பதிப்புகளில்

பார்வைக்கும் கனவுக்கும் சம்பந்தம் இல்லை: கலெக்டராக பொறுப்பேற்ற முதல் பார்வையற்ற பெண்!

இந்தியாவிலேயே முதன்முறையாக நேரடி கலெக்டர் தேர்வு மூலம் கண்பார்வை இழந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கேரள மாநிலத்தில் கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.

7th Jun 2018
Add to
Shares
765
Comments
Share This
Add to
Shares
765
Comments
Share

தனது இரண்டு வயதில் பார்வையை இழந்தபோதும், தனது விடாமுயற்சியாலும், மன உறுதியாலும் போராடி படித்து, இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் கலெக்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கர்நாடகாவைச் சேர்ந்த பிரஞ்ஜாலின்.

மகாராஷ்டிர மாநிலம் உல்லாஷ் நகரைச் சேர்ந்தவர் பிரஞ்ஜாலின் பாட்டில். இவரது தந்தை என்.பி.பாட்டில் பொறியாளர். ஆரோக்கியமாகப் பிறந்த பிரஞ்ஜாலினுக்கு இரண்டு வயது ஆனபோது திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. இதில் அவரது பார்வை பறி போனது.

புறக்கண் இல்லாவிட்டாலும், அகக்கண் மூலம் உலகைப் பார்க்கும் தைரியத்தை மகளுக்கு கொடுத்தனர் பாட்டிலும், அவரது மனைவி ஜோதியும். தொடுதிரை உதவியுடன் படிப்பைத் தொடர்ந்த பிரஞ்ஜாலினுக்கு சிறு வயது முதலே சமூக சேவை செய்ய வேண்டும் என்ற தாகமும் வளர்ந்தது.

Image source: Amarujala

Image source: Amarujala


“நம் உடல் குறைகளைப் பற்றி நாம் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால், வாழ்க்கையில் எதையுமே சாதிக்க இயலாது. கண் பார்வை இல்லாவிட்டாலும், அதைக் குறித்து நான் என்றுமே கவலைப்பட்டதே இல்லை. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு நிறைய வழிகள் உள்ளன. நமக்கு என்ன தேவையோ அதற்காக மட்டுமே அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்,”

என்பது தான் தன்னைப் போன்ற மாற்றுதிறனாளிகளுக்கு பிரஞ்ஜாலின் சொல்லும் அறிவுரை. பள்ளிக் கல்வியை முடித்து, மும்பை கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பிரஞ்ஜாலின், பின்னர் டெல்லியில் உள்ள சர்வதேச கல்லூரியில் எம்.பில். மற்றும் பி.எச்.டி. டாக்டர் பட்டம் பெற்றார்.

சமூக சேவை செய்ய வேண்டும் என்ற தேடல், பிரஞ்ஜாலினை ஐஏஎஸ் தேர்வு எழுதத் தூண்டியது. கடந்த 2014ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் 773 இடம் பிடித்ததால், கலெக்டர் கனவு கைகூடவில்லை. இதற்கிடையே ரயில்வேயில் அவருக்கு வேலை கிடைத்தது. விரைவில் அப்பணியில் சேரலாம் என எண்ணி இருந்தவருக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைத்தது.

கண்பார்வையற்ற ஒருவருக்கு அப்பணியை ஒதுக்க இயலாது என ரயில்வே கைவிரிக்க, மீண்டும் ஐஏஎஸ் தேர்வுகளுக்கு படிக்கத் தொடங்கினார் பிரஞ்ஜாலின். தீவிர முயற்சியின் பலனாக 2017ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் 124 இடத்தைப் பிடித்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது கேரள மாநிலம் எர்ணாகுளம் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார் பிரஞ்ஜாலின்.

தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் தான் அமர்வதற்கு முன்பாக, ‘தனக்கு ஊக்கமும், தைரியமும் அளித்து, தன்னை இந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்த்திய தனது தாயை கௌரவப் படுத்த’ எண்ணினார் பிரஞ்சாலின்.

அதன்படி, தனது பயிற்சி கலெக்டர் இருக்கையில் உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் தனது அம்மாவை அமர வைத்து, அதனை தனது அகக்கண்ணால் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.

“சிறுவயது முதலே எனது கனவு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது தான். பார்வை இல்லாத காரணத்திற்காக என் கனவை விட்டுக் கொடுக்க நான் விரும்பவில்லை. என் கனவுக்காக நான் கடுமையாக உழைத்தேன். இதோ, இப்போது என் கனவு நனவாகி விட்டது,” என பெருமையுடன் கூறுகிறார் பிரஞ்ஜாலின்.
Photo credit : New Indian express

Photo credit : New Indian express


தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியும் இருந்தால், உடல் குறைபாடுகள் ஒன்றும் தடையாக இருக்காது என்பதை தனது வெற்றி மூலம் உலகிற்கு நிரூபித்துக்காட்டிய பிரஞ்ஜாலினுக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

நேரடி கலெக்டர் தேர்வில் இந்தியாவிலேயே கண்பார்வை இழந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கலெக்டராக பொறுப்பேற்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

Add to
Shares
765
Comments
Share This
Add to
Shares
765
Comments
Share
Report an issue
Authors

Related Tags