இன்டெர்வ்யூ சமயத்தில் தவறு செய்து விடுகிறீர்களா? சரி செய்ய இதோ சில டிப்ஸ்...
பணி நேர்காணல் சமயத்தில் செய்ய நேரும் தவறுகளும் அவற்றை சரிசெய்துகொள்வதற்கான குறிப்புகளும் தொகுக்கப்பட்டுள்ளது!
வேலை தொடர்பான நேர்காணல் அமைவது கடினம். முதல் அறிமுகத்திலேயே சரியான அபிப்ராயத்தை ஏற்படுத்துவது அதைவிடக் கடினம். நீங்கள் உங்களை சிறப்பாகத் தயார்படுத்திக் கொண்டாலும் பணி கிடைக்க ஏன் அது போதுமானதாக இல்லை?
நேர்காணலில் பொதுவாக ஒருவர் செய்ய நேரும் தவறுகள் மற்றும் அவற்றை திருத்திக் கொள்வதற்கான குறிப்புகள் இதோ:
1. பொருத்தமற்ற உடையலங்காரம்
நேர்காணலுக்கு நீங்கள் கோட் சூட் அணிந்து செல்லவேண்டும் என்கிற அவசியமில்லை. பார்க்க ப்ரொஃபஷனலாக இருக்கவேண்டியது அவசியம். நீங்கள் நேர்காணலுக்கு செல்லும் அலுவலகத்தில் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து பணிபுரியும் கலாச்சாரம் இருந்தாலும்கூட பொருத்தமான ஜீன்ஸ், ஷர்ட் அணிந்து செல்வதில் தவறில்லை. உங்கள் உடையலங்காரம் மரியாதை அளிக்கும் வகையில் இருப்பது சிறந்தது. அங்குள்ளவர்கள் உடையணியும் விதம் குறித்து மனிதவளத் துறையில் இருப்போரிடம் கேட்டறியலாம்.
2. அதிக பதட்டத்துடன் காணப்படுதல்
பணியிலமர்த்தும் மேலாளர் உங்களது திறனையும் நிபுணத்துவத்தையும் தாண்டி உங்களது உடல்மொழியையும் கண்காணிப்பார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். நம்பிக்கையுடனும் நேர்மறையான அணுகுமுறையுடனும் இருப்பது எப்படி?
உங்கள் நண்பரின் உதவியுடன் நேர்காணல் போன்ற ஒத்திகையை ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். நேர்காணல் செய்பவரின் கண்களை நீங்கள் நேராக எதிர்கொள்ளும் விதம், முகபாவம் உள்ளிட்ட உங்களது உடல்மொழியை கவனித்து அதற்கேற்ப நீங்கள் அதிக கவனம் செலுத்தவேண்டிய பகுதியை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.
3. சிக்கலான கேள்விகளுக்கு தயார்நிலையில் இல்லாமை
பணியில் ஓராண்டு இடைவெளி, பணி வாழ்க்கை மாற்றம், பணி இடைநிறுத்தம் போன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பது கடினமாக இருப்பது வழக்கம்தான். ஒன்றிற்கும் மேற்பட்ட பதிலைத் தயாராக வைத்திருப்பதும் தொடர்ந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு புத்திசாலித்தனமாக பதிலளிக்க தாயார்நிலையில் இருப்பதும் முக்கியம்.
உதாரணத்திற்கு பணி நிறுத்தம் செய்யப்பட்டாலும் அதிலுள்ள நேர்மறை விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
”நான் பணியாற்றிய நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்ததால் என்னுடன் பணியாற்றிய சக பணியாளர்கள் பலரைப் போலவே நானும் பணியை இழந்துவிட்டேன். என்னுடைய திறனில் கவனம் செலுத்தவும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை ஆராயவும் எனக்கு நேரம் கிடைத்துள்ளது,” எனலாம்.
4. ”நாங்கள் உங்களை ஏன் பணியிலமர்த்தவேண்டும்?” போன்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருத்தல்...
பொதுவாகக் கேட்கப்படும் சில கேள்விகளை முன்கூட்டியே கணித்து அவற்றிற்கு பதிலளிக்க பயிற்சியெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரின் உதவியுடன் ஒத்திகை பாருங்கள். இறுதி நேரத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க இது உதவுவதுடன் உங்களது தன்னம்பிக்கை அதிகரிக்கவும் உதவும்.
5. தொடர்புடைய கேள்விகளைக் கேட்கத் தவறுதல்
பணிக்கான நேர்காணல் செயல்முறையில் பணியிலமர்த்துபவர் உங்களை மதிப்பிடுவதுடன் நீங்களும் அவரை மதிப்படுவதை நினைவில்கொள்ளுங்கள். உரையாடலில் நீங்களும் ஆர்வமாக இணைந்துள்ளீர்கள் என்பதை வெளிப்படுத்த தொடர்புடைய கேள்விகளைக் கேட்பது சிறந்தது.
’இந்த பொறுப்பில் அன்றாட செயல்பாடுகள் என்னவாக இருக்கும்?’ அல்லது “இந்த பொறுப்பில் வளர்ச்சிக்கான அளவுகோல் என்ன? என்பது போன்ற கேள்விகளை நீங்கள் கேட்கலாம்.
நேர்காணலில் பணியிலமர்த்துபவரிடம் பொருத்தமான தொடர்புடைய கேள்விகளைக் கேட்பவர்கள் சிறப்பாக எதிர்வினையாற்றுபவர்களாக கருதப்படுகிறார்கள் என்று ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல் பேராசிரியர்களின் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஏனெனில் இது அவர்கள் முழு ஈடுபாட்டுடன் கவனிக்கிறார்கள் என்பதையும் அவர்களிடையே நடைபெறும் உரையாடலை சிறப்பாக புரிந்துகொண்டுள்ளார் என்பதை உணர்த்துகிறது.
6. பணி வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பே ஊதியம் குறித்து விவாதித்தல்
உங்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும் நேரம் வரும் வரை ஊதியம் தொடர்பாக விவாதிக்கவேண்டாம். ஊதிய எதிர்பார்ப்பு குறித்து உங்களிடம் கேட்டால் சுருக்கமாக பதிலளிக்கலாம்.
”என்னுடைய சம்பள எதிர்பார்ப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளலாம்” என்றோ அல்லது “எனக்கு தற்போது இந்தத் தொகைக் கிடைக்கிறது. ஆனால் நான் விண்ணப்பித்துள்ள பொறுப்பு மாறுபட்டது என்பதை அறிவேன்,” என்று பதிலளிக்கலாம்.
7. நன்றி பாராட்டி தகவல் அனுப்புவதில்லை
நீங்கள் நேர்காணலில் தேர்வாகியிருப்பினும் இல்லையெனிலும் நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு குறிப்பை அனுப்பி அந்தப் பணி மீது உங்களுக்கு உள்ள ஆர்வத்தை தெரியப்படுத்துங்கள். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து உங்களுக்கு தெரியப்படுத்தாத நிலையில் அதுகுறித்து கேட்டறிவது சிறந்தது.
(இந்த கட்டுரை முதலில் www.hbrascend.org தளத்தில் வெளியானது. HBR Ascend நிறுவனம் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களும் தொழில்முறை வாழ்க்கையின் துவக்கநிலையில் இருப்பவர்களும் டிஜிட்டல் வாயிலாக கற்க உதவுகிறது.)
தமிழில் : ஸ்ரீவித்யா