளும் பார்கோட் செய்யப்பட்டுள்ளதால் எத்தனை புடவைகள் உள்ளன என்றும் எத்தனை தேவைப்படும் என்றும் உடனடியாக கணக்குக் காட்ட முடிகிறது.

இருப்பு மேலாண்மை முழுவதுமாக இணையத்தில் இல்லாமல் மென்பொருள் உதவியுடன் சிஸ்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வாடிக்கையாளர்களின் விருப்பு வெறுப்புகளை அருகிலிருந்து கூர்ந்து கவனித்து வருகின்றனர். ரிப்போர்ட்களின் அடிப்படையில் அல்லாமல் வாடிக்கையாளர்களின் கருத்துக்களைச் சார்ந்தே தங்களைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றனர்.

’ஒரே விலை’

மற்ற ரீடெய்ல் ஸ்டோர்களுடன் ஒப்பிடுகையில் இவர்களது பொருட்களின் விலை நியாயமாக இருப்பதால் இன்று வரை தள்ளுபடி அளிப்பதில்லை. இவர்களது பொருட்களின் வகைகள், தரம், சேவை ஆகியவற்றைப் பார்க்கும்போது விலை நியாயமாகவே இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

”1968-ம் ஆண்டு முதல் ’ஒரே விலை’ என்பதைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். வாடிக்கையாளர்கள் விலை அதிகம் என்றாலும் அதிகமான பொருட்களை வாங்கியதாக தெரிவித்தாலும் விலையை குறைப்பதில்லை. வாடிக்கையாளர்கள் வாங்கும் அளவை வைத்து அவர்களை தரம் பிரிப்பதில்லை. ஜோதி டெக்ஸ்டைல்ஸைப் பொருத்தவரை அனைத்து வாடிக்கையாளர்களும் சமமாக மதிக்கப்படவேண்டும். இதனால் வாடிக்கையாளரின் நன்மதிப்பையும் நற்பெயரையும் பெற்றனர்.”

மற்ற ஸ்டோர்களுடன் ஒப்பிடுகையில் இவர்களது விலை சற்றே கூடுதலாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டாலும் மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் பொருளின் தரத்தைக் கொண்டு வாடிக்கையாளர்கள் திருப்தியடைந்துள்ளனர். இரண்டு ரூபாய் அதிகமாக இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கும் மேலாக அவர்கள் ஸ்டோரில் வாங்கிய புடவை நல்ல நிலையில் இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். சிலர் தங்கள் திருமணத்திற்காக வாங்கிய புடவை 20 வருடங்களுக்கு மேலாகியும் கிழியாமல் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். 

image


தரமே தாரக மந்திரம்

பொருட்களை வழங்குவோர்களில் தரமானவர்களுடன் மட்டுமே இணைந்து செயல்பட்டனர். இவரது அப்பா துணிகள் குறித்து நன்கறிவார் என்பதால் சிலர் குறைவான விலையோ அல்லது கட்டணங்களில் சலுகையோ வழங்கினாலும், தரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பார்.

நற்பெயர் உருவானது

திருமணம், பிறந்தநாள், வெளிநாடு பயணம் போன்ற நிகழ்வுகள் வந்தால் மக்களுக்கு உடனே நினைவிற்கு வருவது ஜோதி டெக்ஸ்டைல்ஸ் மட்டுமே. இந்த அங்கீகாரம் ஒரே நாளில் வந்ததல்ல. பல ஆண்டுகளாக மெல்ல மெல்ல இப்படிப்பட்ட நற்பெயர் உருவானது. பல அடுக்குகளைக் கொண்ட ஸ்டோர்களில் உள்ள ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் இனிமையாக நடந்துகொள்ள மாட்டார்கள். ஆனால் ஜோதி டெக்ஸ்டைல்ஸில் பணிபுரியும் ஊழியர்கள் இனிமையாக நடந்துகொள்வார்கள் என்பது மக்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. இவ்வாறான அனுபவங்களை அவர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

”வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் அல்லது சண்டையில் ஈடுபட்டால் அந்தப் பொருளைப் பார்க்கும்போதே அவர்களுக்கு அந்த மோசமான சம்பவம் நினைவிற்கு வரும். எனவே நல்ல தருணங்களை ஏற்படுத்தி மகிழ்ச்சியான மனநிலையில் அவர்களுக்கு பொருளை வழங்குவோம்.”

விற்பனைப் பொருட்களின் வகைகள்

புடவை, வேட்டி, ஷர்டிங், சூட்டிங், ப்ளவுஸ் துணி ஆகிய டெக்ஸ்டைல் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. 1988-ம் ஆண்டு ரெடிமேட் பிரிவைத் துவங்கினோம். தற்போது சின்னக்குழந்தை முதல் முதியோர் வரை அனைவருக்குமான டெக்ஸ்டைல் மற்றும் ரெடிமேட் உடைகள் கிடைக்கும் என்றார்.

”சில தினங்களுக்கு முன்பு ஒரு முதியவர் ஒரு ஆடை வகை குறித்து விசாரித்தார். அது நமது தாத்தா காலத்தில் வழக்கில் இருந்த ஆடை வகை. ஆனால் அது எங்களிடம் இல்லை. எங்களது சப்ளையரிடமும் விசாரித்தோம். கிடைக்கவில்லை. 50 அல்லது 60 வருடங்களாக ஒருவர் பயன்படுத்தி வந்த ஆடை வகை கிடைக்காமல் போனால் அவர் மனம் வருந்துவார் என்று நாங்கள் அந்த துணி வகையை வரவழைத்து ஐந்து மீட்டர் துணியை அவரிடம் ஒப்படைத்தோம். இப்படிப்பட்ட சில பொருட்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறைகூட விற்பனை ஆகலாம். இருந்தும் அந்த முதியவரை திருப்திப் படுத்தியதில் எங்களுக்கு மகிழ்ச்சி.” என்றார்.

ப்ளேசர்ஸ், கெப்ரீஸ், குர்திகள், லெக்கிங்ஸ், அனார்கலிஸ், ஃப்ராக், பார்ட்டி கௌன் என அனைத்து வகையான ஆடைகளும் ஜோதி டெக்ஸ்டைல்ஸில் கிடைக்கிறது.

ஆன்லைன் விற்பனையினால் ஏற்படும் பாதிப்பு

ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் இவர்களது ஆஃப்லைன் ஸ்டோருக்கு அதனால் எந்தவித பாதிப்பும் இருக்காது என்றார் கார்த்திகேயன். திடீரென ஆஃப்லைன் ஸ்டோர்கள் அழிந்துவிடாது. அதில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் நிலையைக் கருதி அரசாங்கம் நிலையை கட்டுக்குள் வைத்திருக்கும். இவர்களும் தங்களது தரமான சேவை மூலம் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர்.

இந்தியா பாரம்பரியம் நிறைந்த நாடு. குறிப்பாக ”தமிழ்நாட்டில் ஒரு பட்டுப்புடவை எடுக்கவேண்டும் என்றால் குறைந்தது 20 பேர் ஒன்றாகச் செல்வார்கள். பண்டிகை அல்லது விசேஷ நிகழ்வுகளுக்கு ஆடை எடுக்கும்போது அதைத் தொட்டு உணர்ந்துதான் எடுப்பார்கள். இதை ஆன்லைனில் செய்ய இயலாது,” என்கிறார்.

ஐடி துறை வளர்ச்சியடைந்து டிஜிட்டல்மயமானபோதும் சில மதிப்புமிக்க விஷயங்கள் நம்மை விட்டுச் செல்வதில்லை. உங்கள் அம்மாவின் பிறந்தநாளன்று கூரியர் நபர் மூலம் பூங்கொத்து கொடுத்தால் நன்றாக இருக்குமா? அப்படிச் செய்தால் உங்களது கடமை முடிந்ததா? இப்படி யோசித்துப் பாருங்கள்! உங்கள் அம்மாவிற்கு மிகவும் பிடித்த துணி வகையில் பிடித்த நிறத்தில் கைகளால் தொட்டு உணர்ந்து அவருக்கு பரிசளித்தால்..? என்று கேட்கிறார்.

எதிர்கால திட்டம்

அடுத்த இரண்டாண்டுகளுக்கு பெரிய திட்டம் ஏதும் இல்லை. எனினும் வளசரவாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய ஸ்டோரில் முழு வீச்சுடன் செயல்பட்டு வாடிக்கையாளர் சேவையை விரிவுபடுத்த விரும்புகின்றனர். இவர்களுக்குள் இந்த ஸ்டோரை A ஸ்டோர் என அழைக்கின்றனர். புதிய ஸ்டோரை B ஸ்டோர் என அழைக்கின்றனர். இவர்களது நண்பர்கள் CDEF ஸ்டோர்கள் எப்போது திறக்கப்படும் என்று கேட்கின்றனர். தமிழகம் முழுவதும் இல்லையென்றாலும் சென்னை முழுவதும் செயல்பட கடுமையாக உழைத்து வருகின்றனர்.


Add to
Shares
4.8k
Comments
Share This
Add to
Shares
4.8k
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக