பதிப்புகளில்

பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட சிறுதானிய உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தமிழக பெண் விவசாயிகள்!

YS TEAM TAMIL
16th May 2018
Add to
Shares
13
Comments
Share This
Add to
Shares
13
Comments
Share

தர்மபுரி பகுதியில் ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும் மராவடி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விவசாயியான மொலகப்பன் அந்த மழையின் பெயர் தனக்குத் தெரியும் என்கிறார். ஒரு ஆண்டு 13.5 நாட்கள் அடங்கிய காலகட்டமாக பிரிக்கப்படுகிறது என்றும் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் வெவ்வேறு பெயர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

”கனமழை என்கிற பொருள் கொண்ட ’உப்பா மழை’ வழக்கமாக அக்டோபர் மாதத்தில் பெய்யும். தமிழ் ஆண்டின் இறுதியில் அதாவது மார்ச் மாதத்தில் பெய்வது ‘பழைய மழை’,” என்றார். 

ஆனால் வெவ்வேறு பருவங்களில் பெய்யும் மழையின் பெயர்கள் அனைத்தையும் அவரால் நினைவு கூறமுடியவில்லை. இந்தப் பெயர்கள் தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன.

image


”நாங்கள் மழையின் பெயரை மறந்துவிட்டோம். மழை எங்களை மறந்துவிட்டது. முன்பு பெய்தது போன்ற மழை இப்போது இல்லை. குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளாக மழைப்பொழிவு மிகவும் மோசமாகவே இருந்துள்ளது,” என்றார் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவரான எஸ்ஏ.சின்னசாமி.

2016-ம் ஆண்டைத் தவிர 2004-ம் ஆண்டு முதல் இந்த மாவட்டத்தில் சராசரி அல்லது சரிசாரிக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக மாநில வேளாண் துறை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் ஆண்டு முழுவதும் பெய்த மழையின் மொத்த அளவில் பிரச்சனை இல்லை என்றபோதும் மழைப்பரவலால் பிரச்சனை ஏற்படுகிறது.

2016-ம் ஆண்டு மாநிலத்தில் சராசரியைக் காட்டிலும் பாதியளவே மழை பெய்து 140 ஆண்டுகளாக இல்லாத வறட்சி ஏற்பட்டபோது தமிழகத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தர்மபுரியும் அடங்கும். இந்தப் பகுதியின் வருடாந்திர சராசரி மழைப்பொழிவு 853.1 மி.மீ ஆகும். ஆனால் 2016-ம் ஆண்டு 397.6 மி.மீ அளவே மழை பெய்தது.

”இதில் பிரச்சனை மொத்த மழையின் அளவு அல்ல. ஒரு குறிப்பிட்ட பகுதியின் மழைப்பரவலும் மழைப்பரவலின் நேரமும் விவசாயத்திற்கு முக்கியமானதாகும். இந்த அடிப்படையில் தர்மபுரியில் மழைப்பரவல் போதுமானதாக இல்லை,” என்றார் சின்னசாமி.

வெயிலை எதிர்கொண்ட விவசாயிகள்

தமிழகத்தில் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற வறண்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளே வெயிலை முதலில் எதிர்கொள்கின்றனர். ”தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை இரண்டின் வாயிலாகவும் தர்மபுரிக்கு மழை கிடைக்கும். விவசாயிகள் வருடத்தில் இரண்டு முறை, சில சமயம் மூன்று முறை கூட அறுவடை செய்வார்கள். தமிழகத்தில் இவ்வாறு இரண்டு பருவமழையினாலும் மழை கிடைக்கும் மற்றும் ஒரு மாவட்டம் கன்னியாகுமரி ஆகும். வறண்ட நிலங்களைக் கொண்ட மாவட்டத்தில் மூன்று முறை அறுவடை செய்யப்படுவது தனித்தன்மை வாய்ந்ததாகும்,” என்றார் தர்மபுரி விவசாய அதிகாரியான மணி ராஜ்.

ஜூன் மாதத்தில் துவங்கும் தென்மேற்கு பருவமழையினால் தமிழ்நாடு மற்றும் வடகோடியில் இருக்கும் இமயமலை ஆகிய பகுதிகளைத் தவிர நாடு முழுவதும் மழை கிடைக்கும். 

தர்மபுரியில் மூன்று முறை மழை பெய்தாலும் அது வறட்சி பாதிக்கப்பட்ட பகுதியாகவே கருதப்படுகிறது. பருவநிலை மாற்றம், நீர்நிலை ஆக்கிரமிப்பு போன்றவை நிலைமையை மேலும் மோசமாக்குவதாக நிபுணர்கள் கருதுகின்றனர். தரவுகளின்படி வருடத்திற்கான மொத்த மழைப்பொழிவு வழக்கமான அளவு இருக்கும்போதும் அதன் கால அளவு குறைந்துள்ளது. அதேசமயம் தீவிரம் அதிகரித்துள்ளது.

”இந்த மாவட்டத்தில் ஒரே நாளில் 120 மி.மீட்டருக்கும் அதிகமாகவும் மழை பெய்துள்ளது. மொத்த மழை அளவு வழக்கம்போல இருப்பினும் மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் விதைப்பதற்கு குறைவான நாட்களே கிடைப்பதால் இது விவசாயத்திற்கு உகந்ததல்ல. மழையை கணிக்கமுடியாததால் மழையின் அமைப்பு குறித்த பாரம்பரிய அறிவு பலனற்றுப் போனது,” என்றார் மணி ராஜ்.

அதிக நீர் வீணாதல்

அதிதீவிர மழைப்பொழிவு இந்தப் பகுதியின் நிலத்தடி நீர் ரீசார்ஜ் செய்யப்படுவதை தடுக்கிறது. தண்ணீர் உறிஞ்சப்படுவதற்கு போதிய நேரம் இல்லாததால் பெரும்பாலான மழை நீர் வீணாகிறது. நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதால் தர்மபுரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் நிலை மோசமாகி வருகிறது,” என்றார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் எஸ் பன்னீர்செல்வம்.

மழைநீரை சேமித்து முறையாக பாதுகாக்க உதவும் கட்டமைப்பு இருப்பதை உறுதிசெய்வதே பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட ஒரே வழியாகும்.

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளுக்கு அதிக மழைப்பொழிவு கிடைத்திருப்பினும் உள்மாவட்டங்களில் குறிப்பாக தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி போன்ற வறண்ட பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாகவே உள்ளது. மாநிலம் முழுவதும் குறைவான கால அளவில் அதிக தீவிரமான மழையே பெய்துள்ளது.

”1990 - 2020 இடையே கடலோரப் பகுதிகள் அதாவது கடலில் இருந்து 20 கிலோமீட்டர் வரை நிலத்தை நோக்கி இருக்கும் பகுதிகளில் 7 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது,” என்றார் அண்ணா பல்கலைக்கழகத்தின் CCCAR மையத்தின் பேராசிரியர் ஏ ராமசந்திரன். இவை ’தமிழ்நாட்டிற்கான பருவநிலை மாற்றம் குறித்த கணிப்புகள் : அதிக தெளிவான பருவநிலை தவல்களை PRECIS பயன்படுத்தி பெறுதல்’ என்கிற ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டது.

பருவநிலை மாற்றத்தால் பாதிப்படையக்கூடியவை

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிப்படையக்கூடிய மாவட்டம் தர்மபுரி ஆகும்.

மாநிலத்தின் ஒட்டுமொத்த மழை கணிப்புடன் ஒப்பிடுகையில் 2 சதவீதம் குறைவாக காணப்பட்டாலும் தர்மபுரி போன்ற வறண்ட மாவட்டங்களில் 1990 – 2020 முப்பதாண்டு கால கட்டத்திற்கு 4 சதவீதம் குறைவாக உள்ளது,” என்கிறார் ராமசந்திரன்.

மழை மட்டுமல்ல வெப்பநிலையும் மாறி வருகிறது. தமிழ்நாட்டில் வெப்பநிலையானது 0.9 டிகிரி செல்ஷியல் அதிகரித்திருக்கையில் மாநிலத்தின் வடமேற்கு விவசாயப் பகுதிகளில் 1.1 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரித்துள்ளது. 2100-ல் மாநிலம் முழுவதும் மழைப்பொழிவு 10 சதவீதம் வரை குறையும் என்கிறார் இந்தப் பேராசிரியர். மேலும்,

”மாநிலத்தில் பருவநிலை மாற்றத்தால் பாதிப்படையாத எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளை கொள்கை வகுப்பாளர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் ஆராய்ந்து செயல்படுத்தவேண்டும்.”

இருப்பினும் தர்மபுரியைச் சேர்ந்த விவசாயிகள் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் வரை காத்திருக்கவில்லை. மாநில அரசின் தரவுகளின்படி சிறுதானிய உற்பத்தியில் தர்மபுரி முன்னணியில் உள்ளது. 2012-ம் ஆண்டு இறுதி வரையிலான ஐந்தாண்டு காலத்தில் இந்த மாவட்டம் 10,550 ஹெக்டர் நிலப்பரப்பில் சுமார் 13,000 டன் சிறுதானியங்களை உற்பத்தி செய்துள்ளது. இது மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும்.

