பதிப்புகளில்

சென்னை வெள்ளத்தில் உதவிக்கு கண்ணீர்க் குரல் எழுப்பிய கதைகள்!

8th Dec 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
imageகடந்த வாரம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்கள் பலர். இருப்பிடம், உடைமைகள் என்று அனைத்து வாழ்வாதாரங்களையும் இழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தன்னார்வலர்கள் பலர் அந்த இடங்களுக்குச் சென்று உதவிக்கரங்களை நீட்டி வந்த வண்ணமாக இருந்து வருகின்றனர். ஒரு புறம் நிவாரண பொருட்கள் சரியான இடத்தை சேர்வதற்கான வலைப்பதிவுகள் காணப்பட்டாலும், சாதாரண மக்களும் தாங்கள் இரண்டு மூன்று நாட்களாக பட்ட இன்னல்களை பதிவுகளாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பகிர்ந்துக்கொண்டு அனைவருக்கும் தெரிவுப்படுத்தினர். அதில் பல பதிவுகள் நெஞ்சை பதைபதைக்க வைப்பதாக இருந்தன...

அந்த பதிவுகளில் ஒரு சில...

உயிர் வாழ இன்னும் மூன்று மணிநேரம் மட்டுமே உள்ளது...

சென்னை மற்றும் அதைச் சுற்றி பல இடங்களில் மிகவும் குறைந்த நேரத்திற்குள் பெருமளவு தண்ணீர் சூழப்பட்டு பலரை மீட்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உதவிக்குரல்கள் பல திசைகளிலிருந்து ஒலித்தது.

நாங்கள் உயிருடன் இருக்க இன்னும் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் மட்டுமே உள்ளது. 5 பேர் உள்ள என் குடும்பம் மற்றும் எனது நண்பரின் குடும்பம் மணப்பாக்கத்தில் உள்ள குடியிருப்புக்குள் சிக்கியுள்ளோம். எனது வீடு தண்ணீருக்குள் மூழ்கிவிட்டது, நாங்கள் படகுகள் மூலம் மட்டுமே மீட்கப்பட முடியும். குழந்தைகள், முதியோர், மாற்றுத்திறனாளி என 70க்கும் மேற்பட்டோர் இங்கு உயிரை கையில் பிடித்தப்படி பயத்துடன் உதவியை நோக்கி உள்ளனர். உடனடியாக உதவுங்கள்...
image


ராமாபுரம் மியாட் மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் மணப்பாக்கத்தில் உள்ள குடியிருப்பு இது. நேரம் செல்ல செல்ல செம்பரப்பாக்கம் ஏரியின் உபரிநீரால் தண்ணீர் சூழப்பட்டது. விட்டு விட்டு கிடைத்த தொலைத்தொடர்பின் போது பயத்துடன் பதிவு செய்யப்பட்ட ஃபேஸ்புக் பதிவு இது.

எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை எனக்கு

வெள்ளத்தின் போது பரவலாக எல்லோருக்கும் ஃபார்வர்ட் செய்யப்பட்ட செய்தியான இது, கிட்டத்தட்ட பல சென்னைவாசிகளுடைய எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக இருக்கவே செய்தது. இந்த பதிவு பலரது மனதை வலிக்கச் செய்தது.

image


எனது பெயர் பிரசன்னா வெங்கட்ராம். சென்னையில் உள்ள அமெரிக்க சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். கிட்டத்தட்ட என்னுடைய ஆண்டு வருமானம் 18 லட்சம். வங்கி இருப்பு தொகை 65000 ரூபாய், 2 கிரெடிட் கார்ட், 3 அறை கொண்ட வசதியான சொந்த வீடு என்று சகல செளகரியமும் உண்டு. ஆனால் இன்று வீட்டை சுற்றி தண்ணீர், வெளியே வரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன். நேற்று வரை என்னுடைய ஊதிய உயர்வை பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது நான் உயிர் பிழைக்க ஒரு பாக்கெட் தண்ணீரும், உணவு மட்டுமே கிடைத்தால் போதும் என்ற நிலையில் மொட்டை மாடியில் நின்றுக்கொண்டிருக்கிறேன்..

இயற்கை பலருக்கும் சரியான பாடத்தை கற்றுத்தருகின்றது என்பதற்கான சான்றாக இது விளங்கியது.

அப்பாவின் சடலத்துடன் இரண்டு நாள்

சிலருக்கு உயிர் பயம், சிலருக்கு உயிரிழந்தவர்களை வைத்து தவித்த தவிப்பு என்ற இருமுனைகளும் இருக்கவே செய்தது. ஒரு பிளாக் பதிவு மூலம் சமூக வலைத்தளங்களை சென்றடைந்த கதை இது.

image


முடிச்சூரை சேர்ந்த தீபிகா என்ற பெண், தன்னுடைய 77 வயதான இறந்த தந்தையின் உடலை 2 நாட்கள் வீட்டிலேயே வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முடிச்சூரில் தண்ணீர் சூழ்ந்தமையால் குளிர் பெட்டிகளும் கிடைக்காமல், மின்சாரம் இல்லாததால் எதுவுமே செய்ய முடியாமல், இரண்டு நாட்கள் அவரது உடலை போர்வையால் சுற்றி, வெறும் ஊதுவத்தியை மட்டுமே வைத்து துர்நாற்றம் வராமல் பார்த்துக் கொண்டார். ''எனது தந்தைக்கு இந்த நிலை தேவையில்லை" என்று தீபிகா வருத்தம் தெரிவித்ததும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிலருக்கு மருத்துவ உதவிகள் சரிவர கிடைக்காமலும், அவசர உதவிகளை தேடியும் சமூகவலைத்தளங்களில் பதிவுகளை செய்துக்கொண்டிருந்தனர். மீனாக்ஷி சோலையப்பன் என்பரின் பதிவு இது. பல வலைப்பக்கங்களில் ஷேர் செய்யப்பட்டு சரியான உதவி கிடைக்க வழி செய்தது.

image


என்னுடைய தாயாருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதால் இன்று டயாலிஸிஸ் செய்தே ஆக வேண்டும். தற்போது அசோக் நகர் 11வது அவென்யூவில் வீட்டிற்குள் உள்ளார். டயாலிஸிஸ் செய்யாவிட்டால் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு, மூச்சுத் திணறல், உடலில் நீர் குறைவது போன்ற பல பிரச்னைகள் அவருக்கு வரும். அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உதவுங்கள் என்றது அவரின் பதிவு.

சில இடங்களுக்கு உதவி குழுக்கள் செல்ல முடியாமல் இருந்த நிலையும் ஏற்பட்டது. அதிக நீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுள் ஊரப்பாக்கமும் ஒன்று.

image


"எனது பதினைந்து நாள் குழந்தையோடு உதவிக்காக கதறிக்கொண்டிருக்கிறேன். என்னைப்போல் ஊரப்பாக்கத்தில் பலர் இருக்கின்றனர்." என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் செந்தமிழ் பாரதி.

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான அஷ்வின் ரவிச்சந்திரனின் மேற்கு மாம்பலம் வீட்டையும் வெள்ளம் சூழ்ந்துக்கொண்டது. அவரது மனைவி ப்ரீத்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதைப்பற்றி பதிவு செய்திருந்தார்.

image


கிட்டத்தட்ட 24 மணிநேரம் ஆகியும் அஷ்வினின் பெற்றோர்களை பற்றி எந்த தகவலும் இல்லை. இப்போது அவர் இந்தியாவிற்காக விளையாடிக் கொண்டிருக்கிறார். கடவுளை பிரார்த்தனை செய்துக்கொள்ள மட்டும் தான் என்னால் தற்போது முடியும்.

நிவாரண உதவிகள் அளிக்கும் பணி முழு வீச்சில் இப்போது நடைப்பெற்று வந்தாலும், உதவிக்காக பலர் எழுப்பிய குரல்களை பதிவுகளாக பார்க்கும் போது, இயற்கை அனைவரையும் சமமாகவே நடத்தியுள்ளது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக