அரசுப் பள்ளிக் கட்டிடம் கட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாகத் தந்த 80 வயது ஆசிரியை!

  பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்காக ரூ.4 கோடி மதிப்பிலான தனது நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளார் ஈரோட்டைச் சேர்ந்த முன்னாள் பள்ளித் தலைமை ஆசிரியை பொன்மணிதேவி!

  19th Feb 2018
  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  எழுத்தறிவிப்பவன் இறைவன் என்று கூறுவார்கள். அந்தவகையில் வாங்கும் சம்பளத்திற்கு வேலை பார்த்தால் போதும் என எண்ணாமல், பணி ஓய்விற்குப் பிறகும் தனக்கு சொந்தமான நிலத்தை மாணவர்களுக்காக தானமாக அளித்து உள்ளார் ஈரோட்டைச் சேர்ந்த முன்னாள் தலைமை ஆசிரியை பொன்மணிதேவி.

  ஈரோடு மாவட்டம் சித்தோடு நல்லகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் பொன்மணிதேவி. தற்போது 80 வயதாகும் இவர் தமிழாசிரியையாக பணியைத் தொடங்கி தலைமை ஆசிரியையாக ஓய்வு பெற்றவர். கடந்த 1964-ம் ஆண்டு அரசுப் பணியில் சேர்ந்த பொன்மணி, சுமார் 32 வருடங்கள் ஆசிரியையாக பணிபுரிந்து, 1996ம் ஆண்டு கோபி, மொடச்சூர் பள்ளி தலைமை ஆசிரியையாக ஓய்வு பெற்றார்.

  20 ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் குமார நடராஜ வரதப்பன் உடல்நலக் குறைவால் காலமானார். அதனைத் தொடர்ந்து மருத்துவம் படித்து வந்த தனது மகன் மயூரா கார்த்திக்கேயனுடன் வசித்து வந்தார் பொன்மணி. ஆனால், எதிர்பாராதவிதமாக கடந்த 2001ம் ஆண்டு மின்சாரம் தாக்கி கார்த்திக்கேயன் உயிரிழந்தார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த பொன்மணியை தனிமை வாட்டத் தொடங்கியது. பொன்மணியை அவரது சகோதரி மாரத்தாள் மற்றும் அவரது மகன்கள் கவனித்து வருகின்றனர்.

  பட உதவி: தினமலர் மற்றும் தி ஹிந்து

  பட உதவி: தினமலர் மற்றும் தி ஹிந்து


  இந்நிலையில், மாணவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து தொடர்ந்து சிந்தித்து வரும் பொன்மணி, அதற்காக தன்னால் இயன்ற அளவிற்கு நிதி மற்றும் நில உதவி அளித்து வருகிறார்.

  கடந்த 2006-ல் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதி கட்டுவதற்காக தன்னுடைய 25 செண்ட் நிலத்தை அவர் கொடுத்தார். பின்னர் 2015-ல் சித்தோடு அரசு பள்ளி கட்டிடத்தை மேம்படுத்துவதற்காக 2 லட்ச ரூபாய் வழங்கினார்.

  “எங்கள் குடும்பம் தமிழ் மீது பற்றுள்ள குடும்பம். என் கணவர் வரதப்பன், அவரும் தமிழாசிரியர் தான். எனக்கு ஒரே மகன். அடுத்தடுத்து கணவர் மற்றும் மகன் இறந்ததால், அந்த சோகம் என்னை மிகவும் பாதித்தது. மனதளவில் உடைந்து போனேன். ஆன்மிகத்தில் ஈடுபட்டேன். நம்மிடம் இருக்கும் சொத்துக்களை வைத்து இனி என்ன செய்யப் போகிறோம். கல்விப் பணிக்காக செலவிடுவோம் என்று முடிவு செய்தேன்,” என்கிறார் பொன்மணி.

  கடந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்ட சித்தோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை சுமார் 500 மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல் இங்கு பிளஸ் 2 வகுப்பு தொடங்கப்படவுள்ளது. ஆனால், அதற்கு போதிய இடவசதியில்லாததால் பள்ளி நிர்வாகம் கவலையில் இருந்தது.

  இது தொடர்பாக தகவல் அறிந்த பொன்மணி, உடனடியாக தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை பள்ளிக் கட்டடம் கட்ட தானமாக அளித்துள்ளார். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.4 கோடி எனக் கூறப்படுகிறது.

  “பணத்தைக் குறித்தோ, நிலத்தின் மதிப்பு குறித்தோ எனக்கு கவலையில்லை. ஏழைகளின் கல்வி முன்னேற்றம் தான் எனக்கு தேவை,” எனக் கூறுகிறார் பொன்மணி தேவி.

  இதற்கான பாராட்டு விழா நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பொன்மணியைப் பாராட்டினர். அப்போது, நிலத்தானம் செய்வதற்கான பத்திரத்தை பொன்மணி வழங்கினார்.

  புதிதாகக் கட்டப்பட உள்ள பள்ளிக் கட்டிடத்திற்கு பொன்மணியின் மகன் மயூரா கார்த்திக்கேயனின் பெயர் சூட்டப்பட உள்ளது.

  “பெண் பிள்ளைகள் கல்விக்காக வெளியூருக்குச் சென்று அலைவது எனக்கு கவலை அளித்தது. உயர்கல்வி எட்டாக் கனியாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் எனது நிலங்களை மாணவர்களுக்காக அளித்து வருகிறேன். அனைவரும் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே என் எண்ணம். வாழும் நாட்கள் வரை மற்றவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்,”

  என சுருக்கம் நிறைந்த தனது கண்களுக்குள் கனவுகள் பலத் தேக்கிப் பேசுகிறார் பொன்மணி.

  Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.

  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  Our Partner Events

  Hustle across India