10 ஆண்டுகளுக்குப் பின் திமுக அறுதிப்பெரும்பான்மை: வரலாறு படைத்துள்ள மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் திராவிட முன்னேற்றக்கழகம் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் 2021ல் ஆட்சி அமைக்கிறது.
10 CLAPS
0

விறுவிறுப்பாக நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கருத்துக்கணிப்புகளை தோற்கடித்துள்ளது மக்களின் இறுதித் தீர்ப்பு. தமிழகத்தில் இரண்டு மாபெரும் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தேர்தலில் மக்களின் தீர்ப்பு என்னவாக இருக்கப் போகிறது என்று இந்தியாவே உற்று நோக்கி இருந்தது.

முன்னாள் முதல்வர் பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் முன்னே வைக்கப்பட்டு வந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுகள் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற முடிவை தங்களது வாக்குகள் மூலம் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

தற்போதைய சட்டப்பேரவையின் பதவி காலம் முடிவடைவதனால் தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிக்கான சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில், சட்டமன்ற தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக 174 இடங்களிலும், காங்கிரஸ்-25, மதிமுக-6, மார்க்சிஸ்ட்-6, இந்திய கம்யூனிஸ்ட்-6, விடுதலை சிறுத்தைகள்-6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-3, மனிதநேய மக்கள் கட்சி-2, தமிழக வாழ்வுரிமை கட்சி-1, மக்கள் விடுதலை கட்சி-1, ஆதிதமிழர் பேரவை-1 ஆகிய கட்சிகள் தேர்தல் களம் கண்டன. அதிமுக கூட்டணியில் அதிமுக 180 இடங்களிலும், பாமக-23, பாஜக-20, தமாகா-6, பெருந்தலைவர் மக்கள் கட்சி-1, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்-1, புரட்சி பாரதம்-1, மூவேந்தர் முன்னேற்ற கழகம்-1, பசும்பொன் தேசிய கழகம்-1 ஆகிய கட்சிகளும் போட்டியிட்டன.

இதுதவிர மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகளும், அமமுக, தேமுதிக, எஸ்டிபிஐ, கோகுல மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் உள்ள 75 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் மே2ம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகளும் அதனைத் தொடர்ந்து மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக, அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆட்சியை யார் அமைப்பார்கள் என்பதற்கு சாட்சியாக கடந்த தேர்தல்களில் சென்னை மாவட்டத்தை யார் தங்களின் வசம் வைத்துக்கொள்கிறார்கள் என்பது அனைவராலும் பார்க்கப்படும். சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வெற்றி பெற்று கோட்டையை தனது வசமாக்கியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை 16 தொகுதிகளில் 15 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட்டது. இதில், புதுமுகங்கள் 9 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் எபினேசர், வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றியழகன், எழும்பூர் தொகுதியில் பரந்தாமன், சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி, விருகம்பாக்கம் தொகுதியில் பிரபாகர் ராஜா, ஆயிரம் விளக்கு தொகுதியில் எழிலன், தி.நகர் தொகுதியில் கருணாநிதி, மயிலாப்பூர் தொகுதியில் த.வேலு, ராயபுரம் தொகுதியில் ஐட்ரீம் மூர்த்தி ஆகிய 9 பேர் போட்டியிட்டனர். வெளியான தேர்தல் முடிவுகளில் புதுமுக வேட்பாளர்கள் 9 பேரும் அபாரமாக வெற்றி பெற்றிருக்கின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் - சேப்பாக்கம் எம்.எல்.ஏ, டாக்டர். எழிலன் - ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ, வெற்றியழகன் - வில்லிவாக்கம் எம்.எல்.ஏ

திமுக தலைவரும் முதல்வர் வேட்பாளருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தனது ஹாட்ரிக் வெற்றியை பெற்றிருக்கிறார். மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட பிறகு விஐபி தொகுதியாக மாறி இருக்கும் கொளத்தூரில் மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் முதலில் சென்று உதவிக்கரம் நீட்டியதால் ஸ்டாலினின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்திருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. நடந்து முடிந்த தேர்தலில் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுக இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி திமுக 126 இடங்களில் தனித்த வெற்றியைப் பெற்று அறுதிப்பெரும்பான்மை பலம் உள்ள கட்சி என்ற வரலாற்றை பதித்துள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 18 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் தலா 2 இடங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 இடங்கள், திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக 4 இடங்கள் என மொத்தம் திமுக கூட்டணி 159 இடங்களில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளன.

ஆளும் அதிமுக 66 இடங்களில் தனித்த வெற்றியையும் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக 4 இடங்களிலும், பாட்டாளி மக்கள் கட்சி 5 இடங்களிலும் என மொத்தம் 75 இடங்களை வென்றுள்ளன.

எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக தமிழகத் தலைவர் எல். முருகன், தேமுதிகவின் பிரேமலதா, அமமுகவின் டிடிவி. தினகரன், நடிகைகள் குஷ்பு, ஸ்ரீப்ரியா உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சி தான் எப்போதுமே என்பதை மக்கள் இந்தத் தேர்தலின் மூலம் உணர்த்தி இருக்கின்றனர். ஜெயலலிதா, கருணாநிதிக்கு அடுத்ததாக மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்ற அந்தஸ்தை பெறுகிறார் மு.க.ஸ்டாலின்.

Latest

Updates from around the world