பதிப்புகளில்

'உயிரில் பேதமில்லை'- சென்னை வெள்ளத்தில் சிக்கிய விலங்குகளை காப்பாற்றிய ப்ளூ கிராஸ்!

29th Nov 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

மழை வந்த சென்னையில் பாதிக்கப்பட்டது மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும்தான். விலையுயர்ந்த கார்கள் பல தண்ணீரில் மூழ்கிக் கிடந்த அதே பகுதிகளில் தான், பலர் ஆசையாய் வளர்த்த செல்லப்பிராணிகள் உட்பட, சகல விலங்குகளும் கரைபுரண்டோடிய தண்ணீருக்கு பலியானது. மழையில் சிக்கிய விலங்குகளைக் காப்பாற்றிய ப்ளூ கிராஸ் அமைப்பை சார்ந்த, டான் வில்லியம்ஸ் நம்மோடு பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்.

image


“நாய்கள், கால்நடைகள், பன்றிகள் உட்பட ஆயிரத்து நானூறுக்கும் மேற்பட்ட விலங்குகளை சமீபத்திய வெள்ளத்தின் போது நாங்கள் மீட்டோம். மிக மோசமான நிலையில் இருந்த இரண்டு மூன்று விலங்குகளை மட்டும் தான் ப்ளூ கிராஸ் அலுவலகத்திற்கு கொண்டு வந்தோம். மருத்துவ உதவிகள் தேவை இல்லாத, விலங்குகளுக்கு உணவளித்து, வெள்ளம் அடித்துச் செல்ல முடியாத உயர் நிலத்தில் விட்டுவிட்டு வந்தோம்.

பெரும்பாலும் விலங்குகளை குறிப்பாக நாய்களை நம்மில் பலரும் வீடுகளில் கட்டிப் போட்டு விடுவார்கள். பெருமழை காலத்தில் விலங்குகளைக் கட்டிப் போட்டுவது தான் ஆபத்து. அனைத்து விலங்குகளுக்கும் இயற்கையாகவே நீந்தும் திறமை இருக்கிறது. சங்கிலியால் விலங்குகளைக் கட்டிப் போடும் போது அவைகளால் நீந்தி தப்ப முடியாது. ஊரப்பாக்கம் ஏரி, திடீரென தண்ணீர் திறந்து விட்டதால், கட்டிப்போட்டிருந்த விலங்குகளை உடனடியாக காப்பாற்ற வேண்டி இருந்தது.

எங்கள் குழுவில் சிலர் பிரம்மபுத்திராவின் கரையில் பிறந்தவர்கள், இதைப் போன்ற வெள்ளங்களை எல்லாம் பார்த்தவர்கள். எங்கள் குழுவில், மருத்துவர் தொடங்கி கடை நிலை ஊழியர் வரை அனைவருக்குமே நீச்சல் தெரியும். அதனால், நீந்திச் சென்றுக் காப்பாற்ற முடிந்தது. ஆனாலும், நிறைய பன்றிகளும், மாடுகளும் இறந்திருந்தன. இது தான் பெருந்துயரமாக இருக்கிறது” என்கிறார்.

image


மழைக்காலத்தை ப்ளூ கிராஸ் அமைப்பு எப்படி எதிர்கொள்கிறது எனக் கேட்டதற்கு, “பொதுவாக விலங்குகள் நலனுக்காக செயல்படும் ப்ளூ கிராஸ், இப்போது செய்திருப்பது பேரிடர் மேலாண்மை அல்ல, நாங்கள் மழைக்காலத்திற்காக முன் தயாரிப்புகளோடு இருந்தோம். ராணுவம், கடற்படை, தீயணைப்பு, மெட்ரோ நீர் துறை, மின்சாரத்துறை, போக்குவரத்து கழகம், ஆல் இண்டியா ரேடியோ என எல்லோருமே மழைக்காலத்தை எப்படி எதிர்கொள்வது என ஒவ்வொரு திட்டத்தைக் கொடுப்பார்கள். அந்தத்திட்டத்தில் ப்ளுகிராஸிற்கும் பங்கு உண்டு. 

வைக்கோல், தவிடு, கடலைப் புண்ணாக்கு, பருத்திப் புண்ணாக்கு போன்றவைகளை, மழைக்காலத்திற்காக சேமித்து வைத்திருந்தோம். அடையார் பேக்கரி மற்றும் வேறு சில நன்கொடையாளர்கள், அதிக அளவிலான ரொட்டிகள் கொடுத்து உதவினார்கள். அவைகள்தான் மழைக்காலத்தில் விலங்குகளுக்கு உதவின” என்கிறார்.

மழை வெள்ளப் பாதிப்புகள் பற்றி பேசிய டான் வில்லியம்ஸ் ப்ளூ கிராஸ் அமைப்பின் தோற்றமும் வரலாறும் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

“ப்ளூ கிராஸ் அமைப்பு, 1964 ஆம் ஆண்டு, வீட்டு மற்றும் வன விலங்குகளை, மனிதர்கள் அல்லது இயற்கை சீற்றங்களின் ஆபத்திலிருந்து காப்பாற்ற உருவாக்கப்பட்டது. இந்தியாவின் ப்ளூ கிராஸ் அமைப்பு, மருத்துவ வசதிகளை அளிக்கிறது. காயமடைந்த, தங்குமிடம் இல்லாத விலங்குகளுக்கு தங்குமிடம் அளிக்கும். இந்தியாவை நாங்கள் ‘புண்ணிய பூமி’ என்றழைப்போம். ஏனென்றால், இன்றுவரை ப்ளூ கிராஸ் நன்கொடைகள் மூலமாகத் தான் நிலைத்திருக்கிறது. வெளிநாட்டவர்கள் யாரும் இல்லை, உதவுபவர்கள் அனைவரும் இந்தியர்கள் தான். வாழ்வின் அனைத்துத் தரப்பிலிருந்தும், அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் ப்ளூ கிராஸிற்கு உதவுகிறார்கள்.” என்கிறார்.

image


ஒரு விலங்கிற்கு தேவையான விடுதலை என்பது என்ன?

“நீர் மற்றும் ஆரோக்கியமும், வலிமையும் அளிக்ககூடிய உணவின் மூலமாக பசி, தாகத்திலிருந்து விடுதலை. தகுந்த சூழலும், தங்குமிடமும், வசதியான ஓய்வெடுக்கும் இடமும் அளித்து, அசௌகரியங்களிலிருந்து விலங்குகளுக்கு விடுதலை. நோய்களை வரும்முன் காப்பது அல்லது, நோய்களை விரைவாக கண்டறிந்து சிகிச்சையளித்தல் மூலமாக வலி, காயம் அல்லது நோயிலிருந்து விடுதலை. இயல்பான நடத்தை வெளிப்படுத்த விடுதலை. பயம் மற்றும் மன அழுத்ததிலிருந்து விடுதலை. இவை தான் ஒரு விலங்கிற்கு தேவையான விடுதலை என்கிறார் டான். 

மனிதர்களைப் போல விலங்குகளும் தங்கள் வாழ்வை நேசிக்கின்றன. மனிதர்களைப் போல அதிக நாட்கள் வாழ வேண்டும் என்ற ஆசை விலங்குகளுக்கும் உண்டு. மனிதர்களால் விலங்குகள் இல்லாமல் வாழ முடியாது, ஆனால், விலங்குகள் மனிதர்கள் இல்லாமலும் வாழும். இந்திய அரசியலமைப்பு தன் குடி மக்கள் ஒவ்வொருவரும் விலங்குகளிடம் அன்பாகவும், கருணையாகவும் நடந்துக் கொள்ள வேண்டும் என்கிறது. ஆக மொத்தம் விலங்குகளின் பாதுகாப்பு என்பது அரசியல் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

சாதாரண ஒருவரால், கல்லெடுத்து நாயை அடித்து துன்புறுத்த முடியாது. ‘ஐயோ, வலிக்குமே’ என்றவர் யோசித்துப் பார்ப்பார். ஆனால், யாரால், அதை மிகச் சுலபமாக செய்ய முடிகிறதோ, அவர் மனதில் வக்கிரம் அதிகம் உள்ளது என்று அர்த்தம். இது உலக அளவில் நிரூபிக்கப்பட்ட மனோதத்துவம். உண்மையில், வீட்டில் நாயைத் தொடர்ச்சியாகக் கட்டி வைத்து வளர்ப்பதுக் கூட சித்ரவதை தான். அதுவும் ஒரு வகை மன நோய்தான்” என்றவர் தொடர்ந்து நாய் விற்பனை தொடர்பாக சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

“பொதுவாக மனிதர்கள் செல்லப்பிராணியாக நாயை வளர்க்க விரும்புவதால் நாய் விற்பனை என்பது பெரிய லாபகரமான தொழிலாக வளர்ந்து இருக்கிறது. ஆனால் நாய் விற்பவர்களில் பலர் ஏமாற்றுகிறார்கள். பொதுவாக நாய்களை வாங்கும் போது ஒரு குறிப்பிட்ட இன நாய்களின் ஆரோக்கியம், இயல்பான நடவடிக்கை, குணங்கள் போன்றவற்றை அறிந்து வாங்க வேண்டும். நம்மால், வளர்க்க முடியாதவைகளை வாங்கக் கூடாது. ஒரு நாயை வாங்கும் போது அதன் ஆயுள் முழுக்க அதை முறையாக பேணி வளர்க்க முடியுமா என்பதை அறிந்து வாங்க வேண்டும். ஏனெனில், நாய் வளர்க்கும் பலரும் அதை வளர்க்க முடியாமல் போகும் போது எங்கெங்கோ கொண்டு விட்டுவிடும் துயர நிலை இருக்கிறது.

image


தாம்பரத்தில் இருக்கிறவர் நாயை அண்ணா நகரில் கொண்டு விடுவார், அண்ணா நகரில் இருப்பவர் மணலியில் கொண்டு நாயை விட்டு விடுவார். வேறு சிலரோ ஓரளவுக்கு நாயை வளர்த்து விட்டு, கோடை விடுமுறையில், வெளிநாடு செல்லும் போது, நாயை நடு ரோட்டில் விட்டு விட்டுச் சென்று விடுவார். அல்லது, ப்ளூ கிராஸ் கதவில் கட்டிப் போட்டு விட்டு போய் விடுவார்கள். இதெல்லாம் தவறான செயல்கள்.”

இந்த மழை நமக்கு கற்பித்தவைகளைப் பற்றிக் கேட்ட போது,

“நாங்கள் ஓய்வெடுத்தால், பல விலங்குகளின் மரணத்திற்கு காரணமாகிவிடுவோம் என்பதனால், நாங்கள் ஓய்வெடுக்கவில்லை. எங்களுக்கு பூட்ஸ் போன்றவைகள் கொடுத்து காவல் துறை உதவியது. நிறைய விலங்குகளை பொது மக்கள் காப்பாற்றினர், அது மறக்க முடியாதது. இந்த வெள்ளத்தின் போது, அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டனர், தீயணைப்புத் துறை, காவல் துறை, என்.டி.ஆர்.எஃப் என எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டனர். சில இடங்களில், மின் கம்பி அறுந்து விழுந்திருந்த போது மின்சாரத் துறை மின்சாரத்தை அந்த பகுதியில் கட் செய்து நாங்கள் விலங்குகளை மீட்க உதவினர். வெள்ளத்தில் அடித்துச் செல்லும் மாடுகளை மீட்க,பெண்கள் உட்பட பல பொது மக்கள் உதவினர் என்கிறார் டான் மனநிறைவோடு.

எல்லாம் ஒற்றுமையால் தான் சாத்தியம் ஆனது. அந்த ஒற்றுமை தான் நம் பலம்” என்று பேட்டியை முடித்துக் கொண்டார் டான் வில்லியம்ஸ்.
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக