பதிப்புகளில்

பெண்களுக்கு பெரும் தைரியத்தை தரும் 'சேஃப் சிட்டி' (Safecity)

Nithya Ramadoss
8th Sep 2015
Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share

இந்தியா முழுதும் இன்று பெண்களுக்கு ஏற்படும் துன்புருத்தல் மற்றும் தொல்லைகள் நாளுக்கு நாள் பெருகிய வண்ணம் உள்ளது. சாலையில் பெண்களை கேலி செய்து திரியும் ஆண்கள், தொலைபேசி மூலம் தொடர்ந்து தொந்தரவு தரும் நபர்களை பற்றி தெரிந்திருந்தாலும் காவல் துறையிடம் புகார் அளிக்கமுடியாத நிலையில் தான் இன்றைய பல பெண்கள் இருக்கின்றனர்.

இந்திய அரசு வெளியிட்டிருக்கும் சரியான புள்ளிவிவரத்தின் படி, 20 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறாள். இந்தியாவின் உள்துறை அமைச்சகத்தின் படி, அமெரிக்கா மற்றும் ஆபரிக்காவிற்கு அடுத்து முன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. “20 நிமிடத்திற்கு ஒரு பலாத்காரம் நடக்கிறது என்றால், காவல் துறையிடம் புகார் அளிக்கப்படாத, நாடு முழுதும் தினமும் பல தெருக்களில் நடைபெறும் இத்தகைய குற்றங்களின் கணக்கு என்னவாக இருக்கும் தெரியுமா?” என்று ஒரு கேள்வியை எழுப்புகிறார் எல்சா மேரி டிசில்வா.

டிசம்பர் 2012ம் ஆண்டில் பரபரப்பு செய்தியாகிய நிர்பயா வழக்கு நாட்டில் எல்லோரையும் அதிர்ச்சியில் உலுக்கி எடுத்தது. அந்த அதிர்ச்சியில் உறைந்துப்போன மூன்று பெண்கள் தங்களுடைய கைகளில் இந்த விஷயத்தை எடுத்து செயல்பட முடிவெடுத்தனர்.

நற்செயலுக்காக சேர்ந்த பெண்கள்

எல்சா மேரி டிசில்வா, சூர்யா வேலமுறி, சலோனி மல்ஹோத்ரா இந்த மூவரும் நிர்பயா சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு முன் சுவிடனில் ஒரு மாநாட்டில் சந்தித்து கொண்டனர். பெண்களை வழிநடத்தும் ஒரு மேம்பாட்டு திட்டத்திற்காக இம்மூவரும் பணி புரிந்திருந்த சமயம் தான் நிர்பயா சம்பவம் நடந்தது. இது இவர்களை புறட்டி போட்டது. தங்கள் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்ப்டும், வெளிவராத பாலின வன்கொடுமைகளை வெளிச்சம் போட்டு மற்றவர்களுக்கு காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டோம்" என்று கூறுகிரார் எல்சா. எளிதில் பேசவிரும்பாத விஷயமான, பெண்களுக்கு எதிரான பிரச்னைகளை பற்றி பகிர்ந்துக்கொள்ளக்கூடிய ஒரு தளமாக 'சேஃப்சிட்டி' (SafeCity) அமைக்கப்பட்டது.

யுவர்ஸ்டோரி இந்த திட்டத்தை பற்றி மேலும் விரிவாக எல்சாவிடம் பேசியது.

சேஃப்சிட்டி

எல்சா, சூர்யா மற்றும் சலோனிக்கு 5 நாட்களிள் சேஃப்சிட்டியை துவங்கினார்கள். இது புவியியல் தகவல் அமைப்பின் படி செயல்படக்கூடிய வரையீடு (மேப்பிங்) மென்பொருள் ஆகும். உஷாஹிதி என்னும் தொழில்நுட்பம் மூலம் க்ரவுட் மேப்பிங் கொண்டு செயல்படும் இது, தகவல்களை கூட்டாக சேகரித்துக்கொள்ளும். தங்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமை சார்ந்த பிரச்சனையை ஒரு தகவலாக இதில் செலுத்தும் போது, அது அந்த குறிப்பிட்ட இடத்தை குறித்து, அந்த தகவலை இடத்தின் பெயரில் ஒரு லோக்கேஷனாக மேப்பில் பதிவு செய்துக்கொள்ளும்.

பெண்கள் தங்களுடைய அடையாளத்தை வெளிப்படியாக காட்டிக்கொள்ளாமலும், ஒரு புகாரை இதில் பதிவு செய்யலாம். சரியான இடம், தேதி மற்றும் புகாரை பதிவு செய்வது தான் சேஃப்சிட்டியுடைய முதல் நோக்கம். எந்த வகையான குற்றம் என்று வகைப்படுத்தப்பட்டும், இதில் சில பிரிவுகள் தரப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு பாலியல் பலாத்காரம், தகாத வார்த்தைகளால் பேசுவது, வட-கிழக்கு இந்தியர் மீதான தாக்குதல், ஓரின மற்றும் திருநங்கைகள் மீதான கொடுமைகள் என பல பிரிவுகளின் கீழ் பிரச்சனைகளை இதில் பதிவு செய்துக்கொள்ளலாம். தவிர, அந்த குறிப்பிட்ட குற்றத்தை விளக்கும்படியான படங்களோ அல்லது காட்சி ஆவணங்களோ இருந்தாலும் கூட அதை பதிவேற்றம் செய்வதற்கான வசதிகள் இதில் உள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்னைகள் ஏதேனும் உள்ளதா என்பதை தெரிந்துக்கொள்வதற்கும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இணைய வசதி இல்லாதவர்களுக்காக மிஸ்டு கால் வசதியும் இதில் உள்ளது. 09015 510 510 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு மிஸ்டு கால் தந்தால் போதும், அடுத்த 24 மணிநேரத்திற்குள் எங்களுடைய குழுவிலிருந்து அவர்களை தொடர்பு கொண்டு புகாரை பெற்றுக்கொள்வோம். இதற்காக எந்தவொரு தனி கட்டணங்களும் இல்லை என்கிறார் எல்சா.

குற்றங்களை காட்டும் மேப்

குற்றங்களை காட்டும் மேப்


பாதுகாப்பு உங்கள் கையில் உள்ளது

சேஃப்சிட்டி மற்ற செயலிகளை போல் இல்லாமல், எஸ்.ஓ .எஸ் (SOS) தொழில்நுட்பத்தை வைத்து ஒரு முடிவை மட்டும் தராமல், தகவல்களை சேகரித்து அடுத்தவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உதாரணத்திற்கு, ஒரு ஹோட்டல், அல்லது படத்திற்கோ செல்வதற்கு முன் இணையத்தில் அந்த இடத்தை பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்கிறோம். ஆனால், அந்த இடத்தில் எந்தளவிற்கு பாதுகாப்பு இருக்கிறது என்ற தகவல்கள் குறிப்பிடப்படுவதில்லை". அதை உருவாக்கவே நாங்கள் முயற்சித்து வருகிறோம். மக்கள் ஒரு இடத்திற்கு செல்லும் முன் அந்த இடம் பாதுகாப்பானதா என்பதை தெரிந்துக்கொள்ளும் வகையில் சேஃப்சிட்டியை உருவாக்கியுள்ளோம்" என்று விவரிக்கிறார் எல்சா.

சேஃப்சிட்டி, தற்போது நடக்கும் பல்வேறு வகை குற்றங்களை பற்றி தகவல்களை தெரிவிப்பதோடு அதற்கான சரியான சட்டங்களை கொண்டுவருவதிற்கும் வாய்ப்புகளை அமைத்து தருகிறது. இதன் மூலம், மக்களுக்கு ஒரு சரியான விழிப்புணர்வும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து போராடவும் வாய்ப்பளிக்கிறது.

புகார் பட்டியல்

புகார் பட்டியல்


சேஃப்சிட்டிக்கான வரவேற்ப்பு

“உலகின் எல்லா இடங்களிலிருந்தும் சேஃப்சிட்டி தளத்தை உபயோகிக்க முடியும். தற்போது நாங்கள் இந்தியா மற்றும் நேபாளில் கவனம் செலுத்திவந்தாலும், ஆப்ரிகா, ஐரோப்பா, மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகளிலிருந்தும் எங்களுக்கு தகவல்கள் குவிந்த வண்ணம் உள்ளது" என்று பகிர்ந்து கொள்கிறார் எல்சா.

இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட 4000 புகார்களும், நேபாளிலிருந்து 500 புகார்களும் சேஃப்சிட்டியின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார்களை எல்சா மற்றும் அவரது குழுவினர் வைத்திருக்கின்றனர். அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்யபடாமல் இருந்தாலும், பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை வெளியே சொல்லி தீர்த்துக்கொள்ள முயற்சிகின்றனர் என்பதையே இது விளக்குகிறது.

இதில் அடங்கும் சவால்கள்

மற்ற செயலிகளில் இருப்பதை போல ஒரு உடனடி தீர்வை மட்டுமே மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், தீர்வுக்கு முதலில் தேவையானது சரியான தகவல்கள் மட்டுமே. இதை சேகரிப்பதில் பல சிக்கல்கள் எப்போதுமே இருந்தது. தகவல்களை சேகரித்த பின், ஒவ்வொரு பிரச்சனைகளுக்கு ஏற்ப தீர்வை அளிக்கவேண்டும்" என்று விளக்குகிறார் எல்சா. உதாரணத்திற்கு, தில்லியில் இருக்கும் ரோகிணி, கனொட் மற்றும் ஓக்லா என்ற இடங்களில் தான் அதிகபடியான புகார்கள் பதிவாகியுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சனை இருப்பதால் அதை கையாளும் விதமும் தனித்தனியாக இருப்பது அவசியம். கனொட்டில் தகாத முறையில் தொடுவது மற்றும் உரசுவது போன்ற புகார்கள் ஒரு புறம் இருக்க, ரோகிணியில் செயின் பறிப்பு, ஓக்லாவில் பெண்களை படம் எடுத்து கேலி செய்வது போன்ற புகார்கள் பல வகைகளாக பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. செயின் பறிப்பிற்கு காவல்துறையின் ஒத்துழைப்பும், மற்ற பிரச்சனைகளுக்கு ஒரு புரிதலும், அதை சரியான முறையில் எதிர்க்கொள்ள தேவையான விழிப்புணர்வும் இருப்பது அவசியமாகிறது.

விழிப்புணர்வு முகாம்கள்

பல பெண்களுக்கு இன்றும் பாலியல் கொடுமைகள் என்றால் என்ன, அதில் என்னென்ன பின்விளைவுகள் என்பதை அறியாமல் இருக்கின்றனர். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக இருக்கும் சட்டம் மற்றும் பெண்களுக்கான அடிப்படை உரிமைகளை சரியான வகையில் விளக்க, சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் அடிக்கடி சேஃப்சிட்டியின் மூலம் நடத்தப்படுகிறது. இது அனைத்து வித மக்களுக்கு ஒரு சேர நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் தங்களை இது போன்ற பிரச்சனைகளிலிருந்து தனித்துக்கொள்ளாமலும், பயமில்லாமல் அதை சரியாக எதிர்க்கொள்ளவும் இருக்க சில பயிற்சிகளும் கற்றுத்தரப்படுகின்றது. பாலின வேறுபாட்டை பற்றி ஒரு நல்ல அர்த்தம் புலப்பட, எல்லோரையும் பயிற்சிகளுக்கு அழைப்பு விடுக்கின்றனர் இவர்கள்.

சேஃப்சிட்டி இணையத்தில், தனியாக விவாதித்துக்கொள்ளவும் வசதிகள் உண்டு. முகாம்கள் மற்றும் பயிற்சிகள் ஒரு பெருநிறுவனத்தின் உதவியோடு நடத்தப்படுகின்றது. எளிய வகையான மக்களுக்கும் இந்த முகாம்களும் உண்டு.

image


இதனுடைய தாக்கம்

சேஃப்சிட்டியின் மூலம் சேகரிக்கும் தகவல்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தீர்வுகள் வழங்க்கப்படுவதில்லை."எங்களுடைய ஒரே குறிக்கோள் அதிகபட்ச புகார்களை சேகரித்து, அதற்கேற்ப தீர்வுகளை தரவேண்டும் என்பதே. எங்களுக்கு வந்திருக்கும் விமர்சனங்களை வைத்து, இந்த முயற்சி எப்படிப்பட்ட வரவேற்ப்பை பெற்றிருக்கிறது என்பதை எங்களால் உணரமுடிகிறது." என்று பகிர்கிறார் எல்சா.

உதாரணத்திற்கு, கோவா காவல்துறையினர் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை எங்களுக்கு வந்திருக்கும் புகார்களை கோரியுள்ளனர் என்பது கவனிக்க பட வேண்டியது.

