தாபாவில் துவங்கி 33,000 சதுர அடி ரிஸார்ட் உரிமையாளரான லூதியானா தொழில் முனைவோர்!

இமாச்சல பிரதேசத்தில் Treeoise ரிஸார்ட்டை உருவாக்கியது, அன்குஷ் கார்க்கருக்கு கனவு நினைவானது போல இருந்தது. அவரது தொழில்முனைவு பயணத்தின் வெற்றி படிக்கட்டாக இது அமைகிறது.
14 CLAPS
0

அன்குஷ் கார்க்கர் தனது 13வது வயதில் , லூதியானாவில் தந்தையின் கம்பளி வர்த்தகத்தில் உதவியாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். வேலைக்காக ஒருவரை நியமித்துக்கொள்ள குடும்ப வருமானம் அனுமதிக்காததால் அவரே உதவியாளராக செயல்பட்டார்.

குடும்பம் நிறைய கஷ்டப்பட்டதால், படிப்பு மற்றும் வர்த்தகம் இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டியிருந்தது, என இந்த நாட்களை நினைவு கூறுகிறார் அன்குஷ். பள்ளி முடிந்ததும் அவர் தனது தந்தையின் கடைக்குச்சென்று உதவுவார்.

எனினும் குடும்ப வருமானத்தை சீராக்க தான் வேறு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தவர், 2000 ஆவது ஆண்டில் தந்தையுடன் இணைந்து லூதியானா பேருந்து நிலையத்தில் தாபா உணவகம் ஒன்றை துவக்கினார். அப்போது அவர் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

“ஒரு சிறிய இடத்தில் தாபா துவங்கி, பஸ் மற்றும் லாரி டிரைவர்களுக்கு உணவளித்தோம். இதில் கிடைத்த வருமானம் மூலம், அடுத்த 3 ஆண்டுகளில் 20 அறைகள் கொண்ட சின்ன ஓட்டல் கட்டும் அளவிற்கு ஒரு இடத்தை வாங்கினோம்,” என்கிறார் அன்குஷ்.

2006ல் இவர்கள் லூதியானாவில் வேறு ஒரு ஓட்டலை விலைக்கு வாங்கினர். இதன் தொடர்ச்சியாக, 2020ல் அன்குஷ் இமாச்சல பிரதேசத்தில் பட்டி எனும் இடத்தில் 33,000 சதுர அடியில் ‘டிரியாய்ஸ்’ (Treeoise) ரிஸார்ட்டை அமைத்தார்.

ரிஸார்ட் துவக்கம்

பேருந்து நிலையம் அருகே தாபா நடத்தியதில் இருந்து பிரிமியம் ரிஸார்ட்டை நடத்தும் அளவுக்கு அன்குஷ் வளர்ந்திருக்கிறார். இதனிடையே அவர் ஜோதிடத்தையும் முறையாக கற்றுக்கொண்டிருக்கிறார்.

வாழ்நாள் சேமிப்பு மற்றும் லூதியானா ஓட்டல் வருமானத்தில் இருந்து மூன்று கோடியை ரிஸார்ட்டில் முதலீடு செய்திருப்பதாகக் கூறுகிறார். குத்தகை இடத்தில் அமைந்துள்ள இந்த 20 அறைகள் கொண்ட ரிஸார்ட் நான்கு காட்டேஜ், நான்கு அரங்குகள், பார் மற்றும் விளையாட்டு இடத்தை கொண்டுள்ளது.

2020ல் இந்த ரிஸார்ட் செயல்படத்துவங்கிய போது, லூதியானாவில் அவர் மேலும் ஒரு 42 படுக்கை ஓட்டலை உருவாக்கியிருந்தார். இந்த ரிஸார்ட் லெமன் டிரி உள்ளிட்ட ரிஸார்ட்களுடன் போட்டியிடுகிறது.

கொரோனா பாதிப்பு

2020 பிப்ரவரி மாதம் ட்ரியாய்ஸ் ரிஸார்ட்டை துவக்கியபோது, இதன் வர்த்தகத்திற்கு கொரோனா பெருந்தொற்று பெரும் சோதனையாக அமையும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

“மார்ச் 22ம் தேதி பிரதமர் மோடி, ஊரடங்கை அறிவித்தார். பொதுமுடக்கம் நீண்ட நாள் இருக்கும் என உணர்ந்து, ரிஸார்ட் ஊழியர்களுக்குத் தேவையான பொருட்களை சேமித்து வைத்தோம். ஆனால் தொடர் பொது முடக்கம் சவாலாக அமைந்தது,” என்கிறார் அன்குஷ்.

பெருந்தொற்றால் ஓட்டல் துறை மோசமாக பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஓட்டல்களில் 34 சதவீத அறைகளே நிரம்பியிருந்ததாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

2019ல் முதல் காலாண்டில் 70 சதவீத அறைகள் நிரம்பியிருந்தன. பொதுமுடக்கம் மற்றும் பயண கட்டுப்பாடு காரணமாக இது குறைந்தது. எனினும், ஆண்டு இறுதியில் மீண்டும் அதிகரிக்கத்துவங்கியது.

பொதுமுடக்கத்தின் போது, லூதியானாவில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ள ரிஸார்ட்டுக்கு பயணம் செய்து ஊழியர்களைக் கவனித்துக்கொள்வது சவலாக இருந்தது என்கிறார் அன்குஷ்.

பொதுமுடக்கத்தின் முதல் சில மாதங்களுக்கு பிறகு, இந்த ரிஸார்ட் தனிமை பகுதியாக சேவை அளித்தது.

“அருகே உள்ள மல்கோத்ரா மருத்துவமனையுடன் கூட்டு வைத்துக்கொண்டு, அவர்களுக்குத் தேவையான தனிமைப்படுத்தல் வசதியை அளித்தோம்,” என்கிறார்.

பொது முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டதும் ரிஸார்ட் செயல்பாடு மேம்பட்டது. 2021 மார்ச் மாதம் வரை ரூ.1.20 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கிறார். பஞ்சாபி வீடியோ பாடல்கள் பதிவுக்கும் ரிஸார்ட் வாடகைக்கு விடப்பட்டது.

எதிர்காலத் திட்டம்

ரிஸார்ட்டை மேலும் மேம்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும், ஸ்பா ஒன்றை துவக்க இருப்பதாகவும் அன்குஷ் தெரிவிக்கிறார். தந்தையின் பழைய வர்த்தகத்த மேம்படுத்த கம்பளி போர்வை ஆலை அமைக்கவும் திட்டமிட்டுளார்.

“யாரும் பெரிய மரமாக பிறப்பதில்லை. விதையில் இருந்து தான் வளர்ந்து வர வேண்டும்,” என தனது தொழில்முனைவு பயணத்தை அவர் விவரிக்கிறார்.

ஆங்கில கட்டுரையாளர்: பாலக் அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்