'புதுமையே எனது விருப்பம்'- அண்டர்வாட்டர் புகைப்படக் கலைஞர் சுபாஷினி வணங்காமுடி
ஸ்மார்ட்ஃபோன், செல்ஃபி என்று வளர்ந்துள்ள இந்த தொழில்நுட்பக் காலகட்டத்திலும் சரியான புகைப்படக்கேமராவைக் கொண்டு கச்சிதமாக படங்களை எடுக்கும் புகைப்படக் கலைக்கு இருக்கும் வரவேற்பு இன்றும் அப்படியேதான் இருக்கின்றது. கேண்டிட், திருமணம், ஃபேஷன், கமர்ஷியல் என்ற பல துறைகளையும், வகையறாக்களையும் கொண்ட இந்த புகைப்படத் துறையில், தண்ணீருக்கு அடியில் புகைப்படங்கள் எடுக்கக்கூடிய 'அண்டர்வாட்டர்' புகைப்பட முறையை எடுத்து தனக்கான பாதையை வகுத்துக்கொண்டிருக்கிறார் சுபாஷினி வணங்காமுடி.
தமிழ் யுவர்ஸ்டோரி அவரிடம் நடத்திய நேர்காணல் இதோ...
தானாக கற்றுக்கொண்ட கலை
மீடியா துறை மற்றும் ஃபோட்டோகிராபி துறை பெரியளவில் வளர்ந்திராத நாட்கள் தான் சுபாஷினியின் ஆரம்ப ஆர்வத்தை தூண்டிய சமயம். 2001ம் ஆண்டில் இளநிலை ஃபைன் ஆர்ட்ஸ் படிப்பை படித்துக்கொண்டிருந்த சுபாஷினிக்கு தன்னுடைய கடைசி வருட ப்ராஜெக்ட்டுக்காக, ஃபோட்டோகிராபியை அப்போது அவர் தேர்வு செய்தார்.
அப்போதெல்லாம் டிஜிட்டல் முறை அறிமுகமில்லாத காலகட்டம், ஃபோட்டோகிராபி சம்பந்தமான வகுப்புகளும் அதிகம் இல்லாமல் இருந்தது. அந்த சவாலே என்னை புகைப்படங்களை கொண்டு ப்ராஜெக்ட் செய்ய அதிகளவில் தூண்டியது.
தன்னுடைய நண்பரிடமிருந்து வெறும் ஒரு நாள் 'கிராஷ்' வகுப்பை மட்டும் எடுத்துக்கொண்டு, புகைப்படங்களை எடுக்கத்தொடங்கினார் சுபாஷினி. அந்த ப்ராஜெக்ட்டுக்கு பின் தன்னுடைய பாதை இது தான் என்பதை சுபாஷினி தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"வெறும் கேமராவை எப்படி பிடிப்பது, எந்த பட்டனை அழுத்தி படத்தை எடுப்பது என்ற விஷயத்தை மட்டுமே வைத்துக்கொண்டு நான் எடுத்த புகைப்படங்கள் எனக்கு ஒரு விதமான சந்தோஷத்தை அப்போது தந்தது. ஒரு சிறப்பான புகைப்படத்திற்கு, அழகியல் உணர்வு தான் முக்கியம் என்பதை அப்போதுதான் தெரிந்துக்கொண்டேன்."
என்று பகிர்ந்துக்கொள்ளும் சுபாஷினி, ஓவியம் போல புகைப்படங்கள் இருக்க வேண்டும் என்ற கருத்தையும் சேர்த்தே பதியவைத்தார்.
அதீத ஆர்வத்துடன் சுபாஷினி எடுத்த புகைப்படங்கள், தொடர்ந்து ஃபோட்டோகிராபி கலையை நோக்கி அவரை பயணிக்கச் செய்தது. முதுநிலை தகவலியல் படிப்பை படித்துக்கொண்டிருக்கும் சமயத்திலும், பொருட்களை கச்சிதமாக படமெடுக்கும் 'கமர்ஷியல்' ஃபோட்டோகிராபி மற்றும் ஸ்ட்ரீட் ஃபோட்டோகிராபி போன்ற பல பிரிவுகளில் கவனத்தை செலுத்தி, தன்னை முழுவதுமாக அதில் லயித்துக்கொண்டார்.
அமெரிக்காவும் அங்கு கற்றுக்கொண்டதும்
படிப்பு, புகைப்படங்கள் ஒரு சேர இருந்தபோது, அமெரிக்காவிற்கு செல்லும் சூழல் சுபாஷினிக்கு ஏற்பட்டது. "கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தேன். என்னுடைய நேரத்தை சாதாரணமாக செலவிடாமல், ஃபோட்டோகிராபி மூலம் தான் அங்கும் கழித்தேன்." நியூயார்க் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடக்கும் பற்பல நிகழ்ச்சிகள், இடங்கள் தனது கேமரா லென்ஸிற்கும் தன்னுடைய கலைக்கும் தீனி போட்டதாக உற்சாகத்துடன் சொல்கிறார் சுபாஷினி.
"புகைப்படங்களில் இருக்கும் பல துறைகளை பற்றி கற்றுக்கொள்ளவும், தெரிந்துக்கொள்ளவும் எனக்கு அந்த நேரம் சரியாக அமைந்தது. அதை நான் அழகாகவும் பயன்படுத்திக்கொண்டேன்." என்ற சுபாஷினியின் பார்வை அண்டர்வாட்டர் புகைப்படங்களின் மீது விழ ஆரம்பித்ததும் இங்கு தான். அப்போதைய நாட்களில் இங்கு வராத ஒரு துறையை பற்றி தெரிந்துகொண்டு அதை செயல்படுத்தவும் இவர் உறுதியாக இருந்தார். மாலத்தீவில் இவர் ஒருமுறை 'ஸ்னொர்கெல்லிங்' செய்தது அந்த ஆர்வத்தை இன்னும் அதிகமாகத் தூண்டியது. தொடர்ந்து ஸ்கூபா டைவிங் மற்றும் அண்டர்வாட்டர் புகைப்படங்களை பற்றி தெரிந்துக்கொள்ளவும் செய்தார்.
அண்டர்வாட்டர் புகைப்படங்கள் பிறந்தன
2010ம் ஆண்டு மீண்டும் சென்னை வந்த சுபாஷினி, 'சடோரி ஸ்டுடியோ' (satori studios) என்ற சொந்த ஸ்டூடியோவை ஆரம்பித்தார்.
"நண்பர்கள் என்னுடைய புகைப்படங்களைக் கண்டு பாராட்டுவது மட்டுமல்லாமல், அடுத்த பல ஃபோட்டோ ஷூட்களுக்கு எனக்கு துணையாகவும், வாய்ப்புகளை அமைத்தும் தந்தனர்." என்று தன்னுடைய அடுத்த கட்ட பயணத்தை பற்றி பகிர்ந்துக்கொள்கிறார் சுபாஷினி.
விளம்பரத்திற்கான புகைப்படங்கள், சினிமா மற்றும் பிரபலங்களை எடுக்கும் போர்ட்ஃபோலியோ வகையிலான புகைப்படங்களை எடுத்ததோடு படிப்படியாக புகைப்படங்கள் எடுப்பதன் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டே வந்தார். அப்போது தான் பாண்டிச்சேரியில் ஸ்கூபா டைவிங் செய்த சுபாஷினி, அண்டர்வாட்டர் புகைப்படங்களை எடுக்க கற்றுக்கொள்ளவும் செய்தார்.
அண்டர்வாட்டர் புகைப்படங்களை பற்றி பெரிய விழிப்புணர்வும், திறமையும் இல்லாத சமயம் அது. கார்டஸ் டக்ளர் என்ற புகைப்படக் கலைஞரிடம் ஒரு நாள் கிராஷ் வகுப்பு மட்டுமே எடுத்துக்கொண்டேன். அதன் பின், கிட்டத்தட்ட்ட 40 மணிநேரம் தண்ணீருக்குள் இருந்து முதல் ஃபோட்டோ ஷுட்டை எடுத்தேன்.
பல பிரபலங்கள், விளம்பரங்கள், மக்கள் என்ற பல வகையறாக்களில் புகைப்படங்களை எடுத்தாலும், குழந்தைகள் மற்றும் குடும்ப போர்ட்ரைட் புகைப்படங்களை எடுப்பதில் ஒரு அலாதியான பிரியம் சுபாஷினிக்கு இருக்கவே செய்கிறது. "சாதாரணமாக இல்லாமல் வித்தியாசமாகவும், அழகாகவும் குடும்ப போர்ட்ரைட் புகைப்படங்களை எடுக்க முடியும் என்பதை அமெரிக்காவில் நான் அறிந்துக்கொண்டேன். அது போல வித்தியாசங்களும் புது முயற்சிகளும் இங்கு தொடபடாமல் இருக்கவும் செய்தது. அந்த விதத்தில் தான் குழந்தைகளை வைத்து அண்டர்வாட்டர் புகைப்படங்களை எடுக்கலானேன்."
கற்றவையும் பெற்றவையும்
சாதாரணமாக எடுக்கும் புகைப்படங்களுக்கும் அண்டர்வாட்டர் புகைப்படங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதோடு அதற்காக எடுத்துக்கொள்ள வேண்டிய முயற்சிகளும், உழைப்புமே முற்றிலும் வேறு விதமே என்பது சுபாஷினியின் கருத்து. "தண்ணீருக்குள் உபயோகப்படுத்த வேண்டிய கேமராக்கள், பொருட்கள் எல்லாமே வித்தியாசமாக இருக்கும். தவிர, குழந்தைகளை உள்ளே வைத்து சமாளித்து புகைப்படங்களை எடுப்பது இன்னும் பெரிய சவாலாக இருந்தது." என்று தன் அண்டர்வாட்டர் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துக்கொள்கிறார் சுபாஷினி.
"தண்ணீருக்குள் நானும் அதிக நேரம் இருந்து புகைப்படங்களை எடுக்க வேண்டும். தண்ணீருக்கு மேலே மிதந்து வரக்கூடாது என்பதால், இரண்டு அல்லது மூன்று கிலோ எடையை கட்டிக்கொண்டு இருப்பேன். இதுவே, உடலளவில் என்னை அதிகமாக சோர்வடையச் செய்துவிடும். குழந்தைகளை எடுக்கும் போது, அவர்களை தண்ணீருக்குள் அதிக நேரம் வைத்து எடுக்கமுடியாது. அதனால், கிடைக்கும் குறைவான நேரத்திற்குள் முடிந்த அளவிற்கு வேகமாகவும், தெளிவாகவும் அந்த சோர்வையும் மீறி நான் செயல்பட வேண்டியதாக இருக்கும். பல சவால்களையும் மீறி புகைப்படங்களை எடுக்கும் போது அது ஒரு தனி அனுபவமாகவே எனக்கு இருந்திருக்கிறது."
தவிர, இங்கிருக்கும் தட்பவெப்பங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்ப தண்ணீரை சுத்தமாக வைத்து, சரியான கேமரா மற்றும் லைட்களை தேடி எடுத்து, ஒரு புகைப்பட தொகுப்பை எடுப்பதில் இருக்கும் உழைப்பு மிகவுமே அதிகம். இத்தனை உழைப்பிலிருந்து அண்டர்வாட்டர் புகைப்படங்கள் பிறப்பதால், அவை சற்று விலை அதிகம் என்ற நிலையில் தற்போது இருப்பது குறிப்பிடத்தக்கது.
சடோரி ஸ்டுடியோ மற்றும் அடுத்த கட்ட முயற்சிகள்
புகைப்படங்களை எடுப்பது என்று ஒரு புறம் இருந்தாலும், அதை ஒரு வெற்றிகரமான தொழிலாகவும் மாற்றியமைத்திருக்கிறார் சுபாஷினி. சடோரி ஸ்டுடியோ வாயிலாக கமர்ஷியல் போர்ட்ரைட் வகையிலான புகைப்படங்களை எடுப்பது மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனத்திற்கு குறும்படம் எடுத்து தருவது, லோகோ, விசிட்டிங் கார்ட் போன்ற பிராண்டிங் டிசைன் வேலைகளையும் சுபாஷினி செய்து தருகிறார்.
அண்டர்வாட்டர் புகைப்படங்களில் இவர் எடுத்துவைக்கப்போகும் அடுத்த அடி சற்றே பெரிது.
"வெளிநாடுகளில் கடல் மற்றும் நதிகளில் வைத்தே அண்டர்வாட்டர் புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இந்தியாவில், அதற்கான வசதிகள் இருந்தாலும், அந்த முயற்சியை யாரும் செய்யவில்லை. அரசாங்கத்திடம் அனுமதி பெற்று கடலுக்கு அடியில் புகைப்படங்களை எடுக்க வேண்டும் அந்த முயற்சியில் தான் இப்போது இருக்கிறேன்."
இவருடைய இந்த புது முயற்சிக்கு தமிழ் ய 'ஆல் தி பெஸ்ட்'...
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்:
'ஜல்லிக்கட்டு நடத்த தனி ஸ்டேடியம் கட்ட வேண்டும்'- புகைப்படக் கலைஞர் சுரேஷின் ஆசை!
சமூக அக்கறையை புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தும் சிந்துஜா பார்த்தசாரதி!