‘நான்கு கால் போர்வீரன்’ - உக்ரைன் மக்கள் பலரின் உயிரைக் காத்த சூப்பர் நாய்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலின் போது 200க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளை கண்டறிந்து உக்ரைன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய பேட்ரோன் எனும் நாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
0 CLAPS
0

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலின் போது 200க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளைக் கண்டறிந்து உக்ரைன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய பேட்ரோன் எனும் நாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

உலகமே ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் உருகுலைந்து கொண்டிருப்பதை கையறுநிலையுடன் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், ஒரே ஒரு நான்கு கால் போர்வீரன் மட்டும் போர்க்களத்தில் புயலாய் செயல்பட்டு 200க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளைக் கண்டறிந்து, ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.

ஆம், நீங்கள் நினைப்பது சரி தான் தனது உயிரை பணயம் வைத்து ‘பேட்ரோன்’ என்ற மோப்ப நாய் மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.

நாய்களின் மோப்ப சக்தி மனிதர்களை விட பல மடங்கு அதிகமானது. அதிலும், சில வகை நாய்களுக்கு எப்படிப்பட்ட பொருளை, எங்கு மறைத்து வைத்தாலும் சரியாக மோப்பம் பிடித்து கண்டறியும் சக்தி உள்ளது. அப்படிப்பட்ட தனித்திறன் கொண்ட நாய்களுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்து காவல்துறை மற்றும் ராணுவத்தில் மோப்ப நாய்களாக பயன்படுத்துவதை பார்த்திருப்போம்.

அவை மனிதர்களால் யூகிக்கக் கூட முடியாத அளவிற்கு பல சாதனைகளைப் படைத்துள்ளன. அப்படிப்பட்ட சாதனை நாயகனாக இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது பேட்ரோன் என்ற உக்ரைன் ராணுவத்தைச் சேர்ந்த நாய் ஒன்று.

‘பேட்ரோன்’ செய்தது என்ன?

பிப்ரவரி 24 அன்று ரஷ்ய படையெடுப்பு தொடங்கியது. உக்ரைன் மீது ரஷ்யா குண்டு மழை பொழிந்து வந்தது. மேலும், உக்ரைனுக்குள் முன்னேறிய ரஷ்ய ராணுவத்தினர் கண்ணி வெடி தாக்குதல்களையும் திட்டமிட்டனர். இதில், 200க்கும் மேற்பட்ட தாக்குதல்களை பேட்ரோன் தனது படைவீரருடன் இணைந்து முறியடித்துள்ளது.

போர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே உக்ரைன் ராணுவத்தைச் சேர்ந்த ‘பேட்ரோன்’ (Patron) என்னும் நாய் எல்லைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட வெடிமருந்துகளையும் கண்ணிவெடிகளையும் கண்டுபிடித்து பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது.

மேலும், உக்ரைனில் இருந்து ரஷ்யா பின்வாங்கிய பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளையும் கண்டறிய பேட்ரோன் உதவி செய்துள்ளது.

கடந்த சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மோப்ப நாய் பேட்ரோன் மற்றும் அதனுடன் பணியாற்றிய மேஜர் மைஹைலோ இலீவ் ஆகியோருக்கு பதக்கங்களை வழங்கி கெளரவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவும் பேட்ரோன் மற்றும் மேஜரை பாராட்டினார்.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் கூறுகையில்,

“எங்கள் நிலத்தில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றும் உக்ரேனிய ஹீரோக்களுக்கு இன்று நான் விருது வழங்க விரும்புகிறேன். எங்கள் ஹீரோக்களுடன் சேர்ந்து, ஒரு அற்புதமான சிறிய பாதுகாவலர் பேட்ரோன், வெடிபொருட்களை அகற்றியதோடு, கண்ணி வெடி பகுதிகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என நமது குழந்தைகளுக்கு கற்பிக்கவும் பயன்பட்டுள்ளார்,” என புகழ்ந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பானப் புகைப்படங்களையும் காணொலிகளையும் பகிர்ந்த உக்ரைனின் தகவல் தொடர்பு மையம்...

"ஒரு நாள், பேட்ரோனின் கதை ஒரு திரைப்படமாக மாறலாம், ஆனால் இப்போதைக்கு, அவர் தனது தொழில்முறை கடமைகளை உண்மையாக செய்துள்ளார்," எனப் பாராட்டியுள்ளது.

பேட்ரோனின் கதை:

சிறிய வெள்ளை மற்றும் பழுப்பு நிறம் கொண்ட ஜாக் ரஸ்ஸல் டெரியர் வகையைச் சேர்ந்த நாயான பேட்ரோன், வடகிழக்கு நகரமான செர்னிஹிவில் பெலாரஸுடனான உக்ரைனின் எல்லைக்கு அருகில் பணியாற்றி வருகிறது. இது ரஷ்ய தாக்குதலில் போதும், பின்வாங்கிய போதும் தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு கடுமையான கண்ணி வெடிகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது.

தகவல் உதவி: ட்விட்டர்

Latest

Updates from around the world