100 மில்லியன் டாலர் வருவாய் மைல்கல்லை எட்டிய சென்னை FreshWorks

மென்பொருளை ஒரு சேவையாக வழங்கும் இந்திய நிறுவனங்களில் ஜோஹோவுக்கு பிறகு, 100 மில்லியன் டாலர் எனும் வருவாய் மைல்கல்லை எட்டிய வெகு சில நிறுவனங்களில் ஒன்றான பிரெஷ்ஒர்க்ஸ், ஒருங்கிணைந்த கிளவுட் தொகுப்பான பிரெஷ்ஒர்க்ஸ் 360 ஐ அறிமுகம் செய்துள்ளது. 
0 CLAPS
0

மென்பொருளை சேவையாக வழங்கும் (சாஸ்- SaaS) வர்த்தக மென்பொருள் சேவை நிறுவனமான பிரெஷ்ஒர்க்ஸ் 100 மில்லியன் டாலர் எனும் தொடர் ஆண்டு வருவாய் (ஏ.ஆர்.ஆர்) மைல்கல்லை எட்டியுள்ளது. வாடிக்கையாளர் சேவை மென்பொருளான பிரெஷ்டெஸ்க், ஐடி சேவை நிர்வாக மென்பொருளான பிரெஷ்சர்விஸ் மற்றும் சிஆர்.எம் மென்பொருளான பிரெஷ்சேல்ஸ் ஆகியவை இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளன.

பிரெஷ்ஒர்க்ஸ் பெரிய நிறுவனங்களான ஹோண்டா, பிரிட்ஜ்ஸ்டோன், ஹியுகோபாஸ், பெனிசில்வேனியா பல்கலை, டோஷிபா, சிஸ்கோ, ஆபிஸ் மேக்ஸ் மற்றும் ஆயிரக்கணக்கான நிறுவனங்களை உலக அளவில் வாடிக்கையாளர்களாக பெற்றுள்ளது.

செயல்திறன் மிக்க வாடிக்கையாளர் நிர்வாக மென்பொருள் மற்றும், விலையை அடிப்படையாக கொண்ட உரிம முறையில் இருந்து விலகி நின்றது நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளது.


பிரெஷ்ஒர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் 
“வாடிக்கையாளர் நிர்வாக மென்பொருள் என்று வரும் போது, நீண்ட காலமாக சிறிய நிறுவனங்கள் மற்றும் வர்த்தகங்கள் கண்டுகொள்ளப்படவில்லை,” என்கிறார் பிரெஷ்ஒர்க்ஸ் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஒ கிரிஷ் மாத்ரூபூதம்.

“விற்பனை, மார்க்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவு அதிகாரிகள் பழைய சி.ஆர்.எம் மற்றும் ஆதரவு அமைப்பை பயன்படுத்த நிர்பந்திக்கப்பட்ட நிலையில், மனிதவள மற்றும் ஐடி பிரிவினர் தேவையில்லாத அம்சங்கள் கொண்ட, விலை உயர்ந்த சேவைகளை பயன்படுத்த வேண்டியிருந்தது. யாருக்கு தேவையோ அவர்களுக்கு எளிதாக பயன்படுத்தக்கூடிய வர்த்தக மென்பொருளை வழங்குவது தான் எங்கள் குறிக்கோள்,” என்கிறார் அவர்.

முன்னணியில்...

நிறுவனம் வேகமான வளர்ச்சி கண்டு வந்ததாகவும், அதன் தொடர் ஆண்டு வருவார் 75 மில்லியன் டாலராக இருந்ததாகவும் விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரெஷ்ஒர்க்சின் 36 சதவீத வருவாய் பெரிய நிறுவங்களிடம் இருந்து வருகிறது. எஞ்சியவை சிறிய நிறுவனங்கள் மூலம் வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா (யு.கேவும் ) நிறுவனத்தின் 40 சதவீத வர்த்தகத்தை அளிக்கின்றன. இந்தியா மூன்றாவது பெரிய சந்தையாக இருப்பதாகவும், அமெரிக்கா மற்றும் யுகேவில் இருந்து பெரும்பாலான வருவாய் வருவதாகவும் கிரீஷ் சொல்கிறார்.

