வாக்காளர் ஓட்டு ‘மை’ அடையாளம் காட்டினால் ஓட்டல்களில் தள்ளுபடி, சிக்கன் சலுகை விலையில்!

தேர்தல் 2019 நடக்கும் இவ்வேளையில், தமிழகத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவை ஏற்படுத்த, தமிழகம் முழுதுமுள்ள 10ஆயிரம் ஓட்டல்களில் வாக்காளர்களுக்கு 10% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது!

12th Apr 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

போடுங்கம்மா ஓட்டு எங்க சின்னத்தை பார்த்து என்று தமிழகத்தில் திரும்பிய திசையெல்லாம் கட்சிக்கொடிகளுடன் தொண்டர் படை வலம் வந்து கொண்டிருக்கின்றன. வாக்காளர்களை தங்கள் வசம் ஈர்க்க தேர்தல் அறிக்கைகள், வாக்குறுதிகள் என உறுதிமொழிகளை அள்ளித் தெளிக்கின்றனர் அரசியல் தலைவர்கள். திராவிடக் கட்சிகள் முதல் புதிதாக உதயமான கட்சிகள் வரை தங்களுக்கு தமிழகத்தில் எத்தனை சதவிகிதம் வாக்கு வங்கி இருக்கிறது என்பதை எடை போட்டு பார்க்கும் தேர்தலாக நாடாளுமன்ற தேர்தல் அமைந்துள்ளது. தங்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கேட்க, வாக்களிக்க வந்தால் போதும் என்று தேர்தல் ஆணையம் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.

1989ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை நடைபெற்றுள்ள நாடாளுமன்ற தேர்தல்களில் சராசரியாக 1 கோடி பேர் வாக்களிப்பதில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமே 73.7 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. எனவே அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க மக்கள் முன் வரவேண்டும் என்று தேர்தல் ஆணையம் நடிகர்களை வைத்து விளம்பரம் செய்து வருகிறது.

குறிப்பாக ஜனவரி 31, 2019 வரை சுமார் 9 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 18 முதல் 19 வயதிலான இந்த புதிய வாக்காளர்கள் நிச்சயம் வாக்களிக்க வரவேண்டும் என்பதை நோக்கமாக வைத்து தமிழக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இதே போன்று இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில் ஆசியாவிலேயே சிறந்த மனநல மருத்துவமனையான கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நோயில் இருந்து தேறிய 192 பேருக்கு வாக்களிப்பதற்கான பயிற்சி அளித்து அவர்களுக்காக ஏப்ரல் 18ம் தேதி மருத்துவமனை வளாகத்திலேயே ஒரு வாக்குச்சாவடி அமைக்கவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வாக்களிப்பது ஜனநாயகக் கடமை அந்தக் கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முயன்று வருவது போல வர்த்தகர்களும் தாமாக முன்வந்து வாக்காளர்களுக்கு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். வாக்களித்துவிட்டு வந்து விரலில் ‘மை’ அடையாளத்தை காட்டினால் சலுகை என ஒருவர் பின் ஒருவராக தாங்கள் சார்ந்த வணிகத்தில் தள்ளுபடிகளை அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் செயலாளர் ஆர். ஸ்ரீனிவாசன் இது பற்றி கூறுகையில்,

“மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கச் செல்ல வேண்டும், வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலேயே சாப்பாடு கட்டணத்தில் 10% தள்ளுபடியை அறிவித்துள்ளோம். ஏப்ரல் 18 தமிழகத்தில் வாக்குப்பதிவு தினத்தன்று வாக்களித்து விட்டு வந்ததற்கான அடையாள மையை காண்பித்து மாலை 6 மணிக்கு மேல் ஓட்டலுக்கு வந்து சாப்பிடுபவர்களுக்கு இந்த சலுகைக் கிடைக்கும்,” என்றார்.

தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் கீழ் சரவணபவன், சங்கீதா, ஹாட் சிப்ஸ் உள்ளிட்ட சென்னையில் 1200 ஓட்டல்கள் மற்றும் மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் ஓட்டல் உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். குறுகிய காலத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதால் ஓட்டல்களுக்கு இது பற்றி சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளதாகவும் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டல்களுக்கும் இது பொருந்தும், மாநிலம் முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு இது ஊக்கத்தை அளிக்கும். தேசத்திற்காக எங்கள் சார்பில் நாங்கள் செய்யும் ஒரு சிறிய ஜனநாயகக் கடமை இது என்ற கோணத்திலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த கறிக்கடை ஒன்றும் வாக்காளர்களுக்கு சலுகையை அறிவித்துள்ளது. அயனாவரம் சந்தையில் செயல்பட்டு வரும் ராஜாஸ் சிக்கன் & மட்டன் சென்டரின் உரிமையாளர் முரளி பாபு தன்னுடைய கடையில் வைத்துள்ள பேனரில்,

“தவறாமல் வாக்களிப்பீர். ஜனநாயகத்தை காப்பீர். ஏப்ரல் 18 அன்று வாக்களித்ததற்கான அடையாள மையை காண்பித்தால் தன்னுடைய கடையில் ஒரு கிலோ சிக்கனுக்கு ரூ. 50 தள்ளுபடி பெறலாம்,” என்று விளம்பரப்படுத்தியுள்ளார்.

தன்னுடைய அறிவிப்பு குறித்து நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள முரளி பாபு, “வாக்களிப்பது ஜனநாயகக்கடமை மட்டுமல்ல ஒவ்வொருவரின் உரிமை. உங்களின் ஓட்டு வளமான தேசத்தை உருவாக்கும். ஜனநாயகத்தை காக்க ஏப்ரல் 18ம் தேதி வாக்களியுங்கள். இந்திய தேர்தல் ஆணையம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடிகர்கள் மூலம் விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. அதை பார்த்த போது நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே தேசத்திற்காக என்னுடைய ஒரு நாள் லாபத்தை விட்டுக் கொடுக்கலாம் என முடிவு செய்தேன். நான் வெளியிட்டுள்ள அறிவிப்பால் சிலர் வாக்களிக்கச் சென்றால் அதுவே எனக்கு பெரும் மகிழ்ச்சி,” என்று கூறியுள்ளார்.

அப்புறம் என்ன வாக்காளர்களே ஏப்ரல் 18 ஓட்டு போட வசதியா பொது விடுமுறை அறிவிச்சாச்சு. ஓட்டல் கட்டணத்துல சலுகை, லாபத்தை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கும் கறிக்கடைக்காரர் என உங்கள் ஜனநாயகக் கடமையை நீங்கள் நிறைவேற்ற இன்னுமா சலுகை அறிவிப்புகள் வேண்டும்.

லீவு குடுத்துட்டாங்க, வெயில்ல போய் யார் வரிசையில நின்னு ஓட்டு போடுறதுன்னுலாம் யோசிக்காம போய் ஓட்டு போடுங்க பாஸ். நீங்களும் இந்த நாட்டின் குடிமகன் தான் என்ற உரிமையை நிலைநாட்டுங்கள்.  

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India