மளிகைக்கடை ஊழியர் தொடங்கிய அணில் சேமியா நிறுவனம், இன்று ரூ.220 கோடி விற்றுமுதலுடன் ப்ராண்டாக வளர்ந்த கதை!

சிறிய அளவில் திண்டுக்கல்லில் நாகராஜ் என்பவரால் தொடங்கப் பட்ட அணில் சேமியா நிறுவனம், இன்று அவரின் வாரிசுகளின் முயற்சியோடு பிரம்மாண்டமாக புதுப்பொலிவுடன் வளர்ந்து நிற்கிறது!
434 CLAPS
0

முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் என்ற பழமொழிக்கு ஏற்ப, நமக்கு தெரிந்த தொழில் சிறிதோ, பெரிதோ, அதை கண்ணும் கருத்துமாக கவனித்து முழு ஈடுபாட்டுடன் உழைத்தால் நிச்சயம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். இதற்கு ஆகச்சிறந்த உதாரணம் அணில் சேமியா கம்பெனி.

திண்டுக்கல்லில் உள்ள 'அணில் சேமியா' நிறுவனம், சேமியா தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. இதுவரை டாப் அணில் மார்க்கெட்டிங் நிறுவனம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம், தற்போது காலத்திற்கேற்ப புதுப்பொலிவுடன், புதுச்சுவையுடன், பாரம்பரியம் மாறாமல், ‘அணில் ஃபுட்ஸ்’ என்று கம்பு, வரகு, தினை, சோளம் போன்ற சேமியாவை குழந்தைகளை கவரும் சுவையில் அறிமுகம் செய்துள்ளது.


அணில் நிறுவனர்கள் சுகுமாரன் மற்றும் கமல்ஹாசன்

அணில் சேமியா தொடக்கம்

மளிகைக் கடையில் வேலை பார்த்த நாகராஜ், இரண்டு மிஷின்களைக் கொண்டு குறைந்த முதலீட்டில் ஆரம்பித்த இந்நிறுவனம் தற்போது ஆலமரமாக கிளை பரப்பி நிற்கிறது. ஜூபிடர் என்ற பெயரில் சேமியா விற்பனை செய்து வந்த அவர், கடந்த 1984-ம் ஆண்டு ’அணில் சேமியா’ என பெயர் மாற்றி புதிய நிறுவனத்தை தொடங்கினார்.

தற்போது இந்த நிறுவனத்தை அவரது மகன்களான சுகுமாரும், கமல்ஹாசனும் கவனித்து வருகின்றனர். இரண்டாம் தலைமுறை தொழில்முனைவோரான இவர்கள், தங்களது அப்பா ஆரம்பித்த நிறுவனத்தில் மேலும் பல புதுமைகளைப் புகுத்தி, வியாபாரத்தை மேலும் விரிவு படுத்தி ப்ராண்டாக வளர்த்து வருகின்றனர்.

“ஆரம்பத்தில் பாயாசம் உள்ளிட்ட இனிப்புகள் செய்ய மட்டுமே பயன்பட்டு வந்த சேமியாவை, மேலும் மெலிதாக்கி சேமியா உப்புமா உள்ளிட்ட டிபன் வகையறாக்கள் செய்ய மக்களுக்கு அறிமுகப்படுத்தினோம். இந்த புதிய யுக்தி எங்களுக்கு பெரிதும் கை கொடுத்தது. எங்கள் சேமியாவை மக்கள் விரும்பி வாங்கத் தொடங்கினர். மக்களின் இந்த வரவேற்பே எங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. அதனைத் தொடர்ந்து மக்களின் தேவை என்ன என்பதை ஆய்வு செய்து அந்தப் பொருட்களை சந்தையில் அறிமுகப் படுத்தத் தொடங்கினோம்,”

என தாங்கள் கடந்து வந்த பாதையை நினைவு கூர்கிறார் அணில் சேமியா நிறுவனத்தின் செயல் இயக்குனரான சுகுமாரன். தகவல் தொடர்பு சாதனங்கள் அவ்வளவு பிரபலமில்லா அந்தக் காலத்தில், வீதிவீதியாகச் சென்று சுவர்களில் எழுதி தங்கள் சேமியாவைப் பிரபலப்படுத்தியுள்ளனர் அணில் சேமியா நிறுவனத்தினர். பின்னர் ரேடியோ விளம்பரம் அணில் சேமியாவை இன்னும் மக்களுக்கு நெருக்கமாக்கியுள்ளது.


அணில் தயாரிப்புகள்
“ஆரம்பத்தில் நேரடி விற்பனை மட்டுமே செய்து வந்தோம். பின்னர் மக்களிடையே எங்கள் பொருட்களுக்கு தேவை அதிகரித்ததால், டிஸ்டிரிபியூட்டர் மூலம் மேலும் விற்பனையை விரிவு படுத்தினோம். காலத்திற்கு ஏற்ப மக்களின் தேவையை உணர்ந்து ராகி சேமியா உட்பட பல புதிய பொருட்களை அறிமுகப்படுத்தினோம். அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால், எங்கள் விற்பனை பன்மடங்கு உயரத் தொடங்கியது,” என்கிறார் சுகுமாறன்.

கடின உழைப்பே அடித்தளம்

மிகச்சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட அணில் சேமியா நிறுவனத்தில் தற்போது 1300 பேர் வேலை பார்த்து வருகின்றனர். அணில் சேமியா, ராகி சேமியா உள்பட 25 பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் கடந்தாண்டு ரூ. 220 கோடி விற்றுமுதல் ஈட்டியுள்ளனர்.

“பலசரக்கு கடையில் வேலை பார்த்து வந்த எங்கள் அப்பா, ஆரம்பத்தில் சேமியா விற்பனையைத் தொடங்கியபோது பல்வேறு கசப்பான சம்பவங்களைக் கடந்து தான், பல பாடங்களைக் கற்றார். பத்தாவது பெயிலான அவருக்கு வாழ்க்கைப் பல தேர்வுகள் வைத்தது. அவற்றைச் சமாளித்து தோல்விகளில் பாடம் கற்று, நடைமுறைச் சிக்கல்களில் தேர்ச்சி பெற்று வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி இந்நிறுவனத்தை தொடங்கினார்.” 

அவரது கடின உழைப்பின் பலனாக தற்போது தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவிலும் எங்கள் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது, என்கிறார் சுகுமாறன்.

ஒரே மாதிரியான தரம், நல்ல சுவை, மக்களின் தேவை அறிந்து பொருட்களை அறிமுகப் படுத்துவது போன்றவையே தங்களது வெற்றிக்கான காரணம் என்கிறார் அவர். எக்காரணத்திற்காகவும் தரத்தில் ஏதும் குறை ஏற்பட்டு விடாமல் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வதாகவும், அதனாலேயே மக்கள் அணில் நிறுவனப் பொருட்களை விரும்பி வாங்குவதாகவும் சுகுமாறன் கூறுகிறார்.

“இன்று எங்களது நிறுவனம் கிளை பரப்பி நிற்பதற்கு எங்கள் அப்பா போட்டுத் தந்த சக்தி வாய்ந்த அடித்தளமே காரணம். எங்கள் நிறுவனத்தின் வேர் எங்கள் அப்பா,” என்று பெருமையுடன் கூறுகிறார் சுகுமாறன்.

சிறுதானிய சேமியா

ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கம் குறித்த விழிப்புணர்வு தற்போது மக்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. வைத்தியனுக்கு தருவதை வாணிபனுக்கு கொடு என்ற பழமொழியை மனதில் வைத்து சிறுதானியங்கள் பக்கம் தங்கள் கவனத்தை மக்கள் திருப்பத் தொடங்கியுள்ளனர். இதனை தங்களது வியாபாரத்திற்கான நல்ல களமாக பயன்படுத்திக் கொண்டுள்ள அணில் சேமியா நிறுவனம், கம்பு, வரகு, தினை, சோளம், கோதுமை போன்றவற்றை மூலப்பொருட்களாக்கி புதிய சேமியா வகைகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இம்மாத தொடக்கத்தில் இப்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. குறைந்த காலகட்டத்திலேயே தங்களது பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் அணில் சேமியா நிறுவனம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.


நடிகர் விஜய் சேதுபதி உடன் அணில் நிறுவனர்கள்

தற்போது நடிகர் விஜய் சேதுபதி அணில் சேமியா நிறுவனத்தின் விளம்பரத்தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்னும் சில மாதங்களில் மேலும் பல புதிய உணவுப் பொருட்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

எதிர்காலத் திட்டம்

சின்னச் சின்னக் கம்பெனிகள் தான் தங்களது போட்டியாளர்கள் என்கிறார் சுகுமார். தொழில்போட்டி ஒருபுறம் இருக்க, ஜிஎஸ்டி, டீமானிடைசேஷன் உள்ளிட்ட காரணங்களால் மக்களிடையே பணப்புழக்கம் முடக்கம் அடைந்துள்ளதாகவும், இதனால் அவர்களது செலவழிக்கும் விதம் குறைந்துள்ளதாகவும் அவர் கவலையுடன் கூறுகிறார்.

“தலைமுறைகளைத் தாண்டிய பாரம்பரியம் என்பதே எங்களது தாரக மந்திரம். உலகத்தில் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும், அவர்களிடம் எங்களின் பொருட்களை இதே தரத்தில் கொண்டு சேர்ப்பதே எங்கள் லட்சியம்,” என்கிறார் சுகுமார்.

Latest

Updates from around the world