ஒரு முறை, நாங்கள் நடத்திய விழிப்புணர்வு முகாமுக்கு வந்திருந்த ஒரு பெண், பிவிஆர் (PVR) தியேட்டரின் ஊழியர் ஒருவர் தகாத முறையில் நடந்துக்கொண்டதாக புகார் ஒன்றை எங்களிடம் தந்தார். நாங்கள் உடனே, பிவிஆர் நிறுவனத்தை தொடர்பு கொண்டோம், அவர்களுடைய எச்.ஆர் வரை இந்த குறிப்பிட்ட புகார் எட்டியது. அதன்பின், உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.

தில்லி மற்றும் என்சிஆர் (NCR) பகுதியில் சில உள்ளூர் வாசிகளுக்கு சேஃப்சிட்டி பெருமளவில் பயன்படுகிறது.

1. துவாரகா- சட்டக்கல்லூரி மாணவர்கள் சேர்ந்து அமைத்த குழு தான் இது. சேஃப்சிட்டியின் தகவல்களை வைத்து ஒரு விரிவான ஆய்வை செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அவர்களுடைய தேர்வுகளுக்கு பின் அதற்கான வேலைகளில் அவர்கள் ஈடுபடுவார்கள்.

2. தில்லியின் கட்டிடக்கலை மாணவர்கள் ஒரு தனி குழுவாக சேர்ந்து, இந்த தகவல்களை வைத்து எது பாதுகாப்பானது எது பாதுகாப்பு அல்லாதது என்ற ஒரு விளக்கவுரை தரவிருக்கின்றனர்.

3. லால் குவான்- உள்ளூர் இடங்களில் இருக்கும் புகார்களை வைத்து காவல்துறையோடு சேர்ந்து பணிபுரியவிருக்கின்றனர்.

4. பிரேக்த்ரூ (Breakthrough) என்ற என்.ஜி.ஒ அமைப்பு இந்த தகவல்களை வைத்து அவர்களுடைய அடுத்த முகாமிற்கு திட்டமிட்டு கொண்டிருக்கின்றனர்.

5. நாஸ்கோல் இந்தியா (NazGoal India) என்ற அமைப்பு எங்களோடு சேர்ந்து பெண்களுக்கு பாலியல் பிரச்சனைகளை பற்றிய சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்க்கவிருக்கின்றனர்.

தொழில்நுட்பமும் சமூக வலைதளங்களும்

இன்றைய தொழில்நுட்பம் வேகமாக ஒரு விஷயத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாமல், அதற்கான சரியான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கது. "எனக்கு ஒரு இடத்தில் பிரச்சனை என்பதை தாண்டி, அதே இடத்தில் என்னைப்போன்ற மற்ற பெண்களுக்கும் அதே வகையான பிரச்சனைகள் ஏற்படுவது எனக்கு தெரிந்தால், என் மேல் என்ன குறை என்பதை மட்டும் யோசிக்காமல், அந்த இடத்தில் அப்படி என்ன சௌகரியம் குற்றம்செய்பவர்களுக்கு இருக்கிறது என்பதை தான் நான் யோசிப்பேன்." என்று விளக்குகிறார் எல்சா. இதற்கு ஒரு சரியான உதாரணமாக சக்தி மில்களை கூறலாம். பல பெண்கள் அங்கு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தாலும், ஒரு பெண் பத்திரிக்கையாளர் அங்கு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு காவல்துறையிடம் புகார் பதிவு செய்த பின் மட்டுமே எல்லோருக்கும் அந்த இடத்தை பற்றி தெரியவந்தது.

சமூக வலைத்தளங்களுடன் நாங்கள் இணைந்திருப்பதால், எங்களால் மேலும் பல பேருக்கு இதைபற்றி எடுத்து விளக்கமுடிகிறது. ஃபேஸ்புக்கில் நாங்கள் எப்போதும் செயல்பட்டிருபதன் மூலம் எங்களுடைய இணைய தளம் எப்படிபட்டது என்றும், பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளை பற்றிய சரியான விஷயங்களையும் எங்களால் தெளிவுப்படுத்த முடிகிறது. தவிர, டிவிட்டரிலும் @pinthecreep என்ற பெயரிலும் எங்களுடைய சார்பாக தொடர்ந்து ட்வீட் செய்துவருகிறோம். சில சமயம், 20 ஆண்டுகளுக்கு முன்னால், நடந்த பிரச்சனையை பற்றி விளக்கும் பெண்களும் இங்கு பலர் உண்டு. அதுமட்டுமல்லாமல், தானாகவே முன்வந்து எங்களுடைய முயற்சியில் உதவிசெய்பவர்களும் உண்டு." என கூறுகிறார் எல்சா.

குழு

சேஃப்சிட்டியோடு முழு நேரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார் எல்சா. இவரோடு சூர்யா மற்றும் சலோனி பகுதிநேரமாக பணிபுரிகின்றனர். தவிர, தில்லியிலும் மும்பையிலும் ஒரு முழுநேர பணியாளரையும் அமர்த்தியிருக்கிறார் எல்சா. 50 தன்னார்வ தொண்டர்களும் இந்த குழுவில் அடக்கம்.

வாழ்க்கையின் சக்கரம்

எல்சா தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை மும்பையில் கழித்திருக்கிறார். விமான போக்குவரத்து துறையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வரை பணிபுரிந்த எல்சா, ஜெட் ஏர்வேஸ், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் போன்ற பெரும் நிறுவனங்களோடு பணியாற்றியிருக்கிறார். "என்னை பொறுத்த வரை, நகரங்கள் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாக இருப்பது அவசியம். தனியாகவும்,ஒரு பெண்ணாகவும் இருப்பதால், வாழ்க்கையை ஒரு வட்டத்திற்குள் வாழ்வது எனக்கு பிடிக்காதது." என்று தன் கருத்துக்களையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் எல்சா.

சூர்யாவிற்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கை இருந்தது என்றே சொல்லலாம். தன்னுடைய தந்தையின் வேலைமாற்றத்தால் அடிக்கடி இடம்பெயர்ந்த அவர், ஆஸ்திரேலியாவில் மேற்படிப்பிற்காக சென்று 2004ம் ஆண்டில் இந்தியா திரும்பினார். அதன்பின் 10 ஆண்டுகளாக சஸ்டெயின்பிலிட்டி (Sustainability) துறையில் பணியாற்றுகிறார்.

image


2015க்கு பின்

இதனுடைய அடுத்தகட்டமாக செல்போன்களில் பயன்படுத்தக்கூடிய செயலியை (App) வடிவமைக்க திட்டமிட்டிருக்கிறார் எல்சா. "தவிர, எங்களுடைய இணையத்தளத்திலும் அதிக புகார்கள் வந்து சேர வேண்டும். அடுத்த 12 மாதங்களுக்குள் 1lலட்சம் புகார்கள் வந்து சேரவேண்டும் என்ற அளவை நிர்ணயித்துள்ளோம். எந்தளவிற்கு புகார்கள் வருகிறதோ, அந்தளவிற்கு இந்த விஷயத்தை பற்றி மக்களுக்கு தெரியவரும். தற்போது, பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் மூலம் வரும் தொகையை வைத்து இந்த நிறுவனத்தை நடத்திவருகிறோம். செக்ஷன் 8ன்கீழ் ஒரு தன்னார்வு நிறுவனமாக இதை பதிவு செய்திருக்கிறோம். நன்கொடைகளும் ஏற்கப்படுகிறது.

image


பாதுகாப்பு: இதை எப்படி அடையலாம்?

கிராம, நகரம் என்று எல்லா இடங்களிலும் பாதுகாப்பு என்ற ஒரு விஷயம் முழுவதுமாக வரும்வரை இந்த முயற்சி தொடர்ந்துக்கொண்டே இருக்கும் என்று இவர்கள் ஒரு சேர தெரிவிக்கின்றனர். "நம்முடைய கலாச்சாரத்தில், அடுத்தவர்களை கேலி செய்வதோ அல்லது அதை பொறுத்துக்கொள்வதற்கோ அவசியமில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பெண்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து அடுத்து வரும் தலைமுறையினரை சரியான வழியில் நடத்தி செல்ல வேண்டும். எந்தவொரு இன, நகர்புறம், கிராமம் என் எந்தவித பேதமின்றி எங்களால் முடிந்த முயற்சிகளை சேஃப்சிட்டி மூலம் செய்துவருகிறோம். தன்னார்வம் இருப்பவர்கள் info@safecity.in என்ற முகவரியில் எங்களை தொடர்புக்கொள்ளலாம்." என்று ஒரு தெளிவான விளக்கத்தை தருகிறார் எல்சா.

"என்னுடைய மகன்- பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் என்று எல்லோரையும் மதித்து, ஒரு பாதுகாப்பான இடம் அமைந்த ஒரு சூழலில் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். இது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதுமே இருக்கிறது." என்று கூறி சூர்யா முடித்து கொள்கிறார்.

Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக