பதிப்புகளில்

பாரம்பரியத்தை டி-ஷர்ட் மூலம் பறைசாற்றும் சென்னை angi.in

20th Jan 2016
Add to
Shares
253
Comments
Share This
Add to
Shares
253
Comments
Share

சேகுவாரா படம் பதித்த டி-ஷர்ட் அணிந்து செல்லும் இளைஞர்களை பல முறை கண்டிருப்போம். அவர்களில் எத்தனை பேருக்கு சேகுவாரா பற்றித் தெரிந்திருக்கும், ஆனால் நம் மண்ணில் பிறந்த பாரதியாரையும் திருவள்ளுவரையும் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. அவர்களைப் போற்றும் விதத்தில் அவர்கள் படம் பதித்த டி-ஷர்ட்களை ஏன் நாம் அணிவதில்லை? இந்த ஒரு எண்ணமே அங்கி நிறுவனம் உதயமாக மூலக் காரணமாக இருந்தது.

அவர்களின் சமீபத்திய "அறம் செய்ய விரும்பு" என்ற வாசகத்துடன் ஒரு ரூபாய்க்கு டி-ஷர்ட் என்ற முயற்சி பலத்த வரவேற்பை பெற்றது. இந்தத் துறையில் வெற்றி நடை போடும் அங்கி நிறுவனத்தின் நிறுவனர்களின் ஒருவரான ராகவேந்தர் உடன் தமிழ் யுவர்ஸ்டோரி ப்ரேத்யேக நேர்காணல் கண்டது.

பள்ளி நண்பர்களின் கூட்டு முயற்சி

"நான் பொறியியல் படிக்கும் பொழுதே அந்தத் துறை எனக்கானது அல்ல என்று அறிந்து கொண்டேன்" என்று கூறும் ராகவேந்தர், தனது பள்ளி நண்பரான குமாரிடம் இது பற்றி பகிர்ந்து கொண்டார். இதே சமயத்தில் நிஃப்ட் பற்றிய ஒரு பத்திரிக்கைச் செய்தியை பார்ததாக கூறுகிறார். 

"ஃபேஷனுக்கென்று பிரத்யேக கல்லூரி இருந்தது அப்போது தான் எனக்குத் தெரிந்தது. முன்பே அறிந்திருந்தால் அந்தத் துறையில் படித்திருப்பேன்" என்று கூறும் ராகவ் இதை பற்றி மேலும் தகவல்களை சேகரிக்கத் தொடங்கினார்.

2009 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பை முடித்த ராகவ், கல்லூரி மூலம் வேலை வாய்ப்பையும் பெற்றார். அப்பொழுது நிலவிய பொருளாதார மந்த நிலைக் காரணமாக ஒரு வருடம் அமர்வில் இருக்கும் சூழல் ஏற்பட்டது. "ஒரு வருடம் வெட்டியாய் இருந்தேன், அந்த சமயத்தில் தான் ஃநிப்ட் கல்லூரியில் முதுகலை படிக்கலாம் என்ற எண்ணம் எழுந்தது" மும்பை ஃநிப்ட் கல்லூரியில் இரண்டு வருட ஃபேஷன் மேலாண்மை படிப்பில் சேர்ந்தேன்.

'அங்கி' நிறுவனத்தின் மற்றொரு நிறுவனரான குமார், லயோலா கல்லூரியில் கணினி துறையில் பட்டப்படிப்பை முடித்தார். இவருக்கு படைப்புக் கலையில் ஆர்வம் அதிகம்.

முதுகலை பட்டம் முடித்து சென்னை திரும்பிய ராகவ், குமாருடன் இணைந்து பேஷன் ப்ராண்ட் உருவாக்கும் முயற்சியில் ஈடுபடத்துவங்கினார். வீடியோ எடிட்டராக ஒரு மீடியா நிறுவனத்தில் பணியில் இருந்த குமார், முழு நேர கவனத்தை தொழில்முனைவில் திருப்பினார்.

இருவரும் இணைந்து 2012 ஆம் ஆண்டு 'angi .in' தொடங்கினர்.

image


"மும்பை, டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் துடுக்குடன் கூடிய ஒரு வரிக் கொண்ட டி ஷர்ட் ப்ராண்ட்கள் ஏராளம். அதேப் போல் பாப் மார்லி, சேகுவாரா படங்கள் பொறித்த டி-ஷர்ட் இங்கு புழக்கத்தில் உள்ளன. ஏன் நம் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் டி-ஷர்ட்கள் இல்லை என்ற எண்ணத்தில் இதற்கான முயற்சியில் இறங்கினோம்" என்கிறார் ராகவ்.


ஃநிப்ட் கல்லூரியில் படிக்கும் பொழுது நிறைய தொடர்புகள் கிட்டின என்று கூறும் ராகவ், ஆறு மாத காலம் டிசைன் சோதனைகளை மேற்கொண்டதாக கூறுகிறார்.

சந்தித்த சவால்கள்

ஒரு நண்பரின் மூலமாக தஞ்சாவூரில் வசித்த பெரியசாமி என்பவரை அணுகினோம். பாரம்பரிய வரைக் கலைஞரான அவரிடம் எங்களின் எண்ணத்தை பகிர்ந்து கொண்டோம். பாரதியார், திருவள்ளுவர், முருகன், கரகாட்டம், தெருகூத்து, சேவல் சண்டை என்ற எங்களின் தேவையை அவரிடம் சொல்ல அவற்றை வரைந்து கொடுத்தார். இங்கு தான் முதல் சவாலை எதிர்கொண்டோம். அவரின் ஓவியங்கள் 3D பரிமாணத்தில் இல்லாததால் இந்த வடிவில் டி ஷர்ட்களில் கொண்டு வர முடியாது என்று உணர்ந்தோம்.

பெங்களூருவில் உள்ள எங்கள் நண்பனிடம் சவாலை எப்படி எதிர்கொள்வது என்று நாடினோம். அவரின் அறிவுரையின் படி சென்னையில் உள்ள ஒரு டிசைன் நிறுவனத்தின் உதவியுடன் இந்த பணிகளை செய்தோம்.

image


ஆறு வெவ்வேறு டிசைன்களுடன் எங்களின் முதல் டி ஷர்ட் ஜனவரி மாதம் 2013 ஆம் ஆண்டு தயாரானது. ஒவ்வொரு டிசைனிலும் 100 டி-ஷர்ட் பிரிண்ட் செய்ய முடிவெடுத்தோம். குறைந்த அளவில் திருப்பூரில் பிரிண்ட் செய்ய எவரும் முன்வரவில்லை. எங்களை அதிகம் பொருட்படுத்தாத நிலையில் பெரும்பாடுபட்டு நண்பரின் உதவியோடு ஒரு தயாரிப்பாளரை அணுகினோம். 

இதே மாதத்தில் தக்ஷின் சித்ராவில் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சியில், கடை அமைக்கும் வாய்ப்பும் கிட்டியது.

பின் அடுத்த பெரிய சவாலை எதிர்கொண்டோம்.

"குறைந்த அளவில் பிரிண்ட் செய்யும் போது, அதற்கான தயாரிப்பாளரைக் கண்டெடுப்பது கடினம். ஆகையால் நாலு பேரிடம் பட்ஜெட் பெற்று, தரம் சரி பார்க்கும் வாய்ப்பில்லை. ஆகையால் கிடைத்த ஒரு தயாரிப்பாளரிடம் முதல் ஆர்டரை கொடுத்தோம்", 

என்று கூறும் ராகவ் அதில் நேர்ந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்தார்.

தரம் சரி பார்க்கும் வாய்ப்பு அமையாததால், டி-ஷர்ட் பிரிண்ட் ஆகி வந்தவுடன் சோதனைக்கு உட்படுத்தினோம். வண்ணங்கள் பல்லிளித்தன. ஒரு வாரமே தக்ஷின்சித்ரா நிகழ்வு இருந்த தருணத்தில் இது பெரும் பின்னடைவாக இருந்தது. அவசரமாக எண்ணிக்கைகளை குறைத்து மறுபடியும் பிரிண்ட் செய்தோம் என்றார்.

எங்களின் முயற்சிக்கு பெரும் வரவேற்பைக் கண்டோம். ஆனால் சவால்கள் விட்ட பாடில்லை. ஒரே அளவில் அதுவும் ஸ்லிம் பிட் என்ற மெலிந்த வடிவில் அனைத்து டி-ஷர்ட்களும் இருந்தது. வரவேற்பு, சாதகமாக இருந்தாலும் அதிக அளவில் விற்பனை இல்லாமல் போனது.

