பதிப்புகளில்

இந்தியாவைப் புரிந்து கொள்ள உதவிய ஒரு ரயில் பயணம்!

YS TEAM TAMIL
3rd Mar 2016
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

ரயில்கள் வேடிக்கையானவை. உங்கள் சிந்தனைகளை அவை தட்டி எழுப்பும். யாத்ரா எக்ஸ்பிரஸ்சில் 450 இளம் சிந்தனையாளர்கள் உங்களோடு பயணம் செய்வதை நீங்கள் பார்க்க முடியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிந்தனை ஓட்டம். ஆனால் 15 நாட்கள் 8 ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்தில் இந்த சிந்தனைகள் அனைத்தும் ஒரே எண்ண ஓட்டமாகப் பரிணமித்தன. அந்த எண்ண ஓட்டம் இந்தியாவைப் பற்றியது, பிறரைப் பற்றியது மற்றும் நம்மைப் பற்றியது.

image


குடும்பத்தைப் பற்றிச் சிந்தித்தோம். நண்பர்களைப் பற்றி, உணவைப் பற்றி சிந்தித்தோம். வளர்ச்சி, கண்டுபிடிப்பு… எதிர்காலம், இறந்த காலம் மற்றும் நிகழ்காலம் பற்றி சிந்தித்தோம்.. எங்கள் சோகக் கதைகளையும் சந்தோஷ அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டோம். வாழ்க்கை பற்றி, பாதுகாப்புப் பற்றி பேசினோம். நீடித்து நிலைக்கக் கூடியதை, சமத்துவமின்மை பற்றி சமநிலை பற்றி சிந்தித்தோம்.

சொற்களுக்கும் வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்ட உறவுகள் முளைத்தது. நகரம், கிராமம், பழைமை புதுமை போன்ற முரண்பாடுகளை எதிர்கொண்டோம். பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பவர்களாக உறுமாறினோம். குறைந்த பட்சம் அதற்கு முயற்சி செய்தோம். அதிகாரம் பெறுதல், வர்த்தக நுட்பம் மற்றும் விவசாயம் தொடர்பான குழு விவாதங்களைக் கவனித்தோம். கேள்விகளை எழுப்பினோம். அவற்றில் பலவற்றிற்கு இன்னும் விடை காணப்படவில்லை. பொதுக் கழிப்பிடம், தண்ணீர் சுத்திகரிப்பு போன்ற தீவிரமான பிரச்சனைகள் குறித்து சிந்தித்தோம். சுதந்திரம், தனித்தன்மை அல்லது ஒரு தலைமுறையின் ஆற்றல் பற்றிச் சிந்தித்தோம்.

பார்வையற்ற தன்மை கூட முடிவற்ற பார்வையைப் பெற்றதை நாங்கள் பார்த்தோம். வாழும் கலையை, உயிர்ப்புள்ள கலையை பார்த்தோம். கம்பி வடம் இல்லாமல் மின்வசதி கொண்ட, மறுசுழற்சி துணிகளை வைத்துத் தயாரிக்கப்படும் துப்புறவுப் பட்டைகளைப் (sanitation pad) பயன்படுத்தும், பாரம்பரிய இசையைக் கல்வியாகப் பயன்படுத்தும், குழந்தைகள் முன்னேற்றத்திற்குத் தேவையானவற்றை ஊட்டும் ஒரு கிராமத்தைப் பார்த்தோம்.

மரத்தடியிலோ ரயில்வே நடைமேடையிலோ (அதுவெல்லாம் பிரச்சனையே அல்ல) நிறைய சோறு சாப்பிட்டோம். எண்ணிலடங்கா பூரிகளைச் சாப்பிட்டோம். அன்னியர்களுடன் கிறிஸ்துமசைக் கொண்டாடி ஒரே குடும்பமானோம். புத்தாண்டு பானம் பருகினோம். கேக்குகளுடன் பிறந்த நாட்களைக் கவுரவித்தோம்.

