பதிப்புகளில்

இணையத்தை மாற்ற முயற்சிக்கும் ’வைய விரிவு வலை’ உருவாகிய லீ!

3rd Dec 2018
Add to
Shares
12
Comments
Share This
Add to
Shares
12
Comments
Share

டிம் பெர்னர்ஸ் லீ, (Tim Berners-Lee ) புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். லீ ஒன்றும் சாதாரண மனிதரும் அல்ல, அவர் உருவாக்கியுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனமும் வழக்கமான ஸ்டார்ட் அப் அல்ல. இணையத்தை எல்லோரும் அணுகக் கூடிய வகையில் ’வைய விரிவு வலை’யை (World Wide Web) உருவாக்கியவர் என பாராட்டப்படும் பிரிட்டிஷ் விஞ்ஞானி தான் டிம் பெர்ன்ஸ் லீ.

இப்போது நாம் அறிந்த வகையில் இணையத்தை மறு உருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதற்காகத் தான் அவர் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனமான ’இன்ரப்டை’ (inrupt) துவக்கி, சாலிட் எனும் புதியை மேடையையும் உருவாக்கி இருக்கிறார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆய்வக்கூடத்தில் இருந்த போது தான், லீ, வலையை உருவாக்குவதற்கான கருத்தாக்கத்தை 1980 களின் இறுதியில் சமர்பித்து, 1991ல் வலையை உருவாக்கினார். 1993ல் இணைய வலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து, பிரவுசர் மூலம் இணையத்தை எவரும் அணுகும் வசதியை அளித்தது. அதன் பிறகு இணையம் எங்கேயோ முன்னேறி வந்துவிட்ட நிலையில், லீ அதை மாற்றி அமைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதற்காக அவர் ’சாலிட் ’ (Solid) எனும் புதிய மேடையை உருவாக்கி இருக்கிறார்.

டிம் பெர்னர்ஸ் லீ <br>

டிம் பெர்னர்ஸ் லீ 


லீ உருவாக்கியுள்ள சாலிட் மேடையை இரண்டாவது வலை என்றும் சொல்லலாம். ஏற்கனவே உள்ள வலையின் மீது தான் இது உருவாக்கப்பட்டுள்ளது என்றாலும், இது செயல்படும் விதம் தற்போதைய வலையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். லீ எதற்கு இப்படி மீண்டும் ஒரு வலையை உருவாக்க முயற்சிக்க வேண்டும்?

இணையம் தற்போது செயல்பட்டு வரும் விதத்திலும் லீ கடும் அதிருப்தி கொண்டிருப்பதே இதற்குக் காரணம். இணையம் அதை உருவாக்கியவர்கள் உத்தேசித்திருந்த ஆதார கொள்கையில் இருந்து வெகுவாக விலகிவிட்டது என லீ கருதுகிறார். அதிலும் குறிப்பாக, இணைய நிறுவனங்கள் பயனாளிகளிடம் இருந்து தகவல்களை பெருமளவு திரட்டி அவற்றின் மூலம் விளம்பர வருவாய் குவிப்பதும், இதன் விளைவாக பயனாளிகள் தனியுரிமை பாதிக்கப்பட்டிருப்பதும், லீயை இனி பொறுப்பதில்லை என சொல்ல வைத்துள்ளது. 

லீ வலையை உருவாக்கிய போது, அந்த கண்டுபிடிப்பு மூலம், தான் ஆதாயம் அடைய நினைக்காமல், காப்புரிமை பெறாமல் அதை உலகிற்கு அளித்தார் என்பதையும், வலை திறந்த வெளிதன்மையுடன் இருக்கும் வகையில் அதன் நிர்வாகத்தை பொதுவெளியில் வைத்தார் என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். 

வலை அமைப்பு மனிதகுலத்திற்கானது என அவர் கருதியதே, இணையம் கட்டுப்பாடில்லாததாகவும். புதுமை முயற்சிகளை ஊக்குவிக்க தொடர்வதற்கான மூலக்காரணம்.

ஆனால் தற்போது இணைய நிறுவனங்கள் தகவல் அறுவடையில் ஈடுபடும் வேகமும், இணையவாசிகள் இதை கேள்வி கேட்க முடியாத நிலையில் இருப்பதும், லீ போன்ற இணைய முன்னோடிகளை வருதத்ததில் ஆழ்த்தியுள்ளது. ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவையை இலவசமாக பெறுவதற்காக, அவற்றிடம் தரவுகளை ஒப்படைத்துவிட்டு நிற்க வேண்டும் எனும் தற்போதைய நிலையை லீ ஏற்கவில்லை. எனவே இதை மாற்றி அமைப்பதற்கான முயற்சியாக சாலிட்டை உருவாக்கியுள்ளார்.

நிறுவனங்களின் கைகளில் தரவுகளை ஒப்படைக்காமல், அவற்றை கையாளும் உரிமையை பயனாளிகள் கைகளுக்கே கொண்டு வருவது தான் இதன் நோக்கம் என்கிறார் அவர். 

இணையத்தை பயன்படுத்தும் நபர்கள் எந்தத் தகவலை எப்படி யாருடன் பகிர்ந்து கொள்ளலாம் என்பதை இனி அவர்களே தீர்மானிக்க முடியும் என்கிறார். வலை உருவான போது இப்படி தான் இருந்தது, ஆனால் பின்னர் எல்லாம் மாறிவிட்டது என்றும் சொல்கிறார்.