சிறுதானிய உற்பத்தியில் ஈடுபடும் பெண் விவசாயிகள்

பெண் விவசாயிகள் பருவநிலை மாற்றம் தொடர்பான சிக்கல்களிலிருந்து விடுபட சிறுதானியங்களை உற்பத்தி செய்கின்றனர்.

image


“மூன்றாண்டுகளில் முதல் முறையாக நான் அரிசி உற்பத்தியில் ஈடுபட்டேன். பாசன வசதி இல்லாத மலைப்பகுதியில் இருப்பதால் மழை பெய்யும்போது மட்டுமே அரிசியை உற்பத்தி செய்யமுடியும். இதற்கு மாற்றாக என்னுடைய குடும்பத்தை பராமரிப்பதற்காக சிறுதானியங்களை உற்பத்தி செய்கிறேன். மழை இல்லாமல் வறண்டு போவதால் அதிக காட்டு விலங்குகள் வெளியில் வந்து பயிர்களை நாசம் செய்கின்றன,” என்றார் ஒரு ஏக்கர் மழைநீரைச் சார்ந்திருக்கும் நிலம் கொண்ட வள்ளியம்மாள்.

எனினும் இவர்களது முதல் முக்கியத்துவம் அரிசி அல்ல. பெண் விவசாயிகள் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் விதைகள், காய்கறிகள் போன்றவற்றை உற்பத்தி செய்கின்றனர். ”ஒரு பயிர் பொய்த்துப் போனாலும் நாங்கள் மற்ற பயிர்களைச் சார்ந்திருக்கலாம். இது வறட்சி காலத்தில் எங்களது வாழ்வாதாரத்திற்கு உதவுகிறது. நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும் இலவச அரிசியுடன் வாணிபப் பயிர்களை மட்டுமே உற்பத்தி செய்பவர்களைக் காட்டிலும் பல வகை பயிர் விவசாயத்தில் ஈடுபட்டு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் பெண்கள் சிறப்பாக செயல்பட்டனர்,” என்றார் தமிழக பெண்கள் கூட்டமைப்பின் நிறுவனர் ஷீலு ஃப்ரான்சிஸ்.

ஆண்கள் விளைச்சலுக்கு அதிக தண்ணீர் தேவையுள்ள அரிசி, கரும்பு போன்ற வாணிபப் பயிர்களை உற்பத்தி செய்கையில் பெண்கள் தங்களது குடும்பத்தைப் பராமரிக்க சிறுதானியங்களை உற்பத்தி செய்கின்றனர். இந்தப் பயிர்கள் காலநிலை மாற்றங்களை எதிர்க்கவல்லது.”

சிறுதானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் பருவநிலை மாற்றத்தையும் குறைவான மழைப்பொழிவையும் எதிர்த்துப் போராட சிறந்தது என தமிழ்நாடு திட்டக்குழு கருதுகிறது. மண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் குறைவான மழைப்பொழிவை எதிர்த்துப் போராடவும் கலப்பு விவசாய முறைகளை பின்பற்ற இந்த திட்டக்குழு ஆலோசனை வழங்குகிறது.

முதலில் பருப்பு வகைகளை பயிரிடவேண்டும். இவை ரைசோபியம் வாயிலாக மண்ணில் இருக்கும் நைட்ரஜனை நிலைநிறுத்தி மண் வளத்தை அதிகரிக்கும். அதன் பிறகு சிறுதானியங்கள் விதைக்கப்பட்டால் மேம்பட்ட மண் வளத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும். இதுவே சரியான சுழற்சிமுறையாகும். சிறுதானியங்கள் C4 வகை பயிர்கள். அதாவது வளிமண்டல கரியமில வாயுவை சர்க்கரையாக மாற்றும் திறன் கொண்டது. அப்படியானல் பயோமாஸ் அதிகரிக்கும்,” என்றார் தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் வேளாண் கொள்கை தலைவர் கே ஆர் ஜகன் மோகன்.

”சூழல் மிகவும் மோசமாகி பயிர் பொய்த்துப் போனாலும் மழை இல்லாமல் போனாலும் குறைந்தபட்சம் கால்நடையின் உணவுக்காவது பயோமாஸ் கிடைக்கும்.”

ஆங்கில கட்டுரையாளர் : கார்த்திகேயன் ஹேமலதா | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
13
Comments
Share This
Add to
Shares
13
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக