குறைந்த செலவில், பேஷன் ஆடைகளை விளம்பரப்படுத்த உதவும் 3டி தொழில்நுட்பம் இதோ!
இந்திய ஆடைகள் துறை அடுத்த தலைமுறைகளுக்கான 3டி தொழில்நுட்பத்தை கொண்டு வருகிறது.
ஐ.ஐ.டி மெட்ராஸ் மற்றும் இன்குபேட்டட் ஸ்டார்ட்அப் டி.ஆர்.ஐ 3டி (TRI3D), கோவிட் -19 சவால்களை சமாளிக்க உதவும் வகையில் இந்திய ஆடைகள் துறைக்கு அடுத்த தலைமுறைகளுக்கான 3டி தொழில்நுட்பத்தை கொண்டு வருகிறது.
கடந்த ஒரு வருடத்தில் இந்தியா, இலங்கை மற்றும் அபுதாபியில் TRI3D இன் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி 80,000க்கும் மேற்பட்ட ஆடைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இந்த ஸ்டார்அப் ஆனது பாரம்பரிய இந்திய ஆடைத் தொழிலின் டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.
ஐ.ஐ.டி மெட்ராஸ் மற்றும் நாஸ்காம்-இன்குபேட்டட் ஸ்டார்ட்அப் ‘டி.ஆர்.ஐ 3 டி(TRI3D)’ ஆகியவை கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சவால்களில் இருந்து தப்பிக்க, சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு உதவும் வகையில் பாரம்பரிய இந்திய ஆடைகள் துறைக்கு 3டி தொழில்நுட்பத்தைக் கொண்டு வருகிறது.
தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதில் அதீத ஈடுபாட்டை காட்டிவருகின்றனர். இதன்காரணமாக இ-காமர்ஸ் வணிகம் மிகப்பெரிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. ஆனால், இதில் உள்ள முக்கியமான சவால்களில் ஒன்று, இந்த ஆன்லைன் ஆடைகளுக்கான வலைதளங்களில் பதிவேற்றப்பட வேண்டிய ஆடைகளின் படங்களை உருவாக்குவது. இந்நிலையில் அப்படியான சவால்களுக்கு உதவி செய்யும் தொழில்நுட்பத்தைதான் TRI3D கொண்டுவருகிறது.
இது, ஆடைகளைத் தனித்துவமாகக் காட்சிபடுத்துகிறது. 3டி வடிவில் அருகிலிருந்து பார்க்கும் வகையில், சேலைகளை அழகான முறையில் காட்சிப்படுத்த உதவுகிறது. யதார்த்தமான புகைப்படங்களைப் போலவே தோற்றமளிக்கும் ஆடைகளை மக்கள் முப்பரிமாணத்தில் காணமுடியும்.
போட்டோஷூட்டுகள் நடத்தி ஆடைகளை காட்சிபடுத்த முடியாமல் தவிக்கும் சிறுவணிகளர்களுக்கும் இது வசதியாக இருக்கும். TRI3D ஆல் உருவாக்கப்பட்ட படங்கள் பிரபலமான இ-காமர்ஸ் வலைத்தளங்களில் ஏற்றுக்கொள்ளத்தக்கவை.
டி.ஆர்.ஐ 3 டி ஸ்டார்ட்அப்-பின் இணை நிறுவனர் மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸின் முன்னாள் மாணவரான கிருஷ்ணா சுமந்த் அல்வாலா கூறும்போது, “ஒரு நாள் முழுவதும் போட்டோஷூட்டை ஏற்பாடு செய்வது உண்மையில் கடினமான பணி. மேலும் மாடல்களை வரவழைத்து அவர்களுக்கு தொடர்ந்து சேலைகள் உள்ளிட்ட ஆடைகளை மாற்றவைத்து கடுமையான உழைப்புக்குப் பின் அந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவை எளிதில் புறக்கணிக்கவும் படுகின்றன.
”மேற்கண்ட 3டி தொழில்நுட்பத்தின் மூலம் விரும்பிய படம் எந்த சமரசமும் இல்லாமல், சில நிமிடங்களில் உருவாக்கப்படுகிறது. ஃபோட்டோஷூட் மூலம் எடுத்த படங்களை விட உயர்ந்ததாக இல்லாவிட்டாலும், அதற்கு இணையான தரமான படங்கள் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வருடத்தில் இந்தியா, இலங்கை மற்றும் அபுதாபியில் TRI3D இன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 80,000 ஆடைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் 50 இடங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட புதிய தலைமுறை தொழில்முனைவோர் ஏற்கனவே இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். TRI3D இப்போது இந்தியா முழுவதிலும் இருந்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது, தனிநபர் நெசவாளர்கள் முதல் பெரிய சில்லறை பிராண்டுகள் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் வரை பல்வேறு தரப்பினரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
டி.ஆர்.ஐ 3 டி ஸ்டார்ட்அப்-பின் நிறுவனர்களில் ஒருவரான நிதீஷ் ரெட்டி பர்வதம் கூறும்போது,
“யதார்த்தை மீறாமல், சேலையின் தன்மையை அப்படியே காட்சிப்படுத்துவது இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பம்சம். எங்கள் மென்பொருள், தைக்கப்பட்டது போன்ற தோற்றத்தையும், பலவிதமான போஸ்களையும் காட்சிப்படுத்தும் திறன் மிக்கது. பல சிறந்த சில்லறை நிறுவனங்கள் எங்களை ஊக்குவித்து, ஆடைகளின் யதார்த்தத்தை வடிவமைக்க உதவியுள்ளனர்.
தென்னிந்தியாவில் ஒரு பெரிய பிராண்டை, இந்தியாவின் மிகப்பெரிய பேஷன் இ-காமர்ஸ் பிளேயர்களுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றினோம். அதுமட்டுமல்லாமல் சென்னையில் மிகப்பெரிய சேலை சில்லறை விற்பனையாளர்களுடன் பணியாற்றுகிறோம், என்றார்.
TRI3D தற்போது சில்லறை விற்பனையாளர்கள் மட்டுமல்ல, மொத்த விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், பி 2 பி விநியோகஸ்தர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்களால் கூட சில சந்தர்ப்பங்களில் நேரடியாக பயன்படுத்தப்படுகிறது. சேலை அல்லது துணி வைத்திருக்கும் எவருக்கும் விற்க இது பொருத்தமானது.
இவர்கள் தற்போது இந்தியா முழுவதிலும் இருந்து 150க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளனர். அவர்களில் பலர் மெட்ரோ நகரங்களைத் தவிர. மற்ற நகரங்களான காஞ்சீபுரம், திருப்பூர், சேலம், கோயம்புத்தூர், மங்களகிரி, சிராலா, போச்சப்பள்ளி, இல்கால், மைசூர், நாசிக், பனாரஸ், சாந்தேரி போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கத்து.
3டி வடிவில் உங்கள் பேஷன் ஆடைகளை பெற தொடர்பு கொள்ள்: TRI3D