இ-பாஸ் உருவாக்கம் பின்னால் இருக்கும் சென்னை நிறுவனக் குழு!

45 நாட்களில் 31 லட்சம் பேர் பயன்படுத்திய இ-பாஸ் தளத்தின் மென்பொருள் உருவாக்கத்தின் பின்னால் இருந்த சென்னை நிறுவனம் இதை சாத்தியப்படுத்தியது எப்படி?

18th Jun 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

இன்று கொரோனா என்ற ஒற்றைச்சொல் உலகை ஆள்கின்றது. நம்ம ஊரைப் பொறுத்தவரை, கொரோனாவுக்கு அடுத்தப் படியாக மக்கள் அதிகம் இண்டெர்நெட்டில் தேடிய சொல் ‘இ-பாஸ்’.


கொரோனாவால் நாடெங்கும் ஊரடங்கு போடப்பட்டு முடக்கப்பட்டதால் ஆங்காங்கே பலரும் சிக்கித்தவித்தனர். தங்கள் இருப்பிடத்தை விட்டு வேறு ஊர்களில் மாட்டிக் கொண்டவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப, அவசர விஷயங்களுக்காக மற்ற மாவட்டம், மாநிலங்களுக்குச்செல்லமுடியாமல் மாட்டிக் கொண்டனர். இவர்கள் லாக்டவுன் சமயத்தில் பயணம் மேற்கொள்ள, அரசு அறிமுகம் செய்த இ-பாஸ் இருப்பவர்கள் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்படி லட்சக்கணக்கானோர் இந்த இ-பாஸ் கிடைக்க விண்ணப்பம் செய்தனர்.


இத்தனை முக்கியம் வாய்ந்த இந்த இ-பாஸ் மற்றும் அதனை ஆன்லைன் மூலம் பெறும் வசதியை தரும் மென்பொருளை வடிவமைத்து, உருவாக்கிய குழு பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?

வசந்த்

கே.சண்முகம், தலைமை செயலாளர் (இடது). சந்தோஷ் மிஸ்ரா , சிஇஒ TNeGA மற்றும் வசந்த் ராஜன் (வலது) ,

திருமணம், இறப்பு, மருத்துவ அவசரச்சிகிச்சை, பிரசவம், என பலக் காரணங்களுக்காக பயணம் மேற்கொள்ள பலருக்கு உதவிய இந்த இ-பாஸ் பின்னால் இருக்கும் குழுவைப் பற்றி இதோ:


சென்னையில் இருக்கும் மென்பொருள் நிறுவனமான ‘Vertace' கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இவர்கள் தான் தமிழக அரசுக்காக ‘இ-பாஸ்’ மென்பொருளை உருவாக்கி செயலாக்கி உள்ளனர். தமிழக அரசின் TNEGA என்ற மென்பொருள் தொடர்பான இ-கவர்னன்ஸ் கையாளும் துறை, மக்கள் ஊரடங்கு சமயத்தில் அனுமதியுடன் மட்டும் வெளியில் பயணிக்க முடியும் என்ற சூழலில், இ-பாஸ் முறையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டது.


இந்த இ-பாஸ் பின்னால் இருந்த குழு, இதை எப்படி இவர்கள் குறுகிய காலத்தில் சாத்தியப்படுத்தினார்கள் என்பது குறித்து விரிவாக பேசிய Vertace நிறுவனத்தின் நிறுவனர் வசந்த் ராஜன்,

“தமிழக அரசின் TNEGA துறை, இ-பாஸ் பற்றி அறிவிப்பு வந்ததும் ஏப்ரல் 22ம் தேதி என்னை அழைத்து இந்த ப்ராஜக்ட் செய்யச் சொன்னார்கள். 4-5 நாட்களுக்குள் அதற்கான மென்பொருள் சேவையை தயார் செய்யச் சொல்லி எங்களிடம் கொடுத்தார்கள். எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியதும், இதன் முக்கியத்துவம் மற்றும் பொறுப்பை புரிந்து கொண்டு, உடனடியாக அன்று இரவே இதற்கான பணியில் இறங்கினோம்,” என்றார்.

வசந்த் தலைமையில் 15 பேர் அடங்கிய குழு, இ-பாஸ் மென்பொருள் பணிக்காக செயல்படத் தொடங்கினர். இதில் 12 முழு ஊழியர்களும், 3 பார்ட்-டைம் ஊழியர்களும் செயல்பட்டுள்ளனர். இரண்டு நாட்களில் தலைமைச் செயலளிரிடம் இதற்கான அடிப்படை வரைவை காட்டச்சொன்னதால் வேகமாக செயல்பட்டுள்ளனர்.


கொடுக்கப்பட்ட காலக்கெடுவில் இ-பாஸ் தளத்துக்குத் தேவையான மென்பொருளை தயார் செய்த குழு, அதனை தமிழக அரசின் ஒப்புதலுக்குப் பின் மக்கள் மத்தியில் மே 2ம் தேதி செயல்படத் தொடங்கியது. இ-பாஸ் வெளியான உடன் அதற்கான தேவை வெகுவேகமாக மக்களிடம் அதிகரித்தது.


பலரும் பல முக்கியக் காரணங்களுக்காக பாஸ் கேட்டு விண்ணப்பிக்கத் தொடங்கினார்கள். இந்த சூழலில் வசந்த் மற்றும் குழுவினர் சந்தித்த சவால்கள் பற்றி அவர் பகிர்கையில்,

“முதல் 7-10 நாட்கள் எங்கள் குழு தினமும் 2 மணி நேரம் மட்டும் தான் தூங்கமுடிந்தது. இ-பாஸ் சேவைக்காக இரா-பகலாக பணி செய்யவேண்டி இருந்தது. எங்களுடன், அரசு சார்பில் TNEGA துறை அதிகாரிகள் மற்றும் இரண்டு முக்கிய சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகளும் தூக்கமின்றி எங்களுக்கு வழிகாட்டினர். 10 நாட்களில் பல லட்சம் பேர் பயன்படுத்தும் தளத்தை உருவாக்குவது மிகப்பெரிய சவால்.”

தொடக்கத்தில் பல விஷயங்களைக் கவனித்து மக்களின் தேவை, சந்தேகங்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்கவேண்டி இருந்தது. அதோடு ஆரம்ப நாட்களில் ஒரு மாவட்டத்துக்குள் செல்வதற்கே இ-பாஸ் தேவைப் பட்டதால் பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்ததாக கூறினார் வசந்த்.


கோவிட்-19 நிலையைப் பொறுத்தும், ஊரடங்கில் தளர்வுகளின் மாறுதலுக்கேற்ப, மக்கள் பயணம் குறித்தான விதிமுறைகள் மாறிக்கொண்டிருந்தன. அதற்கேற்ப இ-பாஸ் வழங்களிலும், மாற்றங்கள் கொண்டுவரும் அளவிற்கு மென்பொருளில் திருத்தங்கள் செய்து கொண்டே இருந்ததாக இக்குழுவினர் தெரிவித்தனர்.

“அரசு ஒவ்வொரு முறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, முதலமைச்சர் ஊரடங்கு குறித்து அரசாணை பிறப்பிக்கும்போதும், நாங்கள் இ-பாஸ் தொடர்பாக செய்யவேண்டிய மாற்றங்களும் தெரிவிக்கப்படும். அதனை உடனடியாக மென்பொருளில் மாற்றியமைக்கவேண்டும். சில மணி நேரம் அல்லது ஒரு இரவுக்குள் இதை செய்தால் மட்டுமே, மக்கள் விண்ணப்பிக்கும்போது அந்த மாற்றங்களுக்கு ஏற்ப இ-பாஸ் அப்ரூவல் நடைபெறும்.”

இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தி 35 நாட்களுக்கு மேல் கடந்த நிலையில், தங்கள் குழுவினர் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டதாக கூறுகிறார் வசந்த். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த குழுவைச் சேர்ந்த அனைவருமே வீட்டிலிருந்து தான் இந்த பணிகளை செய்கின்றனர். வொர்க் ஃபர்ம் ஹோம் முறையில் இத்தனை முக்கியச் சேவையை செய்துள்ளது பாராட்டுக்குரியது. மேலும் இது பற்றி பேசிய வசந்த்,

“இந்த 35 நாட்களில் இ-பாஸ் தளத்தை 25-30லட்சம் பேர் பயன்படுத்தி உள்ளனர். இதுவரை 31 லட்சம் பாஸ்’களுக்கான (தனிப்பட்ட மற்றும் தொழில்துறை) விண்ணப்பங்கள் பரீசலிக்கப்பட்டு, அப்ரூவ் மற்றும் ரிஜெக்ட் செய்யப்பட்டுள்ளது. இதற்கான மென்பொருள், அதற்கேற்ற சர்வர் ரெடி செய்ததில் மகிழ்ச்சி,” என்றார்.
vertace team

Vertace நிறுவனம் ஊழியர்களுடன் வசந்த் ராஜன்

கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் நிறுவனம் நடத்தும் இவர்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பாக கருதும் வசந்த், தொழில் என்பதைத் தாண்டி இதில் மக்களுக்கு சேவை புரிய ஒரு வாய்ப்பு கிடைத்ததில் மனநிறைவு கிடைத்ததாக குறிப்பிடுகிறார்.

“இது ஒரு பொது மனிதனின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். மருத்துவ அவசரம், திருமணம், இறப்பு என முக்கிய நிகழ்வுகளுக்குச் செல்ல விண்ணப்பிக்கின்றனர். இப்படி ஒருவர் தனிப்பட்ட விஷயங்களுக்காக அனுமதி கேட்டு பெறுவதற்கான மென்பொருளை வடிவமைத்தது என் மனதுக்கு நெருக்கமான ஒன்று,” என்றார் வசந்த்.

இதுபோன்று பொது மக்களுக்கு உருவாக்கும் சேவையில் நிறை; குறைகள் இருக்கும். அதிலும் கொரோனா அச்சத்தில் இருக்கும் மக்கள், ஊரடங்கின் காரணமாக மேலும் பதட்டத்துடன் இருந்த சூழலில், இ-பாஸ் விண்ணப்பிக்கையில் இருக்கும் சில பிரச்சனைகளை வெளிப்படுத்தியது பற்றி கேட்டதற்கு,

“இ-பாஸ் அறிமுகம் செய்த முதல் நாளே 50 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தது. இது நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை. ஒவ்வொரு விண்ணப்பத்தையும் படிக்காமல் ரிஜெக்ட் செய்யமுடியாது. அதற்கான மனிதவளம் தேவைப்பட்டது. அதனால் ஒவ்வொரு ஆவணத்தையும் சரிபார்த்து, விண்ணப்பிக்கும் காரணத்தை ஆராய்ந்த பின்னரே அரசு அதிகாரிகள் நியமித்த குழு இதை பரிசீலனை செய்தனர். இதில் தொழில்நுட்பப் பங்கு மட்டுமே எங்களுடையது, அதே சமயம் அவர்களின் பணியும் கடினமானது. இதனால் ஒருசில பிரச்சனைகள் வருவது தவிர்க்கமுடியாதது,” என்றார் வசந்த்.

இக்கட்டான சூழலில் தொழில் நிறுவனங்கள் இயங்குவதில் சவால்கள் இருந்த சமயத்தில், இந்த சென்னை நிறுவனம் மற்றும் அதன் குழுவினர் அரசுக்கு உதவிபுரியும் வகையில் முக்கியமான இந்த சேவையை திறம்பட வழங்கியதற்கு, தலைமை செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இவர்களை தலைமை செயலகத்துக்கு அழைத்து பாராட்டியுள்ளனர். இதுவே தங்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றியாகவும், மேலும் பல சேவைகளைச் செய்ய உந்துதலாக அமைந்ததாகவும் கூறுகிறார் வசந்த் ராஜன்.

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற

Our Partner Events

Hustle across India