லட்சக்கணக்கான பயனாளிகளின் தகவல்கள் தவறான வழியில் சேகரிக்கப்பட்ட கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா சர்ச்சை உள்ளிட்டவை இதற்கான தேவையை நிச்சயம் உணர வைத்துள்ளது. ஆனால் இதை மாற்றுவது சாத்தியமா? ஆம், முடியும் என்பதே லீயின் நம்பிக்கை.

எப்படி சாத்தியம் எனும் கேள்விக்கான பதில் காண, அவர் உருவாக்கியுள்ள ’சாலிட்’ செயல்படும் விதத்தை சுருக்கமாக பார்க்கலாம். தற்போதுள்ள வலை கட்டமைப்பின் மீது செயல்படும் சாலிட் தளத்தில், பயனாளிகள் தங்களுக்கான ’பாட்’களை (Solid POD) உருவாக்கி கொள்ளலாம். இதில் அவர்கள் தங்களைப்பற்றிய தகவல்கள், ஒளிப்படங்கள், கருத்துக்கள் போன்றவற்றை இடம்பெற வைத்துக்கொள்ளலாம். இதை பயனாளிகளுக்கான தனிப்பட்ட இணையதளம் என்றும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் இதன் கட்டுப்பாடு முழுவதும் பயனாளிகள் கையில் இருக்கும். மேலும் இதை வீட்டில், அலுலவகத்தில், இணையத்தில் என எங்கேயும், வைத்துக்கொள்ளலாம். இணையத்தில் உள்ள யு.எஸ்.பி ஸ்டிக் போல இதை நினைத்துக்கொள்ளுங்கள்.

பயனாளிகள் இப்படி தங்களுக்கான பாட்களை அமைத்துக்கொள்வதால் என்ன பயன்? 

இணைய சேவைகளை உருவாக்கும் மென்பொருள் வல்லுனர்கள் இவற்றை கொண்டு புதிய சேவைகளை உருவாக்கலாம் என்பதே விஷயம். அதாவது தற்போதுள்ளது போல, புதிய சேவையை உருவாக்கிவிட்டு, அதை இணையவாசிகளை பயன்படுத்த வைத்து அவர்களின் தகவல்களை திரட்டி வருவாய் ஈட்டும் வர்த்தக மாதிரிக்கு மாறாக, மென்பொருள் வல்லுனர்கள், முதலிலேயே பயனாளிகளின் தகவல்களை அணுகும் வாய்ப்பை பெறுவார்கள். அதனடிப்படையில் புதிய சேவைகளை உருவாக்குவார்கள். இது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

பயனாளிகள் பாட்கள் மூலம் எந்த வகை தகவல்களை பகிரலாம் என்பதை தீர்மானிக்க முடியும். மேலும் அவர்களின் தகவல்களை ஒரு மென்பொருள் வல்லுனர் அணுகி சேவையை உருவாக்கும் போது அந்த தகவல் பொதுவெளியில் பகிரப்படும். எனவே ஒவ்வொரு சேவையாக தனியே தகவல்களை பகிர வேண்டியதில்லை. இந்த முறை மூலம் பயனாளிகள் எதிர்பார்க்கும் புதுமையான தீர்வுகளை வல்லுனர்கள் உருவாக்க முடியும் என லீ நம்புகிறார்.

சாலிட் இணையதளத்தின் முகப்பு பக்கம் <br>

சாலிட் இணையதளத்தின் முகப்பு பக்கம் 


பயனாளிகள் தகவல்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பது மட்டும் அல்ல, எந்த சேவையில் நுழைவது என்றாலும் தற்போதுள்ளது போல், பாஸ்வேர்டு அடிக்க வேண்டியதில்லை. எல்லோரும் தங்கள் பாட்கள் அடையாளம் மூலமே சேவையின் உள்ளே நுழையலாம். இப்படி நுழையும் போது மென்பொருளாளர்களுக்கு தகவல்கள் கிடைக்கும். அதை அறுவடை செய்யும் வேலையும் இல்லை, பின்னர் விளம்பர வலை விரிக்கும் அவசியமும் இல்லை.

தற்போதுள்ள இணையத்தை தலைகீழாக புரட்டிப்போடும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. இணையத்தின் செயல்பாட்டில் தற்போதுள்ள குறைகளை சரி செய்து, மீண்டும் மக்கள் கைகளில் இணையத்தை இது கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது சாத்தியமா?

இந்த முயற்சி கடினமானது என ஒப்புக்கொள்ளும் லீ, தான் பணியாற்றி வரும் எம்.ஐ.டி பல்கலையில் இருந்து தற்காலிக ஓய்வு எடுத்துக்கொண்டு மற்றும் வலை நிர்வாக பணிகளை குறைத்துக்கொண்டு, இதற்கான முயற்சியில் மூழு மூச்சுடன் ஈடுபட்டிருக்கிறார். ஓபன் சோர்ஸ் அடிப்படையிலான இந்த திட்டத்தில் பயனாளிகள் மற்றும் மென்பொருள் வல்லுனர்கள் பங்கேற்கும் போது இது மெல்ல வெற்றி பெறும் என நம்புகிறார்.

சாலிட் இணையதளம்: https://solid.inrupt.com/

சாலிட் பற்றிய டிம் பெர்னர்ஸ் லீ விளக்கம்: https://medium.com/@timberners_lee/one-small-step-for-the-web-87f92217d085

Add to
Shares
12
Comments
Share This
Add to
Shares
12
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக