வீட்டை சிஎஸ்கே கலரில் பெயின்ட் அடித்த ரசிகருக்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி!
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020யை இந்திய மக்கள் ஆரவாரத்தோடு கண்டு களித்து வருகின்றனர். ஆனால் தல தோனி கேப்டனாக இருக்கும் சி.எஸ்.கே அணி பின்னடைவை சந்தித்து வருவதால், சென்னை மற்றும் தோனி ரசிகர்கள் கொஞ்சம் சோர்ந்து போய்விட்டனர்.
டாப் 4-ல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் வரமுடியாமல் போனாலும், அந்த அணியின் விசுவாசமான ரசிகர்கள் இன்னும் சி.எஸ்.கே-வுக்கு விசில் போட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். அதில், சென்னை அணிக்கு தனது ஆதரவைக் காண்பிப்பதற்காக, தோனி ரசிகர் ஒருவர் தனது வீட்டை சி.எஸ்.கே வண்ணத்தில், அதாங்க பிரகாசமான மஞ்சள் நிறத்தில் பெயின்ட் அடித்துள்ளார்.
இந்தியா டுடேயின் செய்தியின்படி, தமிழ்நாட்டில் கடலூரில் அரங்கூர் என்னும் ஊரில் வசிக்கும் கோபிகிருஷ்ணன் என்ற தீவிர தோனி ரசிகர், துபாயில் வாழ்பவர். கொரோனா வைரஸ் காரணமாக தன் சொந்த ஊருக்கு திரும்பிய கோபி, தொடர்ந்து சி.எஸ்.கே அணிக்கு சியர் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் சென்னை அணி மோசமாக ஆடத்தொடங்கியதால் மக்கள் பலரும் தல தோனி மற்றும் சி.எஸ்.கே வீரர்களை திட்ட ஆரம்பித்ததை அவரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.
“ஐபிஎஸ் போட்டியை நேரில் கண்டுகளிக்க முடியவில்லை. தல தோனி மற்றும் சென்னையின் ஆட்டமும் எதிர்ப்பார்த்தபடி இல்லை அதனால் மனமுடைந்து போனேன். ஆனால் சிலர் அதை நெகட்டிவா விமர்சிப்பது எனக்கு பிடிக்கவில்லை. தோனி மற்றும் சிஎஸ்கே அணியை பாசிட்டிவ் ஆக்கி உற்சாகப்படுத்த, நான் 1.5 லட்ச ரூபாயில் என் வீட்டை சிஎஸ்கே அணியின் வண்ணத்தில் பெயின்ட் அடித்தேன். தல எப்பவுமே தல தான்...” என்கிறார் கோபிகிருஷ்ணன்.
வீட்டு முகப்புப் பக்கம் முழுவதும் பளிச் மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடித்ததோடு மட்டுமல்லாமல், ’ஹவுஸ் ஆப் தோனி ஃபேன்’ என்று எழுதியுள்ளார். ஆங்காங்கே தோனி படமும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் பெயரோடு, ’விசில் போடு’ என்றும் எழுதியுள்ளார்.
கோபி கிருஷ்ணனின் வீடு வீடியோ வைரலாக, எல்லா ஊடகமும் அதை கவர் செய்தது. பின்னர் சிஎஸ்கே அணியும் அந்த வீடியோவை பதிவிட்டது. இதனிடையே நேற்று சிஎஸ்கே, தனது டிவிட்டர் பேஜில் தல தோனியின் வீடியோ ஒன்றை பதிவிட்டது.
இதில், சிஎஸ்கே அணியின் ரசிகர் கோபிகிருஷ்ணனின் வீடு பற்றியும் அவரின் அன்புக்கு நன்றி தெரிவித்தும் பேசி இருந்தார் தோனி. இது அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக நிச்சயம் இருந்திருக்கும். வீடியோவில் பேசிய தோனி,
“அந்த ரசிகரின் வீட்டை இன்ஸ்டாவில் பார்த்தேன், அவர் என் மீதும், சிஎஸ்கே மீதும் வைத்துள்ள அன்பு இதில் வெளிப்படுகிறது. ஒருவர் தன் வீட்டை இப்படி பெயின்ட் செய்வது சாதரண விஷயமல்ல, அதற்கு அவரின் குடும்ப ஒத்துழைப்பும் இருந்திருக்கும். இது ஒரு பதிவு போல் இல்லை, அடுத்த நாளே மாற்றிவிட, இது நிரந்திரமாக இருக்கக்கூடிய ஒன்று. அவர் மற்றும் அவரின் குடும்பத்துக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்,” என்றார்.
சென்னை சிங்கங்கள் ஜெயிச்சாலும், தோற்றாலும் அதன் ரசிகர் பட்டாளம் என்றும் தல தோனி பக்கம் தான் என்பதற்கு கோபிகிருஷ்ணன் போன்ற தெறி ரசிகர்களே சான்று.