மென்பொருளை சேவையாக வழங்கும் பிரிவில் முன்னிலையில் திகழ பிரெஷ்ஒர்க்ஸ் தொடர்ச்சியாக புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. பிரெஷ்சாட், பிரெஷ்காலர், பிரெஷ்மார்கெட்டர் மற்றும் பிரெஷ்டீம் என சேவைகளை விரிவாக்கம் செய்துள்ளது. மார்கெட்டர்கள், மனிதவள அதிகாரிகள் மற்றும் சேவை அதிகாரிகள் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க இணைந்து செயல்பட உதவும் மென்பொருள் சேவையாக பிரெஷ்டீம் அமைகிறது. விற்பனை, மார்க்கெட்டிங், சேவைகள் ஆகியவற்றை ஒன்றிணைந்த்து வாடிக்கையாளர்களுக்கு எளிதான அனுபவத்தை வழங்கும் பிரெஷ்ஒர்க்ஸ் 360 சேவையையும் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

இந்த சேவையில், பிரெஷ்டெஸ்க், பிரெஷ்சேல்ச், பிரெஷ்மார்க்கெட்டர், பிரெஷ்காலர் (கால்செண்டர் மென்பொருள்) பிரெஷ்சாட் ஆகியவை அடங்கியுள்ளன. இதன் மூலம் பயனாளிகள், வாடிக்கையாளர் உரையாடல் வரலாறு, தரவுகள், சாட் மற்றும் சமூக ஊடக தகவல்கள் உள்ளிட்டவற்றை எளிதாக அணுக முடியும்.

பிரெஷ்ஒர்க்ஸ் சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இதன் அனைத்து சேவைகளையும், பிரெஷ் ஒர்க்ஸ் ஸ்விட்சர் மூலம் ஏற்கனவே உள்ள லாகின் வாயிலாக முன்னோட்டம் பார்க்கலாம்.


மற்றவர்கள் எங்கே?

மென்பொருளை ஒரு சேவையாக வழங்குவது பெரிய அளவிலான வாய்ப்பு எனில், ஒரு வேம்பு மற்றும் ஒரு கிரீஷ் மாத்ரூபூதம் மட்டும் இருப்பது ஏன்?

ஜோஹோ கார்ப் மற்றும் பிரெஷ் ஒர்க்ஸ் வேறு வேறு பாதையை பின்பற்றினாலும், (ஜோஹோ இதுவரை சேர்ந்த ரொக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது, பிரெஷ்ஒர்க்ஸ் முதலீட்டாளர் நிதியை அடிப்படையாக கொண்டுள்ளது), அடிப்படையில் இரண்டு நிறுவனங்களும் ஒரே மாதிரியானவை தான். ஜோஹோ நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு, விரைவான புதுமையாக்கத்தில் கவனம் செலுத்தி, சிறு நிறுவனங்கள் மற்றும் வர்த்தகங்களுக்கு ஐடி சேவையை ஜனநாயகமயமாக்கியிருக்கிறார். இதுவே நிறுவன ஆண்டு தொடர் வருவார் 500 மில்லியன் டாலராக இருப்பதாக கூறப்படுகிறது.

வேம்புவைப் போலவே கிரீஷ் மற்றும் அவரது நிறுவனமும் நிறுவன ஐடி சேவையில் மாற்றத்தை கொண்டு வருவதை நோக்கமாக கொண்டுள்ளார். கிரிஷ் பல ஆண்டுகள் ஜோஹோவுஇல் பணியாற்றிவிட்டு தான் 2010 ல் தொழில்முனைவு பாதையை தேர்வு செய்தார். கிளவுட் சார்ந்த சேவைகளை நோக்கி உலகம் நகரத்துவங்கிய காலத்தில் கிரீஷ் அதை பற்றிக்கொண்டார்.

பிரெஷ் ஒர்க்ஸ், இதுவரை டைகர் குளோபல், ஆக்சல், செகோஷியா உள்ளிட்ட சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து 139 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.

யுவர்ஸ்டோரி வசம் உள்ள தரவுகள் படி, இந்தியாவில் 227 மென்பொருளை சேவையாக அளிக்கும் நிறுவனங்கள் ஏ சுற்றுக்கு முந்தைய மற்றும் ஏ சுற்று + நிதி திரட்டியுள்ளன. இவற்றில் ஹெல்ப்ஷிப்ட், மைண்டிக்கில், சார்ஜ்பி, பிரவுசர்ஸ்டாக், ரேட்கெயின் ஆகியவை நல்ல வருவாயை கொண்டுள்ளன. எனினும் இவை அனைத்தும் 30 மில்லியன் டாலர் அல்லது அதற்கும் குறைவான ஆண்டு தொடர் வருவாயை நோக்கி செல்கின்றன. இது கிரீஷை முன்னிலை பெற வைக்கிறது. பில்லியன் டாலர் சந்தை மதிப்பீடு கொண்ட வெகு சில மென்பொருள் சேவை நிறுவனங்களில் ஒன்றாக பிரெஷ்ஒர்க்ஸ் விளங்குகிறது. ஆர்யகா மற்றும் மாந்தன் ஆகிய நிறுவனங்களும் அதிக மதிப்பீடு போட்டியில் உள்ளன.

வளமான எதிர்காலம்

உலக அளவிலான பொது கிளவுட் சேவை சந்தை 2018 ல் 21.4 சதவீத வளர்ச்சி பெற்று 186.4 பில்லியன் டாலராக இருக்கும் என காட்னர் தெரிவிக்கிறது. 2017 ல் இது 153.5 பில்லியன் டாலராக இருந்தது. இவற்றில் வேகமாக வளரும் பிர்வாக உள்கட்டமைப்பை சேவையாக (ஐ.ஏ.ஏ.எஸ்) வழங்கும் பிரிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2019 ல் 35.9 சதவீத வளர்ச்சி பெற்று 40.8 பில்லியன் டாலர் வருவாயை எட்டலாம் என கணிக்கப்படுகிறது.

இந்த பிரிவு சந்தையில் முதல் 10 சேவையாளர்கள் 2021 ல் 70 சதவீத சந்தையை அடையலாம் என காட்னர் தெரிவிக்கிறது. 2016 ல் இது 50 சதவீதமாக இருந்தது.

“ஹைபர்ஸ்கேல் ஐ.ஏ.ஏ.எஸ் சேவையாளர்களின் அதிகரிக்கும் ஆதிக்கம் பயனாளிகள் மற்றும் சந்தை பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பு மற்றும் சவாலாக அமைவதாக காட்னர் ஆய்வு இயக்குனர் சிட் நாக்,” கூறுகிறார்.

மென்பொருளை சேவையாக வழங்கும் பிரிவு கிளவுட் சேவையில்க் முக்கிய அங்கம் வகிக்கும். 2018 ல் இது 22.2 சதவீத வளர்ச்சி பெற்று 73.6 பில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ல் மொத்த அப்ளிகேஷன் மென்பொருளில் இப்பிரிவு 45 சதவீதமாக இருக்கும் என காட்னர் கணிக்கிறது.

"பல இடங்களில் சாஸ் தான் விரும்பும் டெலிவரி மாடலாக இருக்கிறது என்று சொல்லும் நாக், இந்த பயனாளிகள் தங்கள் குறிப்பிட்ட வர்த்தக நோக்கத்திற்கான தீர்வுகளை கோரத்துவங்கியிருப்பதாக சொல்கிறார்.

இந்த பின்னணியில் இந்தியா பிரெஷ்ஒர்க்ஸ் போன்ற சாஸ் ஸ்டார்ட்ப்களை உருவாக்கி வருகிறது.

ஆங்கிலத்தில்: விஷால் கிருஷ்ணா / தமிழில் – சைபர்சிம்மன்