சில நாட்களில் 'மெட்ராஸ் மார்க்கெட்' நிகழ்ச்சியில் ஸ்டால் அமைத்தோம். அமோக வரவேற்பும் விற்பனையும் சூடு பிடித்தது, ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தியது, என்று தங்கள் பயணத்தை பகிர்கிறார் ராகவ்.

தொடரும் பயணம்

சென்னையை அடுத்து பெங்களுருவில், ஏப்ரல் 2013 ஆம் ஆண்டு ஸ்டால் அமைத்தனர். "தமிழர் பாரம்பரியம் கொண்ட டிஷர்ட் களை விற்பதில் கொஞ்சம் சவாலை எதிகொள்ள நேரிட்டது. அங்குள்ள மக்கள் அந்த மண்ணின் பாரம்பரியத்தை கொண்ட டிஷர்ட்களை எதிர்பார்த்தனர்", என்று கூறும் ராகவ் இந்த படிப்பினை தங்களுக்கு பெரும் உதிவயாக அமைந்தது என்று கூறுகிறார். 

காலிகட்டில் அவர்களின் அடுத்த முயற்சிக்கு முன்னர் களரி, கதகளி, மற்றும் கேரள மாநிலத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் விதமாக டி-ஷர்ட் டிசைன்களை வடிவமைத்தோம். 300 டி-ஷர்ட்களை விற்பனையில் வைத்தோம், அதில் 220 டி-ஷர்ட்கள் விற்பனை ஆகின, என்கிறார் மகிழிச்சி பொங்க.
image


தற்பொழுது பல்வேறு டிசைன்களை சந்தைப்படுத்தும் அங்கி நிறுவனம் நவம்பர் மாதம் 2015 ஆம் ஆண்டு தனது முதல் கடையை சென்னை தி.நகரில் தொடங்கியது.

குடும்பத்தினரின் ஆதரவு

ராகவின் தந்தைக்கு வர்த்தக அனுபவும் இருந்த போதிலும், ராகவின் தாயார் இவரின் தொழில்முனை ஆர்வத்தை அங்கீகரிக்கவில்லை. திருமண வயதில் இருக்கும் மகன் பொறியியல் படித்து டிஷர்ட் விற்கிறான் என்ற ஆதங்கம் அவரின் தாயாருக்கு இருந்ததாக கூறுகிறார் ராகவ். சில மாதங்கள் முன்பு ஒரு முன்னணி நாளிதழில் இவர்களின் நிறுவனம் பற்றியும் ராகவ் மற்றும் குமாரின் பேட்டி வந்தது, தன் தாயை சமாதானப்படுத்தியுள்ளதாக கூறும் ராகவ், குமார் வீட்டில் இன்று வரை இதற்கு உடன்படவில்லை என்றும் கூறுகிறார்.

எதிர்காலம்

தலா ஒரு லட்சம் சுய முதலீட்டு நிதி போட்டு தொடங்கிய அங்கி நிறுவனம், தங்களின் வர்த்தகத்தை மேலும் விரிவு படுத்தும் விதமாக பல்வேறு பெரிய கடைகளில் அவர்களின் டி-ஷர்ட்களை விற்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பெரிய கடைகள் கேட்கும் விற்பனையின் சதவிகிதம் தான் சவாலாக இருக்கிறது என்று கூறும் ராகவ், விரைவில் காலருடன் கூடிய டி-ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறுகிறார்.

சந்தையை விரிவுப்படுத்த கூடுதல் நிதி பெற வங்கிகளை அணுகவுள்ளதாகவும் கூறுகிறார்.

டி-ஷர்ட் என்பது எப்பொழுதும் அணியும் உடை, அதுவும் இது போல பாரம்பரியத்தை பறைசாற்றும் அங்கிகள், இளைஞர்கள் மத்தியில் தற்பொழுது ஃபேஷன் என்றாகிவிட்டது. இதற்கு சான்றாக நம் உரையாடலின் பொழுதே அவ்வப்பொழுது வாடிக்கையாளர்கள் பலரை கவனிக்க ராகவ் சென்றது, இதற்குள்ள வரவேற்பை காட்டுவதாகவே அமைந்தது.

வலைத்தளம்: Angi.in, ஃபேஸ்புக்

Add to
Shares
253
Comments
Share This
Add to
Shares
253
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக