பதிப்புகளில்

விநாயகரை ‘விதை’ நாயகர் ஆக்கிய தொண்டு நிறுவனம்...

இளைஞர் சுவரஜித் கோவையில் நடத்தும் தொண்டு நிறுவனம் ’So Aware’ இயற்கையைக் காக்க புது முயற்சியாக விதை விநாயகர் சிலைகளை தயாரிக்கின்றனர்.

Chitra Ramaraj
9th Sep 2018
Add to
Shares
31
Comments
Share This
Add to
Shares
31
Comments
Share

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று விநாயகர் சதுர்த்தி. வரும் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்கென, புதிய வடிவங்களில் வண்ண அலங்காரத்துடன் பளபளக்கும் பிள்ளையார் சிலைகள் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.

விழா கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், விநாயகர் சிலைகளை கடல், குளம், குட்டைகளில் கரைப்பது தொடர்பான சர்ச்சைகளும் ஆண்டுதோறும் உள்ளன. கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதால், நீர் மாசுபாடு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு ஒரு தீர்வை உருவாக்கியுள்ளனர் கோவையைச் சேர்ந்த ‘சோ அவேர்’ ’So Aware' தொண்டு நிறுவனத்தினர். நீர் மாசைத் தவிர்க்கும் வகையில், ‘கிரீன் கணபதி’ எனும் விதை நாயகர் சிலையை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர் இவர்கள்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிபுரிந்தபடி, இந்த ‘சோ அவேர்’ நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார் சுவரஜித். படித்த படிப்பிற்கு நிறைவான சம்பளம் வாங்கும் இவர், தன் மனநிறைவிற்காக சமூகத்திற்கு தன்னால் இயன்ற நன்மையை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் விதைகளோடு கூடிய விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறார்.

So Aware நிறுவனர் சுவரஜித் சிலை தயாரிப்பில்

So Aware நிறுவனர் சுவரஜித் சிலை தயாரிப்பில்


சுவரஜித் நண்பர்களோடு இணைந்து உருவாக்கியது தான் இந்த சோ அவேர் தொண்டு நிறுவனம். இதன் மூலம் கல்வி, உணவு, மரம் நடுதல், இயற்கை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மக்களிடையே இவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துக் கூறி இந்த தொண்டு நிறுவனத்தினர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு கட்டமாக வருங்காலத் தலைமுறையினருக்கும் பயனுள்ள வகையில் பசுமை விநாயகர் சிலைகளை இவர்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

“ரசாயனங்களால் ஆன ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் ஏகப்பட்ட சுற்றுச்சூழல் மாசுக்பாடுகள் ஏற்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்காக விநாயகர் சதுர்த்தியே கொண்டாடக்கூடாது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கக் கூடாது என்று நாம் சொல்ல முடியாது. ‘சிலையையும் கரைக்கணும்... சுற்றுச்சூழலும் மாசுபடக்கூடாது’ அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் இந்த விதை விநாயகர் ஐடியா வந்தது,” என்கிறார் சுவரஜித்.

கடந்த ஆண்டே இந்த விதை விநாயகர் முயற்சியைத் தொடங்கி விட்டனர் இவர்கள். பெரும்பாலும் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை தொண்டு நிறுவனங்கள் தான் சுத்தம் செய்து வருகின்றன. அந்தவகையில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார நீர் நிலைகளை சுத்தம் செய்த போது, அவை பிளாஸ்ட்டர் ஆப் பாரிஸால் எப்படி பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்துள்ளார் சுவரஜித். அதனைத் தொடர்ந்து இதற்கு ஒரு தீர்வாகத் தான் இந்த விதை விநாயகரை அவர் உருவாக்கியுள்ளார்.

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற, ரசாயனப் பொருட்களை தவிர்த்து, முற்றிலும் களி மண்ணைக் கொண்டு இந்த விநாயகர் சிலைகள் வடிவமைக்கப் படுகின்றன. இந்த சிலைகளின் நடுவில் விதைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிலைகளை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் முடிந்தபிறகு, சிறுதொட்டியில் வைத்து நீர் ஊற்றி வர வேண்டும். 10 நிமிடத்தில் களிமண் முழுவதும் கரைந்து விடும், பின் அதன் உள்ளே இருக்கும் விதை முளைக்க ஆரம்பிக்கும். பின்னர் இதனை தொடர்ந்து தொட்டியிலோ அல்லது நிலத்திலோ நட்டு வைத்து வளர்க்கலாம்.

image


இட நெருக்கடியால் அவதிப்படும் அப்பார்ட்மெண்ட்வாசிகளுக்கு ஏதுவாக, சிலைகளில் தக்காளி, துளசி, வெண்டை, பச்சைமிளகாய் போன்ற விதைகள் வைக்கப்பட்டுள்ளன. தோட்டம் போடும் அளவு இடவசதி உள்ளவர்களுக்கு முருங்கை, பப்பாளி உள்ளிட்ட விதைகள் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கிடைக்கின்றன. மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப விதைகள் கொண்ட விநாயகர் சிலைகளைத் தேர்வு செய்து கொள்ள இயலும்.

“உள்ளுக்குள் விதை வைப்பதற்கு ஏற்றவாறு வெறும் மண்ணால் விநாயகர் சிலையை தயாரித்து, சிலைக் காய்ந்தவுடன் அதுக்குள்ள விதைகளையும் கொஞ்சம் இயற்கை உரங்களையும் நிரப்பி, அதற்காக போடப்பட்டிருந்த துளையை மூடிடுவோம். ஒவ்வொரு சிலை உள்ளேயும் என்ன விதைகள் இருக்கு என்பதை சிலையின் மேல் குறிப்பிடுறோம். யார் யாருக்கு என்ன என்ன விதைகள் தேவையோ அந்த விதைகள் அடங்கிய விநாயகர் சிலைகளை வாங்கிக் கொள்ளலாம்,” என்கிறார் சுவரஜித்.

வீட்டில் இது போன்று சிலைகளை கரைக்க விரும்பாதவர்களுக்காக, பிரத்யேக சிலைகளையும் இவர்கள் தயாரித்து வருகின்றனர். இதில், விதைகள், மீன்கள், பறவைகள் உட்கொண்டு பயன்பெறும் வகையில், மக்காச்சோளம், கோதுமை, ரவை, அவல் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளது.

“எங்களது விழிப்புணர்வு பிரச்சாரத்தைக் கேட்பவர்களில் 10 பேரில் 8 பேராவது மாற வேண்டும் என்பது தான் எங்களது எண்ணம். கடந்தாண்டு நாங்கள் இந்த சீட் விநாயகர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பித்த போது, எங்களைப் பார்த்து இதெல்லாம் சாத்தியமா என சந்தேகப்பட்டவர்கள் பலர், இந்த வருடம் தாங்களும் இந்தப் பணியில் இணைந்துள்ளனர். இதுவே எங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுகிறோம். இப்படிப்பட்ட சிலைகளுக்கும் மார்க்கெட் இருக்கிறது எனத் தெரிந்தாலே, இதனை உற்பத்தி செய்பவர்கள் அதிகரித்து விடுவர். அப்போது விலை குறையும். மக்களும் அதிக அளவில் வாங்குவர்,” என்கிறார் அவர்.

தற்போது கடைகளில் விற்பனைக்குள்ள சிலைகளைப் போல் கண்ணைக் கவரும் வகையில் இந்த விநாயகர் சிலைகள் இருக்காது. இவை இயற்கை களிமண் நிறத்திலும், சில சிலைகள் இயற்கை வண்ணங்களாலும் கலைநுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

photo courtesy: The news minute

photo courtesy: The news minute


2 இன்ச் முதல் 2.5 அடி உயரம் வரை இந்த சிலைகள் உள்ளன. விலையும் அனைவரும் வாங்கும் வகையில், குறைந்தது 25 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1,450 ரூபாய் வரையிலும் விற்கப்படுகின்றன. பிளாஸ்டர் ஆப் பாரிஸ்டர் சிலைகளுடன் ஒப்பிடும் போது இந்த விலை மிகவும் குறைவு. லாப நோக்கில்லாமல் சமூக விழிப்புணர்வுக்காக செய்வதால், குறைந்த விலையிலேயே இச்சிலைகளை இவர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்தாண்டு இவர்கள் போட்ட இந்த விதை இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கிளைகளாக விரிந்துள்ளது. சோ அவேருடன் அறிமுகம் இல்லாத பலரும் கூட, இந்தாண்டு விதை விநாயகர் விற்பனையைத் தொடங்கியுள்ளனர். இதனை வியாபாரப் போட்டியாக பார்க்காமல், ஆரோக்கியமான விசயமாகவே பார்ப்பதாகக் கூறுகிறார் சுவரஜித்.

பாரம்பரிய கலாசாரத்தை பாதிக்காத, அதேசமயம் இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத இந்த விதை விநாயகர் சிலைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியூர்களில் இருந்தும் விதை விநாயகர் சிலை கேட்டு கடிதங்கள் வருகிறதாம். தற்போது கோவையை மட்டுமே குறிவைத்து அதிகளவில் சிலைகள் விற்பனை செய்து வருகின்றனர் இவர்கள்.

நீங்களும் இந்த விநாயகர் சதுர்த்தியை ‘விதை’ நாயகருடன் கொண்டாட விரும்புகிறீர்களா.. அப்படியென்றால் 9655667775 என்ற எண்ணில் சுவரஜித்தைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது இவர்களது முகநூல பக்கத்தில் அணுகலாம்: So Aware

Add to
Shares
31
Comments
Share This
Add to
Shares
31
Comments
Share
Report an issue
Authors

Related Tags