‘துள்ளுவதோ இளமை முதல் ஹாலிவுட் வரை' - வலிகளால் தன்னை செதுக்கிக் கொண்ட கலைஞன் தனுஷ்!

By MalaiArasu|20th Dec 2020
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

ஒல்லியான தேகம், மாநிறம், மீசைக்கூட அரும்பாத பள்ளி மாணவனுக்கே உரிய முகம். ஆம்! இப்படித்தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அந்த இளம் நடிகன். அப்போது அவரைக் கேலி செய்தவர்கள் நினைத்திருக்கமாட்டார்கள், பின்னாளில் இந்த இளைஞன் ஹாலிவுட்டில் கெத்தாக கால் பதிக்கப்போகிறான் என்று. தென்னிந்திய யூடியூப் வியூஸ்களில் ரெக்கார்ட் பிரேக்கராக மாறுவார் என யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. காலம் எல்லாத்தையும் மாற்றியது.


எத்தனையோ அவமானங்கள், புறக்கணிப்புகளைத் தூரத்தள்ளி, தன்னையே செதுக்கிக் கொண்டவர் தான் தனுஷ். பொதுவாக சினிமாவில் ஹீரோ என்றால், நல்ல உடல்வாகு, வெள்ளை நிறம், மிடுக்கான தோற்றம் கொண்டவர் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இப்படியிருந்தால் தான் அவரை மக்கள் ஹீரோவாக ஏற்றுக்கொள்வார்கள் என்ற ஸ்டிரியோடைப்பை உடைத்து, 2002ம் ஆண்டு ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தார் தனுஷ். அவரது அப்பா கஸ்தூரி ராஜா தான் அவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.

தனுஷ்

யுவன்சங்கர் ராஜா இசையில் வெளியான ‘நெருப்பு கூத்தடிக்குது’ பாடல் இன்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து 2003ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘காதல் கொண்டேன்’ படம் மூலம் அவரது நடிப்புத் திரை ரசிகர்களிடையே கவனம் பெற்றது.


2வது படத்திலே பிலிம்பேர் விருத்துக்கு பரிந்துரைக்கப்பட்டார் தனுஷ். ஆரம்பத்தில் அவரை பலரும் உருவ கேலி செய்தனர். அவருடை உடல் குறித்து, ‘சினிமாவில் தாக்குபிடிக்கமாட்டார்’ என்றெல்லாம் பேசி விமர்சித்தனர். இது எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ள தனுஷ், தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார்.


அடுத்தாக வெளியான ‘திருடா திருடி’ படத்தில் மன்மதராசா பாடலுக்கு அவர் ஆடிய நடனம் தமிழ்சினிமா ரசிகர்களை ‘யார் இந்த தனுஷ்?’ என உற்றுநோக்க வைத்தது. தனக்கு நடிப்பு மட்டுமல்ல, நடனமும் அத்துப்படி என்று சொல்லாமல் சொன்னார். ’புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’, ’சுள்ளான்’, ’ட்ரீம்ஸ்’ ’தேவதையைக் கண்டேன்’, ’அது ஒரு கனாக்காலம்’ படங்கள் அவருக்கு பெரிதாக கை கொடுக்காத நிலையில், தனுஷின் மாஸ்டர் பீஸை தேடிக்கொண்டிருந்தது திரையுலம். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி, 2006ம் ஆண்டு ’புதுப்பேட்டை’ படத்தின் மூலம் மீண்டும் மாஸ் என்ட்ரி கொடுத்தார்.

’கொக்கி குமாரு’ கேரக்டர் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரின் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்தது. ஆரம்பத்தில் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும், காலம் செல்ல செல்ல அந்த படத்தையும், தனுஷின் மிரட்டலான நடிப்பையும் கொண்டாடித்தீர்க்கின்றது தமிழ் திரையுலகம்.

தொடர்ந்து, திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன், குட்டி, உத்தமபுத்திரன், பரட்டை என்கிற அழகுசுந்தரம் போன்ற கமெர்ஷியல் படங்களில் நடித்த தனுஷ், 2011ல் ஆடுகளம் படம் மூலம் தேசிய விருதுக்கு தயாரானார். அவர் மீது வைக்கப்பட்ட உருவகேலியை தவிடுபொடியாக்கி, தன்னைக்கண்டு சிரித்தவர்களை அன்னாந்து பார்க்க வைக்கும் வகையில், தேசிய விருதை சொத்தமாக்கினார்.