நாங்கள் உரையாடினோம். மாற்றம், படையெடுப்பு, ஐஎஸ்ஐஎஸ் போன்ற விஷயங்கள் குறித்து உரையாடினோம். புதிய தொழிலுக்கான உத்திகள், கூட்டுறவு அமைப்புகள், முதலீட்டாளர்கள், புதிய தொழில்களுக்கு நிதி உதவி செய்வோர், துணை வேந்தர்கள், துணை ஜனாதிபதிகள், கதாநாயகர்கள், நாம் ஆக விரும்பும் கதாபாத்திரங்கள் குறித்தெல்லாம் பேசினோம். ஆரம்ப முதலீடு, தொழில் உருவாக்கம், துரித வளர்ச்சி, அரசியல் கோட்பாடு, பொருளாதாரக் கோட்பாடு, மார்க்சியம், பாலியல், மதுபோதைப் பழக்கம் என சகலத்தையும் பேசினோம். கீழிருந்து மேல்.. மேலிருந்து கீழ், சிறு துளிகளால் பெருவெள்ளத்தைப் பெருக்குவது, அதிகார வர்க்கம், அதிகாரப் படிநிலை எனும் பல்வேறு அணுகுமுறைகள் குறித்து விவாதித்தோம். மத்தியதர வர்க்கம், இடைத் தரகர்கள், மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்துவோர், தலைவர்கள், கைதிகள், தீர்க்கதரிசிகள் குறித்துப் பேசினோம்.

image


நச்சு இயல், நானோ தொழில் நுட்பம், சிவில் இன்ஜினியரிங் துறையின் கணித வழிமுறைகள் பற்றிப் பேசினோம். டொனால்ட் ட்ரம்ப் குறித்துப் பேசினோம். சுற்றுச் சூழல் மாசு, கட்சிகள், அரசியல் மற்றும் சமூகவியல், குழந்தை வளர்ப்பு, போர்னோகிராபி ஆகியவை குறித்துப் பேசினோம். தணிக்கை, ஊடகம், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் குறித்து விவாதித்தோம். ஜனநாயகம், ராஜதந்திரம், பிரிக்ஸ் அமைப்பில் ஐநா, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியாவின் பங்கு ஆகியவை குறித்து விவாதித்தோம்.

நாங்கள் பகிர்ந்து கொண்டோம். அது அனைத்து மதங்களின் வீடாக இருந்தது. சீக்கியர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், யூதர்கள், கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல, நாத்திகர்கள் இன்னபிறரையும் கொண்ட வீடு அது. தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறாத மக்களையும் தாஜ் ஓட்டலில் தங்குபவர்களையும் கொண்டது. அதில் விலை உயர்ந்த சேலைகள் நைக் பிராண்ட் காலணிகள், ரேபான் கண்ணாடிகளுடன் உலவியர்களும் உண்டு. சாதாரண காலணிகள், சாதாரணக் கண்ணாடிகள், சாதாரண உடைகளுடன் உலவியவர்களும் உண்டு. நாங்கள் ஒரு பள்ளிக் கூடத்தின் அழுக்கடைந்த தரையில் படுத்து உறங்கினோம். எங்கள் நினைவுகளில் இருந்து சாதாரண பற்பசை வரை அனைத்தையும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டோம். போர்வைகளைக் கொடுத்து இதமான மகிழ்ச்சியைப் பதிலுக்குப் பெற்றோம். ரகசியங்களை உடைத்தோம். நம்பிக்கைகளை வெளிப்படுத்தினோம்.

நாங்கள் பலவித தோற்றத்தில் காணப்பட்டோம். வெள்ளையாக, கருப்பாக, பழுப்பு நிறத்தில், எதிலும் சேராத புது வண்ணத்தில் நாங்கள் காட்சியளித்தோம். பல்வேறு விதமான மொழிகள் பேசினோம். ஆனால் அவை எல்லாம் பொருட்டாக இல்லை. பரஸ்பர அன்பு எனும் ஒரே மொழியைப் புரிந்து கொண்டோம். வழக்கமான பழகுமுறையை மறுசீரமைத்தோம். வேற்றுமைகளை பாராட்டினோம். பிறரின் மாறுபட்ட பழக்க வழக்கங்களால் அசௌகரியமாக உணர்ந்தாலும், அவற்றை மதிக்கக் கற்றுக் கொண்டோம்.

திட்டமிடும் போதே தோற்றுப் போகும் வர்த்தகங்கள், நிச்சயமான லாபத்தைத் தரும் என நம்பிக்கை தரும் தொழில்களுக்கான வரைவுகளை உருவாக்கினோம். வருமான வழிகளைத் திட்டமிட்டோம். எக்செல் ஸ்பிரெட் ஷீட், கூகுள் டாக்குமென்ட்டுகள், முகநூல் நண்பர்களை உருவாக்கினோம். வாட்ஸ் அப் தகவல்கள் அனுப்பினோம். ட்வீட் செய்தோம். இன்ஸ்ட்ராகிராம் செய்தோம். கவிதைகள், ஓவியம், கட்டுரை, புதிய திட்டங்கள், ஸ்லோகங்கள், லட்சினைகளை உருவாக்கினோம். பிரமுகர்களையும்தான். எதிர்கால பிரதமர்கள், தொழில்முனைவர்கள், யாத்திரை உருவாக்குனர்கள், வர்த்தகத் தலைவர்கள், நல்ல பங்குதாரர்கள், குழந்தைகள், பேரக் குழந்தைகள், எதிர்கால பிஎச்டிக்கள், சட்டப் படிப்பாளிகள், பிக் கியான் ட்ரீஸ் (Biz Gyan Trees) எனப்படும் வர்த்தகத்திற்கான திட்ட வரை படங்கள், ஜனாதிபதிகள், சிஇஓக்கள், ஐஐடிக்காரர்கள், எதிர்காலத்தில் பொறியாளர்களாய் இருந்து தத்துவவாதிகளாய் மாறுவோர், முன்மாதிரிகள், எழுத்தாளர்கள், சாம்பியன்கள், எம்பிக்கள் என உருவாக்கினோம்.

23 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள், 23 நாடுகளில் இருந்து வந்தவர்கள் ஒன்றாகக் கூடியிருந்தோம். விரும்பி இந்த இடத்தில் கூடியிருக்கிறோம். க்ளஸ்ட்ரோஃபோபிக் எனப்படும் அச்சத்தை ஏற்படுத்தும் குறுகிய இடத்தில் கூடி அமர்ந்து கல்வி மற்றும் கற்பித்தலின் தரத்திற்கு மறு வரையறை செய்து கொண்டிருந்தோம். இந்த உலகமயமாக்கல் சகாப்தத்தில் தொழில்நுட்பத்திற்கான வாய்ப்புகள், பல்வேறு துறைகளுக்கிடையே நிலவும் தொடர்பு, திறன் குறித்து பேசினோம். எளிமையாக இருந்தோம் சமத்துவத்துடன் பழகினோம். வடக்கின் பாரம்பரியத்தை வலியுறுத்தினோம். தெற்கின் நுண்ணறிவைப் போற்றினோம்.

வரலாற்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், முன்னோடிகளை நினைவு கூர்ந்தோம். புத்தர், மகாவீரரின் பாதையில் நடந்தோம். மாவோ, பிராய்ட், லிங்கனின் சிந்தனைகளை எதிர்கொண்டோம். உண்மையால் பரிசோதிக்கப்பட்டோம். நமக்கென்று ஒன்றைத் தனியாக உருவாக்கும் போது காந்தியின் இந்தியாவைக் கண்டறிந்தோம். 

image


ரயிலில் இருக்கைகளுக்கு இடையிலுள்ள பாதையில் உணவுக்கான வரிசையில் நாங்கள் நிற்கும் போது, அடுத்தவரைப் பின் நகர்த்தி முன்னேறினோம். தனிமனிதர்களாக, ஒரு பயணமாக, ஒரு தேசமாக மனிதமாக எப்போதும் நாங்கள் முன்னே செல்ல முடிந்தது.

மாற்றத்தைக் கண்டோம். நிலப்பரப்பில், சீதோஷ்ண நிலையில், எங்கள் தோற்றத்தில், சிந்தனையில் ஒரு உறுதியான மாற்றம். முன்பு எப்போதும் கண்டிராத மாற்றம். நாங்கள் அறிந்து வைத்திருந்த உண்மைகள் தவறாயின. எங்கள் மதிப்பீடுகள் வழக்கொழிந்தன. சிலர் எந்த உள்ளடக்கமும் இன்றி சண்டையிட்டனர். சிலர் சூடான விவாதத்தில் இறங்கினர். ஆடம்பரத்தில் இருந்து வாழ்க்கைக்கு, நட்புக்கு மற்றும் அறிவுப் பூர்வமான சண்டைக்கு செல்வதுதான் எங்களது தேவையாக இருந்தது. இந்திய ரயில்வேயின் காலவாதியான பெட்டிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் எங்கள் சொந்தக் கதைகளால் வார்க்கப்பட்ட எங்களின் இதயத்தை இந்தியா கொள்ளை கொண்டதாக உணர்தோம்.

ஆக்கம்: டேவிஸ் கட்டர் | தமிழில்: சிவா தமிழ்ச்செல்வா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

475 இளைஞர்களை தொழில்முனைவர்களாக உருவாக்கும் 'ஜாக்ரிதி யாத்ரா'

சென்னை எக்ஸ்பிரஸில் 'இருவரின் புரிந்துணர்வு'- ஓர் ஒட்டுக் கேட்ட ஒப்பந்தம்!

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags

    Latest Stories

    எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக