Bafta விருதுக்கு இந்திய ஸ்கேட்போர்ட் சிறுமி கமலி ஆவணப்படம் பரிந்துரை!
மாமல்லபுரத்தைச் சேர்ந்த 9வயது சறுக்கு விளையாட்டு வீராங்கனை கமலி பற்றிய ஆவணப்படம் இது.
ஒன்பது வயது சறுக்கு பலகை (ஸ்கேட் போர்டிங்) வீராங்கனையான கமலி மூர்த்தியை மையமாகக் கொண்ட ஆவணப்படம் பாப்டா (BAFTA ) விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இந்த 24 நிமிட ஆவணப்படம், கமலி மற்றும் அவரது தாய், பெண் குழந்தைகள் எந்த விளையாட்டிலும் ஈடுபடக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கும் ஆணாதிக்க சமூகம் மற்றும் பழக்கங்களை எதிர்த்து நின்றதை விவரிக்கிறது. லண்டனில் வசிக்கும் நியூசிலாந்து இயக்குனர் சாஷா ரெயின்போ இயக்கிய இந்த படம், பிரிட்டிஷ் ஷார்ட் பிலிம் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மாபல்லபுரத்தில் வசிக்கும் கமலி, ஆறு வயதில் சறுக்கு பலகை விளையாட்டில் ஆர்வம் கொண்டார். லண்டனைச் சேர்ந்த சாஷா, இசை வீடியோ ஒன்றுக்காக இந்தியா வந்திருந்த போது, கமலியை சந்தித்தார். கமலி மற்றும் இதர சறுக்கை பலகை வீராங்கனைகளை மையமாக கொண்ட இசை வீடியோவாக இது அமைந்திருந்தது.
கமலியின் தாயான சுகந்தி, பல தடைகளை மீறி தனது மகள் சறுக்கு பலகை வீராங்கனையாக உருவாவதில் ஆர்வம் காட்டியது சாஷாவை கவர்ந்தது. இதன் காரணமாக ஆவணப்படத்தை உருவாக்கினார். இந்த படம் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.
“நாம் வெற்றியைக் கொண்டாடுவதில் கவனம் செலுத்துகிறோம் என நினைக்கிறேன். ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டதே மிகப்பெரிய விஷயம். இப்போது பாஃப்டா விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய கவுரவம். நாங்கள் எதிர்பார்த்தைவிட அதிகம் நிகழ்கின்றன,” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட ஷார்ட் லிஸ்ட் பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும் பல்வேறு விருதுகளை வென்றது. அட்லாண்டா திரைப்பட விழாவில் அது விருது வென்றது. மும்பை சர்வதேச குறும்பட விழாவில் சாஷா சிறந்த இயக்குனர் விருது வென்றார்.
சர்வதேச சறுக்கு விளையாட்டு வீரரான டோனி ஹாக், சர்வதேச பயிற்சியாளர் ஜேமி தாமசுடன் கமலி பயிற்சி செய்யும் படத்தை பகிர்ந்து கொண்டதை அடுத்து கமலிக், இணையத்தில் வைரலானார்.
ஆறு வயது முதலில் இந்த விளையாட்டில் ஈடுபட்டு வரும் கமலி, நாடு முழுவதும் பயணம் செய்து விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
பாஃப்டா விருதுகளில், கமலியுடன் மற்றொரு சறுக்கு விளையாட்டு படமும் போட்டியிடுகிறது. லேர்னிங் டூ ஸ்கேட்போர்டு இன் ஏ வார்சோன் எனும் அந்த படம், ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுமிகள் எழுத படிக்க கற்றுக்கொள்வதையும், சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவதையும் விவரிக்கிறது. அசார், கோல்ட்பிஷ், தி டிராப் ஆகிய படங்களும் போட்டியில் உள்ளன.
ஆங்கில கட்டுரையாளர்: நிரந்தி கவுதமன் | தமிழில்: சைபர்சிம்மன்