3 படத்தில் இடம்பெற்ற ‘வொய் திஸ் கொலவெறி’ பாட்டை உலகெங்கிலும் ஒலிபரப்பச் செய்தவர். அதுவரை அப்படியொரு ஹிட்டை தமிழ்சினிமா பார்த்திருக்கவில்லை. யூடியூப் பெரிய அளவில் பேசப்படாத அந்த நாட்களில் வியூஸ்களை அள்ளியவர். ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்தால் பல்வேறு இடங்களில் அவமதிப்புகளை சந்தித்த தனுஷ், ஆங்கிலம் கலந்த தமிழில் பாட்டெழுதி உலகம் முழுக்க தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டார். இந்தியாவின் மிகப்பெரிய திரைத்துறையான பாலிவுட் இந்த பாடலை மெச்சியது.

dhanush

இவரால் இது முடியாது என்று யாராவது சொல்லிவிட்டால் போதும், அதை கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் தனி முத்திரை பதித்துக்கொண்டிருப்பவர் தனுஷ். அதனாலோ என்னவோ அவரை விமர்சித்தவர்கள் அடங்கிவிட்டனர். நடிப்பு அல்லது நடனம் இரண்டில் ஒன்றில் கோலோச்சுபவர்கள் அதிகம். ஆனாலும்,

அசுரன், வடசென்னை போன்ற படங்களில் நடிப்பிலும் மிரட்டி அதே நேரத்தில் ரௌடி பேபி பாடல் மூலம் சாய் பல்லவிக்கு டஃப் கொடுக்கும் வகையில் நடனமாடி ஆச்சரியபடுத்துனார். தென்னிந்திய சினிமாவின் வியூஸை இந்திய அளவில் பேச வைத்ததில் அவருக்கு முக்கியமான பங்குண்டு.

வெறும் நடிகராக மட்டும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள விரும்பாத தனுஷ், இயக்குநர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் என்று பல்வேறு பரிணாமங்களில் தன்னை வளர்த்துக்கொண்டார். சொல்லப்போனால் செதுக்கிக்கொண்டார்.


தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டில் ராஞ்சனா, ஷமிதாப் போன்ற படங்களில் நடித்து இன்று ஹாலிவுட்டில் அவென்ஜர்ஸ்: எண்ட்கேம் இயக்குனர்கள் ரூஸோ பிரதர்ஸ் அந்தோனி மற்றும் ஜோவின் அடுத்த படமான 'தி கிரே மேன்' படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளார்.

Gray man

பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தயாரித்து, உருவாக்க இருக்கும் The Gray Man அதிக செலவில் எடுக்கவுள்ள பெரிய பட்ஜெட் படமாகச் சொல்லப்படுகிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் ரகமான இப்படத்தில், தனுஷ்; பிரபல நடிகர்கள் ரயான் கோஸ்லிங் மற்றும் க்ரிஸ் இவன்ஸ் உடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இது பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள தனுஷ்,

“ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த ஒரு அற்புதமான படத்தில் நான் பங்கு வகிப்பதில் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். உலகளவில் உள்ள எனது ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை ஆண்டுகள் எனக்கு அளித்துள்ள அனுபுக்கும் ஆதரவுக்கும் நன்றி,” என தெரிவித்துள்ளார்.

உண்மையில் தனுஷ் ஒரு ஆச்சரியம். ஒரு பேட்டியில் கூட,

“ஆந்திராவுல அப்போ ஷூட்டிங் நடந்துட்டு இருக்கு. சுத்தியிருக்குறவங்க சிரிக்கிறாங்க. இவன் நடிகனாம், நிஜமா இவன் ஹீரோவா?’ என்று சொல்லி அந்த கூட்டமே சிரித்தது,” என்று கூறியிருந்தார் தனுஷ். அந்த அவமானங்களும், வலிகளும், வேதனைகளும் தான் இன்று தனுஷ் என்ற பன்முகத்திறமைகொண்ட ஒருவரை உருவாக்கியிருக்கிறது. இன்று உலக அளவில் தமிழ் சினிமாவை திரும்பிப்பார்க்க வைத்திருக்கும் தனுஷின் வளர்ச்சி என்பது அவ்வளவு எளிதாக நிகழ்ந்துவிட்ட ஒன்றல்ல..


வாழ்த்துக்கள் தனுஷ்!